புதன், 28 டிசம்பர், 2011

அவர்கள் நல்ல தமிழர்களைத் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்

தமிழர்கள், திராவிடர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளை ‘நாம் தமிழர் இயக்கம்’ மேற்கொண்டிருக்கிறது. ‘நல்ல தமிழர்களை’ அவர்கள் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் தமிழர் அடையாள ஆராய்ச்சியின்படி ஈழ விடுதலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பேருதவி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனைக்கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர் பிறப்பால் மலையாளி என்பதால் ‘திராவிடராகி’ விடுகிறார். நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில், ஈடில்லாத போராட்டங்களை நடத்திய கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்கூட, அவர்கள் கண்களுக்கு ‘நல்ல தமிழர்களாக’ புலப்படவில்லை.

ஆங்கிலேயர் கால்டுவெல் கண்டுபிடித்த சொல்லான திராவிடத்தை எப்படி ஏற்க முடியும் என்ற வாதங்களையெல்லாம் முன் வைக்கிறார்கள். ‘கால்டுவெல்’ என்ற ஆங்கிலேயரின் கண்டுபிடிப்புகளையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் ‘ஆராய்ச்சி’கள் கூறினாலும், சீமான் என்ற வடமொழிப்பெயரை சூட்டிக் கொண்டுள்ளதற்காக அவரை, நாம் தமிழன் இல்லை என்று சொல்லப் போவதில்லை. அவர்களின் ஆராய்ச்சியை சீமானுக்கு நாம் பொருத்திப் பார்க்கத் தயாராக இல்லை.

ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ‘திராவிட’ என்ற சொல்லை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்காகவே கலைஞர் கருணாநிதியையோ, விஜய்காந்தையோ, ஜெயலலிதாவையோ நாம் தூக்கி சுமப்பவர்கள் அல்ல.

கலைஞர்கூட ஒரு காலத்தில் அவர் சார்ந்த சமூகப் பார்வையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திராவிடர் இயக்கத்துக்கு வந்தவர்தான். இன்று அவரிடம் அந்த சமூகப் பார்வை எல்லாம் காணாமல் போய் பெரு முதலாளிகளின் வர்க்கப் பார்வைக்கு வந்துவிட்டார்.

ஜெயலலிதா எப்போதுமே தமிழினத்துக்கு எதிரிதான். இந்த சக்திகள் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கான புதிய அரசியல் சக்தி ஏதேனும் தோன்றாதா என்று உண்மையாக ஏங்கும் தமிழர்கள் ஏராளம் உண்டு. விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு.

ஆனால், புதிதாக புறப்பட இருக்கிற ‘நாம் தமிழர்’ தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.

பெரியார் முன்னிறுத்திய ‘திராவிடர்’ என்பது தமிழர்களுக்கான - தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடுபடுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.

‘அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லை’ என்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீதுசுமத்தப் பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் - திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், ‘நாம் தமிழருக்கு’ அவைகள் கசக்கின்றன.

தமிழ்நாட்டைத் தவிர, பிற மொழிக்காரர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது முதல்வரானது உண்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அடக்கத்துடன் நாம் நினைவூட்டுகிறோம். பக்கத்து நாடான கன்னட நாட்டில் தரம்சிங் என்ற மராட்டியர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

‘நாம் தமிழர்’ அமைப்புத் தோழர்கள் பலரின் சட்டைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சேகுவேரா கூட அர்ஜென்டினாவில் பிறந்தவர் தான் . அவர் கியுபா விடுதலைக்குப் போராடினார். அத்துடன் நிற்கவில்லை.பொலிவியா விடுதலைக்கும் போராடச் சென்றார். ‘நாம் தமிழர்’ அமைப்பின் திராவிடர் எதிர்ப்புக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும்போது, சேகுவேராவும் கூட கியூபாவின் அன்னியர் தானே?

இனி அவர்கள் பார்வையில் ப. சிதம்பரம், சோழவந்தான் சுப்ரமணியசாமி, புதுவை நாராயணசாமி எல்லாம் திராவிடர் அல்லாத “நல்ல தமிழர்”களாகி விடக் கூடும்.

இன்னும் விரிவாக எழுதலாம்; திராவிடர் எதிர்ப்பை அவர்கள் தொடரும்போது அதற்கான விளக்கங்களும் பதில்களும் வரத்தானே செய்யும்? அவைகளுக்கெல்லாம் இந்த விளக்கம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே!


கொளத்தூர் தா.செ. மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றி: http://thozharperiyar.blogspot.com/2010/04/blog-post_23.html

3 கருத்துகள்:

HotlinksIN.cm சொன்னது…

நண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

ErodePeraatral Subramanian சொன்னது…

சீமான் அண்ணன் கொளத்தூர் மணி அண்ணன் கீழ் பலகாலம் இருந்தவர்......அவர் ஆரிய எதிர்ப்பை விட்டுவிடுவார் என்பதெல்லாம் உங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கத்தானே அன்றி வேறொன்றுமில்லை.........ஈழப்போரில் மலையாளிகளின் பங்கு எந்த அளவிற்கு இருந்தது என்பதை உலகறியும்.......உண்மையாய் சொல்லவேண்டுமானால் சீமானின் 'உரைவீச்சு' சரித்திரப்புகழ் பெறுவதில் இங்கு பெரும்பாலோருக்கு பொறாமை அவ்வளவே.......காலம் அவரை பக்குவப் படுத்தும்......ஏன் அவர் பெ.தி.க விலிருந்து வெளிவர நேர்ந்தது என்பதை அவர் கூற நேரும்.....அன்று வரை எங்களைப் போன்றோர் காத்திருப்போம்........பெரியாரை அவர் விட நேர்ந்தால் நாங்கள் அவரையும் விட நேர்வோம்.....நான் 3 ஆண்டுகளுக்கு மேல் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' படித்தவன்......பெ.தி.க வும் த.தே.போ.க வும் சண்டையிட்டதையும்.....எஸ்.வி.ராஜதுரை ஒரு விளக்கப் புத்தகம் எழுதியதையும் முழுமையாய் படித்திருக்கிறேன்........பெரியாரை வேண்டாம் என்கிற த.தே.போ.க ,....பெ.தி.க மற்றும் ஆதரவு அமைப்புக்கள் நடத்திய (திருச்சியில் ) வரலாற்றுச்சிறப்பு மிக்க 'இழுத்துப் பூட்டும்' போராட்டம் பற்றி ஒரு வரி கூட எழுதாத 'தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்' ....அன்றே தூக்கி எறிந்தேன்.(அரை வேக்காடுகள்)........கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் ...ஒவ்வொரு அமைப்பை மட்டுமல்ல ...அதற்குள் இருக்கும் ஒவ்வொருவரின் உளவியலையும்......'பெரியாரைப் பேசும் அறிவுமதி இப்படிச் சொல்கிறார் '....'அறிவுமதி பேசுகிற பெரியார் இப்படிச்சொல்கிறார்' .....என்றெல்லாம் எழுதி அறிவுமதியை சீன்டியதையும் யாமறிவோம்...... ........இறுதியாக......... நான் ஒரு போதும் பெரியாரை விட மாட்டேன்...கலப்புத் திருமணம் செய்த பின்தான் நான் வாழவே தகுதி உள்ளவன் என்று 'கலப்பு மணம்' புரிந்து வாழ்கிறேன் .....ஒரு மகனுக்கு சுப.பேரறிவாளன் என்று பெயரிட்டு வளர்க்கிறேன் .......'தமிழ் நாடு தமிழருக்கே ' என்ற பெரியாரின் கூற்றை நனவாக்கவும் 'சாதி அழிந்த தமிழ்நாடே' நமது முதல் இலக்கு என்பதில் சளைக்காமல் போராடவும் உறுதி பூண்டுள்ளேன் ................

​செல்​லையா முத்துசாமி சொன்னது…

ErodePeraatral Subramanianக்கு,

//ஈழப்போரில் மலையாளிகளின் பங்கு எந்த அளவிற்கு இருந்தது என்பதை உலகறியும்// ம​லையாளிக​ளை நாங்கள் திராவிடர்க​ளென்று ​சொந்தம் ​கொண்டாடுவதாக நீங்கள் நி​னைப்பது உங்கள் அறியா​மை​யேயன்றி ​வேறல்ல. ​பெரியா​ரே ம​லையாளிக​ளைப்பற்றி என்ன ​சொல்லியிருக்கிறார் என்ப​தைக் கீழ்க்காணும் பாருங்கள். http://www.chelliahmuthusamy.com/2012/01/blog-post_4292.html
இது ​பெரியார் முழக்கத்தில் வந்து, என் தளத்திலும் ஏற்க​னெ​வே ​வெளியிடப்பட்டது.

திராவிடர் என்பதன் ​பொருள் ​தெரியாத உங்களுக்கு கீழ்க்காணும் இ​ணைப்புகள். படியுங்கள் ​தெளிவு ​​பெறுவீர்கள்.
http://www.chelliahmuthusamy.com/2011/12/blog-post_2394.html

//சீமானின் 'உரைவீச்சு' சரித்திரப்புகழ் பெறுவதில் இங்கு பெரும்பாலோருக்கு பொறாமை//

அப்படியா இப்படித் தரம் தாழ்ந்து அம்மா தா​யே... என்று இரத்தல் ​மொழி​​பேசி இழிவுபட்டதில்​லை என்று தான் எனக்குத்​தெரிந்த ​பெரும்பாலா​னோர் ​பேசிக்​கொள்கிறார்கள்.

//ஏன் அவர் பெ.தி.க விலிருந்து வெளிவர நேர்ந்தது என்பதை அவர் கூற நேரும்//
சீமான் ​காரணம் ​சொல்ல நல்லநாள் பார்த்துக்​கொண்டிருக்கத்​தே​வையில்​லை. ஓட்டுப்​பொருக்கி அரசியலுக்கு ​பெ.தி.க வில் இடமில்​லை என்பதால் அவர் கட்சி அரசியல் ​செய்யப்​போய்விட்டார்.

//பெரியாரை அவர் விட நேர்ந்தால் நாங்கள் அவரையும் விட நேர்வோம்//
எப்​போது முத்துராமலிங்கத்துக்கு மா​லையிடச் ​சென்றா​ரோ அப்​போ​தே அவர் ​பெரியா​​ரைக் ​கைவிட்டுவிட்டார். நீங்கள் இன்னும் ​தொங்கிக்​கொண்டு நிற்கிறீர்கள். ​பெரியாரியலுக்கு எதிர்த்தி​​சையில் அவர் பயணிப்ப​தை அறிய இயலாத உங்க​ளைப் ​போன்றவர்கள் நாம் தமிழரில் இருப்பது மிக​பொருத்தம்.

//நான் 3 ஆண்டுகளுக்கு மேல் 'புரட்சிப் பெரியார் முழக்கம்' படித்தவன்//
அப்புறம் என்னாச்சு. அதில் கிசுகிசு​வோ நடிகர்க​ளை ஆராதிக்கும் ​செய்திக​ளோ இல்​லை​யென்று விட்டுவிட்டீர்களா? மூன்றாண்டுகள் அல்ல, நீங்கள் திராவிட கருத்திய​லைப் புரிந்து​வைத்திருப்ப​தைப் பார்த்தால் ஒரு இதழ் கூட படித்த மாதிரி ​தெரியல​யே.

நீங்கள் கலப்புத்திருமணம் ​செய்து​கொண்டதா​​லோ அல்லது தமிழில் பிள்​ளைக்கு ​பெயரிட்டுள்ளதா​லோ ​பெரியா​ரின் சிந்த​னைக​ளை, ​கொள்​கைக​ளை ஏற்றுக்​கொண்டவராகிவிடமாட்டீர்கள்.

​பெரியா​ரை வாசியுங்கள்.

//'சாதி அழிந்த தமிழ்நாடே' நமது முதல் இலக்கு என்பதில் சளைக்காமல் போராடவும் உறுதி பூண்டுள்ளேன்//

வாழ்த்துகள். ஆனால் அதற்கு சாதிக்கட்சியாக வளர்ந்துவரும் நாம்தமிழர் எந்தவ​கையில் உதவும்.