Monday, February 6, 2012

பெரியார் இல்​லை​​யென்றால்

செப்டம்பர் 17- 2011 அன்று ​வட​சென்​னை மாவட்ட ​பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ​சென்​னை பாடி பகுதியில் ​ந​டை​பெற்ற பெரியாரின் பிறந்தநாள் ​பொதுக்கூட்டத்தில் இயக்ககுனர் மணிவண்ணன் அவர்கள் ஆற்றிய சிறப்பு​ரை யிலிருந்து...

."தமிழ்நாடு என்று அண்ணா பெயர் மாற்றினார். 
அது பெரியாரின் ஆலோசனை இல்லாமல் நடந்திருக்காது. 

சென்னை ராஜ்யம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். அது ஏன்? சென்னைப் பிரதேசம் என்று மாற்றியிருக்கலாம். மத்தியப் பிரதேசம் என்று இல்லையா? ஆந்திரப் பிரதேசம் என்று இருக்கிற மாதிரி சென்னைப் பிரதேசம்னு வைத்திருக்கலாம். தமிழ்நாடு என்று ஏன் வைக்கவேண்டும். 

இந்த வடக்கத்திக்காரன்களோட நாம வாழ முடியல. ஆகவே கருத்தியல் ரீதியா நாம நம்ம தம்பிகளை, குழந்தைகளை தமிழ்நாட்டை நோக்கித் தயார் பண்ணனும் அப்படிங்கற ஒரு எண்ணத்துலதான் தமிழ்நாடு என்று பெயர் வைத்திருக்கிறார்.

ஆகவே நான் இறையாண்மையில கையவுட்டுட்டேன். அப்படின்னு என்மேல பழிய போடாதீங்க. 

சார்..
உங்களத்தான் போலீஸ்.

நான் எதுவுமே சொல்லல. 

தமிழ்நாடுன்னு பெயர் மாற்றியது அண்ணா.
அவர் இறந்துட்டாரு. அங்க இருக்கு சமாதி.
வேணும்னா கேஸ் அவர்மேல போடுங்க."

Friday, February 3, 2012

தமிழ் ​மொழியானது காட்டுமிராண்டி ​மொழி என்று நான் ஏன் ​சொல்கி​றேன்? - ​பெரியார்

இந்தத் தமிழ் ​மொழியானது காட்டுமிராண்டி ​மொழி என்று நான் ஏன் ​சொல்கி​றேன்? எதனால் ​சொல்கி​றேன்? என்று இன்று ​கோபித்துக்​கொள்ளும் ​யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் ​பேசுவதில்​லை. "வாய் இருக்கிறது; எ​தையாவது ​பேசி வம்பு வளர்ப்​போம்" என்ப​தைத் தவிர அறி​வை​யோ, மானத்​தை​யோ, ஒழுக்கத்​தை​யோ பற்றி சிறிதுகூட சிந்திக்காம​லே ​பேசிவருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் ​போக்குப்படி​​யே சிந்தித்தாலும் "தமிழ்​மொழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட ​மொழி" என்ப​தைத் தமிழின் ​பெரு​மைக்கு ஒரு சாதனமாய்க் ​கொண்டு ​பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி ​மொழி என்பதற்கு அ​தைத்தா​னே முக்கிய காரணமாய்ச் ​சொல்லுகி​றேன். அன்று இருந்த மக்களின் நி​லை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன்தானாகட்டும் இவன்க​ளைப் பற்றி ​தெரிந்து​கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால் நீ தமி​ழைப் பற்றி ​பேசும் தகுதியு​டையவனாவாயா?

தமிழ் காட்டுமிராண்டி ​மொழி என்பதால் உனக்கு ​பொத்துக்​கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்​னை ஈன ஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் ​பொத்துக்​கொள்ளவில்​லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்​னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள்; அவ​னை சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று கூறுகிறீர்கள்!

சிந்தித்துப்பார், நீ, நீங்கள் யா​ரென்று!

- தமிழும் தமிழரும் நூலில் ​பெரியார்.

Thursday, February 2, 2012

காந்தி படு​கொ​லை. ஏன்? எதற்கு? எப்படி? (கா​​ணொளி)

ஆனூர் செகதீசன் (துணைத்தலைவர், பெரியார் திராவிடர் கழகம்):

"காந்தி நல்லது செய்யவேண்டுமென்று நினைத்தார். அவர் நினைத்தது சரியான வழிமுறையா என்றால் இல்லை. இந்த நாட்டுக்கே உகந்ததல்ல. ஏற்றத்தாழ்வு இருக்கணும் என்று சொல்கிறபோது அவர் எப்படி நல்லவராக இருக்கமுடியும். அந்த ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக்கொண்டுதான் அத்தனை பார்ப்பனர்களும் அவரை தூக்கித்தூக்கி வைத்து மகாத்மா ஆக்கினார்கள். 

அய்யாதான் சொல்வார். ஆத்மாவே கிடையாதுடா. இதிலென்னடா மகாத்மா. 

ஆக சும்மா கிடந்த ஆளை; அப்பாவி, அப்ரானியான அவரை பார்ப்பனர்களெல்லாம் தூக்கி தோளில் நிற்கவைத்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்திப்பேசி மகாத்மா ஆக்கினார்கள். 

காந்தி மகாத்மாவாகவே இருந்து தங்களுக்குச் செய்யவேண்டிய உதவிகளைச் செய்யவேண்டும் என்றும் எந்தக்காலத்திலும் வர்ணாசிரம தர்மத்திலிருந்து மாறுபட்ட கருத்துக்களையோ கொள்கையையோ பேசக்கூடாது என்று நினைத்தார்கள்."Wednesday, February 1, 2012

ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் (2) – வழக்கறிஞர் துரைசாமி அம்பலப்படுத்துகிறார்

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டதை, வெளியே கொண்டுவரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல் வெளிவரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர் துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ் வடிவம் இது.

கேள்வி : சிவராசன் போபால் நகரத்துக்குப் போனார் என்றும், ‘TAG’க்கு ரூ.1.71 கோடி தந்ததாகவும் உங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது என்ன ‘ TAG ’?

பதில்: எனக்கும் தெரியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சிவராசன் நாட்குறிப்பில், 1991 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதியிட்ட நாளில் இவ்வாறு சிவராசனால் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் தரவேண்டியது ரூ.45,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த நாட்குறிப்பு, அரசு தரப்பு சாட்சி ஆவணம் எண்.எம்.ஓ.180) இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. அப்படி நடத்தியிருப்பார்களேயானால், ராஜீவ் கொலைச் சதியில் மறைந்திருக்கும் பல சதிகாரர்களை கண்டறிந்திருக்க முடியும். அப்படி எந்த விசாரணையும் நடக்காமல்போனது வேதனைக்குரியது. இதனால் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அந்தப் பணம் காசோலையாக தரப்படவில்லை. ரொக்கமாக வழங்கப்பட்டிருக்கிறது. 1991 மார்ச் 8 ஆம் தேதி சிவராசன் ம.பி. மாநிலத்தில் இருந்ததாக தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். 

“மத்திய பிரதேச மாநிலம்

குணா மாவட்டம்

சந்தேரி ஹில்ஸ்

மாளிகை உரிமையாளர்குவாலியர் ராணி

பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளது”

- என்ற குறிப்புகள் சிவராசன் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

மற்றொரு செய்தியையும் குறிப்பிடவேண்டும். 1992 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஆதிரை என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆதிரையும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர். சிவராசன் பற்றி தனக்குத் தெரிந்த பல தகவல்களை தெரிவிக்க விரும்புவதாக, மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆதிரை தாக்கல் செய்த மனுவில்:

“நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சிவராசன் என்பவரை சந்தித்தேன். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, பிறகு அதிலிருந்து வெளியேறி, அடிக்கடி இந்தியா போய்வந்துகொண்டிருப்பவர். எனவே, இந்தியாவிலிருந்து நான் ஜெர்மனிக்குப் போவதற்கு அவரது உதவியைக் கேட்டேன். நான் இந்தியா வந்து, சிவராசனுடன் தொடர்பு கொண்டேன். அப்போது சிவராசன் என்னிடம், ‘ஒரு குறிப்பிட்ட பணியை காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்காக பெருமளவு பணம் தருவதாகவும், வெளிநாடு ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்கள்’ என்று என்னிடம் கூறினார். இந்த வேலையை செய்து முடிப்பதற்கு, தன்னோடு இணைந்து கொள்ளுமாறும், என்னை கேட்டுக் கொண்டார். நான் மறுத்துவிட்டேன். அதற்குப் பிறகு, அவர் ரகசியங்களை உடைத்து என்னிடம் பேசினார். ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் நிர்வாகியாக உள்ள கல்யாணசுந்தரம், என்னிடம், இந்த வேலையை செய்துமுடிக்குமாறு ஒப்படைத்துள்ளார்’ என்று கூறியதோடு, (ராஜிவ் காந்தி மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வர இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூரிலேயே அவர் தங்கப் போவதாகவும் தெரிவித்தார். மே 22 ஆம் தேதி (ராஜிவ் கொலை நடந்த அடுத்த நாள்) சிவராசன் என்னிடம் தொடர்பு கொண்டு தாணுவின் உதவியோடு வேலையை செய்து முடித்துவிட்டதாக தெரிவித்தார். என்னிடம் டெல்லியில் கல்யாணராமனை சந்திக்கச் சொன்னார். அவர், எனக்கு ஜெர்மன் போவதற்கான கடவுட் சீட்டு, விசாவை பெற்றுத் தருவார் என்றார்” - ஆதிரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவை, எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆதிரை கூறியது உண்மைதானா என்பதைக் கண்டறியும் முயற்சிகளிலும் சி.பி.அய். இறங்கவில்லை. ராஜிவ் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்தத்திலிருந்து கொலை செய்யப்படும் வரை சதித் திட்டத்தின் பின்னணியாக வெளியே தெரியாத மர்ம நபர்கள் இருந்துள்ளனர்.

கேள்வி: பெங்களூரில் நடந்த கைது நாடகங்களை உங்கள் நூலில் விவரித்துள்ளீர்கள். அவற்றை எல்லாம் ஏன் மக்களிடம் கொண்டு சொல்லவில்லை?

பதில் : நான் இப்போது, அது பற்றி விரிவாகக் கூறுகிறேன். 1991 ஜூலை 29 ஆம் நாள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவருக்கு, பெங்களூர் காவல்துறை ஒரு தகவலைத் தெரிவித்தது. சிவராசனும் அவரது அணியினர் சுபா உட்பட 7 பேர் பெங்களூர் இந்திரா நகரிலுள்ள வீட்டில பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் தமிழக காவல்துறைக்கு ஏற்கனவே தெரியும். கோவையில் சாலை விதிகளை மீறியதற்காக விக்கி என்பவரை கைது செய்து விசாரித்தபோது அவரே, பெங்களூரில் சிவராசனும், அவரது தோழர்களும் பதுங்கி இருப் பதைக் கூறிவிட்டார். ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள நான்கு நாட்கள் தாமதப்படுத்தியது. ஜூலை 29 ஆம் தேதியே நடவடிக்கையில் இறங்கியிருப்பார்களேயானால் அதிரடிப்படை உதவியுடன் சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியும். 

மற்றொரு முக்கிய கேள்வி - சிவராசனுக்கு பெங்களூரில் பாதுகாப்பான வீட்டை பெற்றுத் தருவதற்கு முன்வந்தது யார் என்பதாகும். சிவராசன், விடுதலைப்புலிகளிடம் அந்த அமைப்பில் இருந்த காலத்தில் பயிற்சிப் பெற்றவர் என்பதால், வேதாரண்யம் போய், அங்கிருந்து கடல்வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்லும் வழிமுறைகள் நன்றாகவே தெரிந்திருக்கும். வழக்கத்துக்கு மாறாக அவர், பெங்களூர் சென்றது ஏன்? யாரோ, சிலர், பெங்களூர் பாதுகாப்பாக இருக்கும் என்று சிவராசனுக்கு உறுதி தந்திருக்கிறார்கள். அந்த வீட்டில், சிவராசன் பிணமாகக் கிடந்த இடத்தின் அருகே 9 எம்.எம். கைத் துப்பாக்கி மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கி கிடந்தது. அந்த ஆயுதங்களை சிவராசனுக்கு வழங்கியது யார்? இது பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. இறந்து போனவர் நீதிமன்றத்தில் வந்து பேச முடியாது அல்லவா?

கேள்வி : அப்படியானால், சிறப்புப் புலனாய்வுக் குழுவும், காங்கிரசும், கொலைக்குப் பின்னால் நடந்த சதியை மறைப்பதாகக் கூறுகிறீர்களா?

பதில்: ஆம், அப்படித்தான் நான் நம்புகிறேன். ராஜிவ் குண்டுவெடிப்பில் இறந்ததிலிருந்தே சாட்சிகளை முடக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. இது ஏதோ தற்செயலாக நடந்தவை அல்ல; திட்டமிட்டே நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை அரிபாபுவின் கேமிராவைக் கைப்பற்றியது. உடனே கேமிராவின் புகைப்படச் சுருளைக் கழுவிப் பார்த்தால், 5 மணி நேரத்துக்குள்ளேயே கொலையாளிகளைக் கண்டறிந்திருக்கமுடியும். அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், நான்கு நாட்கள் கழித்து இந்த புகைப்படம், மே 25 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் வெளிவருகிறது. எப்படி கிடைத்தது என்பது மர்மம். அதிலும் அந்தப் புகைப்படத்தில் சிவராசன் உருவம் மறைக்கப்பட்டது. மே 29 வரை சிவராசன் படத்தை ‘இந்து’ வெளியிடவில்லை. இந்த வழக்கில் மிகவும் முதன்மையான சாட்சி, ஆவணம், இந்தப் புகைப்படம்தான். இந்தப் படம், ‘இந்து’ ஏட்டுக்கு எப்படி கிடைத்தது என்பதை, எவருமே ஆராயவில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியை மூன்றுபேர் தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்தார்கள். அந்த மூன்று வீடியோ பதிவுகளும் சிதைக்கப்பட்டு, காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கு சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த விளக்கம் என்னவென்றால், எதோ தவறுதலாக காட்சிகள் அழிந்துவிட்டன என்பதாகும். புலனாய்வுக் குழுவின் வலிமையே இல்லாத, இந்த விளக்கத்தை என்னால் ஏற்கவியலாது.

கேள்வி : சரி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது ஏன், இதை நூலாக எழுத முன் வந்துள்ளீர்கள்?

பதில்: எனக்கு இப்போது வயது 69. நான் 1970 ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். ராஜிவ் வழக்கை முன்வைத்து ஒரு நூலை எழுத வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்த வழக்கில் பல தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களுக்காக நான் வாதாட முன்வந்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோத காவலில் இருப்பவர்களுக்காக ‘ஆட்கொணரும்’ (ஹேபியஸ் கார்பஸ்) மனுக்களை தாக்கல்செய்தேன். அந்த கட்டத்தில்தான், இந்த வழக்கில் என்னை இணைத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. நான் தாக்கல் செய்த மனுவின் காரணமாக சட்டவிரோத காவலில் இருந்த தி.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர், நளினி தனக்காக வாதாடுமாறு கேட்டுக்கொண்டார். நான் வழக்கை எடுத்துக் கெண்டபோதே இது வெற்றிப்பெறமுடியாத வழக்கு என்று எனக்குத் தெரியும். காரணம், நீதிமன்றமே குற்றம்சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவேண்டும் என்ற மனநிலையில் இருந்தது. சட்டங்களுக்கு எல்லாம் மேலான சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பாகக் கருதியே புலனாய்வுத்துறையும் செயல்பட்டது. ஊடகங்களும் மக்கள் மனநிலையும்கூட உண்மைகளை பார்க்காமல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தது. நளினி வழக்கில், நான் நேர்நின்றபோது, நாளொன்றுக் ரூ.50 மட்டுமே எனக்கு தருவதற்கு அரசு முன் வந்தது. நான் வழங்கும் சட்ட உதவிக்கு ஓரளவு நேர்மையான ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையீடுசெய்தேன். 8 ஆண்டுகாலம் இந்த வழக்கிற்காக நான் போராடினேன். அனைத்து ஆவணங்களையும், சாட்சியங்களையும் முழுமையாகப் படித்தேன். 266 அரசு தரப்பு சாட்சியங்களையும் படித்தேன். இவை எளிமையான வேலைகள் அல்ல. இந்த காலத்தில் வேறு வழக்குகளில் நான் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பிரபல வழக்கறிஞராக இருந்த நான், பெரும் தொகையை ஈட்டிருக்கமுடியும். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது, எதிர்நீச்சல் போடவே முடிவுசெய்தேன். இந்த வழக்கிற்காக எனது நேரத்தையும், உழைப்பையும் கடமையாக அர்ப்பணித்த நான், இந்த வழக்கு விசாரணையில் நடந்த முறைகேடுகளை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்பியே இந்த நூலை எழுத முன் வந்தேன். 19 அப்பாவிகள் 8 ஆண்டுகாலம் பரோல் கூட மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். அதே நேரத்தில், ராஜிவ் கொல்லப்பட்டதில் எனக்கு இன்றளவும் உடன்பாடில்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

(‘தெகல்கா’ 21.1.2012)

ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள் (1) – வழக்கறிஞர் துரைசாமி அம்பலப்படுத்துகிறார்

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டதை, வெளியே கொண்டுவரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல் வெளிவரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர் துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ் வடிவம் இது.கேள்வி : ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்காக, நீங்கள் வாதாடியவர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் உறுதி செய்யப்பட்டு அனுபவித்து வரும்போது இவ்வளவு காலத்துக்குப் பிறகு ராஜீவ் கொலையின் பின்னணியில் மிகப் பெரும் சதித் திட்டம் இருப்பதாகவும், அந்த சதி அவர்களுக்குள்ளேயே உருவானது என்றும், நூல் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, என்ன ஆதாரம்?

பதில் : ராஜீவ் கொலைக்கான சதி காங்கிரஸ் அணிக்குள்தான் உருவானது என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால், சி.பி.அய். விசாரணைக்கு தலைமையேற்று நடத்திய காவல்துறை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன், சரியான கோணத்தில் இந்த விசாரணையை கொண்டு செல்லவில்லை என்றே கூறுவேன். ராஜீவ் கோரக்கொலை நடந்து முடிந்த மூன்றாவது நாளில், அதாவது 1991 மே 24 இல் சி.பி.அய். விசாரணைக்கான பொறுப்பை ஏற்றது. அந்த விசாரணைக் குழுவில் கார்த்திகேயன், நான்கு டி.அய்.ஜி.க்கள், 8 காவல்துறை மாவட்ட தலைமை அதிகாரிகள், 14 மாவட்ட துணை ஆய்வாளர்கள், 44 ஆய்வாளர்கள், 55 துணை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரையுமே தேர்வு செய்தது கார்த்திகேயன் தான். இதில் பெரும்பாலோர், தங்களது பணிக் காலங்களில் திறம்பட செயல்பட்டவர்கள். புலன் விசாரணை சுமார் ஓராண்டு காலம் நடந்தது. 1992 மே 20 இல்தான் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இவ்வளவு காலம் புலனாய்வுக்கு எடுத்துக்கொண்ட பிறகும் குற்றப்பத்திரிகையில் புலனாய்வில் பல ஓட்டைகள் வெளிப்பட்டன. சி.பி.அய். உண்மைகளை மறைத்தது. ஓராண்டு காலம் புலனாய்வுக்கான கால அவகாசம் கிடைத்த நிலையில், ஒரு சாதாரண போலீஸ்காரரால் கூட, இதைவிட சிறப்பாகவே புலனாய்வை நடத்தியிருக்க முடியும் என்பதே என் கருத்து. தடா நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்குமே தண்டனை வழங்கியது உச்சநீதிமன்றம் 19 பேரை விடுதலை செய்தது. சதியில் இவர்களுக்கு பங்கு உண்டு என்பதற்கு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள், ஏற்கக்கூடியதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

கேள்வி : இவையெல்லாம் பொதுவான கருத்துகள்தான். பின்னணியில் பெரிய சதி நடந்தது என்பதற்கு குறிப்பிடத்தக்க சான்றுகள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில் : காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்காக தேர்தல் பிரச்சாரத்துக்காகவே ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ்காந்தி வந்திருந்தார். ஏற்கனவே ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டுவிட்டார். அதன் பிறகு, மே 18 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி, ராஜீவ் சுற்றுப்பயணத் திட்டத்தை இறுதி செய்தபோது, அதில் ஸ்ரீபெரும்புதூரும், விசாகப்பட்டினமும் சேர்க்கப்பட்டது. ஆனால், ‘தினத்தந்தி’ நாளேட்டில் ஒரு நாளைக்குமுன் கூட்டியே, அதாவது மே 17 ஆம் தேதியே ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருகை தரும் செய்தி வெளிவந்துவிட்டது. தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் எவருக்கும் ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருகை பற்றி எதுவும் தெரியாது. ராஜீவ் சுற்றுப்பயணத்துக்கு பொறுப்பாளரும் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளருமான மார்கரட் ஆல்வா (தற்போது உத்தர்காண்ட் ஆளுநர்) மே 18 ஆம் தேதிதான், ராஜீவ் சுற்றுப்பயணத் திட்டத்தை இறுதி செய்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இறுதி செய்வதற்கு முன்பே, ‘தினந்தந்தி’ நாளேட்டுக்கு ராஜீவ், ஸ்ரீபெரும்புதூர் வருகை தரும் செய்தி எப்படி கிடைத்தது?


அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கும் அங்கேயே தங்குவதற்கும் மே 19 ஆம் தேதி அன்று வாழப்பாடி ராமமூர்த்தி தனது எதிர்ப்பை பதிவுசெய்கிறார். தடா நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி, இதை ஒப்புக்கொண்டுள்ளார். மரகதம் சந்திரசேகர் டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது தொகுதியில் ராஜீவ்காந்தி பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்துவிடுகிறார். ராஜீவ் வருகை உறுதியான நிலையில் உள்ளூர் காங்கிரசார், கூட்டத்தை பள்ளி மைதானம் ஒன்றில் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதி கேட்டனர். ஆனால், கோயிலுக்கு சொந்தமான இடத்துக்கு பிறகு மாற்றப்பட்டது. இதற்கான காரணம் மரகதம் சந்திரசேகருக்குத்தான் தெரிந்திருக்கமுடியும். பள்ளி விளையாட்டு மைதானத்திலிருந்து கோயில் இடத்துக்கு மாற்றப்பட்டதற்கு, காங்கிரசார் காவல்துறையின் அனுமதியையும் கேட்கவில்லை. அந்தக் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி, ராஜீவ், ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. அந்த ஊரில் இருந்தது, ஒரே சுற்றுலா மாளிகைதான். அதுவும் பழுதடைந்த நிலையிலேயே இருந்தது. அப்போது தமிழகஆளுநாக இருந்த பீஷ்ம நாராயண் சிங், ராஜீவ் ஸ்ரீபெரும்புதூரிலேயே தங்க வைப்பதற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், மரகதம் சந்திரசேகர், தனது கிராமத்திலேயே ஒரு அடகுக்கடைக்காரரின் பங்களாவில் ராஜீவை தங்கவைக்க ஏற்பாடு செய்துவிட்டார் என்று காங்கிரசாரிடம் கூறப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கருதி இத்திட்டத்தை ஏற்க மறுத்தனர்.

கேள்வி : இந்த காரணங்களால் மரகதம் சதிக்கு உதவினார் என்று கூற முடியுமா?

பதில் : மரதகம் அம்மையார் சதிக்கு உடந்தையாக இருந்ததாக நான் குற்றம்சாட்டவில்லை. ஆனால்,இந்த வழக்கின் சாட்சிகள் அவருக்கு எதிராக இருக்கின்றன. முக்கிய குற்றவாளியான சிவராசன் எழுதிய நாட்குறிப்பில் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக மரகதம் சந்திரசேகரன் மகன் லலித் சந்திரசேகரிடம் சிவராசன் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளதை சிவராசன் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இந்த வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ரகோத்தமன் எழுதிய நூலில் சிவராசன் நன்கொடை வழங்கியதை குறிப்பிட்டுள்ளார். நான் ரகோத்தமனை குறுக்கு விசாரணை செய்தபோது இதுபற்றி எதுவும் அவர் கூறவில்லை. தடா நீதிமன்றத்தில் சிவராசன் எழுதிய நாட்குறிப்பையும், சாட்சி ஆவணமாக முன் வைக்கவில்லை. குண்டு வெடிப்பில் காயமடைந்த லலித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ரகோத்தமன் அவரை மருத்துவமனைக்குப் போய் பார்த்தார். அப்போது ஒரு புகைப்படத்தைக் காட்டி, இதில், தாணுவை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டார், அதற்கு லலித், தனக்கு தாணு நினைவில் இல்லை என்று கூறிவிட்டார். அப்போது அங்கு இருந்த வாய்பேச இயலாத லலித்தின் மகள் தாணுவை அடையாளம் காட்ட முன்வந்தபோது ஆத்திரமடைந்த லலித், அருகே இருந்த மனைவியிடம், தமது மகளை அறையை விட்டு வெளியே இழுத்துப் போகுமாறு கூறினார். ரகோத்தமன், தனது நூலில் இதையும் எழுதியுள்ளார். சிவராசன் தந்த 5 லட்சம் ரூபாய் நன்கொடை பற்றி சி.பி.அய். விசாரிக்கவில்லை. சிவராசனும் தாணுவும், மரகதம் குடும்பத்தினரோடு எப்படி நெருக்கமானார்கள் என்பதையும் விசாரிக்கவில்லை. லலித்தின் மனைவி அதாவது மரகதம் சந்திரசேகரன் மருமகள் ஒரு ஈழத் தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராசன் எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல், ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியிருக்கமாட்டார் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதற்கு கைமாறாக லலித்திடமிருந்து நிச்சயமாக சிவராசன் உதவிகளைப் பெற்றிருப்பார். ரகோத்தமன் எழுதிய நூலில், இந்த செய்திகள் இடம்பெற்றிருந்தாலும் அதற்காக லலித், மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை. ரகோத்தமன் மீது அதற்காக வழக்கும் தொடரவில்லை. நான் மரகதம் சந்திரசேகரை குறுக்கு விசாரணை செய்தபோது, குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவராசனையோ, தாணுவையோ தெரியுமா? என்று குறிப்பாகக்கேட்டேன். அந்தக் கேள்விக்கே மரகதம் எதிர்ப்பு தெரிவித்து, இதற்காக என்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியையும் கேட்டார். நீதிமன்றமும் அனுமதித்தது. ஆனால், என் மீது அவர் வழக்குப் போடாமல் தவிர்த்துக் கொண்டார்.

சிவராசனின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள், இந்த வழக்கின் முக்கியமான சாட்சியங்களாகும். “ராஜீவ் பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படுகிறார். சென்னைக்கு மாலை 6 மணிக்கு வந்துசேர்கிறார்” – என்று எழுதியிருக்கிறார். ஆனால், திட்டமிட்டபடி 6 மணிக்கு ராஜீவ், ஸ்ரீபெரும்புதூர் வந்து சேர முடியவில்லை. விமானத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக மாலை 6.15 மணி வரை விசாகப்பட்டினத்திலிருந்தே ராஜீவ் புறப்படவில்லை. விமானம் கால தாமதமாகவே சென்னை வருகிறது என்ற தகவலும், சிவராசனுக்கு தெரிந்திருந்தது. அப்போது ‘செல்’ பேசி வசதியோ ‘பேஜர்’ வசதியோ கிடையாது. ராஜீவ் விமானம் தாமதமாக வருகிறது என்று தெரிந்த காரணத்தினால் சிவராசன் 6 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூருக்குள் வராமல், அந்த நேரத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். ராஜீவ் தாமதமான வருகை, சிவராசனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, அவர், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்கு உறுதியாக வரப்போகிறார் என்பதும் தெரிந்திருந்தது. இதையெல்லாம் சிவராசன் தனது ‘6 ஆம் அறிவால்’ புரிந்து கொண்டார் என்றெல்லாம், நான் நம்பத் தயாராக இல்லை.

அது மட்டுமல்ல; ராஜீவ், விசாகப்பட்டினத்தில், விமானத்தில் ஏறும் நேரத்தில் திடீரென்று 3 பேர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ராஜீவை சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் பெண். இந்தத் தகவலை அந்த விமான தளத்தின் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் கூறியுள்ளார். ராஜீவை சந்தித்த அந்த மூன்று நபர்கள் யார் என்பதை காவல்துறை விசாரிக்கவில்லை. விமானம் புறப்பட்டவுடன், அந்த மூவரும், அங்கிருந்து மறைந்துவிட்டனர். ராஜீவின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு வந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த கோணத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவில்லை.


(தொடரும்)