Friday, July 30, 2010

பேராசை இல்லாதவர்களை ராணுவத்தால் ஒடுக்கமுடியாது.

பழங்குடியினரை கொன்றொழிக்கும் அரசின் பச்சை வேட்டை போரைக் கண்டித்து சென்னை, செ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் 2010, ஜுன் 4 ஆம் நாள் கூட்டம் நடந்தது.  ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத் தோழர் வேலுச்சாமி ஒருங்கிணைத்திருந்தார்.

தோழர் விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, எழுத்தாளர் அருந்ததிராய், சவகர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர் அமித் பாதுரி, புதுதில்லி பல்கலைக் கழக பேராசிரியர் கிலானி, மற்றும் பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் உரை நிகழ்த்தினர். 

நினைத்துப்பார்க்கவே இல்லை; திடல் முழுக்க கூட்டம் நிரம்பியிருந்தது. எல்லாம் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகத் திரண்டிருந்தகூட்டம். உளவாளிகளும் ஆட்சியாளர்களுக்கு ஒத்துஊதும் ஊடகக்காரர்களும் கூட நிரம்பியிருந்தார்கள். தமிழ் வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததை பின்மண்டையில் முடிகுறைந்த இருவர் அடிக்கடி நோட்டம் விட்டுக்கொண்டிருந்தனர். தோழர்கள் நிதிஉதவி வேண்டி கூட்டத்திற்குள் வந்தபோது அவர்களிடமும் சிவப்புத் துண்டை நீட்ட அதற்கு அந்த அரைமண்டையர்கள் முறைத்தனர். தோழர்கள் அவர்களது ரியாக்ஷனைக் கண்டு நம்பமுடியாதவர்களாக, வியப்பதைப் பார்க்கையில் எனக்கு சிரிப்பு வந்தது. 

அருந்ததிராயின் சிறப்பானதொரு உரையை எனது கையடக்க ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்தேன். உடனடியாக ஒலி வடிவமாகவும் வரி வடிவமாகவும் வலைப்பூவில் ஏற்ற நினைத்தும் பல்வேறு காரணங்களால் இயலாமல்போனது; இப்போதாவது வெளியிட முடிந்ததில் மகிழ்ச்சி. 

ஆங்கிலத்தில் பேசிய அனைவரது உரைகளையும் அவர்களது பேச்சின் வேகத்திற்கு மொழிபெயர்த்து வியக்கவைத்தார் தோழர் தியாகு. வாசிப்பின் வேகத்திற்கு மொழிபெயர்க்கும் ஆற்றலும் அவருக்கு உண்டு. ஆங்கில நாளிதழை தமிழிலேயே வாசித்துவிடுவார். மொத்தத்தில் தியாகு நம்காலத்து நாயகர்.

அருந்ததிராய் ஆற்றிய ஆங்கில உரையை தோழர் தியாகு மொழிபெயர்த்ததை அடிப்படையாகக் கொண்டு மூல உரையுடன் சரிபார்க்கப்பட்டு இங்கு வெளியிடப்படுகிறது. தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். 

 அருந்ததிராயின் உரை:

அனைவருக்கும் வணக்கம். 
நான் எழுத்தாளர்; பேச்சாளர் அல்ல. 
குற்றம் குறைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். 

நாம் விரிவாக சில செய்திகளைப் புரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். ஊடகங்கள், உள்துறை அமைச்சர், இந்திய அரசு, ஆகியோர் இந்த நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது; அமைதியை மீட்கவேண்டும் என்று பேசி வருகிறார்கள். அதற்கான வழிமுறைகளைப் பற்றி அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். போர் நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், இராணுவத்தை அழைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். நேர்மாறானது உண்மையாகும். பெரும் குழுமங்களின் கைப்பாவையாக இருக்கின்ற அரசுக்கு போர் தேவை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது பிரதமர் சொன்னார் மாவோயிஸ்ட்டுகள்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று. ஆனால் உண்மையில் அவர் அப்படி பேசிய நேரத்தில் ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகள் அநேகமாக அடியோடு துடைத்தொழிக்கப்பட்டிருந்தார்கள். மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றிலேயே மிகக் கீழான நிலையில் இருந்தார்கள். ஆனால் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே சுரங்கக் குழுமங்களின் பங்குகளின் விலை திடீரென உயர்ந்தது. அவர்கள் பங்குச் சந்தையிலே பெருத்த இலாபத்தை ஈட்டினார்கள். 


2005-2006 காலத்தில் பெரிய சுரங்கக் குழுமங்களோடும், வேறு பல குழுமங்களோடும் பஸ்சார் போன்ற பகுதிகளுக்காகவும் டாடா போன்ற நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. எஸ்ஸார் உருக்கு ஆலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்ட்டன. அந்த நேரத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக சல்வார் ஜுடும் என்ற படை அமைக்கப்பட்டது. அதனை அமைதி வேட்டை என்றோ, தூய்மை வேட்டை என்றோ மொழி பெயர்க்கலாம். அந்த நேரத்தில் அரசாங்கம் இராணுவத்தை அழைப்பதற்கும், இராணுவத்தைக் கொண்டு செயல்படுவதற்கும் முயற்சி எடுத்தபோது, உண்மையில் இந்த சல்வார் ஜுடும் என்பது டாடா எஸ்ஸார் குழுமங்களின் சம்பளத்தைப் பெறுவதாக வெளிப்படையாக அறிவித்து பிறகு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏன் தேவைப்பட்டன.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்காகத்தான் சல்வார் ஜுடும் ஊர், ஊராக சென்றது. மக்களை கிராமங்களில் இருந்து துரத்தியடித்தது. பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகளைப் புரிந்தது. சாலையோரத்து முகாம்களில் மக்கள் திரட்டப்பட்டார்கள். இதுதான் அதனுடைய உத்தியாக இருந்தது. இந்த உத்தி ஜெனரல் கிரீக்ஸ் மலேசியாவில் பிரிட்டானியர்கள் கம்யூனிஸ்ட்டுகளை எதிர்த்து நடத்திய போரின்போது பயன்படுத்திய ராணுவ உத்தியாகும். மக்களை அச்சுறுத்தி ஊரை விட்டு வெளியேற்றி காவல் முகாம்களுக்கு கொண்டுபோய் அடைப்பது என்பதுதான் அந்த உத்தி. இம்முயற்சியில் 650 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு கொண்டுபோய் அடைத்து வைக்கப்பட்டார்கள். அவர்கள் அடுத்து இருந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு விரட்டப்பட்டார்கள். காடுகளில் அச்சுறுத்தப்பட்டார்கள். இப்படித்தான் மாவோயிஸ்ட் எதிர்ப்பு என்பது அங்கே வளர்ந்தது. முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அது வேகமாக வளர்வதற்கு காரணமாக அமைந்தது பழங்குடி மக்கள் துரத்தியடிக்கப்பட்டதுதான். அவர்கள் தங்களது எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதற்கு கூட்டம், கூட்டமாக மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு எதிரான அடக்குமுறை மிருகத்தனமாக இருந்தது. மாவோயிஸ்ட்டுகள் உண்மையில் சல்வார் ஜுடுமினாலேயே வளர்ந்தார்கள்.

இங்கே புஷ்ஷினுடைய கோட்பாடு முழு அளவிலே செயல் படுத்தப்பட்டது. நீங்கள் எங்கள் பக்கம் இருக்கிறீர்கள் இல்லையேல் எதிரியின் பக்கம் இருக்கிறீர்கள் என்று புஷ் சொன்னார். பன்னாட்டு குழுமங்கள் இந்தக் கொள்கையை விரிவுபடுத்தின. நீங்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறீர்கள் என்றால் பழங்குடி மக்களுக்கு எதிராக இருக்கவேண்டும். நீங்கள் பழங்குடி மக்களின் பக்கம் இருந்தால்; மாவோயிஸ்ட்டுகளின் பக்கம் இருந்தால் நீங்கள் எதிரிகள் என்று பொருள். பன்னாட்டு குழுமங்களின் கொள்ளை வேட்டையை எதிர்த்தீர்கள் என்றால், உங்களை நாங்கள் எதிரிகளாக கருதுவோம். இப்படித்தான் மாவோயிஸ்ட் என்ற சொல்லுக்கான இலக்கணம், வரையறை விரிவுபடுத்தப்பட்டது. பலவற்றையும் அதற்குள்ளே உள்ளடக்கினார்கள். நமது உள்துறை அமைச்சர் வெற்றிகரமாக இந்த வேலையை செய்து முடித்தார். அவர்தான் மாவோயிஸ்ட்டுகளை பெருமளவில் வலுப்படுத்தியவர் என்று சொன்னார்கள். சிதம்பரம் ஒரு மறைமுக மாவோயிஸ்ட் என்று கூட கிண்டலாக பேசப்பட்டது.


பெருங்குழுமங்கள் இவ்வாறு செய்வதை பெருங்குழுமங்களுக்கு சொந்தமான ஊடகங்கள் மூடி மறைத்தன. மத்திய சிறப்புக் காவல்படை தாண்டேவாடாவில் தாக்கப்பட்டபோது, அந்த செய்தி வேறு விதமாகக் காட்டப்பட்டது. ரயில் தடம் புரண்டு சாய்ந்தபோது இது மாவோயிஸ்ட்டுகளின் வேலைதான் என்று உரிய சான்றுகள் கிடைக்கும் முன்பே அறிவித்தார்கள்.

சாதாரண மக்கள் கொல்லப்படுவதை ஒரு போதும் நான் நியாயப்படுத்த மாட்டேன். அப்படி நியாயப்படுத்துவதற்காகவும் நான் வரவில்லை. ஆனால் எவ்வித சான்றுகளும் இன்றி ஊடகங்களும் அரசும் இந்த குற்றச்சாட்டை சுமத்தின. ஆயிரக்கணக்கான மக்கள் தெலுங்கானாவிலும், ஜார்க்கண்டின் மற்ற பகுதிகளிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லாமே மிட்டல், டாடாக்கள், பிர்லாக்களை கொழுக்க வைப்பதற்காக; இவர்களுக்கு எதிரான எதிர்ப்பை முறியடிப்பதற்காக செய்யப்பட்டது.


இப்போது பச்சை வேட்டை போர் நடவடிக்கை கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கை நம் எல்லோரையும் இலக்காகக் கொண்டிருக்கிறது. மும்பையில் இதே போன்ற ஒரு கூட்டம் நேற்று முதல் நாள் நடைபெற்றது. மறுநாள் காலை அந்த செய்தி இந்து உள்பட பல்வேறு ஏடுகளில் வந்தது. தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்தி பரப்பப்பட்டது. ஆனால் அரசாங்கத்துக்கு சொந்தமான செய்தி ஊடகமாகிய பிரஸ் டிரஸ்ட் ஆப் இண்டியா (றிஜிமி) மட்டும் வேறு விதமாக இந்த செய்தியை போட்டது.

"நான் ஒரு மாவோயிஸ்ட் என்று அருந்திதி ராய் சொல்கிறார். என்னைக் கைது செய்து பார் என்று அரசாங்கத்துக்கு சவால் விடுகிறார்" என்ற பொய் செய்தியை பி.டி.ஐ வெளியிட்டது. நான் கைதுக்கு அஞ்சவில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் பேசியது அதுவல்ல.


நான் சுயேச்சையாக நின்று சுதந்திரமாக எழுத விரும்புகிற ஒரு எழுத்தாளர். கேள்விகள் கேட்கும் உரிமை எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். மற்றவர்களிடம் மட்டுமல்ல, நமக்கு நாமே கேள்விகள் கேட்கவும் எனக்கு உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன். நான் இந்த எதிர்ப்பு இயக்கத்தின் பக்கம் இருக்கிறேன். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் பேசாத செய்தியை பி.டி.ஐ வெளியிட்ட உடனேயே எல்லா செய்தி ஏடுகளும் அதையே பிரதி எடுத்து வெளியிட்டு விட்டன.இப்போது மாவோயிஸ்ட்டுகள் பன்னாட்டு குழுமங்களின் இந்த பொய் நடவடிக்கையை எதிர்த்து போராடும் நிலையில் இருக்கிறார்கள்.  எனவேதான் மறுநாள் வந்த அந்த செய்தி முத்திரை குத்தும் ஒரு முயற்சி என்று நான் குறிப்பிட்டேன். இந்த விவாதத்தில் என்னைக் கொச்சைப் படுத்த விரும்புகிறார்கள். நம் ஒவ்வொருவர் மீதும் முத்திரையை குத்துவதற்காக அவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  இதன் மூலம் அச்சுறுத்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்னுடைய பேச்சுரிமையை எழுத்துரிமையை பறிக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்த நிலையில்தான் இங்கே நாம் என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

ஏற்கனவே பெரிய அணைகளுக்கு பெரிய முக்கியத்துவம் தரப்பட்டது.  ஆனால் இன்றைக்கு இந்த அணைகளாகட்டும், 33 முதல் 34 மில்லியன் அதாவது மூன்று கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்கள் இடம் பெயர்த்து அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ நாடுகளின் மக்கள் தொகையை காட்டிலும் இது கூடுதல் எண்ணிக்கையாகும். இந்த மக்கள்தான் பன்னாட்டு குழுமங்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மக்களாக இருக்கிறார்கள். 

1999ல் ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவம் வெற்றிபெற்றது. அது தொடங்கி முழுக்க முழுக்க அமெரிக்காவினுடைய வழியை இந்தியா கடைப்பிடிக்க ஆரம்பித்தது. அணிசேரா நாடாக இருந்தது; இப்போது அணிசேர்ந்த நாடாகிவிட்டது. இஸ்ரேலை எதிர்க்கும் நாடு, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நாடு என்ற நிலை போய் அது இஸ்ரேலின் கூட்டாளி ஆகிவிட்டது. அமெரிக்க முகாம்களுக்குள்ளே போய் சேர்ந்துவிட்டது.

அதே நேரத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இரண்டு பூட்டுகளை திறந்துவிட்டார். ஒன்று, பாபர் மசூதி. இன்னொன்று, இந்திய சந்தை. ஒன்று, இந்து அடிப்படை வாதத்திற்கு வழிவகுத்தது. இன்னொன்று முதலாளித்துவ அடிப்படை வாதத்திற்கு வழிவகுத்தது. இரண்டு அடிப்படை வாதத்திற்குமே இரண்டு விதமான தீவிரவாதிகள் தேவையாக இருந்தார்கள். அதனால் இஸ்லாமிய தீவிரவாதிகளை நாம் உருவாக்கினோம். இப்போது மவோயிஸ்ட் தீவிரவாதிகளை உருவாக்கியுள்ளோம். இந்த இரண்டுக்கும் இடையில்தான் அரசின் பொருளாதாரக் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அவர்கள் ஒரு ராணுவ அரசை, போலீஸ் அரசை முன்னுக்கு கொண்டு வர முயல்கிறார்கள்.


உண்மையில் இந்திய ஜனநாயகம் என்பது சீரழிந்து போய்விட்டது. பாகிஸ்தானிலே பாருங்கள். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ஆட்சி வேண்டுமென்று கேட்கிறார்கள். இந்தியாவில் ஒரு வகையான ஜனநாயகத்திற்கு எதிராக நடுத்தர வர்க்கத்தினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும் ராணுவ ஆட்சியை, போலீஸ் ஆட்சியை வெளிப்படையாக கோருகிறார்கள்.  ராணுவத்தையும், விமானப்படையையும் அழைப்பதற்கு தயக்கம் காட்டுவதுபோல் அந்த படைத்தளபதிகள் பேசினார்கள். ராணுவம் ஏற்கனவே இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஊடகங்களில் ராணுவத்திற்கும் ஜனநாயகம் இருப்பதாக காட்டப்பட்டது.


ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். அந்த ராணுவ தளபதி, "நமது மக்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்ப முடியாது" என்று சொன்னார். நமது மக்கள் என்றால் யார்? அப்படியானால் இதற்கு முன் காஷ்மீர் மீதும், மணிப்பூர் மீதும், கோவா மீதும், தெலுங்கானா மீதும், நக்சலைட் மீதும் நடத்திய போர் இருக்கிறதே, அது நமது மக்களுக்கெதிரான போர் இல்லையா? அவர்களெல்லாம் நமது மக்கள் இல்லையா?

இந்திய வரலாற்றில், அறுபது ஆண்டு காலத்தில் போர் நடத்தாத ஆண்டே கிடையாது. நாகாக்களுக்கு எதிரான போர், மணிப்பூரிகளுக்கு எதிரான போர், காஷ்மீரிகளுக்கு எதிரான போர், சீக்கியர்களுக்கு எதிரான போர் தலித் மக்களுக்கு எதிரான போர், முஸ்லிம்களுக்கு எதிரான போர், பழங்குடிகளுக்கு எதிரான போர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று பல்வேறு சிறுபான்மையினருக்கு எதிரான போர் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இங்கு பேராசிரியர் சாய்பாபா சுட்டிக்காட்டினார், இந்தப் போர் புதிய ஒன்று அல்ல என்று. ஏற்கனவே இலங்கையில் மிக கொடிய முறையில் இந்த போர் நடத்தப்பட்டது. அது ஒரு இனப்படுகொலை. முழுபேரழிப்பு. அங்கு பத்தாயிரக்கணக்கான மக்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள். அது இன அழிப்பு போர் மட்டுமல்ல. அது ஒரு பெருங்குழும ஆதிக்கப் போர் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்தவேண்டும். 


இந்திய வணிக தொழில் கூட்டமைப்பாகிய ஃபிகி இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் இன்றைக்கும் இலங்கையின் இனவெறி அரசுக்கு ஆதரவாக இருக்கிறது. இவர்கள் எல்லோரும் தொடர்ந்து இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தடுத்திருக்கமுடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. அவர்கள் இப்போதும் இதை நிறுத்திக் கொள்வதாக இல்லை. இந்திய பெருங்குழுமங்களுக்கு இலங்கை சந்தை தேவைப்படுகிறது. அங்கே போய் அவர்கள் ஆட்சி நடத்த விரும்புகிறார்கள். 


இங்கே பெரும் நிறுவனங்களின் லாபத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. நமது நாட்டு அரசுகளுடன் பெரும் நிறுவனங்கள் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு உட்படாத நதிகள், மலைகளே இல்லை. இங்கு நடப்பது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் அல்ல. ஏழை மக்களுக்கு எதிரான போர். 


இலங்கை அரசு சென்ற அந்த எல்லைக்கு இந்திய அரசு செல்லாது என்று நான் நினைக்கிறேன். இவர்கள் வெளிப்படையாக வான் தாக்குதல் நடத்தவும், சுட்டுத் தள்ளவும், கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கவும் துணியமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அரசு சூழ்ச்சிக்கார அரசு. அது மெல்ல மெல்ல இனப்படுகொலை செய்வதில்தான் நம்பிக்கை வைத்திருக்கிறது.  ஒரே அடியில் எல்லோரையும் கொன்றுவிடுவதில் அதற்கு நம்பிக்கை இல்லை. 


இங்கே ஒரு நல்ல பழங்குடி யார்? செத்துப் போன பழங்குடி, இடம் பெயர்ந்த பழங்குடி, எதிர்ப்பு காட்டாத பழங்குடி, சத்துணவு கிடைக்காமல் மெலிந்து கிடக்கும் பழங்குடி இவன்தான் நல்ல பழங்குடி. உரிமை கேட்காத பழங்குடி. 
இந்திய அரசு என்பது நவ நவீனமான சிந்தனைகளைக் கொண்ட அரசு. பாருங்கள், நாம் புலால் மறுப்பவர்கள். அப்படியெல்லாம மொத்தமாக கொலை செய்துவிட மாட்டோம். மெல்ல மெல்ல கொலை செய்கிறவர்காளகவே இருப்போம் என்று நினைக்கிறேன். எல்லா விதமான பழியையும் இந்த அரசின்மீது செலுத்துவதற்கு அது சுலபத்தில் இடம் கொடுத்துவிடாது. அதற்கு இடமளிக்காமல் தந்திரமாக இனப்படுகொலையை நிறைவேற்ற முயல்கிறது.  


அப்பகுதியில் பணியாற்றிய மருத்துவர்கள் சொல்கின்றார்கள்.  எய்ட்ஸ் போன்ற ஒரு நோய் மக்களை பாதித்திருக்கிறது. அது சத்துணவு இல்லாமையால் வரக்கூடிய எய்ட்ஸ் நோயாகும். எய்ட்ஸ் நோய் எப்படி நோய் எதிர்ப்பு ஆற்றலை அழித்து விடுகிறதோ, அதே போன்று சத்து பற்றாக்குறை என்பது அந்த மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அழித்து மெல்ல, மெல்ல மரணப்பாதையில் அழைத்து செல்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது. தடுத்து நிறுத்தியாக வேண்டும். ஆனால் இந்த படுகொலையை நிகழ்த்துவதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அந்த மக்களை விரட்டியடித்து முகாம்களிலே அடைத்து விடுகிறார்கள். கடைகளுக்கு செல்லமுடியாது. உணவு வாங்கமுடியாது. மருத்துவரைப் பார்க்கமுடியாது. மருந்து வாங்கி வர முடியாது. அவர்களுக்கான உயிர்க்காற்று ஆக்சிஜன் கிடைக்காமல் சுருக்கப்படுகிறது. அவர்கள், தாங்களே சாவை தேர்ந்தெடுத்துக் கொண்டது போன்ற தோற்றம் காட்டப்படுகிறது.


உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து யாரால் என்று அண்மையில் ஒரு செய்தியாளர் கேட்டார். இந்த நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் யாரால் என்றால் பேராசை பிடித்த நடுத்தர வர்க்கத்தினாலும், மேல்தட்டு வர்க்கத்தினாலும்தான் என்று நான் அவருக்கு பதிலுரைத்தேன். இவர்கள் தான் மிகக்கொடிய பிரிவினைவாதிகள். இவர்கள் மக்களிடமிருந்து பிரிந்து புறவெளிக்கு போய்விட்டவர்கள். மண்ணிலிருந்து பாக்சைட்டையும், தடாகத்திலிருந்து தண்ணீரையும், மரத்திலிருந்து விறகையும் பிரித்தெடுக்க விரும்புகிறார்கள். மக்களை இவர்கள் தேவைக்கதிகமான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். இப்படித்தான் நம்முடைய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் நினைக்கிறார்.  


சிதம்பரம் உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான வேடண்டாவின் (VEDANTA) இயக்குனர் குழுவிலே இடம் பெற்றிருந்தவர். என்ரான் போன்ற குழுமங்களுக்காக வாதாடிய வழக்கறிஞர். இவருக்கு அதிலெல்லாம் தொடர்பு; சொந்த நலன் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பன்னாட்டு சுரங்கக் குழுமங்களின் மிகப்பெரிய வழக்கறிஞரே இந்த சிதம்பரம்தான் என்பதை மறந்து விடவேண்டாம். இவர் நிதியமைச்சராக இருந்தபோது தன்னுடைய லட்சியம் என்னவென்பதை அறிவித்தார். அது என்னவென்றால் இந்த நாட்டில் 85 விழுக்காடு மக்கள் நகரங்களிலே வாழ வேண்டுமாம். அப்படியென்றால் என்ன பொருள்? ஐம்பது கோடி மக்களை கிராமத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதாகும். அந்த மக்கள் எங்கு போய் வசிப்பார்கள்? 


அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியே சொன்னார். சேரிவாழ் மக்கள் பிக்பாக்கெட் அடித்து, மற்றவர்களிடமிருந்து திருடி வாழ்கிறவர்கள் என்று கூறினார். இவர்கள் அனைவரும் தேவைக்கு அதிகமானவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவர்களையெல்லாம் இல்லாமல் அழித்து விடவேண்டியதுதான்.  இவர்களுக்காக யாரும் வருத்தப்படப் போவதில்லை. இவர்கள் அப்படியே அழிந்துபோகட்டும் என்று நினைக்கிறார்கள். இதனால்தான் இந்த ஜனநாயகத்தை போலி ஜனநாயகம், பாசாங்கு ஜனநாயகம் என்று நான் அழைக்கிறேன். 


இவர்கள் உண்மையில் குடியேற்றவாதிகள். தமது சொந்த நாட்டின் மீதே காலனி ஆதிக்கத்தை செலுத்தக்கூடியவர்கள். இவர்கள் தங்கள் சொந்த உறுப்புகளையே பிய்த்து, கடித்து தின்னக் கூடியவர்கள். ஒரே ஒரு சிக்கல். அந்த உறுப்புகள் தின்னக் கொடுக்க மறுத்து எதிர்ப்புக் காட்டுகின்றன என்பதுதான்.ஐந்தாண்டுகளாக பஞ்சப் பராரிகள், ஏழைகளிலும் ஏழைகள், வறியவர்களிலும் வறியவர்கள் இந்த பன்னாட்டு குழுமத் தாக்குதலை எதிர்த்து நின்றிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தவேண்டும். சமானிய பாமர மக்கள் அந்த கொள்ளைக்காரர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டில் ஜனநாயக நிறுவனங்கள் உயிரோடு இருக்கவில்லை. எல்லாமே ஊழல் நிறைந்தவையாக மாறிவிட்டன. மக்கள்தான் இப்போது இருக்கிற ஒரே நம்பிக்கை. இலங்கையில் நடைபெற்றதைப் போல இந்த மக்களை ஒழித்து கட்டிவிடவேண்டும் என்று பார்க்கிறார்கள். நாம் இந்த நிலமையைப் புரிந்து கொண்டு எதிர்த்து நின்றால் உண்மையில் வெற்றி பெறமுடியும். 


இங்கே அரசு மேற்கு வங்கத்தில், ஆந்திரத்தில் ஆயிரக்கணக்கான நக்சலைட்டுகளை ஒழித்துக் கட்டியது. இந்த நாட்டினுடைய ஊடகங்கள் மிக, மிக ஒத்துப் போகின்ற ஊடகங்களாகவே இருக்கின்றன. அவர்கள் எதிர்த்துக் கேள்வியை கேட்க விரும்பவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு எழுத்தாளர். சுதந்திரமான எழுத்தாளர். நான் மற்றவர்களைப் பார்த்து மட்டுமல்ல என்னைப் பார்த்தும் நானே கடுமையான கேள்விகளை கேட்டுக் கொள்கிறேன். நம்மைப் பார்த்து நாமே கூர்மையான கேள்விகளை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 


இந்த அரசுக்கு ஒரு பார்வை, புதிய கண்ணோட்டம் இருக்கிறதா?  ஆனால் காந்தியவாதிகளிடம் புரட்சிகரமான கண்ணோட்டம் இல்லை என்று சொல்லமாட்டேன். அதேநேரம் மாவோயிஸ்ட்டுகள் முழுக்க, முழுக்க புரட்சிகர கண்ணோட்டம் உடையவர்கள் என்பதையும் நான் ஏற்க மாட்டேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்படக்கூடாது என்ற நிலையில் காடுகளுக்குள் துரத்தப்பட்டிருக்கிறார்கள்.காலங்காலமாக பழங்குடி மக்கள் பகுதிகளில்தான் மாவோயிஸ்ட்டுகள் மிகுந்த வலுப்பெற்று திகழ்கிறார்கள். 


மாவோயிஸ்ட்டுகளுக்கென்று ஒரு சுரங்கக் கொள்கை இருக்கிறதா? அவர்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் சுரங்கங்கள் வெட்டுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பாக்சைட் சுரங்கம் என்பது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமல் பாச்சைட் சுரங்கங்களை வெட்ட முடியுமா? அங்கே முழுக்க, முழுக்க தண்ணீர் நிற்கிறது. பெரிய அணைகளைக் கட்டி மின்சார உற்பத்தி செய்தாகவேண்டும். பாக்சைட்டிலிருந்து அலுமினியாவும், அலுமினியாவிலிருந்து அலுமினியமும் தயாரிக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் காற்றில் நச்சைப் பரப்பக்கூடியது இந்த செயல்முறை. இதிலேதான் பன்னாட்டு குழுமங்கள் குளிர்காய விரும்புகின்றன. 


நாம் நம்மை நாமே கேள்வி கேட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். சங்கடமான கேள்விகளை கண்டு பயப்படாமல் கேள்விகளைக் கேட்கவேண்டும். ஆனால் நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். எதிர்ப்புக் கோட்டின் அந்தப் பக்கம் இல்லை. இந்தப் பக்கம்தான் இருக்கிறேன். பன்னாட்டு குழுமங்களுக்கு எதிராக இருக்கிறேன். எதிர்த்துப் போராடும் அனைவரின் பக்கமாகவும் இருக்கிறேன். நான் விரும்பியதை சொல்வதற்கு யாரும் தடை விதிக்கமுடியாது. 


இந்தப் பழங்குடி பகுதிகளில் கிடைக்கிற பாக்சைட், தங்கம், மதிப்பு மிகுந்த உலோகங்கள், கனிமப் பொருட்கள் இவற்றை வாங்கிக் கொண்டுபோய் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுக்க அரசாங்கம் துடிக்கிறது. பல்லாயிரம் மக்களை கொன்றொழித்தாவது இதைச் செய்ய அது முயல்கிறது. நீங்கள் நினைத்துப் பாருங்கள். இவர்கள் சுரண்டுகிற இந்தக் கனிமப் பொருளுக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கிற உரிமைக்கட்டணம் 24 ருபாய். பன்னாட்டு குழுமத்திற்கு கிடைப்பதோ 5,000 ருபாய். எவ்வளவு பெரிய வேறுபாடு என்பதை எண்ணிப் பாருங்கள். அதனால்தான் இங்கே பெல்லாரி குடியரசு ஆள முடிகிறது. அதனால் தான் இங்கே பல்வேறு இடங்களிலும் டாடாக்களின்  ஆட்சியும், பன்னாட்டு குழுமங்களின் ஆட்சியும் நடத்த முடிகிறது.  


இங்கே பாரதீய ஜனதா, கட்சியும் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க, அ.தி.மு.க, மார்க்சிஸ்ட் கட்சிகளும் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம்.  உண்மையில் டாடா கட்சியும், அம்பானி கட்சியும், மிட்டல் கடசியும்தான் இந்த நாட்டிலே இருக்கின்றன. அவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்த உள்நாட்டுப் போர் நடப்பதில் ஆதாயம் அடையத் துடிப்பவர்கள். நீங்கள் காட்டுக்குள் இருந்தால் உங்களையும் ஒரு தோட்டா தாக்கலாம். காட்டுக்கு வெளியே இருந்தால் சிறைக்குள் கிடக்கலாம். இதை எதிர்த்து எப்படி போராடப் போகிறோம் என்றுதான் நாம் யோசித்து பார்க்க வேண்டும். 


வன்முறையா? வன்முறை மறுப்பா என்ற விவாதத்திற்கு இப்போது அர்த்தமில்லை. ஏனென்றால் நமக்குள்ளே இந்த வேறுபாட்டுக்கு அர்த்தமில்லை. மாவோயிஸ்ட்டுகள் ஆனாலும் காந்தியர்கள் ஆனாலும் மது பட்கருடைய இயக்கம் ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சிப்பதில்லை. தாக்கிக்கொள்வதில்லை. எல்லோரும் ஒரே நோக்கத்தோடுதான் இருக்கிறார்கள். மக்களுக்கான இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு குழுமங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.  வேறுபாடுகளுக்கு இங்கே அர்த்தமில்லை. பன்னாட்டு குழுமங்களின் கொடுந்தேள் தீண்டிவிடாமல் மக்களை பாதுகாப்பதிலே அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.


நர்மதா பள்ளத்தாக்கு போராட்டத்தை எடுத்துப் பாருங்கள். அவர்கள் இதே போலத்தான் காடுகளுக்குள் போய் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் காடுகளுக்குள் போராடும்போது உங்களால் பட்டினிப் போராட்டம் நடத்தமுடியாது. நீங்கள் தர்ணா நடத்தமுடியாது. தொடர் முழக்கப் போராட்டம் நடத்தமுடியாது.அங்கே காந்திய போராட்ட வடிவத்திற்கு அர்த்தமேயில்லை. பட்டினி கிடப்பவன் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? பணம் இல்லாதவன் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? அதனால்தான் மாவோயிஸ்ட்டுகளானாலும், காந்தியர்களானாலும் ஒர் அணியில் இருந்து போராடுகிறார்கள். அவர்கள் மேடைக்கு ஏற்ப வெவ்வேறு உத்திகளை கையாண்டு போராடுகிறார்கள். வேறுபாடுகள் உத்திகளிலே இருக்கிறதே தவிர அவர்களது போராட்ட நோக்கத்திலே இல்லை.


நான் தண்டகாரண்யா காடுகளுக்குச் செல்லும்முன் தாண்டேவாடா பகுதியிலுள்ள மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரைப் போய் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் 18 நக்சல்களை எங்கள் வீரர்கள் கொன்றுவிட்டார்கள் என்று படத்தை காட்டினார். அவர்களில் பலரும் பெண்களாக இருந்தார்கள். 


அவர்களை நக்சலைட் என்று சொல்கிறீர்களே என்ன ஆதாரம் என்று கேட்டேன். “பாருங்கள், அவர்கள் பையிலே இருந்து மலேரியா மருந்தும், டெட்டால் திரவமும் எடுத்திருக்கிறோம். இவர்கள் வெளியிலிருந்துதானே இதனை கொண்டு வந்திருக்கவேண்டும். எனவே அவர்கள் நக்சலைட்டுகளாகத்தான் இருக்கவேண்டும்" என்றார். மாவோயிஸ்ட்டுகள் யார் என்பதற்கு இப்படியும் கூட விளக்கமிருக்கிறது. 


அவர் இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னார், “இந்த மக்களை காவல்துறையைக் கொண்டோ, ராணுவத்தைக் கொண்டோ ஒடுக்கமுடியாது. அதற்கு வேறொரு வழி இருக்கிறது. இவர்கள் பேராசை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பேராசை கொண்டவர்களாக மாற்றினால் சுலபத்தில் சமாளிக்க முடியும். வீட்டிற்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை கொடுங்கள் அவர்கள் பணிந்து விடுவார்கள்” என்றார்.  இதைத்தான் உங்கள் அரசியல்வாதிகள் உங்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விதத்திலேதான் இதைச் சமாளிக்கமுடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 
அந்த காவல்துறை கண்காணிப்பாளர் சொன்னார், “யாரெல்லாம் காவல்துறையின் முகாம்களுக்கு வரவில்லையோ, யாரெல்லாம் முகாம்களுக்கு வெளியே இருக்கிறார்களோ, யாரெல்லாம் கோழி வளர்த்துக்கொண்டும், ஆடு மேய்த்துக் கொண்டும், காட்டில் விறகுகளை சேகரித்துக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவரும் மாவோயிஸ்ட்டுதான் என்று தெரியவில்லையா?” என்று கேட்டார்.  தீவிரவாதத்திற்கான விளக்கம் தண்டகாரண்யா பகுதியில் இப்படித்தான் இருக்கிறது. 


செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் நெடுந்தூரம் தள்ளி வந்திருக்கிறோம். ஆயுதப்படையை இறக்குவது, ராணுவத்தை ஈடுபடுத்துவது என்பது பற்றியெல்லாம் இங்கே பேசுகிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏழைகளுக்கு எதிராகத் துப்பாக்கி சூடு நடத்தவும் அனுமதிக்கிறார்கள். இது வெட்கக் கேடானது. உலகிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, சத்துணவுக் குறைபாடுள்ள மக்களுக்கு எதிராக நடக்கின்ற போர்தான் இது. இந்தப்போருக்காக நாட்டின் செல்வாதாரங்களை விரயம் செய்கிறார்கள். இதைக் காட்டிலும் மானக்கேடானது எதுவும் இருக்க முடியாது.  


எனக்கொரு கருத்துண்டு. முதலாளித்துவம்தான் மிகக், மிகக் கொடுங்கோன்மை வாய்ந்த கருத்தியல் என்பதுதான் அது. ஏனெனில் முதலாளித்துவத்தால்தான் தனக்கு அருகில் வேறொரு சமுக அமைப்பு சக வாழ்வு வாழ்வதை சகித்துக் கொள்ள முடிவதில்லை. இந்தப் பழங்குடி மக்கள் முதலாளித்துவத்தை ஏற்காதவர்கள். முதலாளித்துவம் அல்லாத ஒரு வாழ்க்கை முறையை பழகியவர்கள். எனவேதான் பழங்குடிப் பகுதிகள் மீது போர் தொடுக்கப்படுகிறது.  அது ஆப்கானிஸ்தான் ஆனாலும், பாகிஸ்தானானாலும், வட கிழக்கானாலும், சிவப்புத் தாழ்வாரம் என்றழைக்கப்படுகிற அந்த நீண்ட நிலப்பரப்பானாலும், எல்லா இடங்களிலும் இந்தப் போர் நடக்கிறது. எதிர்ப்பு இயக்கம் வெவ்வேறு தலைமைகளின் கீழ் இருக்கலாம். அது முற்போக்கு இஸ்லாமியர்களின் தலைமையின் கீழ் இருக்கலாம், முற்போக்கு கம்யூனிசத்தின் தலைமையின் கீழ் இருக்கலாம் எப்படியிருந்தாலும் இவர்கள் எல்லோரும் பன்னாட்டு குழுமங்களின் கொடுந்தாக்குதலை எதிர்த்து போராடிக்கொண்டிருப்பவர்கள். 


எனக்கு உண்மையிலேயே வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. பல பத்தாண்டுகளில் நாம் செய்ய முடியாததை இந்த பச்சை வேட்டை நடவடிக்கை செய்து முடித்துவிட்டது. அது என்னவென்றால் அகிம்சை பேசிக்கொண்டிருந்தவர்களின் முகத்திரையை கிழித்து அம்பலமாக்கிவிட்டது. பன்னாட்டு குழுமங்களின், நிர்வாக வாரியங்களின் பளபளப்பான சொகுசு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை வெளியே இழுத்துக் கொண்டு வந்து கொலைகாரர்களாக அது கண்ணுக்கு முன்னே நிறுத்திவிட்டது. பச்சை வேட்டையிலிருந்து கிடைக்கும் பலமாக இதைத்தான் கருதுகிறேன். இது ஏன் இப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்? முதலாளித்துவ கொடுங்கோன்மையை தடுத்து நிறுத்த வேண்டும். நாம் இதிலே வெற்றி கண்டாக வேண்டும். வெற்றி பெரிதும் முக்கியமானது.


நாம் ஏதோ பாரதிய ஜனதாவையோ, காங்கிரசையோ, கம்யூனிஸ்ட்டுகளையோ, மாவோயிஸ்ட்டுகளையோ பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. மகிழ்ச்சிக்கு மாறுபட்டதொரு இலக்கணம் வகுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இயற்கையோடு இயைந்து வாழ்வதை சாத்தியமாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.  இதில் நாம் வெற்றி பெற்றால் நமக்கு கொஞ்சம் நம்பிக்கை கிடைக்கும். இதில் நாம் தளர்ந்துவிட்டால் அனைத்தையும் பறிகொடுத்துவிடுவோம். 


நான் எழுதியுள்ள ஒரு பகுதியை இறுதியாக படித்துக்காட்டி நிறைவு செய்ய விரும்புகிறேன். ஆசிய துணைக்கண்டத்தின் குறுக்கே ஆப்கானிஸ்தான் முதல் வசீரிஸ்தான் ஊடாக, பாகிஸ்தானின் வட மேற்கு வழியாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் ஊடாகவும், சிவப்பு தாழ்வாரம் எனப்படுகிற நிலப்பரப்பின் வழியே பழங்குடிப் பகுதிகள் புரட்சியில் எழுச்சி கொண்டிருக்கின்றன. அவை கலகம் செய்யத் தொடங்கிவிட்டன. அந்த எழுச்சியின் இயல்பானது ஆப்கானிஸ்தானில் முற்போக்கு இஸ்லாம் வடிவத்தை மேற்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில்  இஸ்லாத்தின் வடிவத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்தியாவில் வனங்கள் சூழ்ந்த இதய பூமியில் அது பழங்குடி மக்களின் முற்போக்கு பொதுவுடமைக் கொள்கை என்ற வடிவத்தை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் முதலாளித்துவம், இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக ஓயாது நடத்துகின்ற வேட்டை தொடர்ந்து கொண்டே செல்கிறது. 


பழங்குடி மக்களின் இந்த தாயகங்கள் மீது சுதந்திர சந்தையின் தாக்குதலுக்கு இது வழி வகுக்கிறது. நீடித்த போருக்கு ஒரு மாற்று வழியை எதிர்பார்ப்பது மிகக் கடினமாக இருக்கும். பச்சை வேட்டை நடவடிக்கை போன்ற போர்களின் நோக்கம் உண்மையிலேயே நீடித்த வாழ்க்கை முறையின் ரகசியங்களை அறிந்திருப்பவர்களை ஒழித்துக் கட்டுவதே ஆகும்.
பழங்குடி மக்களுக்கு மட்டுமல்ல இறுதியாக பார்த்தால் மனித இனத்திற்கே ஒரு பிரளயத்தை தோற்றுவிக்கக் கூடிய விதைகள் இந்த போருக்குள்ளே மறைந்திருக்கின்றன.முதலாளித்துவத்திற்கு வெளியே ஒரு புதிய வாழ்க்கையை, கம்யூனிசத்திற்கு வெளியேயும் ஒரு புதிய வாழ்க்கையை கற்பனை செய்கிற முயற்சி இது. மகிழ்ச்சி என்றால் என்ன, மனநிறைவு என்றால் என்ன என்பதை மாறுபட்ட முறையிலே புரிந்து கொள்கிற ஒரு கற்பனை இது. இதற்கான மெய்யியல் வெளியினை பெறுவதற்கு யார் நமது கடந்த காலத்தின் காவலர்களைப் போல் தோன்றுகிறார்களோ, யார் நமது வருங்காலத்தின் வழிகாட்டிகளாக உண்மையில் இருக்கக் கூடுமோ, அவர்கள் பிழைத்து வாழ்வதற்கான ஒரு இடவெளியை இங்கே ஏற்படுத்துவது அவசியமாகும். 


இதைச் செய்ய வேண்டுமானால் நாம் கேட்க வேண்டிய கேள்வி:
நீரை ஆறுகளிலேயே விட்டு விடுவோமா? 
மரங்களை காடுகளிலேயே விட்டுவிடுவோமா?
பாக்சைட்டையும், தாதுப் பொருட்களையும் மலைகளிலேயே விட்டு விடுவோமா? 


நம்மால் அப்படி விட்டுவிட முடியாது என்றால் இந்த போரினால் பாதிக்கப்படுபவர்களிடம் ஒழுக்கம் பற்றி பேசுவதை நாம் நிறுத்தி விட வேண்டும்.

No comments: