Wednesday, January 4, 2012

‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்!


தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு ஆதரவு தரவில்லை என்றும், சிலர் பேசவும், எழுதவும் புறப்பட்டுள்ளார்கள். ‘திராவிட’ கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களோடு சமரசம் செய்துகொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை (இப்போது கேரளாவில் அடங்கியுள்ள பகுதிகள்) தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்ற போராட்டத்தில் ம.பொ.சிக்கும் தனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை விரிவாக விளக்கி, பெரியார் 29.1.1956 ஆம் ஆண்டு வேலூரில் நிகழ்த்திய சொற்பொழிவை இங்கு வெளியிடுகிறோம். பெரியாரின் இந்த பேச்சு, பல உண்மைகளை வெளிச்சப்படுத்துகிறது.

1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மொழியடிப்படையில் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு கோரிக்கை வந்துவிடும் என அஞ்சிய இந்திய தேசிய பார்ப்பனர்கள், தமிழ்நாடு, கன்னடம், கேரளா என்ற மூன்று மாநிலங்களையும் ஒருங்கிணைத்து ‘தட்சிணப் பிரதேசம்’ என்ற அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டனர். தமிழர்களுக்கு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த பெரியார், ‘தட்சிணப் பிரதேசம்’ கொண்டுவரும் முயற்சிகளைக் கண்டு கொதித்தெழுந்து, அதை முறியடித்தே தீரவேண்டும் என்று தீவிரமாக களமிறங்கினார். தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தாலும், அதைவிட பேராபத்து, ‘தட்சிணப் பிரதேசம்’ உருவாக்கும் முயற்சியே என்பதை பெரியார் எடுத்துக்காட்டி எச்சரித்தார். தனக்கும் ம.பொ.சிக்கும் இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை - கடிதத் தொடர்புகளையும் பெரியார் இந்த உரையில் விரிவாக விளக்கியுள்ளார். 

மலையாளிகள் எதிர்ப்பில் பெரியார் காட்டிய உறுதியையும், இந்த உரையைப் படிப்பவர்கள் உணர முடியும்.

- ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம்

  சனவரி, 5 - 2012


29.1.56 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வேலூர் டவுன் ஹாலில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு:


தமிழ்நாட்டிற்கு இந்திய அரசாங்கம் இழைத்துவரும் கொடுமைகளைக் கவனித்தால் மிகவும் முக்கியமாக நான்கைந்து விஷயங்களில் நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். அவைகளில் ஒன்றாக தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவேண்டிய தமிழர்கள் பெரும்பான்மையும் வசித்துவரும் தேவிகுளம்-பீர்மேடு போன்ற பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்கவேண்டும் என்பதே. ஆனால் இது அவசியமற்றதாகிவிட்டது.காரணம் தலைக்கே ஆபத்து வருகையில் தலைப்பாகையைப் பத்திரப்படுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதைப்போல் நம்முடைய அடிப்படையான நாட்டுக்கே கேடு வருகையில் இப்போது தேவிகுளம்-பீர்மேடு என்று கதறுவதில் பலன் இல்லை. முதலில் நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு நாட்டைக் காப்பாற்றி அதன்பிறகு வேண்டுமானால், தேவிகுளம், பீர்மேடு பற்றிய கவலை கொள்ளலாம். 

இன்றைய தினம் நாட்டையே பறிகொடுக்கும் நிலைமையில் தட்சிணபிரதேசம் என்று அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தட்சிணபிரதேசம் அப்படி அமைக்கப்படுமானால் நாம் தமிழ்நாடு என்று கூறிக்கொள்ளவும் முடியாது. தமிழ்நாடு என்ற பெயரையே மறைத்துவிடுவார்கள். இன்றைக்குள்ள சென்னை நாடு என்பது மாற்றப்பட்டு தமிழ்நாடு என்று பெயரிடும்படி கேட்கிறோம். அப்படி இருக்க தட்சிண பிரதேசம் என்ற பெயரைக் கொடுத்தார்களானால் நம் நாட்டின் பெயர் அடியோடு மறைந்துபோகும். ஆகவே தட்சிணபிரதேச அமைப்பு முயற்சியை முறியடிக்க முதலில் முயற்சி செய்யவேண்டிய அவசியம் உள்ளவர்களாகஇருக்கிறோம்.

எப்பொழுது தட்சிணப்பிரதேசம் அமைக்கப்படும் என்ற செய்தி வெளியானதோ, அன்றைய தினமே பீர்மேடு - தேவிகுளம் பற்றிய பிரச்னை செத்துப்போய்விட்டது என்பது பொருள். தட்சிணப் பிரதேசம் உயிர்பெற்று எழுந்திருக்க ஆரம்பித்தவுடன் பீர்மேடு இந்நாட்டுடன் இருந்தால் என்ன அல்லது மலையாளத்துடன் இருந்தால் என்ன? மலையாள நாடு, கன்னட நாடு, தமிழ்நாடு மூன்றையும் சேர்த்து தட்சிணப்பிரதேசம் என்று கூறுகையில் எல்லாம் ஒன்றைப்போல் பாவித்துதான் எதையும் செய்வார்கள்.


விளம்பரத்துக்கான போராட்டம் தேவையில்லை.

ஆகவே பீர்மேடு - தேவிகுளம் போன்ற பகுதிகளுக்கு தற்சமயம் கிளர்ச்சி அவசியம் இல்லை. தட்சிணப் பிரதேச அமைப்பு செத்துப்போகுமானால், அதன் பிறகுதான் பீர்மேடு - தேவிகுளம் பற்றிய கிளர்ச்சிக்கு உயிர் உண்டாகும் அவசியம் இருக்கிறது. ஆனால், ஒரு சில சுயநலக்காரர்கள் விளம்பரத்திற்கென்றும், வீண்வேலைக்கென்றும் கிளர்ச்சி கிளர்ச்சி என்று மக்களைத் தூண்டிவிட்டு தகாத காரியங்களில் ஈடுபடச்செய்கிறார்கள். மக்கள் ஒன்றும் அறியாதவர்களாய் கிளர்ச்சி என்றவுடன் சிந்தித்துப் பார்க்காமல் கண்மூடிக் கொண்டு எதையும் செய்கிறார்கள்.

தட்சிணப் பிரதேச அமைப்பு மட்டும் வருமானால், இங்கு இப்போது பார்ப்பான் மட்டும் இருந்து கொண்டு நம் உயிரைக் குடித்துக் கொண்டிருப்பது போதாது என்று மலையாளிக் கூட்டமும் இங்கே வந்து நிரம்பிவிடும். இவை இரண்டும் சேர்ந்து நம்மை அழுத்திக் கொண்டிருக்கும்; நம்மை முன்னேற விடாது. ஒன்றுக்கும் தலையெடுக்காதபடி நம்மை என்றைக்கும் கூலிகளாகவே வைத்திருப்பார்கள்.

ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும், மலையாளக் குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப்பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கு உண்டு. பார்ப்பானைப்போலவே மலையாளிகள் மான-ஈனமில்லாதவர்கள், மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம்கூட இருக்காது. எதற்கெடுத்தாலும் திமிராகப் பேசவும் பார்ப்பானைப் போல் தந்திரமாகப் பேசவும்தான் தெரியும். 


மலையாளிகள் தூண்டுதல்.

தட்சிண பிரதேச அமைப்பு முயற்சியே மலையாளிகளின் தூண்டுதலால் தான் உண்டானது. முன்பு சிறிது நாட்களுக்கு முன் இதைப் போன்றே திடீரென்று தட்சிணப்பிரதேசம் அமைக்கப் போவதாகக் கூறினார்கள். அதற்கு என்னுடைய சம்மதமும் கிடைத்துவிட்டதாக வெளியிட்டார்கள். உடனே நான் என்னைக் கேட்காமல் இவ்வளவு துணிச்சலாக பத்திரிகையில் வெளியிடும் அளவுக்கு வந்துவிட்டதே என்று உடனே மத்திய அரசாங்கத்திற்குத் தந்தி கொடுத்து நான் தட்சிணப்பிரதேச அமைப்பை வண்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்தேன். மேலும் பத்திரிகை வாயிலாகவும் அதற்கான மறுப்புகளையும் எழுதிவந்தேன். அதன் பிறகு அந்தப் புகை அப்படியே இருந்து அடங்கிப் போய்விட்டது. இப்போது மறுபடியும் முளைப்பதற்கு ஆரம்பித்திருக்கிறது. இதுவும் மலையாளிகளின் தூண்டுதல்தான்.

மலையாளிகளுக்கு வடக்கே கொஞ்சம் செல்வாக்கு உண்டு. நேரு கூட மலையாளிகளின் யோசனையைக் கேட்ட பிறகுதான் எதையும் வெளியிடுவார். எனவே மலையாளிகள் நேருவிடம் சொக்குப்பொடி தூவி மயக்கி, அவருடைய முயற்சியால் இந்த அமைப்புமுறை வருவதாகத் தந்திரம் செய்கிறார்கள். நேருவும் மலையாளிகளுக்கு ஏற்றபடி கூத்தாடுபவர். இன்றைக்கு மலையாளிகளின் பாக்கெட்டிலேயே நேரு மாட்டிக்கொண்டிருக்கிறார். தன்னிடம் உள்ள நேருவை மலையாளிகளும் சும்மா வைத்திருப்பதில்லை. ஏதோவது ஒன்றைக் கூறி தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் தட்சிணப்பிரதேசம் என்பது. காரணம் மலையாள நாடு மிகவும் சிறியநாடு. பிள்ளைக்குட்டிகள் அதிகம் பெறுகிறார்களே தவிர, அவற்றை அங்கே வைத்துக் காப்பாற்ற போதிய வசதி இல்லை. நாட்டின் பரப்பளவுக்கு ஏற்ற முறையில் இல்லாமல் அங்கு ஜனத்தொகை அதிகம். இப்போதுள்ள மலையாள நாட்டைப்போல் இரண்டு மூன்று பங்கு பரப்பளவு இருந்தாலும் அங்குள்ள மக்கள் பிழைக்கப் போதிய வசதி இருக்காது. ஆகவே அந்நாட்டில் அடங்கியதுபோக எஞ்சியவர்கள் வெளியே சென்று பிழைக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். மிகவும் பரிதாபத்துக் குரியதென்றாலும், அதுகள் நம்முடைய உயிரையா வாங்கவேண்டும்?..... இப்போது கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும் குள்ளநரிக் கூட்டம் இருந்துகொண்டு இருக்கிறது. அத்துடன் மற்றொரு வேங்கைக் கூட்டமும் இங்கு வந்துசேர்ந்தால் நம்முடைய அழிவுக்கு அவை இரண்டுமே முடிவு செய்துவிடும். இருந்தாலும் தங்கள் மலையாள நாட்டில் பிழைக்க வழியில்லை என்பதற்காக நம் தமிழ்நாட்டில் வந்து பிழைக்கவேண்டுமா? இங்குள்ள தமிழனே மலேசியா, சிலோன் என்று வாழ்கிறான். அங்குச் சென்றவர்கள் எல்லாம் அங்கங்கே துரத்தப்படுகிறார்கள். அவர்கள் இங்கு தமிழ்நாட்டிற்குத் திரும்பி வந்தவுடன் அவர்களுக்கு என்ன வழிசெய்வது என்பதே தெரியவில்லை. அப்படி இருக்க எங்கோ கிடக்கும் மலையாளக் கூட்டம் இந்நாட்டில் புக எத்தனிக்கிறது. தமிழர்களுக்கு மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது.

பார்ப்பான் - மலையாளி உறவு.

பார்ப்பானுக்கு இதைப் பற்றியே கவலையே கிடையாது; ஏனெனில் மலையாள சாதி இன உணர்ச்சியற்ற சாதி, பார்ப்பான் சொல்படி பாட்டுப் பாடும் சாதி, அதற்கு பார்ப்பான் - தமிழன் என்ற பாகுபாடு தெரியாது. ஏறக்குறைய பார்ப்பன நாகரிகத்திற்கும் மலையாள நாகரிகத்திற்கும் ஒற்றுமையுண்டு. இப்போது கூடப் பார்க்கிறோம். பார்ப்பான் ஒரு உத்யோகத்தில் இருந்தால் அவனால் எத்தனை தமிழனை முன்னுக்கு வரமுடியாமல் செய்யமுடியுமோ அதைப் போன்றே மலையாளியும் செய்கிறான். ஆனால் பார்ப்பனர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வார்கள். தமிழன் என்றால் மலையாளி கவலை கொள்வதே கிடையாது. மேலும் தன்னால் முடிந்தவரை மலையாளியை முன்னுக்குக் கொண்டுவருவதிலேயே இருப்பான். இப்படி இந்த இரண்டு சாதியும் அதனதன் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து இந்நாட்டைப் பாழாக்கி நம் மக்களைக் கொடுமை செய்கின்றன.

எப்படியோ மலையாளிகளின் எண்ணிக்கை இந்நாட்டில் பெருகிவிட்டது. பார்ப்பான் எத்தனை பேர் உத்யோகத்தில் இருக்கின்றானோ அதைப்போன்றே மலையாளிகளும் இருக்கின்றனர். நாம் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் உத்யோகம் கொடுக்கவேண்டுமென்று கேட்டால் யாராவது மலையாளிக்குக் கொடுத்துவிட்டு பார்ப்பனன் அல்லாதவனுக்கு உத்யோகம் கொடுத்திருக்கிறேன் என்று தந்திரமாகக் கூறிவிடுகின்றனர். இப்படி எந்த உத்தியோகத்தை எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் அல்லது மலையாளிகளே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள நாட்டில் ஆண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பெண்களுக்குத்தான் சொத்துரிமை உண்டு. மலையாளிகள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படியாவது கல்வி புகட்டி விடுவார்கள். இங்கு பார்ப்பனர்கள் படித்திருப்பதைப் போன்று மலையாளிகள் எல்லாம் படித்திருக்கிறார்கள். படித்தபின் வேலை தேடுவதற்கு ஆரம்பித்தவுடன் அந்நாட்டில் எத்தனை பேருக்குத்தான் வேலை கிடைக்கும்? அங்கு ஒரு சிலருக்கு மட்டும்தான் வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று வேலை தேடுகிறார்கள். எங்கே வேலை கிடைக்கிறதோ அங்கேயே நிரந்தரமாக வசிக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி வேலை தேடிக்கொண்ட கூட்டம்தான் இன்றைக்கு நம்நாட்டில் எங்கிலும் அவர்களாகவே செய்கிறார்கள். அங்கே பிழைக்க வழியின்றி போய் இந்நாட்டில் வந்து புகுந்து நமக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். வேலை கிடைக்கவில்லை. நாட்டில் வசிக்க இடமில்லை என்றால், அந்தமானுக்குப் போவதைவிட்டு இங்கே வந்து நம் உயிரை வாங்குகிறார்கள்.

அவர்களுக்கு சூத்திரர்களாக இருப்பதால் மானம் என்பது சிறிதும் கிடையாது. சூத்திரர்களாக இருப்பதால் அதை இழித் தன்மையாகக் கருதுவதில்லை. பார்ப்பனனுடைய வைதீக மூடப்பழக்க வழக்கங்கள் அத்தனையும் அப்படியே ஒப்புக் கொள்ளுகிறவர்கள். அப்படிப்பட்டவர்களை நம்முடன் கொண்டுவந்து சேர்க்க முற்படுவது நம்மை இன்னும் கீழானவர்களாக இருக்கச்செய்யவே ஆகும். 

மேலும் வடநாட்டினருக்கு என்றைக்கும் அடிமைகளாக இருக்கவேண்டிய அவசியம் கொண்டவர்கள். ஏன் என்றால் தனித்து வாழுவதென்றால் அவர்களால் முடியாத காரியம். இப்போதே அங்கு பிழைக்க இடமில்லை என்றுதானே வெளியே ஓடுகிறார்கள். தனித்து வாழுவதற்கு முற்பட்டால் தன் நாட்டு எல்லையை விட்டு வெளியே போகமுடியாது. எனவே இப்படி கும்பலுடன் வாழ்ந்தால்தான் - அதுவும் வட நாட்டின் அடிமையில் இருந்தால்தான் கண்ட இடமெல்லாம் ஓடிப்பிழைக்க முடியும். இன்றைக்கு வடநாட்டான் கூறுகிறபடி கேட்டால்தான், நாளைக்கு வடநாட்டானிடமிருந்து சலுகை கிடைக்கும். இப்போது அவர்களுக்கு சலுகை கொடுப்பதற்குத்தான் தட்சிணப்பிரதேசம் அமைக்கிறார்கள் என்பதிலிருந்து நன்கு புரிந்து கொள்ளலாம்.

இவ்விதம் அக்கிரமக்காரர்களால் ஆளப்படும் ஜனநாயக ஆட்சி மிகக் கொடூரமான முறையில் ஒன்றை விட்டு ஒன்றாக நமக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. என்றைக்கு இந்த “ஜனநாயக” ஆட்சி அழிக்கப்படுகிறதோ, அன்றைய தினம்தான் நம்நாடு நிம்மதியான வாழ்க்கை வாழமுடியும். அக்கிரமச் செயல்களை எல்லாம் துணிந்து செய்கின்றனர். செய்வது தப்பு என்று தெரிந்து கொண்டும் வீண் விவாதத்திற்காகிலும் நம் மக்களுக்குத் தொல்லைகொடுக்க முற்படுகிறார்கள்.


காட்டிக் கொடுக்கும் பார்ப்பனர் கூட்டம்.

இதற்குத் தகுந்தபடி இந்நாட்டு பார்ப்பனர்களும் காட்டிக்கொடுக்கிறார்கள். காட்டிக்கொடுக்கும் புத்தியும், வடநாட்டுடன் சேர்ந்து கூத்தாடும் புத்தியும் கொண்ட பார்ப்பனர்கள் என்றென்றும் நமக்குத் தொல்லைகளையே விளைவித்துவந்து இன்றைய நிலையிலும் பெரும்தொல்லை கொடுக்கிறார்கள். அதற்குத் தகுந்தபடி பார்ப்பனப் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் எழுதுகின்றன. எவனாவது ஒரு அன்னக்காவடி தட்சிணப்பிரதேசம் வேண்டும் என்று சொல்லி இருப்பானாகில் உடனே அவர் ஆதரித்தார், இவர் ஆதரித்தார் என்று எழுதுகின்றன. பெரும் அளவில் மக்கள் எதிர்த்தால் அதை உடனே மூடிவிடுவார்கள். எதிர்த்த விஷயம் வெளியில் வராதபடி மறைத்து விடுகிறார்கள். 

பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மற்றவர்களும் தலைகால் தெரியாமல் கூத்தாடுகிறவர்கள் ஏதோ பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமே என்பதற்காக எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது என்பது ஒரு சிலருக்கு வழக்கமாய்ப்போய்விட்டது. அப்படி இருந்தால்தான் நாளைக்கு அக்ரகாரத்தில் பொறுக்குவதற்கு வசதியாயிருக்கும்? அந்த காரியத்தை உத்தேசித்து எதையும் முட்டாள்தனமாகச்செய்வது என்பதும் அதைப் பொதுநலம் என்று கூறிக் கொள்வது அதைவிட மிகமோசமானதென்றும்தான் கூறவேண்டும்.

தட்சிணப்பிரதேசம் அமைக்கப்படுமானால் அதனால் விளையும் நன்மை, தீமைகள் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பாமர மக்கள் சிந்திக்கவில்லை என்பது அதிசயம் இல்லை. இதுவரை பார்ப்பான் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மடைமையிலேயே இருந்தவர்கள் இன்னும் போதிய அறிவுபெற்று பக்குவமாக்கப்படவில்லை.

ஆனால், பொதுநலத்திற்கென்றும் நாட்டின் நன்மைக்கென்றும் பாடுபடுகிறேன் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் இதைப் பற்றி சிந்திக்கவில்லையே என்பது அவர்களின் முட்டாள்தனத்தைக் காட்டுவதுமன்றி அவர்களின் ஏமாளித்தனத்தைக் கண்டு பரிதாபப்படும் அளவில் இருக்கிறது. இப்படிப்பட்ட பொதுநலத் தொண்டர்கள் தலைவர்கள் என்பவர்கள்கூடப் பார்ப்பனர்களின் பேச்சில் மயங்கிவிடுகிறார்கள் என்பதைக் குறித்து மிகமிகப்பரிதாபம் அடைகிறேன்.

ஆனால், என்னைப் பொறுத்தமட்டிலும் யார் சொன்னபோதிலும் என்னுடைய மனதுக்குப் பிடித்தமானதையே செய்யமுற்படுவேன். மற்றவர்களின் தாட்சண்யத்திற்கு எதையும் பின்வாங்குகிறவன் இல்லை. கொடி எரிப்புப்போராட்டம் துவக்கியது காமராசர் ஆட்சியில்தான். கொடி எரிப்பு மட்டும் நடந்திருக்குமானால் காமராசர் சும்மா இருந்திருக்கமாட்டார். அப்போதும் எங்களுக்கு அவர் சட்டப்படி ஏதும் தண்டனை கொடுத்தே இருப்பார். அப்படிஇருக்க நான் அவருடைய தயவுக்காகவோ அவருடைய யோசனையின் மீதோ எதையும் பின்பற்றும் அவசியம் இல்லை.

இப்போது தட்சிணப்பிரதேசம் அமைக்கப்படுமானால் நான் காமராசர் ஆட்சி என்பதற்காக சும்மா இருக்கமாட்டேன். கொடி எரிப்புப்போராட்டத்தைவிட இன்னமும் திடுக்கிடும்படியான போராட்டத்தைச் செய்யத்தான் திட்டமிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். கொடி எரிப்புப்போராட்டம் மிகச்சிறிய விசயம். அதனால் பொருள் கஷ்டமோ உயிர் நஷ்டமோ அல்லது பொதுமக்களுக்குத் தொல்லையோ கொடுப்பது கிடையாது. மிகவும் சிக்கனச் செலவில் நடைபெறும் காரியம். ஆனால் காரியமோ மிகப் பெரிதுதான். அது வடநாட்டு ஆட்சியையே ஒரு கலக்கு கலக்கிவிட்டதே! பெரிய ஆட்கள் எல்லாம் முன்பு தார்கொண்டு இந்தியை அழித்ததற்கு அலட்சியமாக பதில் சொன்னதுபோல் இதற்கும் அப்படி அலட்சியமாக சொல்லவில்லை. எல்லோரும் என்ன ஆகுமோ என்று திகில் அடைந்துகொண்டுதானிருந்தார்கள். ஆனால் எப்படியோ சமாதானத்தின் பேரில் அப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு கைவசம் இருக்கிறது. ஆனாலும் தட்சிணப்பிரதேசம் அமைக்கப்படுமானால் அந்தப் போராட்டத்தைவிட மேலான போராட்டமும் கைவசம் இருக்கிறது. அதை உபயோகப்படுத்தத்தான் போகிறேன்.

இப்போதே தயாராகுங்கள்!

இதற்கு தோழர்கள் எல்லோரும் இப்போதே தயார் செய்துகொண்டிருக்கவேண்டும். என்னுடைய போராட்டத்திட்டம் வெளியாகும் நேரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். அப்படி நாட்டின் விடுதலைக்கும் நாட்டினைக் காப்பதற்கும் நாட்டினைப் பறிகொடுக்காமல் மீட்பதற்கும் சிலர் செத்துப் போனால்கூட பாதகம் இல்லை. இப்படிப்பட்ட நல்ல காரியத்துக்கு உபயோகப் படாத உயிர் வேறு எதற்கும் வேண்டிய தேவைஇல்லை. ஆகவே இன்றைக்கு நம்முடைய முயற்சி எல்லாவற்றையும் தட்சிணபிரதேசம் அமைக்கப்படாத முறையில் பார்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்தவேண்டும். 

தோழர் ம.பொ.சி. முயற்சி.

நண்பர் ம.பொ.சி., தேவிகுளம் - பீர்மேடு சம்பந்தமான கிளர்ச்சிக்குத் திட்டமிடுவதற்கு என்னை அழைத்திருந்தார். 13.1.56 ஆம் தேதி எனக்கு அவர் எழுதிய கடிதத்தில் தங்களை எல்லைக்கிளர்ச்சி சம்பந்தமாகச் சந்தித்துப் பேசவிரும்புகிறேன். தாங்கள் விரைவில் சென்னை வருவீர்கள் என்று நம்புகிறேன் என்பதாக எழுதிஇருந்தார். பின்பு 16 ஆம் தேதி எனக்குத் தந்தி கொடுத்து சென்னைக்கு வரும்படி கேட்டிருந்தார். அவர் கொடுத்த தந்தியில்:

“Discussion about Border dispute. Like to meet in person Madras. Letter sent to Trichy” என்பதாக இருந்தது. நான் அதற்கு உடனே 19 ஆம் தேதி அன்றைய தினம் சென்னைக்கு வருகிறேன் என்பதாகத் தெரிவித்துவிட்டேன். அதற்கு அவர் 17.1.56 அன்று “Expect at Madras on 19th” என்று தந்தி கொடுத்திருந்தார். நண்பர் குருசாமியும் என்னுடைய கடிதத்தைப் பார்த்தபின் நண்பர் ம.பொ.சி.யைக் கலந்துபேசி அவரும் எனக்குத் தந்தி கொடுத்தார். அதில், “received letter consulted both; your presence nineteenth Thursday essential” என்பதாகக் கொடுத்திருந்தார். பிறகு 19 ஆம் தேதி அங்குச் சென்று நண்பர் ம.பொ.சி.யை ஒரு நண்பர் வீட்டுக்கு வரும்படி செய்து அங்கு இருவரும் சந்தித்துப்பேசினோம். அவர் கேட்டபடி எல்லைப் போராட்டம் சம்பந்தமாக நான் ஒப்புக்கொண்டேன் என்றாலும், என்னுடைய விருப்பத்தையும் அவர் ஒப்புக்கொண்டதற்குதான் அதில் ஒரு சரியான முடிவுக்கு வந்தோம்.

அவர் எப்படியாவது எல்லைப்போராட்டத்திற்கு மட்டும் என்னைச் சம்மதித்து போராட்டத்திற்கு ஆதரவு பெற்றுக்கொண்டால்போதும் என்று ஏதேதோ தந்திரமாகப் பேசினார். ஆனால் நான் விட்டுக் கொடுக்கவில்லை. இன்றைக்கு தமிழ் மக்களுக்கு எல்லைப் போராட்டம் மட்டும் முக்கியமில்லை. மொத்தம் நான்கைந்து குறைபாடுகளில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆகவே அத்தனைக்கும் கிளர்ச்சித் தொடங்குவதாக இருக்கவேண்டும். மேலும் நாம் எல்லைப் போராட்டத்திற்கு மட்டும் கிளர்ச்சி தொடங்கினால், நாம் இதுவரை எவையெவைகளை முக்கியம் என்று கருதிவந்தோமோ, அவைகளை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, இதைமட்டும் பெரிதாக நினைத்து கிளர்ச்சி செய்வதாக அரசாங்கத்தார் நினைத்துக்கொள்ளுவார்கள். எனவே எவைகள் முக்கியம் என்று தோன்றுகிறதோ அவைகள் அத்தனைக்கும் கிளர்ச்சித் தேவையாகும் என்று கூறினேன். அவரும் இறுதியில் ஒப்புக் கொண்டார்.


முக்கிய நிபந்தனைகள்:

• அதன்படி எல்லைக் கமிஷன் என்பது எல்லையை வரையறுப்பதில் தமிழ்மக்களுக்குச் செய்துள்ள ஓரவஞ்சனையான காரியங்களைத் திருத்துதல் முதலாவதாகும்.

• இரண்டாவதாக, இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும், இந்தியாவுக்கு தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பலவழிகளிலும் அரசாங்கம் முயற்சிப்பதைத் தடுப்பது.

• மூன்றாவதாகத் தமிழ்யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு இவை தவிர்த்த மற்ற ஆட்சியின் உரிமைகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

இப்படிக் கூறுவதன் மூலம் திராவிடர் கழகத்தின் லட்சியமான தமிழ்நாடு யூனியனிலிருந்து விடுபட்டு பூர்ண சுயேச்சை உரிமையுடன் தனித்து இயங்கவேண்டும் என்பதாக முடிவுசெய்து கொண்டிருந்தாலும் அந்தக் கொள்கைக்குப் பாதகம் இல்லாமலும் மேற்கண்ட விஷயங்கள் பற்றிய கிளர்ச்சியை முன்னிட்டு மற்ற ஸ்தாபனக்காரர்களுடைய ஒத்துழைப்பையும் நட்பையும் முன்னிட்டு இந்த மூன்றாவது வாசகத்திற்கு இணங்குகிறது.

• நான்காவதாக, தமிழ்நாட்டுக்குத் தமிழில் சென்னை என்றும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும் பெயரிட்டிருப்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரையே இருக்கும்படி செய்யவேண்டும் என்பது.

• அய்ந்தாவதாக தமிழ்நாட்டை தென்மண்டலம் என்ற அமைப்பு முறையின்படி மற்ற நாடுகளுடன் இணைக்கத் திட்டமிட்டிருப்பதை எதிர்ப்பது.

இந்த அய்ந்துக்கும் கிளர்ச்சி நடத்தவேண்டியது அவசியம். அதற்காகவே நம்முடைய முழு முயற்சியையும் பயன்படுத்தவேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டு கிளர்ச்சிக்கு யார் யாரை சேர்த்துக்கெள்வது என்று கேட்டார். 

(தொடரும்)

No comments: