Friday, March 23, 2012

புதியத​லைமு​றையின் தமிழன் விருகளும் தமிழர் வி​ரோத​போக்கும்


சன், கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்ட மக்களைச் சென்றடையும் ஊடகங்கள் கூடங்குளம் விடயத்தில் அரசின் பக்கம் நிற்கின்றன. 

சேனல் 4 ஆவணப்படத்தை வெளியிட்டது, அமெரிக்கத் தீர்மானத்தையொட்டி சில விவாதங்களை ஒளிபரப்பியது உள்ளிட்ட சில காரணங்களுக்காக புதியதலைமுறை தமிழர்கள் நலனில் அக்கறை காட்டுவதாக ஓர் எண்ணம் நம் தோழர்களிடையே உருவாகியிருக்கிறது.

ஆனால். புதியதலைமுறை கூடங்குளம் விடயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. மூவர் விடுதலைக்கான நமது போராட்டங்களிலும் அது அரசின் கைக்கூலிதான். 

ஈழப்பிரச்சனையில்கூட இலங்கைக்கு நேரில் சென்று பதிவுசெய்த காட்சிகளுடன் அமெரிக்கத் தீர்மானத்துக்கு முன்பு புதியதலைமுறை ஒளிபரப்பிய ஆவணப்படம் நமக்கு எதிரானதுதான். இந்நிலையில் அது தமிழர் நலனில் அக்கறை என்பது போன்ற பாவனை ஏன்?

ஏனெனில், தமிழன் விருதுகள் என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்தவர்களை விருதுக்குரியவர்களாகத் தேர்வு செய்கிறது. 

கடந்த சில வாரங்களுக்குமுன்பு வரை புதியதலைமுறையின் விருது தினமலர், ஹிந்து போன்ற தமிழர்நலனுக்கு எதிரானவர்கள் விருதுவழங்கினால் எப்படி பார்க்கப்படுமோ அதற்கு ஒப்பானதாகவே இருந்தது. 

உண்மையாக தமிழர் ஏற்றம்பெற உழைப்பவர்கள் புதியதலைமுறையின் விருதினை நிராகரிக்கக்கூடிய நிலைதான் இருந்தது. இந்த நிலையை மாற்ற புதியதலைமுறை எடுத்தமுயற்சிதான் ஈழத்தமிழர் மீதான அக்கறை என்று எனக்குப்படுகிறது. 

தமிழர் நலனில் புதியதலைமுறைக்கு உண்மையாக அக்கறை இருக்குமெனில், இடிந்தகரையில் பட்டினியால் எரியும் எம் தோழர்களுக்கும் சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட போராடும் மக்களுக்கும் ஆதரவாக இருந்து மத்திய-மாநில அரசுகளின் கொடிய முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

இல்லையெனில், புதிய தலைமுறை வழங்கப்போகும் விருதுகளை தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்கள் நிராகரிக்கவேண்டும்.

Monday, March 12, 2012

அரவா​னை முன்​வைத்து...


நமது பிரச்சனைகளைப் பேசும் படம் என்றும் நமது உணர்வாளர்களால் எடுக்கப்பட்ட படம் என்றும் பலராலும் (வேறுவழியின்றி) பாராட்டப்படும் படங்களின் படைப்பாக்கத்தில் பெரும் சலிப்பும் எரிச்சலும் கொண்டிருந்தேன். 

எனினும் பொதுதளத்தில் கருத்துக்களை பதிவுசெய்தால் நாம் அத்தகைய முயற்சிகளைக் கொச்சைப்படுத்திவிட்டதாக பிறர் கருதக்கூடும் என்பதால், எனது நண்பர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொண்டிருந்தேன். 

பணவிரயம் என்றும் நம்மால் ஓர் ஆர்ப்பாட்டம் மட்டும்தான் செய்ய இயலுமெனின் அதையே செய்துவிட்டுப்போகலாம் என்றும் சொல்லியிருக்கிறேன். 

ஓர் படைப்பு உணர்வுத்தளத்திலும் இயங்காமல் அரசியல் வெளிப்பாடாகவும் இல்லாமல் வெறுமனே வெளிவருமெனில் அது நமது ஆதரவாளர்கள் மனதையும் கூட தொடுவதில்லை என்பதுதான் உண்மை. 

எந்த ஓர் கலைப்படைப்பும் மக்களைத்தான் சென்றடைகிறது. வாள் சுழற்றும் லாவகம் தெரியாதவர்களால் அல்லது படைப்புச் சோம்பேறிகளால் கலை மக்களுக்காக என்று தனித்துச்சொல்ல நேர்கிறது. 

என்றாலும், அத்தகைய நேர்மையற்ற படங்களை எவ்வாறு எடுத்துக்கொள்வதென்பதில் நமது தோழர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. காரணம், உணர்வற்ற தமிழ்ப்படைப்புச் சூழலில் உணர்வுடைய ஓரிருவரது முயற்சிகளையாவது வரவேற்பதன்வழி அத்தகைய படங்களுக்கான வெளியை ஏற்படுத்தவேண்டுமே என்கிற அக்கறைதான் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

இந்நிலையில் நேற்று (11.03.2012) அரவான் படம் பார்த்தேன். முதல்பாதியைப் பார்க்கையில் நம்மவர்களுக்கு புனைவு ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது என்று கவலைகொண்டேன். உடல்மொழியும் நடனமும் மொழிதலும் இன்றைய சென்னையின் மனிதவாடையையும் தமிழ்த்திரைப்பட வழமையான வெளிப்பாடுகளையும் ஆங்காங்கே கொண்டிருந்தது. 

ஆனால் இரண்டாவது பாதியில் படம் மிகஅழகாக கையாளப்பட்டிருக்கிறது. மரணதண்டனைக்கெதிராக படைப்பாளியின் பங்களிப்பென்பது இப்படியாகத்தான் இருக்கவேண்டும். அவரவர் துறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலே தமிழ்ச்சமூகம் விழிப்படையும். 

2010 ஆம் ஆண்டு சென்னையில நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஏதிலிச் சிறுவனொருவனின் வாழ்க்கையை ஒட்டி நகரும் Denizden Gelen (Brought by the Sea) துருக்கி படத்தைப் பார்த்து இப்படியொரு படத்தை நம்மவர்களால் ஏன் எடுக்கமுடியவில்லை என்றவருத்தத்திற்கு மருந்தாக அரவானைப் பார்க்கிறேன்.

இயக்குனர் வசந்தபாலன் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டவேண்டும்.