Saturday, June 30, 2012

சாதிய வாழ்வியல் எதிர்ப்பு - உரை: தோழர்.விடுதலை இராசேந்திரன்

திராவிடர் இயக்க நூற்றாண்டில்

சாதிய வாழ்வியல் எதிர்ப்பு
மனுதரும சாஸ்த்திர எரிப்பு போராட்ட பரப்புரைப் பயணத்தின் தொடக்கப் பொதுக்கூட்டம்

உரை: தோழர்.விடுதலை இராசேந்திரன்

22-06-2012, மந்தைவெளி
பெரியார் திராவிடர் கழகம், தென்சென்னை மாவட்டம்

Thursday, June 28, 2012

தூங்குறியா நடிக்கிறியா ரங்கநாதா - பாடியவர் சமர்பா குமரன்

துப்புக்கெட்ட இந்திய அரசை தொடப்பக் கட்டையில் அடிக்கணுங்க - பாடியவர் சமர்பா குமரன்

{காணொளி} நெருக்கடிநிலை காலத்தில் நடந்தது என்ன?

இந்திராகாந்தி ஏன் தூக்கி எறியப்பட்டார்?

அந்த அய்ந்து அம்ச திட்டத்திலே ஒரு திட்டம் குடும்பக்கட்டுப்பாடு.
தென்னாட்டிலே இல்லை.

வடநாட்டில் பெண்களெல்லாம் கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டார்கள். வீட்டிலேயிருந்து தூக்கிக்கொண்டு செல்லப்பட்டார்கள்.

திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும்; அவர்களுக்குத் திருமணம் ஆயிற்றா இல்லையா என்று மிகவும் கேவலமான முறையிலே சோதனை செய்தார்கள்.

பெரும்பாலான பெண்களை பாலியல் வல்லுறவுக்குப் ஆட்படுத்திய பின்னரே கர்ப்பத்தடை செய்தார்கள்.

வடசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இரட்டைஏரி பகுதியில் நடைபெற்ற "சனநாயகம் படும்பாடு - அன்றும் இன்றும்" என்ற தலைப்பிலான நெருக்கடிநிலையை நினைவுபடுத்தும் பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் ஆற்றிய உரை.

Wednesday, June 27, 2012

{கா​ணொளி} விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவை ஆதரிக்கவில்லையா? - தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன்

“விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இருந்த நிலையிலும் இன்று அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையிலும் இந்தியாவை அவர்கள் ஆதரிக்கவில்லையா? 

ஆயுதம் தாங்கிய போராளிகளாலேயே இந்தியாவைப் பகைத்துக்கொள்ளமுடியாது என்கிறபோது ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியால் எப்படிப் பகைத்துக்கொள்ளமுடியும்?”

பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டம் சென்னையில் திங்கள்தோறும் நடைபெற்றுவருகிறது.

20-06-2012 அன்று நடந்த கூட்டத்தில் தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறியுள்ளார்


Wednesday, June 20, 2012

கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும் - நீதியரசர் சந்துரு தீர்ப்பு


இந்து கோயில்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரக்கூடியவையே என்றும் இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை செல்லத்தக்கதே என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். “கோயில்களில் நடக்கும் செயல்பாடுகளை ரகசியமாக்கிவிட்டால்,கோயில் நிர்வாகம் சீரழிந்துவிடும். கோயிலில் நடக்கும் செயல்பாடுகள் தனி நபர் தொடர்புடையது என்று கருதிட முடியாது. கோயில் ஒரு பொது நிறுவனம். பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் மட்டுமே கோயில் பொது நிறுவனம் இல்லை என்றாகிவிடாது. கோயில்கள் அனைத்தும் அறநிலையத் துறையின் கீழ் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு அரசுப் பணமும் ஒதுக்கப்படுகிறது. கோயில் சடங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களிட மிருந்து நன்கொடைகள் திரட்டப்படுகின்றன. இந்த நிலையில் கோயில்களும் தகவல் உரிமை சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையே” என்று நீதிபதி கே.சந்துரு தீர்ப்பில் கூறியுள்ளார்.

சென்னை வடபழனியிலுள்ள வெங்கீசுவரர் அழகர் பெருமாள் மற்றும் நாகாத்தம்மாள் கோயில் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக உள்ள பிரேம் ஆனந்த் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். இந்து அறநிலையத் துறை கோயிலுக்கு தகவல் தரும் அதிகாரி நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இது. கோயில்கள் ஒரு நிர்வாக அமைப்போ அல்லது பொது நிறுவனமோ அல்ல என்று அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.

நமது கருத்து:

“தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீணம்து தெய்வதம்
தன்மந்த்ரம் பிராமண தீனம்
பிராமணோ மம தேவதாவநா’

- என்று ரிக்வேதம் 62வது பிரிவு 10வது சுலோகம்

இதன் பொருள்: “இந்த உலகம் முழுதும் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங் களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்பதாகும்.

இப்படி மந்திரங்களுக்கும் ‘பிராமணர்’களுக்கும் கட்டுப்பட்ட கடவுள் உள்ள கோயில்கள் தகவல் உரிமை பெறும் சட்டத்துக்குக் கட்டுப்பட முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த அறங்காவலர் வழக்கைத் தொடர்ந்தார்.

கோயில்கள் பார்ப்பனர்களுக்கும் மந்திரங்களுக் கும் கட்டுப்பட்டவை என்று கூறிக் கொண்டாலும் அரசுப் பணத்திலும் பொது மக்கள் நன்கொடை யிலும் நடைபெறும் பொது நிறுவனம் என்பதால் கோயில் பற்றிய தகவல்களைக் கேட்க விரும்பும் எவருக்கும் தகவல் தந்தாக வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தீர்ப்பு உணர்த்துகிறது.

எனவே, இத் தீர்ப்பு வேதங்களுக்கும் வேதங்களின் அடிப்படையில் விதிகளையும் தண்டனைகளையும் எழுதி வைத்துள்ள மனுதர்மத்துக்கும் எதிரான தீர்ப்பாகும்.

மனுதர்மத்தைக் காப்பாற்றவே பார்ப்பனர்கள் இப்போதும் துடிக்கிறார்கள் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சான்று!

நன்றி: புரட்சிப்பெரியார் முழக்கம் ஜூன் 21, 2012


337 தலித் மக்களைக் கொன்று குவித்த பார்ப்பனர்களின் சேனை

‘இஸ்லாமிய பயங்கரவாதம்’, ‘மாவோயிசப் பயங்கரவாதம்’, ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதம்’ - என்று பார்ப்பன ஏடுகளும், பனியாக்களின் ஏடுகளும், ‘தேசிய’ ஏடுகளும் பக்கம் பக்கமாக எழுதி, ஏதோ, இந்த அமைப்புகள் எல்லாம் பயங்கர வாதத்துக்காகவே பிறப்பெடுத்து வந்ததைப்போல சித்தரிக்கின்றன. எந்த பயங்கரவாதமும் அடிப்படை வாதமும் ஏற்க முடியாதவைதான். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இதற்கு நேர் மாறாக, மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பன பயங்கரவாதம் என்று ஒன்று இருப்பது பற்றி எந்த ஏடும் எழுதுவதற்கு முன்வருவது இல்லை. பீகாரில் ‘ரன்வீன் சேனா’ என்ற பயங்கர வாத ஆயுதம் தாங்கிய அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்த பிரமேஷ்வர் சிங், கடந்த ஜூன் முதல் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் சுட்டுக் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மிக மோசமான கலவரத்தை நடத்தியுள்ளனர். அது என்ன ‘ரன்வீன் சேனா?’ இது பார்ப்பனர்களின் ஆயுதம் தாங்கிய ஒரு படை!

(பார்ப்பன பயங்கரவாதி பிரமேஷ்வர்) 

ராஜபுத்திரர்களை எதிர்த்து அவர்களை ஒழிக்க ஆயுதம் தாங்கிய படையை உருவாக்கிய ‘ரன்வீர்’ என்ற பார்ப்பனரின் பெயரிலேயே இந்தப் படையை உருவாக்கிய பிரமேசுவர்சிங்கும் ஒரு பார்ப்பனர்தான். 1995 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை தலித் சமூகத்தைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உட்பட 337 பேரை இந்தப் பார்ப்பன தலைமையிலான குண்டர் படை கொலை செய்துள்ளது. இதைத் தவிர, நூற்றுக்கணக்கான தலித், முஸ்லீம் மக்களை வேறு பல சம்பவங்களிலும் கொலை செய்துள்ளனர்.

தலித் மக்களும், முஸ்லீம்களும் வாழ்வுரிமை இழந்து, ஆடு மாடுகளைப்போல் நடத்தப்பட்ட கொடுமையான சமூகச் சூழலில் 1968 இல் மார்க்சிய லெனினியக் கட்சி இவர்களுக்காக அணி திரட்டிப் போராடியது. பின்னர், ‘மாவோயிச ஒருங்கிணைப்பு மய்யம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் இயங்கி வருகிறது. நிலமற்ற மற்றும் கொத்தடிமை யாக்கப்பட்டுள்ள மக்களின் உரிமை களுக்காக இந்த இயக்கம் போராடத் தொடங்கியதை சகித்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள், இவர்களைக் கொன்று குவிப்பதற்காகவே ‘தன்வீர் சேனை’யை உருவாக்கினார்கள். தலித்-முஸ்லீம் மக்கள் தேர்தலில் ஓட்டுப் போடும் உரிமைகளையே தடுத்து வைத்திருந்தது பார்ப்பன நிலவுடைமை யாளர்கள் கும்பல். தேர்தலிலும் போட்டியிட முடியாது. மாவோயிச இயக்கம் வந்த பிறகு, 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தான் தலித், முஸ்லீம்கள் வாக்களிக்கும் நிலையே உருவானது.

பல கிராமங்களில் கொத்து கொத்தாக தலித் மற்றும் முஸ்லீம்களை கொலை செய்த இந்த பார்ப்பன குண்டர் படைத் தலைவன், 2002 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ‘அரா’ சிறையி லடைக்கப்பட்டார். சிறையிலிருந்தவாறே பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இந்த பிரமேஷ்வர், “நான் தான் தலித், முஸ்லீம்களைக் கொலை செய்தேன். காரணம், இவர்கள் எல்லாம் எதிர்காலத்தில் நக்சலைட்டுகளாக மாறப் போகிறவர்கள்” என்று திமிருடன் கூறினார்.

இவ்வளவு படுகொலை செய்து முதல் குற்ற வாளியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பார்ப்பனருக்கு 2011 இல் அரா மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியது. காவல்துறை நீதிமன்றம் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகம் முழுவதும் பார்ப்பன குண்டர் படைக்கும் அதன் தலைவனுக்கும் வெளிப்படையாகவே ஆதரவாக செயல்பட்டன. ‘பதானிடோலா’ எனும் கிராமத்தில் தலித் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்கியபோது, பிரமேஷ்வர் சிறைக்குள்ளேதான் இருந்தார். ஆனால், மாவட்ட நீதிபதி அவர் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் அப்பட்டமாக பொய் கூறினார். சிறையில் இருந்து கொண்டே 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பார்ப்பன குண்டர் படைத் தலைவனை தேர்தலில் போட்டியிட வைத்தனர் - பார்ப்பனர்கள். தேர்தலில் தோற்றாலும், ‘தலித்-முஸ்லீம் படுகொலைகளுக்கு’ ஆதரவு தெரிவித்து 1.5 லட்சப் பார்ப்பன உயர்சாதி கும்பல் தங்கள் வாக்குகளை இந்த மனிதனுக்கு வாரிப் போட்டது. இந்த பிரமேஷ்வர் - தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரர். பிணையில் வெளிவந்த பிறகு, அரசியலில் இறங்கிட முனைப்பு காட்டினார். இவருக்கு அடுத்த நிலையிலிருந்த மற்றொரு பார்ப்பனரான சுனில் பாண்டே என்பவர்தான் பிரமேஷ்வர் கொலைக்கு திட்டமிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

“பரசுராமன் பிராமணர்களைக் காப்பாற்ற கோடரியைத் தூக்கியதுபோல் நானும்தூக்கினேன். இந்த சமூகத்தில் அநீதிக்கு எதிராக ஆயுதத்தைத் தூக்கியாக வேண்டும்” என்று பல பேட்டிகளை அளித்த பிரமேஷ்வர் மனுதர்மத்தின் காவலன்! ‘பகவான் கிருஷ்ணன்’ காட்டிய வழியில் பார்ப்பன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயுதம் ஏந்தியவன்.”

இது ஏதோ ஒரு யுகத்தில் நடந்தது அல்ல; இப்போதும் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. 337 தலித் -முஸ்லீம் மக்களை படுகொலை செய்த பார்ப்பன ராணுவம் பற்றி ஊடகங்கள் மூச்சு விடவில்லை. இது பற்றி கட்டுரை வெளி யிட்ட ‘பிரன்ட்லைன்’ பத்திரிகைகூட பிரமேஷ்வர், பார்ப்பான் என்பதை இருட்டடித்து விட்டது.

சொல்லுங்கள்! ‘மனுதர்மம்’ உயிர் வாழ்கிறதா? இல்லையா?


நன்றி: புரட்சிப்பெரியார் முழக்கம், ஜூன் 21, 2012

Friday, June 15, 2012

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பின்னுக்கிழுக்கும் நாம்தமிழர்.

(நாம்தமிழர் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் ஆவணம் தொடர்பாக வந்த விமர்சங்களில் இது தனித்துவமானது. 

நாம்தமிழர் கட்சியின் கொள்கை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பின்னுக்கிழுக்கக்கூடியது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார் கட்டுரையாளர் அருண்மொழிவர்மன். )

நாம் தமிழர் கட்சி ஆவணம் - ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய சவால் : அருண்மொழிவர்மன்2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் குறித்தான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருப்பது என்னைப் போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது.

ஈழப்போராட்டம் தொடர்பான கடந்தகால அனுபவங்களில் இருந்து சுயவிமர்சனங்களுடன் அடுத்த கட்டம் தொடர்பாக ஆரோக்கியமாக அணுகுகின்ற போக்கும், புலிகள் மீதான விமர்சனங்கள், அதிருப்திகள் கொண்டிருந்தோரும் ஈழப்போராட்டம், தமிழ்த்தேசியம் தொடர்பாக மீண்டும் பங்கேற்க ஆரம்பித்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையும் அங்கே ஈழப்போராட்டம் ஏற்படுத்திய தாக்கமும், தொடர்ச்சியாக இந்திய மைய அரசால் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றோம் என்கின்ற உணர்வும், கூடங்குளம், முல்லைப் பெரியாறு போன்ற பொதுப்பிரச்சனைகளிலும் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வைக் கூர்மைப்படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த உணர்வலைகளைத் தனக்குச் சாதகமாக அரசியல் ரீதியில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற சுயநலத்துடன் அரசியல் கட்சிகள் காய் நகர்த்துவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அண்மைக் காலத்தில் இதற்கான ஆகச்சிறந்த உதாரணமாகக் கருணாநிதி டெசோ, தமிழீழம் என்று மீண்டும் பேச ஆரம்பித்திருப்பதைக் குறிப்பிடலாம்.


இதற்கு இணையாக ஈழத்தமிழர்களின் நீண்ட கால விடுதலைப் போராட்டத்திற்கும், அந்தப் போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகளிற்கும் தாம் மாத்திரமே உரித்தானவர்கள் என்று உரிமை கோரி, இந்தப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் ஒட்டுமொத்த அரசியல் அனுகூலங்களையும், ‘ஈழத்தமிழர் போராட்டத்தினை அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுப்பவர்கள் தாம் மாத்திரமே’ என்று அடையாளப்படுத்தி அதனூடாக புலம்பெயர் தமிழர்கள், ஆதரவாளர்களிடம் இருந்த கிட்டக்கூடிய எல்லாவிதமான ஆதரவையும் கொண்டு தம்மை ஒரு பலமான அரசியல் கட்சியாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற குறுகிய நோக்கும், முழுச் சுயநலமும் கொண்டதாகவே நாம் தமிழர் கட்சியை அதன் ஆவணம் அடையாளம் காட்டி இருக்கின்றது.

எந்த விதமான நுணுக்கமான அரசியல் பார்வைகளுக்கும் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியின் நோக்கம் இந்த ஆவணத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றது. பழம் பெருமைகள் (இவற்றிற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இன்றுவரை நாம் தமிழர் கட்சியினரால் காட்டப்படவில்லை), புரட்டுகள், திரித்தல்கள், பெரியார் பற்றிய அபாண்டமான குற்றச்சாற்றுகள் (இவற்றுள் அனேக குற்றச்சாற்றுகள் ஏற்கனவே ஆதாரங்களுடன் மறுக்கப்பட்டுவிட்டவை, அத்துடன் பெரியாரின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமலேயே இந்தக் குற்றச்சாற்றுகள் ஆவணத்தில் குறிப்பிடப்படுகின்றன) என்று தொடங்குகின்ற ஆவணம் பிரிவு 6ல் தமிழரின் வீழ்ச்சிக்குரிய துல்லியமான காரணம் என்கிற பிரிவை கீழ்வருமாறு நிறைவு செய்கின்றது,

“தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக தமிழரின் இன எதிரியான இந்தியா, தனது எதிரிகளான சீனா, பாக்கித்தான் ஆகிய நாடுகளின் துணையோடு கூட, அமெரிக்கா பிரிட்டன் போன்ற முதலாளிய நாடுகளையும், கியுபா, வெனிசுலா போன்ற நிகராண்மை நாடுகளையும் உள்ளடக்கிய அனைத்து உலக நாடுகளையும் ஒத்துழைப்பிற்கு அழைத்துக்கொண்டு, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, தமிழர்களின் ஒத்துழைப்பில்லாத இரண்டகத்தால் பேரழிவைச் சந்திக்க நேர்ந்தது; தமிழீழ விடுதலைப் போராட்டம் தன் இலக்கு நோக்கிய தொடர்ச்சியை இழந்து தவிக்கின்றது. தகுதியான எந்த உதவியும், எங்கிருந்தும் இல்லாத வெறுமை நிலவுகின்றது.”

இதன் தொடர்ச்சியாக ஆவணத்தில் பிரிவு 7 ‘அ’ வில் நாம் தமிழர் பற்றிய அறிமுகம் பின்வருமாறு கூறப்படுகின்றது,

இந்த வெறுமையை உடைத்தெறிந்து, தமிழர், உலக அரங்கில் மானத்தோடு வாழும் நிலையை உருவாக்கிட, விடுதலை வேட்கையும், வீரமும், மானமும், ஈகமும், ஒப்புடைப்புணர்வும், உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், ஒற்றுமைப் பண்பும், தன் விளம்பரத் தவிர்ப்பும், தன்னுறுதியும், இனவிடுதலைப் பற்றும், இனவிடுதலைப் குறிக்கோளில் உறுதியும், உடல் வன்மையும், உளத் திண்மையும், பொறுமையும், போர்மையும், அறிவார்ந்த சிந்தனையும், தகவார்ந்த செயல்திறனும் கொண்ட தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற தன்னிகரில்லாப் பேரியக்கமே “நாம் தமிழர் கட்சி”. அது தமிழர்க்காகத் தமிழர்களால் நடத்தப்படும் தமிழர்களின் கட்சி.”

அதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெறுமையை உடைத்தெறியப் போவது நாம் தமிழர் கட்சி என்கின்றது ஆவணம். இதனுடன் தொடர்புபடுத்தி சில மாதங்களிற்கு முன்னர் நாம் தமிழர் கட்சி, ‘தாம் புலிகளின் அரசியல் பிரிவாகச் செயற்படுவோம்’ என்ற பொருள்பட அறிவித்திருந்ததையும் கவனிக்க வேண்டும். புலிகள் அமைப்பின் நீட்சியாகத் தம்மை அடையாளப்படுத்துவன் மூலம் தமிழகத்தில் புலிகளிற்கு ஏற்பட்டிருக்கின்ற ஆதரவினை தமது ஓட்டரசியல் என்கின்ற சுயநலத்திற்குப் பாவிப்பது என்பது நாம் தமிழரின் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகின்றது. முதலில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தவர்கள் ஆதரவாளர்களாகவும், ஆக்கப்பூர்வமாக செயற்படுபவர்களாகவும் இருப்பது ஈழத்தமிழர்களின் பலத்தை அதிகரிக்கும் என்கின்ற அதேவேளை, ஈழப் போராட்டத்தினைக் கொண்டு நடத்துபவர்களாக ஒருபோதும் தமிழகத்து அரசியற் கட்சிகளோ அல்லது அரசியற் தலைவர்களோ இருக்க முடியாது. அவ்விதம் அமைவது ஈழப்போராட்டத்தினை வலிமையிழக்கச் செய்வதுடன் இன்னமும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சீமான் பேசிய உணர்வூட்டும் பேச்சுக்கள் ஈழத்தமிழர்களிடையேயும், ஈழத் தமிழர் ஆதரவாளர்களிடையேயும் அவருக்குப் பெரும் ஆதரவை வழங்கியது உண்மை. அத்துடன் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்கான இந்திய அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்ததும், கனடா, அமெரிக்காவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டதும் அவருக்கான ஆதரவை அதிகரித்ததும் உண்மை. தவிர தான் வன்னி சென்று திரும்பிய சந்தர்ப்பங்களில் அங்கு நடந்தவை பற்றி தொடர்ச்சியாக மேடைகளில் பேசி, தனக்கும் புலிகளுக்கும் நெருக்கமாக தொடர்பு இருந்தது என்பதை மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே சீமானும் இருந்தார். ஆனால் ஈழத் தமிழர்களிற்காக தான் சிறை சென்று திரும்பியவன் என்பதையும், தனது உணர்வூட்டும் பேச்சுக்களையும் வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வெறுமையை உடைத்தெறிய வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர் என்றும், புலிகளின் அரசியற் பிரிவினராகத் தாம் செயற்படுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி கூறுவதும், அதை ஈழத்தமிழர்கள் (யாராவது) நம்புவதும் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். ஈழத்தமிழர் போராட்டம் தொடர்பான சீமானின் பாத்திரம் ஒரு உணர்வூட்டும் பேச்சாளார் என்பதில் இருந்து ஓர் அரசியல் தலைவராக விரிவடைவதில் இருக்கக் கூடிய ஆபத்துக்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் இந்த ஆவணத்தில் பிரிவு 16. உறுப்பினர் தகுதியில் பின்வருமாறு கூறப்படுகின்றது,

அவர்கள் (உறுப்பினர்கள் – கட்டுரை ஆசிரியர்) தமிழ் நாட்டிலோ அல்லது பிற மாநிலங்களிலோ வாழ்பவர்களாக இருக்கலாம்.வெளிநாட்டில் வாழ்பவர்களாக இருப்பின் இந்திய ஒன்றியத்தின் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

அதாவது நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இதன்படி ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக முடியாது. அப்படி இருக்கின்றபோது, இந்தியத் தமிழர்களால், அவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்ற ஒரு கட்சி தம்மை ஈழப்போராட்டத்தினை கொண்டு நடத்துபவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குவது மிக மோசமான ஏமாற்றுத்தனம். மேலும், புலம்பெயர் நாடுகளிலும் நாம் தமிழர், தமது கிளைகளை அமைத்து இருக்கின்றனர். அவற்றின் உறுப்பினர்களாகவும், நிர்வாகப் பொறுப்புகளிலும் ஈழத்தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கின்றனர். நாம் தமிழர் கட்சிக்கான தமது பங்களிப்பை ஆற்றியும் வருகின்றனர்.

இப்போது கட்சி ஆவணத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் எவருமே அதில் உறுப்பினராக முடியாது என்பதை சீமான் தமது வெளிநாட்டுக் கிளைகளுக்கு அறிவிக்கவேண்டும். அத்துடன் சட்ட ரீதியாகப் பதிவுசெய்து இயங்குகின்ற ஓர் அரசியல் கட்சி என்ற வகையில், நாம் தமிழர் கட்சியினர் தமது வெளிநாட்டுக்கிளைகளின் நிர்வாகிகளின் பெயர்களையும், தொடர்புகொள்வதற்கான வழிகளையும் தமது இணையத் தளத்திலேயே தெரியப்படுத்தவேண்டும். தனது ஆவணத்தின்படி தனது கட்சியில் உறுப்பினராக முடியாதவர்களை தனது கட்சி உறுப்பினர்கள் என்ற பெயரில் சேர்த்து வைத்துக்கொண்டு இருப்பது, அந்த உறுப்பினர்களை அரசியல் ரீதியாகச் செயலிழந்தவர்களாக மாற்றும் செயலே அன்றி வேறொன்றில்லை.

இந்த ஆவணத்தில் முக்கியமாகக் கவனம் செலுத்தவேண்டிய விடயம் பிற இனத்தவர்கள் மீதும், “நாம் தமிழர்” என்ற பிரிவுக்குள் உள்ளடக்கப்படமாட்டாதவர்கள் மீதும் ஆவணம் காட்டும் மோசமான வெறுப்புணர்வு. இது இனங்களிடையிலான ஒற்றுமையை முற்றாக ஒழித்துக்கட்டி நாம் தமிழர் செயற்படும் இடங்களையெல்லாம் கலவர பூமியாக மாற்றக்கூடியது. உதாரணத்துக்கு ஆவணத்தில் 3வது முரண்பாடாக “தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்தவத்திற்கும் இடையிலான முரண்பாடு” என்று குறிப்பிடப்படுகின்றது. ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான வெற்றிடத்தினை உடைக்க வந்திருப்பதாக சொல்லுகின்ற இந்த நாம் தமிழர் கட்சி, இப்படியான நிலைப்பாடுகள் மூலம் செய்யப் போவதெல்லாம் ஈழத்தமிழர் போராட்டத்திற்கான எல்லா தார்மீக நியாயங்களையும் குழி தோன்றிப் புதைப்பதைத்தான் என்றே தோன்றுகின்றது.

விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று முஸ்லீம்களை வெளியேற்றியது. இன்றுவரை புலிகள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாற்றுகளில் ஒன்றாக இது இருக்கின்றது. பின்னாட்களில் புலிகள் அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டும் இருக்கின்றார்கள். சமாதான கால கட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கும், முஸ்லீம் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் ஓர் ஒப்பந்தமும் கைச்சாத்தாகி இருக்கின்றது. ஒப்பந்தத்தின் பிரகாரம் முஸ்லீம்கள் ஒரு தனித்தேசிய இனமென்கின்ற நிலைப்பாட்டுக்குப் புலிகளும் வந்திருந்தார்கள் அல்லது முஸ்லீம்களும் ஒரு தனித் தேசிய இனமென்பதைப் புலிகளும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இன்றைய நிலையில் இலங்கைப் பிரச்சனைக்கான தீர்வு என்று சிந்திப்பவர்களும் முஸ்லீம்களை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு தனித் தேசிய இனமாகவே கருதி தீர்வுகள் நோக்கி சிந்திக்கவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லீம்கள் மொழிவழித் தமிழர்களாக இருந்தாலும் தம்மை ஒரு தனித்த இனத்தவர்களாகவே அடையாளப்படுத்தி வருகின்றார்கள். (தமிழகத்து தமிழர்களின் நிலைப்பாடு இதில் இருந்து வேறுபட்டது. அவர்கள் தம்மை தமிழர்களாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகின்றார்கள்).


அண்மைக்காலமாக இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியவாதம் அங்கு வாழுகின்ற சிறுபான்மை இனங்கள் மீது தன் ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரமாக்கி வருவதோடு சம நேரத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் செயற்பட்டு வருகின்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த நேரத்தில் அங்கு வாழுகின்ற சிறுபான்மை இனங்கள் தத்தம் உரிமைகளுக்காகப் போராடுவதுடன், தமக்கிடையே இருக்கின்ற கசப்புணர்வுகள், முரண்பாடுகளைக் களைந்து ஒருவருக்கொருவர் ஆதரவுடனும், நம்பகத்தன்மையுடனும் நடந்துகொண்டால் மாத்திரமே சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுக்கு அழுத்தம் தரவும், தமது உரிமைகளை தக்கவைக்கவும் முடியும். அண்மைக்காலத்தில் அறிவுசார் வட்டங்களில் இருந்து இதற்கான முன்னெடுப்புகளும் ஓரளவு நடைபெற்றே வருகின்றன. ஆனால் நாம் தமிழரின் ஆவணமோ இந்த ஒட்டுமொத்த முயற்சிகளையும் தவிடு பொடி ஆக்குவதுடன் இனங்களிற்கிடையே இருக்கின்ற பிளவை இன்னமும் ஆழவும், அகலவும் படுத்தவே முயல்கின்றனர். நாம் தமிழர் கட்சி கருதுகின்ற மேற்படி முரண்பாடு பற்றி அவர்கள் ஆவணம் தொடர்ந்து பின்வருமாறு விளக்கமளிக்கின்றது,

“3ம் முரண்பாடுகளாக முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை. சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும், தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்றுணர்ந்து வருவராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளவேண்டிய தரப்பினர்.”

இங்கே முக்கியமான இன்னொரு விடயம் கிறித்தவர்கள் தொடர்பான நாம் தமிழர் கட்சியின் பார்வை. ஈழத்தைப் பொறுத்தவரை கிறித்தவர்கள் தம்மை மொழி சார்ந்தே அடையாளப்படுத்திக் கொள்ளுகின்றார்களே தவிர தம்மை ஒரு தனித்து அடையாளப்படுத்திக் கொண்டதே கிடையாது. தவிர ஈழத்தில் புலிகள் அமைப்பினருக்கும் கிறித்தவ மதகுருமார்களுக்கும் தொடர்ச்சியாகப் பேணப்பட்ட நல்லுறவு அனைவரும் அறிந்ததே. சமாதான கால கட்டத்தில் பிரபாகரன் குறித்து தொடர்ச்சியான பல்வேறு வதந்திகளைப் பரப்பிவந்த இலங்கை அரசு, பிரபாகரன் கிறித்தவராக மதம் மாறினார் என்றும் சிலகாலம் சுவரொட்டிகள் ஒட்டிப் பார்த்தது. இது பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இன்றி எழுந்தமானத்துக்கு இது போன்ற பிரிவினைக்கு வழிகோலும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டே தம்மை ‘புலிகளின் அரசியல் தொடர்ச்சி’ என்றும், ‘தமிழீழ விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை உடைத்தெறிய வந்தவர்கள்’ என்றும், அலங்கார வார்த்தைகளை அள்ளி இறைக்கும் நாம் தமிழர் கட்சி ஆவணம் உடைக்கப்போவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தையல்ல, மாறாக தமிழீழ விடுதலை பற்றி எமக்கிருக்கின்ற நம்பிக்கையையே.

இந்த ஆவணம் அள்ளி இறைக்கும் வெறுப்பை விதைக்கும் வார்த்தைகள் இத்தோடு முடியவில்லை. பிற்சேர்க்கை அ – ஆவணம் சார்ந்த முன்மாதிரி முழக்கங்களில் ‘மறக்க மாட்டோம், மறக்க மாட்டோம் மலையாளிகளை மறக்க மாட்டோம்’ என்று ஒரு முழக்கம் வருகின்றது. இந்த முழக்கம் ஈழப்பிரச்சனை தொடர்பானதாகவே அமைகின்றதையும் அறிய முடிகின்றது. ஈழப்போராட்டத்தில் இந்திய அரசிலும், ஐநா உள்ளிட்ட அமைப்புகளிலும் பங்கேற்று போரின் இறுதிக்கணம் வரை இலங்கை அரசுக்கு எந்த அழுத்தமும் வரவிடாது காபந்து பண்ணி ஒரு இனப்படுகொலையை நடத்தி முடிக்க உதவிய அமைச்சர்களிலும், அதிகாரிகளிலும் சிலர் மலையாளிகளாக இருந்தார்கள். ஆனால் அதைக் காரணம் காட்டி ஒரு இனத்தின் மீதே வெறுப்பைக் கக்கும் ஒரு முழக்கத்தை ஒரு கட்சி தன் அதிகாரப்பூர்வ முழக்கமாகவே தன் ஆவணத்திலேயே வெளியிடுவது எத்தனை மோசமானது. தமிழர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் பிரசாரங்களையும், அறிக்கைகளையும் வெளியிடும் சிங்களப் பேரினவாதிகளையும், சிறுபான்மையினர், வெளிமாநிலத்தவர் மீது வெறுப்பை உமிழும் சிவசேனா போன்ற அமைப்புகளையுந்தான் இந்த அறிக்கை நினைவூட்டுகின்றது.

ஈழத்தில் நாங்கள் இருந்த நாட்களில் புலிகளால் ராணுவ முகாங்கள் அழிக்கப்பட்டபோதும், இழந்த பிரதேசங்கள் மீட்கப்பட்டபோதும் ஒரு கொண்டாட்ட உணர்வு இருந்ததேயன்றி எந்தத் தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் மரணத்தையும் நாம் அங்கு கொண்டாடி வந்ததில்லை. பூநகரித் தாக்குதலின் பின்னர் புலிகளால் வெளியிடப்பட்ட “சிறீமா ஆச்சி பெத்த மகள் சந்திரிக்காவே..” என்ற பாடலை ஒலிபரப்புவதற்குக்கூட சில நாட்களின் பின்னர் புலிகள் தடைவிதித்திருந்தனர். இந்தப் பாரம்பரியத்தில் வந்த எமக்கு ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாக விரோத மனப்பாங்குடன் சித்திகரிப்பது மிகவும் கேவலமான ஒரு செயலாகவே படுகின்றது.

இன்னொரு முழக்கம் சொல்கின்றது “கணக்குத் தீர்ப்போம், கணக்குத் தீர்ப்போம். அமைதிப்படை கணக்குத் தீர்ப்போம்” என்று. இந்தக் கோசத்தைப் பார்க்கின்றபோது எனக்கு, இந்திய இறையாண்மைக்குட்பட்டு இயங்கப்போகின்ற நாம் தமிழர் கட்சி எவ்விதம் அமைதிப்படைக்குக் கணக்குத் தீர்க்கப்போகின்றது? என்ற கேள்வி எழுகின்றது. ஈழப் போர் உக்கிரம் பெற்றிருந்தபோது பலமுறை மேடைகளில் “நானே ஈழம் சென்று போராடுவேன்” என்று வீர முழக்கம் செய்த சீமானின் இன்னுமொரு முழக்கம்போலவே இந்த நாம் தமிழர் கட்சியின் முழக்கமும் அமைகின்றது. இது போன்ற வெறும் முழக்கங்களிற்கும் நடிகர் விஜய் செய்த “நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. நாம் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட” என்கிற “முழக்கத்திற்கும்” அதிகம் வேறுபாடில்லை.

தவிர, “உலகின் முதன்மொழி தமிழ்; உலகின் முதலினம் தமிழர். முதன் மொழியாம் நம் தமிழின் அகவை 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது” என்று பாவாணரைத் துணைக்கிழுத்துக் கொண்டு தொடங்குகின்ற ஆவணம் அதன் 54ம் பக்கத்தில்

“முன்னம் பிரிந்து திரிந்தவன் மனுநெறியன்

பின்னம் பிரிந்து திரிந்தவன் திராவிடன்

அய்ரோப்பியன், அமெரிக்கன் மேலை மனுநெறியன்

அய்யனென்னும் பொய்யன் கீழை மனுநெறியன்

தெலுங்கன் மலையாளி தென்புலத் திராவிடன்

மராட்டியன் பஞ்சாபி வடபுலத் திராவிடன்

சிங்களவன், சியாமியன் கீழைத் திராவிடன்”

என்று விரிகின்றது. இங்கே சிங்களவரை “கீழைத் திராவிடன்” என்று அறிவித்துக்கொள்ளும் நாம் தமிழர் அறிக்கை பெரியாரைக் குறிவைத்து, “ஈழத்தந்தை செல்வா உதவிகேட்டபோது சிங்களத் திராவிடத்திடம் பணிந்து போகுமாறு திராவிடம் அறிவுரை கூறியது” என்கிற அவதூறை முன்வைக்கின்றது. உண்மையில் 72ல் நடந்த அந்த சந்திப்பில் பெரியார் “ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்” என்றே கூறி இருந்தார். அதனை பெரியார் சிங்களவர்களுக்குப் பணிந்து போகுமாறு தமிழர்களைப் பார்த்துக் கூறியதாகக் கூறுவது மிகுந்த உள்நோக்கம் கொண்டது. தவிர ஆவணம் தொடர்ந்து கூறுகின்றது,

“வாக்கு அரசியல் திராவிடமோ தில்லிக் கும்பல் போட்ட தாளத்திற்கு ஏற்றவாறு, முன்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பின்பகுதில் இந்தியம், சிங்களத்தோடு சேர்ந்து குழி தோண்டியது. இந்தியத் தேசியக் கட்சிகள் அனைத்தும், மனுவிய வெறியோடு (வெவ்வேறு அளவுகளில்) தமிழீழ விடுதலையை முற்றாக எதிர்த்து நின்றன, நிற்கின்றன.

பகுதிவாதத் தமிழ்க்கட்சிகள் திராவிடக் கட்சிகளின் காலடிகளில் விழுந்து, அவற்றோடு இணைந்து ஈழத்திற்கு இரண்டகம் செய்தன…”

இங்கே வாக்கு அரசியல் கட்சிகள் பற்றி இத்தனை தெளிவாகப் பேசுகின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான், வாக்கு அரசியல் கட்சியொன்றின் தலைவியான ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று போற்றினார், ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்றார். காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டும் என்பதுதான் அன்று அவரது நோக்கமாக இருந்தது என்றால் ‘ஈழத்தாய்’ என்றும், ‘இலை மலைர்ந்தால் ஈழம் மலரும்’ என்றும் புகழ்ந்திருக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. தவிர ஜெயலலிதா பற்றிய சீமானின் மென்போக்கு பலரும் பல சந்தர்ப்பங்களில் அவர் மீது வைத்த குற்றச்சாற்றே.

சென்ற மார்ச் மாதத்தில் கனடாவில் ரொரன்றோ நகரில் கூடங்குளம் தொடர்பாக ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தியிருந்தோம். அதில் கலந்துகொள்வதற்கான அழைப்பு நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் விடுக்கப்பட்டிருந்தபோதும் அவர்களின் நிலைப்பாடு ‘இவ்வாறான ஒரு போராட்டத்தினை நடத்துவது ஜெயலலிதாவை எதிர்ப்பது போன்றதாகும், ஜெயலலிதா இப்போது ஈழத்தமிழர்கள் தொடர்பாக அக்கறைகொண்டவராகவே இருக்கின்றார்’ என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தது.

ஆவணத்தில் 57ம் பக்கத்தில் தமிழர் அழிப்புக்கூறுகளான கூடங்குளம், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களை இழுத்து மூடத் தொடர்ந்து போராடுவதை கட்சியின் செயற்பாட்டுக் கொள்கையாக அறிவித்திருக்கின்ற இவர்கள் கூடங்குளம் போராட்டத்தின்போது தமது தொண்டர்களை முழுமையாகக் களமிறக்கிப் போராடினார்களா என்ற கேள்வியே எஞ்சி நிற்கின்றது. எப்படி ஈழத்தமிழர்களின் போராட்டத்தினை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் லாபங்களிற்காக பாவித்தார்களோ அதைவிடப் பன்மடங்கு லாபநோக்கம் கருதியதாகவே சீமானின் நோக்கம் இருக்கின்றது

அடிப்படை முரண்பாடுகள் என்பதில் 8வது முரண்பாடாக ஆணாளுமை – பெண்ணடிமை முரண்பாடென்று பட்டியலிட்டும், செயற்பாட்டுக் கொள்கைகளில் 12வது கொள்கையாக “மகளிருக்குச் சமபங்கு கொடுப்பது கொடையன்று, அதை அடைவது அவர்கள் பிறப்புரிமை, அதற்காகப் பாடுபடுவோம்” என்றும் அறிவித்துக் கொள்ளுகின்ற இந்த ஆவணத்தில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் ஆண்பால் விகுதிகளே பாவிக்கப்பட்டிருக்கின்றதை அவதானிக்கவேண்டும். தவிர முரண்பாடுகள் என்ற பட்டியலில் தமிழ்த் தேசிய முதலாளிகளுக்கும் பிற தேசிய முதலாளிகளுக்குமான பிரச்சனையை எல்லாம் கடந்து சாதீயம் பட்டியலில் 7வதாக வருவதோடு அதை ஒரு மேற்கட்டுமானப் பிரச்சனை என்றே ஆவணம் தெரிவிக்கின்றது. இப்படியான முரண்கள், திரித்தல்கள், புரட்டுக்களே இந்த ஆவணத்தை நிறைத்து நிற்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பவர்களாகவும், புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளுகின்ற நாம் தமிழரின் உண்மையான, மொழிப் பாசிச, இனவாதத்தைத் தூண்டுகின்ற முகத்தை இந்த ஆவணம் அம்பலப்படுத்தி நிற்கின்றது. இப்படிப்பட்ட மோசமாக, இனவாதத்தைத் தூண்டுகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களான புலிச் சின்னத்தையும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தையும், புலிகளின் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி..’ பாடலைத் தமது உறுதிமொழியாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தையும், பேரையும் தொடர்ந்து தமது மேடைகளிலும், ஆவணங்களிலும் உபயோகிப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் எல்லாத் தார்மீக நியாயங்களையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே அமையும். இந்த ஆவணத்தின்படி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கினாலோ அல்லது வெறுமே பெயருக்கு ஆவணத்தைத் திருத்திவிட்டு இதே மனப்பாங்குடன் தொடர்ந்து செயற்பட்டாலோ ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெரிய சவாலாக நாம் தமிழர் கட்சியும் அதன் செயற்பாடுகளுமே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

- அருண்மொழிவர்மன்நன்றி: கீற்று 

Wednesday, June 13, 2012

பெரியார் முன் வைத்த சிந்தனைகள், சமகால இந்தியத் தலைவர்களின் கருத்துகளையும் மிஞ்சி நிற்கக்கூடியவை. - நீதியரசர் சந்துருகிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் ஒரு மூலையில் பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் மற்றும் அரசு அனுமதி ஆணையோடு நிறுவப் பட்டுள்ள பெரியார் சிலையை எதிர்த்து உள்ளூர் பா.ஜ.க.வினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரியார் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. ஆர்.எ°.எ°. அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங் கினர். இதற்கிடையே பா.ஜ.க.வினர், நேரடியாக பெரியார் சிலையை எதிர்த்து வழக்காட முன் வராமல், பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் ஒருவர் மூலமாக வழக்குத் தொடர்ந்தனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. சந்துரு மனுவை தள்ளுபடி செய்துள்ள தோடு, பெரியார் சமுதாய மாற்றத்துக்கு பங்களிப்பை வழங்கிய மகத்தான தலைவர் என்று தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

பெரியார் சிலையை பள்ளி வளாகத்தின் அருகே நிறுவுவதால் மாணவர்கள் நாத்திக சிந்தனைக்கு மாறிவிடுவார்கள் என்று மனுதாரர் கூறியிருந்ததுபற்றி நீதிபதி குறிப்பிடுகையில், ஒரு மகத்தான தலைவரின் சிலையை நிறுவிவிட்டாலே மாணவர்கள் எல்லோரும் தன்னிச்சையாகவே நாத்திகர்களாகி விடுவார்களா? என்று வியப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் பெரியாரின் சிலைகள் நிறுவப்பட வேண்டியதின் அவசியத்தையும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

“பள்ளி மாணவர்கள் பெரியாரின் வாழ்க்கையை யும் இலட்சியத்தையும் கட்டாயம் அறிய வேண்டியது அவசியமாகும். இத்தகைய மாபெரும் தலைவர்களின் தத்துவங்களைப் புரிந்து கொண்டால் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமையாக கூறப் பட்டுள்ள பிரிவு 51ஏ(எச்) இல் வலியுறுத்தும், விஞ்ஞான மனப்பான்மையை மேம்படுத்துதல், மனித நேயம், எதையும் ஏன் எதற்கு என்று விசாரணைக்குட் படுத்துதல், சீர்திருத்தம் ஆகியவற்றை செம்மையாக பின்பற்றுவதற்கு உதவும்” – என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முறையான ஒப்புதலுக்குப் பிறகுதான் பெரியார் சிலை நிறுவப்பட் டுள்ளது. உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஆர்.எ°.எ°. நிறு வனரான கேசவ் பாலிராம் ஹெட் கேவர் சிலையை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். எனவே, இந்த “மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஒரு அரசியல் கட்சியால் தூண்டி விடப்பட்டுள்ளார். அந்த அரசியல் கட்சி வெளிப் படையாக இப்படி ஒரு வழக்கை தாக்கல் செய்து எதிர்ப்பை சான்றாதாரமாக பதிவு செய்ய விரும்ப வில்லை. அதற்கு பதிலாக இத்தகைய மனுதாரர் களுக்கு அழுத்தம் தந்து, சட்டத்தின் முன் நிற்க முடியாத காரணங்களைக் கூறி, வழக்கு தொடரச் செய்திருக்கிறார்கள். இந்த மனுவை இந்த நீதிமன்றத்தால் ஏற்க முடியாது” என்று நீதிபதி மேலும் கூறியுள்ளார்.

“பெரியார் மக்களிடம் எடுத்துரைத்த கருத்துகள் பற்றி, மனுதாரர், மனுவில் கூறியிருப்பது அவரது அறியாமையையே வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தை சீர்திருத்தி மாற்றியமைப்பதில் பெரியாரின் பங்களிப்பது எத்தகையது என்பது குறித்த புரிதல் மனுதாரருக்கு இல்லை. பெரியாரை ஏதோ ‘நாத்திக பரப்புரையாளர்’ என்று மட்டுமே முத்திரை குத்திட முடியாது. சாதிய ஒடுக்குமுறை, சமூக சமத்துவம், பெண்கள் விடுதலை போன்றவற்றில் பெரியார் முன் வைத்த சிந்தனைகள், சமகால இந்தியத் தலைவர்களின் கருத்துகளையும் மிஞ்சி நிற்கக்கூடியவை. பூலே, அம்பேத்கரைப்போல, அயோத்திதாசர், பெரியார் போன்ற மாமனிதர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத ஆழமான உண்மைகளைக் கண்டறிந்தவர் கள், உண்மையான கவலை கொண்டவர்கள். தங்கள் சுயசிந்தனைகளால் தங்கள் உடைமைகளை துறந்து சமுதாயத்துக்காக ஒப்படைத்துக் கொண் டவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூகம் அறியாமைச் சூழலில் மூழ்கிப் போய் அநீதிகளுக்கும் அவலங் களுக்கும் உள்ளாகிக் கிடந்ததைக் கண்டு, ஆழ்ந்த கவலை கொண்டு சமூக மாற்றத்துக்கு உழைத்தவர்கள் இந்த துயரங்களும் அநீதிகளுமே அவர்களை மிகக் கடுமையாக சிந்திக்க வைத்தது. எதைச் செய்தாவது மாற்றியாக வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வரத் தூண்டியது. இதேபோல் உலகம் முழுதும் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி விடுதலை பெற்றார்கள் என்று சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், செயல்படவும் முன் வந்தார்கள். ஒடுக்கப் பட்ட மக்களை போராடுவதற்கு அணி திரட்டி னார்கள். அதன் வழியாக அவர்களுக்கு இழைக்கப் படும் அவமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் அடையாளம் காண முடிந்தது. சாதிய சமூக அமைப் பின் அநீதிகளையும் அந்த அமைப்பு நீடிக்கும் வரை சந்திக்க வேண்டிய சவால்களையும் சமூகத்துக்கு உணர்த்தியவர்கள். இப்படி இந்து சமூக அமைப்பின் ஆணிவேர் வரைச் சென்று அசைத்துக் காட்டிய தலைவர்கள் அவர்கள். இதில் மக்களைக் கவர்ந்து இழுத்த பெரியாரின் பேச்சுகள், முதன்மையான பங் காற்றியது” என்று நீதிபதி சந்துரு குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் திரைப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான அமர்வு (இதில் நீதிபதி கே.சந்துருவும் உண்டு) அளித்த தீர்ப்பில், பெரியார் பற்றி சுட்டிக்காட்டிய பகுதிகளை நீதிபதி இத் தீர்ப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்.

“வாழ்நாள் முழுதும் பெரியார் ஈ.வெ.இராமசாமி தீண்டாமையை அகற்றவும், சாதி அமைப்பை ஒழித்துக் கட்டவும் பாடுபட்டார். சமூக நீதிப் போராளியாக நின்று, பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துகளுக்கும் சமூக புரட்சிக்கும் நாடு முழுதும் இயக்கம் நடத்தினார். ஒரு பகுத்தறிவாளர் என்ற முறையில் மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்தெடுத்தார். மூடநம்பிக்கைகளை கைவிடுமாறு வற்புறுத்தினார். அது வீணானது; ஆபத்தானது என்றார். 1926 இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்” என்று வ.கீதா, எ°.வி.ராஜதுரை எழுதிய நூலிலிருந்து பெரியார் திரைப்பட வழக்கில் நீதிமன்றம் சுட்டிக் காட்டியதை நீதிபதி சந்துரு பதிவு செய்துள்ளார்.

2010 இல் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத் தின் அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பையும் எடுத்துக் காட்டியுள்ளார். அனுமதி இல்லாமலே பொது இடத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப் பட்டது என்று தொடரப்பட்ட வழக்கில் அம்பேத் கரின் உயர்ந்த நிலையைக் கருதிப் பார்க்கும்போது, அந்த சிலையை இருக்குமிடத்திலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அத் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருந்தது.

சமூகக் கண்ணோட்டத்தில் பல புரட்சிகர தீர்ப்புகளை வழங்கி வரலாறு படைத்து வருகிறார் நீதிபதி சந்துரு. இந்தத் தீர்ப்பும் அந்த வரிசையில் மற்றொரு மணி மகுடமாக திகழுகிறது.

(குறிப்பு: காவேரிப்பாக்கத்தில் திராவிடர் கழகம் நிறுவியுள்ள பெரியார் சிலையை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கு இது. இதே நீதிபதி கே.சுந்துரு, ‘குடிஅரசு’ வழக்கில் அவர்களுக்கு எதிராக நியாயமான தீர்ப்பை வழங்கிய போது, “நீதிபதி உபதேசம் செய்கிறார்” என்று கடுமையாக தீர்ப்பை விமர்சித்தது, தி.க.வின் ‘விடுதலை’ ஏடு. அதே நீதிபதி தான் இப்போது பெரியாரைப் பற்றிய பெருமைகளோடு அக்கழகம் நிறுவிய பெரியார் சிலை வழக்கில் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.)

Tuesday, June 12, 2012

திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! _கொளத்தூர் மணி

திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.


திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘JUSTICE’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜ°டி° கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட இல்லாதிருந்த பெரியாரை, தன் தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகி யிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும், கவர்னரும் இருமுறையும், தானும் கூட அமைச் சரவையில் இருந்து பணியாற்றுகிறேன் என்று பெரியாரை அணுகிய இராஜாஜியும் சென்னை மாகாண அமைச்சரவையை தலைமையேற்று அமைக்கக் கேட்டும் மறுத்துவிட்டார். (வருங்கால முதல்வர் கனவோடு இன்று ஏராளமானோர் உலவும் இந்த தமிழ்நாட்டில்தான் இதுவும் நடந்திருக்கிறது ) தனது தலைமையில் 1925-இன் இறுதி முதல் சமூக இயக்கமாக இயங்கி வந்த சுயமரியாதை இயக்கம், 1939 இறுதி முதல் தனது தலைமைக்கு வந்துவிட்ட நீதிக்கட்சி என்ற இரண்டையும் இணைத்து, 27-8-1944 அன்று சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில், தேர்தலில் பங்கு பெறாத – அரசின் பட்டங்களைப் புறக்கணிக்கிற – மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக திராவிடர் கழகத்தை மாற்றியமைத்தார்திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட அன்று காலை அண்ணல்தங்கோ போன்றோர் தமிழர் கழகம் என்ற பெயரை முன்மொழிய அப்போது ஏற்று கொண்ட பெரியாரிடம் அன்று நண்பகலில் யாரோ “நீ கன்னடனாயிற்றே! தமிழர் கழகம் என்று பெயர் வைத்தால் நாளைக்கு நீயே கூட அவ்வமைப்பில் இருக்க முடியாதே!” என்று கூறியதைத் தொடர்ந்து அமைப்பின் பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாலையில் பெரியார் மாற்றிக்கொண்டார் என்ற புளுகு அண்மைக் காலங்களில் சிலரால் பரப்பி வரப்படுகிறது.’

அருகோ என்பவர், பெயர் மாற்ற நாளில் சத்திய மூர்த்தி அய்யர்தான் பெரியாருக்கு இந்த ஆலோ சனையைக் கூறியதாக எழுதினார். ஆனால் அந்த சத்தியமூர்த்தியோ 28-3-1943 ல் இறந்து போனவர். இதை ‘பெரியார் முழக்கம்’ ஏட்டில் தோழர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டிய பின், அது இராஜாஜி என்றும், பெரியாரோடு இருந்த சில பிற மொழியினர் என்றும் மாற்றி மாற்றி சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு எவ்வித ஆதாரங் களும் இல்லை. எனினும் ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்தால் அது மக்கள் மனதில் உண்மைச் செய்தியாகப் பதிந்துவிடும் என்ற, இட்லரின் செய்தித்துறை அமைச்சரான கோயபல்சின் செயல் திட்டத்தைப் பின்பற்ற முயற்சிக்கிறார்கள் போலும். அதன் தொடர்ச்சியாகவே மே 18 அன்று கோவையில் வெளியிடப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி ஆவணம்’

13-ஆம் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறது :

“……திராவிடர்கள், இராசாசி இந்தியைத் திணித்த போது, அதை எதிர்த்துத் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோர் தலைமையில் திரண்டபோது, அவர்களை ஆதரிக்கிறாற் போல் ஆதரித்து பின், தங்களுடைய, தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர்.”
திராவிடர் என்ற சொல் குறித்தும் மேற்கண்ட மேற்கோளில் உள்ள பிற செய்திகள் குறித்தும்கூட பின்னொரு வாய்ப்பில் விவாதிக்கலாம். தமிழர் கழகம் என்ற பெயரிடும் முயற்சியைத் தோற்கடித்து திராவிடர் கழகம் என்ற பெயரை அவ்வமைப்புக்கு சூட்டிக்கொண்டனர் என்று கூறியுள்ளதற்கு மட்டும் இப்போது விளக்கம் தர விரும்புகிறோம்.

பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எதிராகத்தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அது ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Federation) என்ற அமைப்பாக மலர்ந்தது. அது கூட அரசியலிலும், அரசுப் பணிகளிலும் பார்ப் பனர்கள் தங்கள் மக்கள் தொகை விகிதாச் சாரத்துக்கு அதிகமாக மிகப்பெரிய அளவில் வகித்து வந்த பதவிகளை மட்டுமே பார்ப்பன ஆதிக்கம் என்பதாக வரையறுத்துக்கொண்டு இயங்கியது. ஆனால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அவற்றைவிட சமுதாயத்தில் இந்துமதம், வேதம், சா°திரம், புராணம் என்ற பொய்மைகளின் துணையோடு பார்ப்பனர்கள் வகித்து வந்த சமூக மேலாதிக்கமே மற்றைய ஆதிக்கங்களுக்கான தோற்றுவாய் என்பதை உணர்ந்து சமூக மேலாதிக்கத்தின் மீதான போரை நடத்தி வந்தது. அவ்வாறு ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்று மூன்று விழுக்காட்டினராக வாழும் பார்ப் பனர்களை வைத்து தொண்ணூற்றேழு விழுக்காட்டு மக்களைக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்றும், எதிர்மறைச் சுட்டாக உள்ள ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற சொல்லுக்கு மாற்றாக, இந்திப் போராட்ட சிறைவாச விடுதலைக்கு பின் 1939 மே மதம் முதல், உடன்பாட்டு சுட்டாக ‘திராவிடர்’ என்ற அடை யாளத்தை முன்வைத்துச் செயல்படத் தொடங் கினார்.

பெரியாரே பின்னர் 9-12-1944 குடிஅரசில் வெளியான சொற்பொழிவொன்றில்……

“நாம் ‘ இந்தியர் ’ என்பதை மறுக்கிறபடியாலும், இன உணர்ச்சியும் எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘ திராவிடர் ’ என்னும் பெயரைக் கொண்டோம் ! இது புதிதாக உண்டாக்கியதல்ல. மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பன ரல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதை சேர்க்க நாமென்ன நாடோடிகளா ? நாம் ஏன் அல்லாதாவராக இருக்க வேண்டும்? சிலர் திராவிடன் என்பது வட மொழி என்பார்கள். அதைப் பற்றி கவலையோ ஆராய்ச்சியோ தேவை இல்லை. ‘ காபி ’ ஆங்கிலச் சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கிறானா? மேலும் நமக்கு திராவிடர் என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனரல்லாதார் என்பதா? பார்ப்பனரல்லாதார் என்று கூறிக்கொள்ளும் “ஜ°டி°” கட்சிக்காரர்கள் எந்த வகையிலே பார்ப்பனரிலிருந்து வேறுபடு கிறார்கள்? நடை உடை பாவனையில், மதத்துறையில், வேஷத்தில் பார்ப்பானை விட இரண்டு மடங்காக அல்லவா இருக்கிறார்கள்! இந்த பார்ப்பனரல்லாதார் வீட்டுக் கலியாணம், கருமாதி, சாந்தி முகூர்த்தம், திவசம், பூஜை எல்லாம் பார்ப்பான் இல்லா விட்டால் ஆகாது; உத்தியோகத்தில் – தேர்தலில் மட்டும் பார்ப்பானுடன் போட்டி போட வேண்டும் என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள்?” … எனக் குறிப்பிடுகிறார்

பெரியாரால் விமர்சனத்தோடு மதிப்பிடப்பட் டுள்ள நீதிக் கட்சியின் மூல அமைப்பாக 1912ல் தொடங்கப்பட்ட ‘சென்னை ஐக்கிய சங்கம்’ அதன் முதலாம் ஆண்டு நிறைவில் “சென்னை திராவிடர் சங்கம்” என்றே பெயர் மாற்றம் பெற்றது. அதன் சார்பாக பார்ப்பனரல்லாத மாணவர்கள் சென்னை கல்லூரியில் படிக்க ஏதுவாக டாக்டர் நடேசனார் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டமாணவர் விடுதி ‘ திராவிடர் இல்லம் ’ (Dravidan House) என்றே பெயர் பெற்றது. அதுமட்டுமல்ல, 1916 ல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (நீதிக்கட்சி) கிளைகள் ‘இராயப்பேட்டை திராவிடர் சங்கம்’ ‘ஜார்ஜ் டவுன் திராவிடர் சங்கம்’ என்ற திராவிடப் பெயர்களிலேயே தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக 1892 ல் அயோத்திதாசப் பண்டிதரால் உருவாக்கப்பட்ட ஆதி திராவிட மகாஜன சபை
1894 இல் ‘திராவிட மகாஜன சபை’ என்ற பெயர் மாற்றம் பெற்றிருந்தது.

மேலும் 6-6-1927 அன்று கோவில்பட்டியில், சுவாமி விருதை சிவஞானயோகியாரால் தொடங்கி நடத்தப்பட்டு வந்த ‘திராவிடர் கழக’ த்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பெரியார் தலைமை தாங்கி ஆற்றிய உரை 26-6-1927 ‘குடிஅரசு’ இதழில் வெளியாகியுள்ளது. அவ்வுரையில் -

“….. சுவாமி சிவஞானயோகிகள் காலத்தில் மாத்திரம் இம்மாதிரி முயற்சிகள் தோன்றிற்று என்று நினைக்கிறீர்களா? என்று இந்த நாட்டில் ஆரியர்கள் கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர் – திராவிடர் என்கிற வேற்றுமையும், ஆரியர் சங்கம் – திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமரியாதைக் கிளர்ச்சிகளும் இந்த நாட்டில் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது” என்று கூறியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகும்.

இவ்வாறு தமிழ்நாட்டு அரசியல் வெளியில் ‘திராவிடர்’ என்ற குறிப்போடு பல்வேறு அமைப்புகள் இயங்கியே வந்துள்ளன என்றாலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளதை போல, 1939 மே மாதம் பெரியார் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் தனது அமைப்பிலும் ‘திராவிடர்’ என்ற அடையாளச் சொல்லோடு சில துணை அமைப்புகளை உருவாக்கியுள்ளார்.
1939 நவம்பர் இரண்டாம் நாள் சிறையிலிருந்து விடுதலையான பெரியாரின் சகோதரர் ஈ.வெ. கிருஷ்ணசாமி ஈரோட்டில் – “ஆரிய திராவிட ஆராய்ச்சிப் பள்ளி”யைத் தொடங்குகிறார். 1939 நவம்பர் 24 ஆம் நாளன்று ஈரோட்டில் ‘திராவிட நடிகர் சங்கம்’ உருவாகிறது. திராவிடர் மாணவர் கழகமும் உருவாகிறது. கோவையில் 19-11-1943 அன்று நடந்த ‘சந்திரோதயம்’ நாடகத்துக்கு வந்திருந்த பெரியாருக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத்தார் வரவேற்புத்தாள் வாசித்தளித்துள்ளனர். (குடி அரசு – 18-12-1943) 26-11-1943 அன்று சேலம் தேவங்கர் பள்ளிக்கூடத்தில் பெரியார் தலைமையில் நடந்த ஜ°டி° கட்சி நிர்வாகக் கூட்டத்தில் இரண்டாவது தீர்மானமாக ‘ஜ°டி° கட்சிக்கு (ளு.ஐ.டு.கு) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரை “தென்னிந்திய திராவிடர் கழகம்” என்றும் ஆங்கிலத்தில் “South Indian
Dravidian Federation” என்றும் பெயர் திருத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது (குடிஅரசு – 4-12-1943) 16-1-1944 அன்று சேலம் செவ்வாய்பேட்டை திராவிடர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை “திராவிடர் கழகம் – பெயர்க் காரணம்” என்ற தலைப்பில் 12-2-1944 ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில் வெளிவந்துள்ளது.

6-2-1944 அன்று புவனகிரியில் திராவிடர் கழக ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு பெரியார் ஆற்றிய உரை, “எதற்காக திராவிடர் கழகம் என்ற பெயர் கொடுக்கிறோம்? ” என்ற தலைப்பில் 12-2-1944-ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில் வெளிவந்துள்ளது.

24-4-1944 அன்று திண்டிவனம் திருவள்ளுவர் தமிழ்க் கழக விழாவில் உரையாற்றிய சொற்பொழிவாளர் குறள் வீ. முனுசாமி அவர்களுக்கு திண்டிவனம் நகர திராவிடர் கழகம் வரவேற்பு வாசித்தளித்த செய்தி 20-5-1944 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்துள்ளது. டி.கே எ° நாடகக் கம்பெனியிலிருந்து வெளியேற்றப் பட்ட இயக்க நண்பர் தோழர் நடிகர் டி.வி.நாராயண சாமிக்கு 18-2-1944 அன்று ஈரோடு டவுன் எலி மெண்டரி பாடசாலையில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் ஈரோடு திராவிடர் கழகத்தார் ஒரு வெள்ளிக் கோப்பையை பரிசளித்த செய்தி 4-3-1944 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் வெளி வந்துள்ளது.

13-2-1944 அன்று சென்னை சவுந்தர்யம் மகாலில் நடைபெற்ற சென்னை ஜில்லா நீதிக்கட்சி மாநாட்டில் “தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதை ‘சென்னை மாகாண திராவிடர் கட்சி’ என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப் போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளதை 26-2-1944 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ ஏடு தெரிவிக்கிறது. 20-2-1944 அன்று திருச்சி நகராண்மைக் கழக பொதுமன்றத்தில் திருவொற்றியூர் சண்முகம் அவர்கள் தலைமையில் ‘அண்ணா’ கொடி யேற்றி வைக்க, பெரியார் நிறைவுரை ஆற்றிய திருச்சி மாவட்ட நீதிக்கட்சியின் 15 ஆம் மாவட்ட மாநாட்டில் “அண்மையில் சேலத்தில் நடக்க விருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் ‘திராவிடர் கழகம் ’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது” என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இவற்றிலிருந்து சேலத்தில் 27-8-1944 இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரோடு பல அமைப்புகள் இயங்கி வந்ததையும், சேலத்தில் நடைபெறுவதாக இருந்த மாகாண மாநாட்டில் நீதிக்கட்சியின் (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) பெயரை “திராவிடர் கழகம்” என மாற்ற வேண்டுமென நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுவும் பல்வேறு மாவட்டக் குழுக்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில்தான் 27-8-1944 அன்று சேலத்தில் மாநாடு கூடியது. ‘சேலம் மாநாடு’ என்ற தலைப்பில் 5-8-1944 ஆம் நாளிடப்பட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார். அத்தலையங்கத்தில் 20-8-1944 ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெறப் போவதாகவே பெரியார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது பின்னர் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு 27-8-1944 அன்றுதான் நடந்தது) அத்தலையங்கத் தின் மூன்றாவது பத்தியில் “மாநாட்டில் இரண்டு மூன்று விஷயங்கள் முக்கியமாக சிந்திக்க வேண்டியவைகளாக இருக்கும். திராவிட நாட்டு பிரிவினையை வலியுறுத்தி அதற்காகக் கிளர்ச்சி செய்தல், கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல், கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி விவாதித்து வலியுறுத்தி அவைகளை அவசியம் நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தல் ஆகியவைகள் முக்கிய மானவைகளாக இருப்பதோடு மற்றும் சில விஷயங்களும் இடம் பெறும் என்றே நினைக்கிறோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் தலையங்கத்திலும் -
“… ஆகவே, கீழ்க்கண்ட கொள்கைகளை ஆதரிக்கும் திராவிட மக்கள், ஆண் பெண் இளைஞர் ஒவ்வொருவரும் தவறாமல் அவசியம் சேலம் மாநாட்டிற்குச் சென்று, நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம் , நமக்கு வேண்டியது திராவிடநாடு என்பனவாகிய கொள்கைகளுக்கு…” என்பதாக குறிப்பிட்டுள்ளதோடு,… “ஓங்குக திராவிடர் கழகம் ! தோன்றுக திராவிட நாடு !! வாழ்க திராவிடர் !!! ” என்ற சொற்களோடு முடிக்கிறார்.

அவ்வாறே 19-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் துணைத் தலையங்கத்தில் -
“…20-8-1944 ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சேலம் மாநாடு 27-8-1944 ஆம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டுவிட்டது. 27ஆம் தேதியில் அவசியம் நடக்கும். ஏராளமான மக்கள் பிரதிநிதிகளாய் வந்து பெருத்த உற்சாகத்துடன் ஏகமனதாய் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்து உடனே கிளர்ச்சி துவங்க வசதியையும் எழுச்சியையும் உண்டாக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. மாநாட்டில் வரும் தீர்மானங்களில் ‘திராவிடர் கழகம்’ ‘திராவிட நாடு’ என்ற தீர்மானங்களோடு தோழர்கள் பாண்டியன், அண்ணாதுரை ஆகியவர்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்கள்…” என்பதாக எழுதப்பட் டுள்ளது.


இவ்வாறாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டுக்கு முன்னதாகவே இரண்டு ஆண்டு காலமாக தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரோடு அமைப்புகள் இயங்கி வந்த நிலையிலும், அக்கால கட்டங்களில் உரையாற்றிய பெரியார் “திராவிடர் கழகப் பெயர்க் காரணம்”- “எதற்காக திராவிடர்கழகம் என்ற பெயர் கொடுக்கிறோம்” – என்ற தலைப்பில் உரையாற்றி வந்துள்ள நிலையிலும், 27-8-1944 அன்று சேலம் மாநாடு நடப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக 5-8-1944 அன்று அவர் குடிஅரசில் எழுதியுள்ள தலையங்கத்தில் எழுதியுள்ள மாநாட்டு விவாதப் பொருள் களில் ஒன்றாக “கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல்” என்பதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள நிலையிலும், அடுத்தடுத்து 12.8.1944, 19.8.1944 ஆகிய இரண்டு இதழ்களிலும் தலையங்கம், துணைத் தலையங்கங்களில் திராவிடர் கழகப் பெயர் மாற்றம் பற்றி குறிப்பிட்டிருந்த நிலையிலும், அண்ணல்தங்கோ போன்றோர் காலையில் கட்சியின் பெயரை ‘தமிழர் கழகம்’ என்று மாற்றி அமைக்க முன்மொழிந்ததை ஏற்றுக்கொண்ட பெரியார், மாலையில் அது அவருக்கே ஆபத்தாகி விடும் என்பதால்தான் கட்சியின் பெயரைத் தந்திரமாக “திராவிடர் கழகம்” என்று மாற்றி வைத்துக் கொண்டார் என்ற கருத்தைப் பரப்புவது எவ்வளவு விஷமத்தனமானது என்பதையும், அது ஒரு தரம் தாழ்ந்த, திட்டமிட்ட பொய்யே என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும், அப் பொய்யர்களும் இந்தப் புளுகை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுமே நமது விருப்பம், விண்ணப்பம்.


கொளத்தூர் மணி,

தலைவர், பெரியார் திராவிடர் கழகம்.


Wednesday, June 6, 2012

‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கைஅனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை.

இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன.

சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட சட்டக் கடமைகளை ஆற்ற முடியாமல் தடுக்கப் படுதல்; இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடுகள், இரட்டை வாழ்விடங்கள் என்ற ஜனநாயக விரோத ஜாதிய முரண்பாடுகள் எண்ணிலடங்காமல் கிடக் கின்றன.

அரசியல், பொருளியல் தளங்களிலோ பற்பல பின்னடைவுகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போராடி பெறப்பட்ட தொழிலாளர் உரிமைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் புறந் தள்ளப்படுவது, எட்டு மணி நேர வேலை என்ற சட்டபூர்வ உரிமையைப் பறித்து பத்துமணி நேரத்துக்கு மேலாகக்கூட வேலை வாங்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகளை மனதில் கொண்டே தீட்டப்படும் திட்டங்கள், ஊழல் மயமாகிப்போன அரசு இயந்திரங்கள்; தன்னளவில் முழுமை பெற்றிருந்த உள்ளூர் உற்பத்தி முறைகள் அழிக்கப்படுதல்; சிறு தொழில்கள் – வளர்ந்துவரும் வறுமை, தேய்ந்து வரும் கிராமப் பொருளாதாரம், சாவதே மேல் என எண்ண வைக்கும் விவசாயம் என ஏராள சிக்கல்கள் நிலவி வருகின்றன.

ஆனால், இவை எவற்றையும்விட தமிழ்நாட்டு அரசியல் தளங்களில் – நுண்ணரசியல் தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது – மாற்றப்பட்டிருப்பது “திராவிடர் – திராவிடம்” என்ற சொற்களே ஆகும்.

அதுவும் இச்சொற்களே ஈழத்தில் நடந்த பேரழிவுக்கும், இங்கு தமிழ்நாட்டில் நிலவும் எல்லா சிக்கல்களுக்கும் காரணம், இச்சொற்களை மக்கள் சிந்தனையில் இருந்தே அகற்றாவிட்டால் உய்யும் வழியே இல்லை என்பதுபோலப் பேசப்படுகின்றன; எழுதப்படுகின்றன; கருத்துப் பரப்பல் நடக்கின்றன.

இச்சொற்கள் மட்டுமல்ல; பெரியார் என்ற மனிதன் – பெரியாரியல் என்ற கருத்தியல் தமிழர் களிடம் ஏற்படுத்திய சிந்தனை தாக்கம்தான் தமிழர் வீழ்ச்சிக்கே காரணம் என்று உளம் வருந்தி பாவ மன்னிப்புக் கோரி சில முன்னாள் பெரியாரியர்களும் தூய ‘தமிழர்’ ஏடுகளில் எழுதுகிறார்கள்.

ஆக, பார்ப்பனியத்தையும், செயற்கை இந்திய தேசியத்தையும், பன்னாட்டு சுரண்டலையும்விட கொடூரமானதாக திராவிடர் – திராவிடம் ஆகியவைக் காட்டப்படுகின்றன.

எப்போதும் இதையே பேசிக் கொண்டிருந்த ம.பொ.சி., குணா போன்றோரோடு,

பெரியாருக்குத் தமிழ்த் தேசத்தின் தந்தை என்று முன்னர் பட்டம் சூட்டிய ‘தமிழ்த் தேச’ப் பொதுவுடைமைக் கட்சி -

தனது கட்சியின் ஆவணப்படி (பக்கம் 39) “நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகை முரண் வகையிலும் எச்சரிக்கையோடும், விழிப்போடும் கையாளப்பட வேண்டிய” தரப்பினரைச் சேர்ந்த சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி -

“நாம் தமிழ்த் தேசிய மக்களே திராவிடர்கள் அல்லர்” எனக் கூறும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் -

போன்றவை இப்போது புதிதாக இந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன.

எனவே இந்த வேளையில் நாமும் இது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.

முதலில் ஒருவரை அடையாளப்படுத்துதல் குறித்துப் பேசுவோம்.

எந்த ஒரு மனிதருக்கும் ஒற்றை அடையாளம் மட்டுமே இருந்துவிட முடியாது. உலகில் நிலவும் எல்லா அடையாளங்களும், உறவுகளும் கற்பியல் கோட்பாட்டுக்கு உட்பட்டவையே.

தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் அய்ரோப்பியர் ஒருவரோடு நின்றால் கருப்பர்; ஆப்பிரிக்கர் ஒருவரோடு சேர்ந்து நின்றால் கருப்பர் அல்லர். ஒருவரே கருப்பராயும், கருப்பர் அல்லாதவராயும் இருப்பார். ஆனால் இரண்டும் உண்மையே.

ஒருவர், அமெரிக்காவில் வாழ்ந்தால் ஆசிய அமெரிக்கர்; இங்கிலாந்தில் வாழ்ந்தால் பிரிட்டிஷ் ஆசியன்.

அவரே இந்தியத் துணைக் கண்டத்தில் டெல்லி யில், பீகாரில், வங்காளத்தில் வாழ்ந்தால் தமிழ்நாட்டுக்காரர்.

அவரே தமிழ்நாட்டில் சென்னையில் வசித்தால் அவர் தஞ்சைக்காரர், சேலத்துக்காரர், மதுரைக்காரர் நெல்லைக்காரர். அவரே நெல்லை நகரில் வாழ்ந்தால் தென்காசிக்காரர், புளியங்குடிக்காரர், சங்கரன்கோயில்காரர்.

தன் சொந்த ஊரிலேயே உள்ளபோது மேல் தெருக்காரர், தெற்குத் தெருக்காரர்… என்றவாறு இருக்கும் இடம் சார்ந்தும் அவரது சொந்த இடத்தைக் குறிக்கும் சொற்கள் வெவ்வேறாக இருக் கும். என்றாலும் அவை அனைத்தும் உண்மையே.

ஒருவர் தொழிற்சாலையில் இருந்தால் அவரது அடையாளம் தொழிலாளி, மேலாளர், நேரக் கண்காணிப்பாளர் – வீட்டில் இருந்தால் அவரது அடையாளம் அவை அல்ல.

வீட்டிலும்கூட ஒருவரது அடையாளம் ஒன்றாகவே இருப்பதில்லை; இருக்க முடியாது. அதுவும் சார்பு அடையாளமாகத்தான் இருக்க முடியும்.

தாயோடு தந்தையோடு இருக்கும்போது மகன், மகள் எனப்படுவார்.

தன் குழந்தைகளோடு இருக்கும்போது தாய், தந்தை எனப்படுவார்.

சொந்த வீட்டுக்குள் இருக்கும்போதுகூட ஒருவரை அடையாளப்படுத்தும் சொற்கள் வேறு வேறாகவே இருக்கின்றன.
ஒருவர்தான் நிற்கும் திசையைக்கூட யாரோடு பேசுகிறாரோ, அவர் இருக்கும் இடம் சார்ந்தே கிழக்கில், மேற்கில், தெற்கில், வடக்கில் இருப்பதாகக் கூறிக் கொள்ள முடியும்.

இருவேறு திசைகளில் உள்ளவர்களோடு ஒரே சமயத்தில் தொடர்பு கொண்டால் அவர்கள் இரு வரிடமும் தான் வெவ்வேறு திசைகளில் இருப்பதாக ஒருவர் கூறுவார். இரண்டும் நேர் எதிர் திசையாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் உண்மையே.

எனவே, எவர் ஒருவரையும் இருக்கும் இடமானா லும், இருக்கும் திசையானாலும், உறவு முறையே ஆனாலும் ஒற்றைச் சொல்லால் மட்டுமே அடையாளப்படுத்திவிட முடியாது.

இடம் விட்டு நகராமல் இருக்கும் ஒருவரைச் சந்திக்க பலர் வரலாம். ஒவ்வொருவருக்கும் அவர் வெவ்வேறு அடையாளச் சொற்களாலேயே அறியப்படுவர்.

ஒருவருக்கு நண்பர்; இன்னொருவருக்கு எதிரி; மற்றொருவருக்கு கடன்காரர்; இன்னொருவருக்கு வாடிக்கையாளர்; ஒருவருக்கு விற்பனையாளர்; இன்னொருவருக்கு முகவர், என்றிவ்வாறு எண்ணிலா அடையாளங்கள்.

அடுத்து கூட்டு அடையாளச் சொல் அணியாய் திரட்டப்பட்டு நிற்கும் போதாவது ஒற்றைச் சொல்லால் கூறிவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது.

தொழிற்சாலையில் உரிமைக்காக அணி திரண்டால் தொழிற்சங்கம் -

சாதிக்காரனோடு சண்டைக்கு அணி திரண்டால் சாதிச் சங்கம் -

சொந்த ஊர்க்காரனோடு கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதிக்கென அணி திரண்டு நின்றால் குடி மக்கள் குழு.
எனவே, தனி மனிதராக மட்டுமல்ல, கூட்டமாக அணி திரண்டு நின்றாலும் ஒற்றைச் சொல் அடையாளத்தோடு அணி திரட்ட முடியாது.

ஒரு பள்ளி வகுப்பறைக்குள் பல ஆசிரியர்கள் வருவார்கள்.

ஒரு ஆசிரியர் பாடத் தெரிந்தவர்கள் எல்லாம் இந்தப் பக்கம் வா; மற்றவர்கள் அந்தப் பக்கம் போ என்பார் – அவர் நாடகத்துக்கு தேர்வு செய்ய வந்தவர்.

அடுத்துவரும் ஒரு ஆசிரியர் உயரமானவர் எல்லாம் இந்தப் பக்கம் வா என்பார் – அவர் கூடைப் பந்து விளையாட்டுக்கு பயிற்சிக் கொடுக்க வந்தவர்.

மற்றொரு ஆசிரியர் வருவார்; ஆண்களெல்லாம் இந்தப் பக்கம் வா, பெண்களெல்லாம் அந்தப் பக்கம் போ என்பார் – சான்றிதழில் உள்ள அடையாளங்களைப் பதிவுசெய்ய ஆண், பெண் ஆசிரியர்களிடம் அனுப்பி வைக்க வந்தவர் அவர்.

இன்னொரு ஆசிரியர் வருவார். ஆங்கிலத்தை இரண்டாம் பாடமாய் எடுத்தவர்கள் இந்தப் பக்கம் வா; பிரஞ்சு மொழியை எடுத்தவர்கள் அந்தப் பக்கம் போ என்பார் – அவர் இலவசப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வந்தவர்.

என்றிவ்வாறு ஒரே வகுப்புக்குள் நுழையும் வெவ்வேறு ஆசிரியர்கள், வெவ்வேறு வகையாக அணி பிரிகிறார்கள். காரணம், அவர்களுக்கு வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதே.

அப்படித்தான் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கென அணி பிரிப்பதும் கூட ஒரு வகையாய் இருக்க முடியாது.

தொழிலாளர் உரிமைகளுக்குப் போராடும் அமைப்புகள் தொழிலாளி – முதலாளி என பிரித்துக் காட்டும்; போராடும்.
(ஆனால், கோரிக்கைகள் வெவ்வேறாக இருந்தால் தொழிலாளர்களும்கூட உடலுழைப்புத் தொழிலாளர்கள், நிர்வாகத் துறை ஊழியர்கள் என பிரிக்க வேண்டியும் வரும்)

தலித் விடுதலைக்குப் போராடுவோர் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்படும் சாதியினர் என்றுதான் பிரித்துப் பார்ப்பர்.
ஏரி, குள நீர்ப் பாசனம் பெறுவோர் அடிமடை விவசாயிகள், கடைமடை விவசாயிகள் என்று பிரிந்து நின்றே நீர் முறைப் பற்றிப் போராடுவர்.

சுற்றுச் சூழலுக்குப் போராடுவோர், மாசுபடுத்து வோர், மாசுகளைத் தடுக்க விரும்புவோர் என்றே பிரிந்து நிற்க முடியும்.
கிராமத்துக்குள் மோதல்கூட இந்த மதத்துக்காரர், அந்த மதத்துக்காரர்; இந்த சாதிக்காரர், அந்த சாதிக்காரர், இந்த தெருக்காரர், அந்த தெருக்காரர் என மோதலின் காரணத்தால் வெவ்வேறு வகையாக பிரிந்து நிற்பர்.

மேற்சொன்ன அணிப் பிரிவினைகளின் தரப் பினர் ஒரு நோக்கத்துக்காக ஒரு அணியில் இருப்பவர், வேறு நோக்கத்துக்காக மற்றொரு அணியில் இருக்க நேரிடும்.

அதாவது, ஒரு நோக்கத்துக்காக ஓரணியில் இருப்பவர்கள், வேறொரு நோக்கத்துக்காக எதிர் எதிர் அணிகளில் இருக்க நேரிடும்.

ஆக, நமக்கான ஒற்றை அடையாளங்கள் என்பது எதுவும் இல்லை. அனைத்தும் சார்பு அடை யாளங்களே. நாம் அணி பிரிவதும் / பிரிப்பதும் தேவைகளை ஒட்டியே!

எனவே நாம் தமிழ்த் தேசிய மக்களே; திராவிடர் அல்லர் என்பது சரியானதல்ல. ஒரே நேரத்தில் ஒரே நபருக்கு இரண்டு அடையாளங்கள் இருக்க முடியும்.

தொழிற்சங்கப் போராட்டத்தின்போது தொழி லாளராகத் தானே அடையாளப்படுத்த முடியும். அங்கு நாம் தமிழ்த் தேசிய மக்களே, தொழிலாளர் அல்ல என்று கூறுவது எப்படி சரியில்லையோ, அப்படித்தான் மேலே சொல்லப்படுவதும்.
இவற்றை மனதில் கொண்டுதான் தமிழர் / அல்லாதோர்; ஆரியர் / திராவிடர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் விடுதலை என்று வருகிறபோது, “தமிழ்நாடு தமிழருக்கே” என ‘தமிழர்’ அடை யாளத்தை முன் வைத்த பெரியார், சமூக விடுதலை, பண்பாட்டு விடுதலை என்று வருகிறபோது அடிமைப்படுத்தும் ஆரியப் (பார்ப்பன) பண்பாட் டில் அல்லலுறும் அனைத்து பார்ப்பனரல்லாத மக்களை மீட்க ஆரியரின் எதிர் அடையாளமாக ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை முன் வைத்தார்.

‘திராவிடர்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பதை அறிந்தே பெரியார் அச்சொல்லைப் பயன்படுத்தினாரே அன்றி அறியாமல் அல்ல. ஒரு சொல்லுக்கு சமுதாயம் புரிந்து கொண்டுள்ள பொருளை மனதில் கொண்டு அதைப் பயன்படுத்தினவரேயன்றி, ‘அகராதி’யோ சங்க நூல்களையோ புரட்டிப் பொருள் பார்த்து அல்ல.

‘சமூக நீதி’ என்பது தமிழல்ல என்றாலும் அச்சொல்தான் புழக்கத்தில் உள்ளதே தவிர ‘குமுக நயன்மை’ என்ற தமிழ்ச் சொல்லை யாரும் பயன்படுத்துவதில்லையே! சொல்லுக்குள் நுழைந்து கொண்டு விளையாடும் வீண் வேலைகள் எப்போதும் பெரியாரிடம் இருந்தது இல்லை.

பல வேளைகளில் ஒரு கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படுகிறது. திராவிடர் என்று தமிழர்களில் சிலர்தான் கூறுகிறார்களேயொழிய தெலுங்கரோ, கன்னடரோ, மலையாளியோ அவ்வாறு தன்னைக் கூறிக் கொள்வதில்லையே என்பதே அது.

திராவிடர் என்ற சொல், தமிழர் என்பதை சரியாக உச்சரிக்கத் தெரியாத / முடியாத வடமொழி யாளர்களால் உண்டாக்கப்பட்டதே அந்தச் சொல் என்று கூறுகிறார்கள். படி என்பதை பிரதி எனவும், மெதுவாக என்பதை மிருதுவாக எனவும், மதங்கம் என்பதை மிருதங்கம் எனவும் உச்சரித்ததைப் போன்றே தமிழர் என்பதை திரமிளர் என்று விளக்கப்படுகிறது.

அவ்வாறாயின், திராவிடர் என்பது தமிழர் என்பதன் திரிந்த வடிவமே. தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவத்தை எப்படி தமிழரல்லாத பிறமொழியினர் தம்மைக் குறிக்கப் பயன்படுத்துவர் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? இருப்பினும் ஆந்திராவில்தான் திராவிட மொழிகளின் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. மைசூரில் இயங்கும் மொழிகள் ஆய்வு மையம் திராவிட மொழிகளை ஆய்வு செய்வதாகத்தான் அறிவித்துக் கொள்கிறது.

இது ஒருபுறம் இருக்க, பெரியார், திராவிடர் என்ற சொல்லை பார்ப்பனரல்லாத அனைவரையும் பார்ப்பனர் ஆரியப் பண்பாட்டால் இழிவுபடுத்தப் பட்டு, அடிமைப்பட்டுக் கிடக்கிற அனைவரையும் குறிப்பதற்கும், ஆரியத்துக்கு எதிராக அணி திரட்டு வதற்கும் அடையாளச் சொல்லாய் பயன் படுத்தினாரோ அன்றி சகோதர மொழிகளைப் பேசுகிற தெலுங்கர், கன்னடர், மலையாளிகளோடு இணைவதற்கல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? ‘தமிழர்’ என்று சொன்னால் போதாதா என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

திராவிடர் என்றால் பார்ப்பான் நுழைய மாட்டான் என்று கூறுகிறீர்களே திராவிட இயக்கமான அ.தி.மு.க.வில் ஆரிய (பார்ப்பன)ப் பெண் தானே தலைவராக உள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

மருத்துவர் இராமதா° போன்றவர்கள் திராவிடர் என்று சொல்லைப் பயன்படுத்தவில்லையே. அதைப் பயன்படுத்தாமலேயே பா.ம.க.வில் பார்ப்பனர்கள் இல்லையே என்ற இன்னொரு வாதமும் வைக் கின்றார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை திராவிடர் இயக்கங்கள் இல்லை. அவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. ஆரிய எதிர்ப்புச் சொல்லான மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் திராவிடர் என்பதை கைவிட்டு விட்டு மண்ணை, நிலப் பகுதியைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற வடநாட்டு எதிர்ப்புச் சொல்லால் குறிக்கப்படும் கட்சிகள் அவை.

பாட்டாளி மக்கள் கட்சியில் பார்ப்பான் என்ற இரத்தமும் சதையுமாய் உள்ள பார்ப்பன மாந்தர்கள் உள் நுழையவில்லை என்பதுகூட உண்மையாய் இருக்கலாம். ஆனால், சாதியம் என்ற பார்ப்பனர் கருத்தியலில் ஊன்றி நிற்கும் கட்சியாகத்தானே அது உள்ளது.

திராவிடர் என்ற சொல், பார்ப்பன – ஆரியப் பண்பாட்டின் எதிர்க் குறியீட்டுச் சொல் மட்டுமல்ல, பார்ப்பன – ஆரியப் பண்பாட்டுக்கு எதிராக – ஆரிய, சாதிய, இந்தியத்தின் அனைத்து வகை ஆதிக்கங் களுக்கு எதிராக – போராடி, போராடி அவற்றிலிருந்து விடுபடவும் அணி திரட்டலுக்கான சொல்லாகும்.

திராவிடர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவம் என்ற சொல்லாராய்ச்சியோடு நிறுத்திக் கொள்பவர்களிடம் நமக்கு ஒரு கேள்வி உள்ளது. மொழியடிப்படையில் பார்ப்பனரை நம்மவரே என்ற கருதச் செய்யும் போக்கு அவ்வாதத்துள் புதைந்து கிடப்பது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தெரிந்தும் யாரோ சில பார்ப்பனர் நட்புக்காக – தயவுக்காக அதை மறைக்கிறீர்களா?

முதலாவதாக, கருப்பாயி, கருத்தம்மா என்ற தமிழ்ச் சொற்களின் வடமொழி சொற்களான சியாமளா, நீலா என்ற பெயர்களையும், கார் வண்ணன், இருளப்பன் என்று பொருள்படும் சியாமள வர்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்களைத் தயக்கமில்லாமல் தங்களைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாக பயன்படுத்தும் பார்ப்பனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதேபோல் தமிழர் என்ற சொல்லின் வடமொழி சொல்லாக மட்டுமே உங்களால் கூறப்படும் திராவிடர் என்ற சொல்லால் தன்னை அடையாளப்படுத்த முன் வரும் ஒரு பார்ப்பனரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள்கூட வேண்டாம், தமிழின் திரிந்த வடிவங்களான தெலுங்கு, கன்னட மொழி பேசும் ஒரு பார்ப்பனராவது தமிழின் திரிந்த வடிவமான திராவிடர் என்ற சொல்லால் தன்னைக் குறிப்பிட ஒப்புக் கொள்வாரா? எனவேதான் நாம் வீழ்த்த விரும்பும் பண்பாட்டு ஆதிக்கமான பார்ப்பனியத்தை எதிர்க்க ‘திராவிடர்’ என்ற எதிர் அடையாளத்தை ஏற்றாக வேண்டும் என்பதையாவது உணர்கிறீர்களா? இல்லையா?

மேலும் – பார்ப்பனியத்தைக் கைவிட்டுவிட்ட, பார்ப்பனர்களைகூட பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கங்களில் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்ற இனவாதம், சாதிய வாதம் புரிகிறீர்கள் என்ற கேள்வி எழுப்புபவர்களிடமும் எமக்கொரு கேள்வி இருக்கிறது.

பவுத்தம் போன்ற பார்ப்ன எதிர்ப்பு நெறிகளைக் கூட உள் நுழைந்து சீர்குலைத்த பார்ப்பனர்களை பற்றிய வரலாற்று புரிதலால் வந்த எச்சரிக்கை உணர்வு ஒரு காரணம். பல்லைப் பிடுங்கி விட்டாவது பாம்பை படுக்கையில் போட்டு கொஞ்ச வேண்டும் என்ற ஆசை ஏனோ என்பார் குத்தூசி குருசாமி.

பார்ப்பனியம் கொடுமையானது – எதிர்க்கப்பட வேண்டியது – போராடி வீழ்த்தப்பட வேண்டியது என்ற புரிதலுக்கு வந்து சேர்ந்துவிட்ட பார்ப்பனர்கள் சிலரோ, பலரோ தமக்குள் அணி திரண்டு தம்மின மக்களான பார்ப்பனாகளிடம் கேள்வி கேட்டதே இல்லையே. ஏன்? வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரு பதிவே இல்லையே! அது தற்செயலானது என நம்புகிறீர்களா?

பார்ப்பனிய எதிர்ப்போடு, பிறரால் கட்டப்பட் டுள்ள அமைப்புகளில் வேண்டுமானால் தம்மை இணைத்துக் கொண்டு, அதுவும் அடிப்படை உறுப்பினராக அல்ல, தலைமைப் பொறுப்புகளில் மட்டும் இணைத்துக் கொள்கிறவர்களும், மக்களிடம் சென்று பணியாற்ற அல்ல, தம் அமைப்பில் உள்ளோரிடம் அதிகாரம் செய்கிற இடங்களில் மட்டுமே தம்மைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளவர்களும் தவிர, தம்மால் கொடுமை என்று கருதப்படும் பார்ப்பனியத்தை அதன் ஊற்றுக் கண்ணான பார்ப்பனர்களை திருத்த வேண்டும், திருத்தி அவர்களையும் பிறரை மதிக்கிற, சமத்து வத்தை ஏற்கிற மனிதர்களாக மாற்ற ஓர் இயக்கம் கட்ட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பான் ஈடுபடாதது ஏன்? பார்ப்பனரல்லா கரையான்கள் கட்டி எழுப்பியுள்ள புற்றுகளில் நுழைந்து கொள்ள வேண்டும்? என்பதே எமது கேள்வி.

தமிழ் நாட்டை ஆள இன்னொரு நாட்டான் கூடாது என்ற பொருளில் தான் ‘தமிழ்நாடு தமிழ ருக்கே’ என்பதில் உள்ள தமிழருக்கே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர அதையும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பவர்களை மட்டும் குறிக்க அல்ல.

மாகாணமானாலும், மாநிலமானாலும் அதன் எல்லைக்கோட்டோடு ஒரு மொழி மட்டுமே பேசுவோர் என கறாராக பிரித்துவிட முடியாது. எல்லைப் புறங்களில் பிற மொழி / இரு மொழிகள் அல்லது மும்மொழிகள் பேசுவோர்கூட இருக்க முடியும். அவர்களில் பலர் பல கட்டங்களில் வணிகத்துக்காக, ஆட்சியாளர் களிடம் பணியாற்ற, பிழைப்பு தேடிக் கூட உள் பகுதிகளிலும் வாழ்ந்து வரலாம்.

எந்த வகைகளில் எல்லைப் பிரிவினைகள் நடந்தாலும் பிரிவினை நடக்கும் நேரத்தில் பிரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் அப்பகுதியினராக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒவ்வொரு பிரிவினையின்போதும் பிரிவினையின் முதன்மை நோக்கத்துக்கு வேறுபட்டு இருப்பவர்களைக் குடிபெயரச் சொல்ல முடியாது.

பாகி°தான் இந்தியாவாக இணைந்திருந்தபோது ஆங்காங்கே வாழ்ந்தவர்கள் பிரிவினையின் முதன்மை நோக்கமாக மத வழித் தேச பிரிவினை என்று வந்தபோது அடுத்தவர்களைக் குடி பெயரச் செய்யப்பட்டமை இன்றளவும் வரலாற்று பேரவலமாகவும், பெருங்கொடுமையாகவுமே கருதப்படுகிறது.

பாகி°தானமும், வங்க தேசமும் ஒன்றாக இருந்தபோது அரசுப் பணிகளுக்காக, வணிகத்துக்காக என மற்ற பகுதிக்குச் சென்று வீடு, நிலம், தொழிற்சாலைகள் என வாழ்ந்தவர்கள் பிரிவினை ஏற்பட்டவுடன் அந்தந்த பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லப்படவில்லை.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் என பிரிந்தபோதும், அதற்கு முன்னதாக ஆந்திரம் பிரிந்தபோதும்கூட, தமிழ்நாட்டிலே தங்கிவிட்ட பிற மொழியினரைப் போலவே கேரளத்தில் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வாழும் தமிழர்களும், கர்நாடகத்தில் கோலார், பெங்களூர், இரியூர் பகுதிகளில் வாழும் தமிழர்களும், ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத் தமிழர்களும் தொடர்ந்து அங்கங்கே தான் வாழ்ந்து வருகின்றனர்.

காரணம், வெறும் மனிதர்கள் என்றால் குடிபெயர்வதில் சிக்கல் இல்லை. வீடு, நிலம், தொழிற்சாலை என அசையாச் சொத்துக்களோடு உள்ளவர்கள் குடி பெயர்வது அவ்வளவு எளிது அல்ல.

மேலும், நாம் தமிழர் கட்சி ஆவணத்தின் பக்கம் 34 இல் ‘உறுப்பினர் தகுதி’யில்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அல்லது தமிழை வாழ்வியல் மொழியாக ஏற்றுத தாய் மொழிக்குத் திரும்பியிருந்தால்” தங்கள் கட்சியில் உறுப்பினராகச் சேரத் தகுதியுடையவர் என்று கூறுகிறது. அப்படியானால், தமிழ்நாட்டில் பிறமொழியினர் அல்லது நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் கூறியுள்ளபடி, ‘திராவிடர்’ எனக் குறிப்பிடுவது வேறு யாரை என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

இந்த இடத்தில் மற்றொன்றையும் கருதிப் பார்க்க வேண்டும்.

சங்க காலம் முதல் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர் என எல்லா தமிழ் மன்னர்களும் பல நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்றுள்ளனர். பல நாடுகளை வென்றும் உள்ளனர்.

ஆனால், நம் தமிழ் மன்னர்கள் அனைவரும் தோற்கடித்த மன்னரின் மணிமுடி (மகுடம்) தன் காலடியில் விழுந்தால் போதும்; அல்லது மன்னனின் பிறந்த நாளின்போது வெற்றிப் பெற்ற தமிழ் மன்னன் மட்டுமே மணி முடியோடு அரசவையில் வீற்றிருக்க, வெல்லப்பட்ட நாடுகளின் மன்னர்கள் கையுறையாக, கப்பமாக சில பொற்காசுகளை அளித்தால் போதும் என்று மட்டுமே மனநிறைவடைந்துள்ளனர். பல வேளைகளில், பகை மன்னர் பெண்டிரைச் சிறை எடுப்பதும், பகை மன்னர் அரண்மனைகளை இடித்துத் தள்ளுவதும், சில வேளைகளில் பகை அரச குலப் பெண்களை ஏரில் போட்டு எருக்கு போன்றவற்றை விதைத்தலும் செய்துள்ளனர்.

ஆனால், தமிழரல்லாத மன்னர்கள் பிற நாடுகளை வென்றவுடன் நம்பகமான தமது ஆட்களை அழைத்து வந்து தனது ஆட்சிக்குத் துணையாக வரி தண்டல் செய்ய, படைத் தலைமையேற்க, பகுதிகள், பாளையங்களில் நிர்வாகத் தலைமையேற்க என குடியேற்றங்களை வென்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே, தமிழ் மன்னர்கள் வென்றாலும், வென்ற நாடுகளில் தமது மக்களைக் குடியேற்றவில்லை. ஆனால் வென்றவுடன் பிற நாட்டு மன்னர்கள், தமது மக்களை குடியேற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினரின் வளமான வாழ்வுக்கும், அதே நேரத்தில், தம் வாழ்க்கைப் பாட்டுக்காக பிற மொழிப் பகுதிகளில் கூலிகளாய் சென்றமர்ந்ததற்குக் காரணம் வர்க்கப் பிரச்சினையா? மொழிப் பிரச்சினையா? என்பதை கருதிப் பார்க்க வேண்டும்.

ஆக, பிறமொழியினரின் வளமான நிலைக்குக் காரணம் அவர்களது மன்னர் அளித்த ஆட்சிப் பணியில் பங்கு என்பதன் தொடர்ச்சியே அன்றி, அவர்கள் பேசும் மொழியால் அல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மணியக்காரர், கணக்குப் பிள்ளை (முன்சிப், கர்ணம்)களாக இருந்தவர்களின் வழிமுறையினர்கூட நிலபுலன்களோடு மிக வளமாக வாழ்வதைக் கிராமங்களில் காண முடியும். அது அவர்களின் அரசுப் பணி அதிகாரத்தால் வந்ததே தவிர, அவர்கள் பேசும் மொழியால் அல்லவே!

ஆக, அவர்களது ஆதிக்கம் வர்க்க ஆதிக்கமாகக் கொண்டு எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, பிற மொழியினர் ஆதிக்கமாக எடுத்துக் கொள்வது பிழையானதாகும்.

(“திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டும் முடிவை பெரியார் ஒரே நாளில் எடுத்தார் என்ற வாதம் சரியா? -இது குறித்து அடுத்த இதழில் எழுதுவோம்.)

புரட்சிப்பெரியார் முழக்கம் 07.06.2012

Monday, June 4, 2012

தமிழ்நாடு தமிழருக்கே_கொளத்தூர் மணி

மரணதண்டனை எதிர்ப்பு மாநாடு (கா​ணொளி)

அனைத்திந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடு சென்னையில் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் 2-6-2012 அன்று நடைபெற்றது.


வீரப்பன் தொடர்பான வழக்கில், ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக மேல்முறையீடு செய்யப்படாததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து ஆயுள்தண்டனையை மரணதண்டனையாக உயர்த்திய கொடுமை.

விளக்குகிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து (Referendum For Tamil Eelam) - உரிமை முழக்கப் பொதுக்கூட்டம். (காணொளி)

9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். 


Sunday, June 3, 2012

சீமானுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!

‎01. ம்ம்ம். இன்னைக்கி என்னப்பா கதை.
02. இந்த சீமான்...

01. அட அவரைப்பத்தி பேசுறது ஒன்னோட தரத்துக்கு கேவலம்.
02 இல்ல இன்னைக்கி மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டுல ஒரு விடயஞ் சொன்னாரு. இவரு எதாவது புரிஞ்சுதான் பேசுறாரா அப்படின்னு ஒரே கொழப்பமா இருக்கு.

01. என்ன பேசுனாரு.
02. அடுத்தவருடம் இந்திராகாந்தி நினைவுநாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளா கொண்டாடப் போறாங்களாம்.

01. பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததை தங்களோட இறையாண்மையில் இந்திய அரசு விளையாடுவதாக அவங்க நினைச்சாங்க. விளைவு இந்திரா மரணம். இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கத்துடிக்கிறவருக்கு தமிழர் இறையாண்மை பற்றிய கவனம் இருக்குமா?
அதனாலதான் சீமான் அதை பயங்கரவாத நாளா பார்க்கிறார்.
சிங்கு (ஜக்மோகன்) வேற வந்திருந்தாரே!
02. அவருக்கு தமிழ் புரிஞ்சிருந்தா அங்கேயே காறித்துப்பி இருப்பாரு.

01. முன்னால திநகர்ல நடந்த ஒருகூட்டத்துல, சிதம்பத்தை நோக்கி காலணி வீசிய சீக்கியரைப் பத்திப் பேசும்போது நானா இருந்திருந்தா திருப்பித்தாக்கியிருப்பேன்னு பேசுனவருதான இவரு (சீமான்).

சீக்கியன் ஏன் காலணி எறிஞ்சான்?
அந்த உணர்வும் கோபமும் நமக்கு ஏன் இல்லைன்னு தனது தம்பிகளிடம் கேக்கறத விட்டுட்டு, சீக்கியனையே திருப்பித் தாக்குவேன்னு வீரம் பேசுனவரு.

சீமானுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!