திங்கள், 19 ஜனவரி, 2009

குசு போடுதல் பற்றிய குறிப்புகள்


குசு என்ற சொல்மீது கவிந்த
வீச்சத்திற்கும்
இச்சொல்
ஒரு மலரின் பெயராக இருப்பின்
அதன்மீது படிந்த வாசனைக்கும்
அது பொறுப்பல்ல.         

மனம் கவர்ந்த   
தலைவி / தலைவர்
நடிகர்/நடிகை 
அனைவரும் குசுவிடக்கூடியவர்கள்
என்பதை நினைவுகொண்டு
குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கமுடிவது
இதன் தனிச்சிறப்பு

பூங்காவிலோ  
உணவு விடுதியிலோ
இணையதள மையத்திலோ
காதலி / காதலன்
தன்னை மீறிவிட்ட குசு
அப்போதைக்கு சிக்கலை உருவாக்குவதில்லை

முதலிரவு மஞ்சத்தில் விடுவது
உடனடி தொந்தரவுகளை
அளிப்பதில்லை என்றாலும்
தலைவி / தலைவன் நாசியில் தங்கி
பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றான்
ஒரு அனுபவசாலி.

ஆனாலும்
டமார் டமார் என போடுவதாலே
எல்லோராலும் விரும்பப்படும்
நபர்களையும் நமக்குத் தெரியும்

நண்பர்கள் 
தோழிகள்
உறவினர்கள்
ஏன்
அம்மா, அப்பா, பிள்ளைகள் விட்டதையும்
புட்டிகளில் பிடித்துவைத்து
உறவு சிக்கலாகும் சமயம்
மூன்றாம் நபரிடம்
அவர் முகம் சுளிக்க திறந்துகாட்டுகிறோம்

குசு நிரப்பப்பட்ட புட்டிகள்
சிலநேரம்
வழக்குமன்றம் வரை
கொண்டுசெல்லப்படுவதும்
உங்களுக்கே தெரியும்

வரையறுக்கப்பட்ட ஒலியளவுக்குள்
தேர்ந்தெடுக்கப்பட்டபிளேவர்களில்
குசு விட பயிற்சிதரும் மையங்களின் எண்ணிக்கை
பெருகிவருகின்றன.

உபாதைகளை உணர்த்தும் 
கவிதையாகிய குசுவின் மேல்
அல்லது
குசுவாகிய கவி​தையின்​மேல்
வாசனைத் திரவியங்கள் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

well

பெயரில்லா சொன்னது…

awesome...