Saturday, June 20, 2009

ஒரு பருக்கையும் பல இரைப்பைகளும்.

எங்களின் இரைப்பைகள்
அதனதன் இடங்களிலிருந்தன அப்போது.

அவைகளின் தேவைக்கேற்ற பருக்கைகளை
குடும்பத் தலைவர் வழங்கிவந்ததால்
பருக்கை என்ற சொல்லே
இரைப்பைகளின் நினைவில் இல்லை.

நேற்று இரைப்பைகள் தனித்து விடப்பட்டன.

இன்றைய பருக்கைக்கு மட்டுமே உறுதியளிக்கப்பட்டதால்
நாளையின் பருக்கைகளைத் தேடி
இடம் விட்டு வெளிவந்தன இரைப்பைகள்.

என் செல்லமகள் மற்றும் மனைவியின் இரைப்பைகளையும்
முதுகில் சுமந்தவாறு
தெருவில் இறங்கினேன்.

இதற்கு முன்னும் அவர்கள் அங்கே இருந்திருக்கலாம்
இப்போதுதான் நான் கண்ணுற்றிருக்கவும் கூடும் எனும்படிக்கு
தெருக்கள் முழுவதும்
இரைப்பைகளை முதுகில் சுமந்தபடி
பலர் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் இருந்தனர்.

தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கமில்லையா
என்றான் ஒருவன்.

நாளையைப் பற்றிய கவலையற்றிருந்தோம் என்றேன்.
இன்றென்ன ஆயிற்றென்றான்
தலை கவிழ்ந்திருந்தேன்.

அப்போதே சொன்னேன் எனும் குரல்கள்
பல்கிப் பெருகின.

பருக்கைகள் தேடிச் சென்ற இடங்களில்
என்ன கேட்கிறார்கள் என்றேன்.

தாயைப் புணரச் சொல்கிறான்
தகுமா என்றான்
பலநாட்களாய் உலர்ந்த இரைப்பையைச்
சுமந்த ஒருவன்.

அவரவர் சமூகக் கடமையைச் செய்தோம்
எங்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டதே
என்றேன்.
நீ எந்த நாட்டிலிருந்து வருகிறாய் என்றான்.

எமது குடும்பத் தலைவராயிருந்தவருக்கு
மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேன்.

வயோதிகத் தாயின் இரைப்பை
புதிதாகத் திருமணமான மனைவியின் இரைப்பை
என பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட
இரைப்பைகளை முதுகில் தூக்கிக்கொண்டு
திடீரென திசைகளெங்கும் ஓடத்தொடங்கினர்
வெயில் மற்றும் இருண்ட தார் விரித்த
சாலைகளில்.


Friday, June 5, 2009

நேதாஜி பற்றி ஓம் முத்துமாரியின் குரலில் ஒரு நாட்டுப்புறப் பாடல்

நேதாஜி பற்றி அவர் காலத்தில் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவிலுக்கு அருகிலுள்ள சத்திரங்கொண்டான் எனும் எங்கள் கிராமத்தில், முளைப்பாரி வைத்து பெண்கள் பாடும் கும்மிப் பாடலில் 'அய்யோ சுபாஷ் சந்திரபோஸ் எங்கிருக்காரோ' என்று அவர்கள் உருக்கமாகப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். 

ஒருமுறை கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக மதுரை சென்றுகொண்டிருக்கையி,ல் சாலையோரக்கடையிலிருந்து 'கொல்லங்குடி' கருப்பாயி குரலில் நேதாஜி பற்றி கணீரென்று ஒரு பாடல் ஒலித்தது. லியோனி பட்டிமன்றம் மற்றும் திரைப்படப்  பாடல்களை அலறவிட்டு  காதைக்கிழிக்கும் இதுபோன்ற சாலையோரக் கடையிலிருந்து முதன்முறையாக காதுகொடுத்துக் கேட்கும் படியாக அமைந்தது அப்பாடல். 

கடந்தவாரம் ஊருக்குச் சென்றிருந்தபோது கூத்துக்கலைஞர் ஓம் முத்துமாரியின் குரலில் நேதாஜி குறித்த ஒரு பாடலைப் பதிவுசெய்தேன். அதை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்


.