அப்பாவின் நினைவு
அடிக்கடி வருவதில்லை.
அவர் இல்லாத வெறுமையை
உணர்ந்தேனென்றும் சொல்வதற்கில்லை.
வலிந்து நினைப்பதுண்டு
சில நேரம்.
குடியால் சிவந்த அவரது கண்கள்...
போதை தந்த விடுதலையில்
"செல்லக்குட்டிப்பயல்
செல்லக்குட்டிப்பயல்"
என்று பித்துதீர அழைத்தது...
நகர கடைத்தெருவில்
என் விரல்பிடித்து அழைத்துச்சென்றது...
என
சிலநினைவுகளை
தன்னியல்பாகவோ
வலிந்தோ
நினைவுகூறுகிறேன்.
சிலநேரம்....
மாநகரின் போக்குவரத்து நெரிசலில்
பச்சைவிளக்குக்காக காத்திருக்கையில்
இருசக்கரவாகனத்தின் பின்னிருக்கையில்
அமர்ந்துகொள்கிறார்.
தூக்கமற்ற நள்ளிரவுகளில் பார்த்திருக்கிறேன்
அயர்ந்துறங்கும் என்மகளைப் பார்த்தபடி
நின்றுகொண்டிருக்கிறார்.
அரிதாக
வருமானத்திற்கான பணியொன்றை
நான் செய்தால்
புன்முறுவல் செய்கிறார்.
தோளில் கனக்கும்
அப்பாவைவை
இறக்கிவிட வழியறியேன்.

0 கருத்துரைகள்:
Post a Comment