Tuesday, June 12, 2012

திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! _கொளத்தூர் மணி

திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.


திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘JUSTICE’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜ°டி° கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற, அதன் 14 ஆவது மாகாண மகாநாட்டில், அதுவரை நீதிக்கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட இல்லாதிருந்த பெரியாரை, தன் தலைவராக தேர்ந்தெடுத்தது. இராஜாஜி அமைச்சரவை பதவியை விட்டு விலகி யிருந்ததால், எதிர்க் கட்சியான நீதிக்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் கவர்னர் ஜெனரலும், கவர்னரும் இருமுறையும், தானும் கூட அமைச் சரவையில் இருந்து பணியாற்றுகிறேன் என்று பெரியாரை அணுகிய இராஜாஜியும் சென்னை மாகாண அமைச்சரவையை தலைமையேற்று அமைக்கக் கேட்டும் மறுத்துவிட்டார். (வருங்கால முதல்வர் கனவோடு இன்று ஏராளமானோர் உலவும் இந்த தமிழ்நாட்டில்தான் இதுவும் நடந்திருக்கிறது ) தனது தலைமையில் 1925-இன் இறுதி முதல் சமூக இயக்கமாக இயங்கி வந்த சுயமரியாதை இயக்கம், 1939 இறுதி முதல் தனது தலைமைக்கு வந்துவிட்ட நீதிக்கட்சி என்ற இரண்டையும் இணைத்து, 27-8-1944 அன்று சேலத்தில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில், தேர்தலில் பங்கு பெறாத – அரசின் பட்டங்களைப் புறக்கணிக்கிற – மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக திராவிடர் கழகத்தை மாற்றியமைத்தார்திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட அன்று காலை அண்ணல்தங்கோ போன்றோர் தமிழர் கழகம் என்ற பெயரை முன்மொழிய அப்போது ஏற்று கொண்ட பெரியாரிடம் அன்று நண்பகலில் யாரோ “நீ கன்னடனாயிற்றே! தமிழர் கழகம் என்று பெயர் வைத்தால் நாளைக்கு நீயே கூட அவ்வமைப்பில் இருக்க முடியாதே!” என்று கூறியதைத் தொடர்ந்து அமைப்பின் பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாலையில் பெரியார் மாற்றிக்கொண்டார் என்ற புளுகு அண்மைக் காலங்களில் சிலரால் பரப்பி வரப்படுகிறது.’

அருகோ என்பவர், பெயர் மாற்ற நாளில் சத்திய மூர்த்தி அய்யர்தான் பெரியாருக்கு இந்த ஆலோ சனையைக் கூறியதாக எழுதினார். ஆனால் அந்த சத்தியமூர்த்தியோ 28-3-1943 ல் இறந்து போனவர். இதை ‘பெரியார் முழக்கம்’ ஏட்டில் தோழர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டிய பின், அது இராஜாஜி என்றும், பெரியாரோடு இருந்த சில பிற மொழியினர் என்றும் மாற்றி மாற்றி சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு எவ்வித ஆதாரங் களும் இல்லை. எனினும் ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்தால் அது மக்கள் மனதில் உண்மைச் செய்தியாகப் பதிந்துவிடும் என்ற, இட்லரின் செய்தித்துறை அமைச்சரான கோயபல்சின் செயல் திட்டத்தைப் பின்பற்ற முயற்சிக்கிறார்கள் போலும். அதன் தொடர்ச்சியாகவே மே 18 அன்று கோவையில் வெளியிடப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி ஆவணம்’

13-ஆம் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறது :

“……திராவிடர்கள், இராசாசி இந்தியைத் திணித்த போது, அதை எதிர்த்துத் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோர் தலைமையில் திரண்டபோது, அவர்களை ஆதரிக்கிறாற் போல் ஆதரித்து பின், தங்களுடைய, தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர்.”
திராவிடர் என்ற சொல் குறித்தும் மேற்கண்ட மேற்கோளில் உள்ள பிற செய்திகள் குறித்தும்கூட பின்னொரு வாய்ப்பில் விவாதிக்கலாம். தமிழர் கழகம் என்ற பெயரிடும் முயற்சியைத் தோற்கடித்து திராவிடர் கழகம் என்ற பெயரை அவ்வமைப்புக்கு சூட்டிக்கொண்டனர் என்று கூறியுள்ளதற்கு மட்டும் இப்போது விளக்கம் தர விரும்புகிறோம்.

பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எதிராகத்தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அது ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (South Indian Liberal Federation) என்ற அமைப்பாக மலர்ந்தது. அது கூட அரசியலிலும், அரசுப் பணிகளிலும் பார்ப் பனர்கள் தங்கள் மக்கள் தொகை விகிதாச் சாரத்துக்கு அதிகமாக மிகப்பெரிய அளவில் வகித்து வந்த பதவிகளை மட்டுமே பார்ப்பன ஆதிக்கம் என்பதாக வரையறுத்துக்கொண்டு இயங்கியது. ஆனால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அவற்றைவிட சமுதாயத்தில் இந்துமதம், வேதம், சா°திரம், புராணம் என்ற பொய்மைகளின் துணையோடு பார்ப்பனர்கள் வகித்து வந்த சமூக மேலாதிக்கமே மற்றைய ஆதிக்கங்களுக்கான தோற்றுவாய் என்பதை உணர்ந்து சமூக மேலாதிக்கத்தின் மீதான போரை நடத்தி வந்தது. அவ்வாறு ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்று மூன்று விழுக்காட்டினராக வாழும் பார்ப் பனர்களை வைத்து தொண்ணூற்றேழு விழுக்காட்டு மக்களைக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்றும், எதிர்மறைச் சுட்டாக உள்ள ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற சொல்லுக்கு மாற்றாக, இந்திப் போராட்ட சிறைவாச விடுதலைக்கு பின் 1939 மே மதம் முதல், உடன்பாட்டு சுட்டாக ‘திராவிடர்’ என்ற அடை யாளத்தை முன்வைத்துச் செயல்படத் தொடங் கினார்.

பெரியாரே பின்னர் 9-12-1944 குடிஅரசில் வெளியான சொற்பொழிவொன்றில்……

“நாம் ‘ இந்தியர் ’ என்பதை மறுக்கிறபடியாலும், இன உணர்ச்சியும் எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘ திராவிடர் ’ என்னும் பெயரைக் கொண்டோம் ! இது புதிதாக உண்டாக்கியதல்ல. மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பன ரல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதை சேர்க்க நாமென்ன நாடோடிகளா ? நாம் ஏன் அல்லாதாவராக இருக்க வேண்டும்? சிலர் திராவிடன் என்பது வட மொழி என்பார்கள். அதைப் பற்றி கவலையோ ஆராய்ச்சியோ தேவை இல்லை. ‘ காபி ’ ஆங்கிலச் சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கிறானா? மேலும் நமக்கு திராவிடர் என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனரல்லாதார் என்பதா? பார்ப்பனரல்லாதார் என்று கூறிக்கொள்ளும் “ஜ°டி°” கட்சிக்காரர்கள் எந்த வகையிலே பார்ப்பனரிலிருந்து வேறுபடு கிறார்கள்? நடை உடை பாவனையில், மதத்துறையில், வேஷத்தில் பார்ப்பானை விட இரண்டு மடங்காக அல்லவா இருக்கிறார்கள்! இந்த பார்ப்பனரல்லாதார் வீட்டுக் கலியாணம், கருமாதி, சாந்தி முகூர்த்தம், திவசம், பூஜை எல்லாம் பார்ப்பான் இல்லா விட்டால் ஆகாது; உத்தியோகத்தில் – தேர்தலில் மட்டும் பார்ப்பானுடன் போட்டி போட வேண்டும் என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள்?” … எனக் குறிப்பிடுகிறார்

பெரியாரால் விமர்சனத்தோடு மதிப்பிடப்பட் டுள்ள நீதிக் கட்சியின் மூல அமைப்பாக 1912ல் தொடங்கப்பட்ட ‘சென்னை ஐக்கிய சங்கம்’ அதன் முதலாம் ஆண்டு நிறைவில் “சென்னை திராவிடர் சங்கம்” என்றே பெயர் மாற்றம் பெற்றது. அதன் சார்பாக பார்ப்பனரல்லாத மாணவர்கள் சென்னை கல்லூரியில் படிக்க ஏதுவாக டாக்டர் நடேசனார் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டமாணவர் விடுதி ‘ திராவிடர் இல்லம் ’ (Dravidan House) என்றே பெயர் பெற்றது. அதுமட்டுமல்ல, 1916 ல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (நீதிக்கட்சி) கிளைகள் ‘இராயப்பேட்டை திராவிடர் சங்கம்’ ‘ஜார்ஜ் டவுன் திராவிடர் சங்கம்’ என்ற திராவிடப் பெயர்களிலேயே தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக 1892 ல் அயோத்திதாசப் பண்டிதரால் உருவாக்கப்பட்ட ஆதி திராவிட மகாஜன சபை
1894 இல் ‘திராவிட மகாஜன சபை’ என்ற பெயர் மாற்றம் பெற்றிருந்தது.

மேலும் 6-6-1927 அன்று கோவில்பட்டியில், சுவாமி விருதை சிவஞானயோகியாரால் தொடங்கி நடத்தப்பட்டு வந்த ‘திராவிடர் கழக’ த்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பெரியார் தலைமை தாங்கி ஆற்றிய உரை 26-6-1927 ‘குடிஅரசு’ இதழில் வெளியாகியுள்ளது. அவ்வுரையில் -

“….. சுவாமி சிவஞானயோகிகள் காலத்தில் மாத்திரம் இம்மாதிரி முயற்சிகள் தோன்றிற்று என்று நினைக்கிறீர்களா? என்று இந்த நாட்டில் ஆரியர்கள் கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர் – திராவிடர் என்கிற வேற்றுமையும், ஆரியர் சங்கம் – திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமரியாதைக் கிளர்ச்சிகளும் இந்த நாட்டில் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது” என்று கூறியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகும்.

இவ்வாறு தமிழ்நாட்டு அரசியல் வெளியில் ‘திராவிடர்’ என்ற குறிப்போடு பல்வேறு அமைப்புகள் இயங்கியே வந்துள்ளன என்றாலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளதை போல, 1939 மே மாதம் பெரியார் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் தனது அமைப்பிலும் ‘திராவிடர்’ என்ற அடையாளச் சொல்லோடு சில துணை அமைப்புகளை உருவாக்கியுள்ளார்.
1939 நவம்பர் இரண்டாம் நாள் சிறையிலிருந்து விடுதலையான பெரியாரின் சகோதரர் ஈ.வெ. கிருஷ்ணசாமி ஈரோட்டில் – “ஆரிய திராவிட ஆராய்ச்சிப் பள்ளி”யைத் தொடங்குகிறார். 1939 நவம்பர் 24 ஆம் நாளன்று ஈரோட்டில் ‘திராவிட நடிகர் சங்கம்’ உருவாகிறது. திராவிடர் மாணவர் கழகமும் உருவாகிறது. கோவையில் 19-11-1943 அன்று நடந்த ‘சந்திரோதயம்’ நாடகத்துக்கு வந்திருந்த பெரியாருக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத்தார் வரவேற்புத்தாள் வாசித்தளித்துள்ளனர். (குடி அரசு – 18-12-1943) 26-11-1943 அன்று சேலம் தேவங்கர் பள்ளிக்கூடத்தில் பெரியார் தலைமையில் நடந்த ஜ°டி° கட்சி நிர்வாகக் கூட்டத்தில் இரண்டாவது தீர்மானமாக ‘ஜ°டி° கட்சிக்கு (ளு.ஐ.டு.கு) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரை “தென்னிந்திய திராவிடர் கழகம்” என்றும் ஆங்கிலத்தில் “South Indian
Dravidian Federation” என்றும் பெயர் திருத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது (குடிஅரசு – 4-12-1943) 16-1-1944 அன்று சேலம் செவ்வாய்பேட்டை திராவிடர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை “திராவிடர் கழகம் – பெயர்க் காரணம்” என்ற தலைப்பில் 12-2-1944 ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில் வெளிவந்துள்ளது.

6-2-1944 அன்று புவனகிரியில் திராவிடர் கழக ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு பெரியார் ஆற்றிய உரை, “எதற்காக திராவிடர் கழகம் என்ற பெயர் கொடுக்கிறோம்? ” என்ற தலைப்பில் 12-2-1944-ஆம் நாளிட்ட குடிஅரசு ஏட்டில் வெளிவந்துள்ளது.

24-4-1944 அன்று திண்டிவனம் திருவள்ளுவர் தமிழ்க் கழக விழாவில் உரையாற்றிய சொற்பொழிவாளர் குறள் வீ. முனுசாமி அவர்களுக்கு திண்டிவனம் நகர திராவிடர் கழகம் வரவேற்பு வாசித்தளித்த செய்தி 20-5-1944 நாளிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்துள்ளது. டி.கே எ° நாடகக் கம்பெனியிலிருந்து வெளியேற்றப் பட்ட இயக்க நண்பர் தோழர் நடிகர் டி.வி.நாராயண சாமிக்கு 18-2-1944 அன்று ஈரோடு டவுன் எலி மெண்டரி பாடசாலையில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் ஈரோடு திராவிடர் கழகத்தார் ஒரு வெள்ளிக் கோப்பையை பரிசளித்த செய்தி 4-3-1944 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் வெளி வந்துள்ளது.

13-2-1944 அன்று சென்னை சவுந்தர்யம் மகாலில் நடைபெற்ற சென்னை ஜில்லா நீதிக்கட்சி மாநாட்டில் “தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பதை ‘சென்னை மாகாண திராவிடர் கட்சி’ என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப் போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளதை 26-2-1944 ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ ஏடு தெரிவிக்கிறது. 20-2-1944 அன்று திருச்சி நகராண்மைக் கழக பொதுமன்றத்தில் திருவொற்றியூர் சண்முகம் அவர்கள் தலைமையில் ‘அண்ணா’ கொடி யேற்றி வைக்க, பெரியார் நிறைவுரை ஆற்றிய திருச்சி மாவட்ட நீதிக்கட்சியின் 15 ஆம் மாவட்ட மாநாட்டில் “அண்மையில் சேலத்தில் நடக்க விருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் ‘திராவிடர் கழகம் ’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது” என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இவற்றிலிருந்து சேலத்தில் 27-8-1944 இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரோடு பல அமைப்புகள் இயங்கி வந்ததையும், சேலத்தில் நடைபெறுவதாக இருந்த மாகாண மாநாட்டில் நீதிக்கட்சியின் (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்) பெயரை “திராவிடர் கழகம்” என மாற்ற வேண்டுமென நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுவும் பல்வேறு மாவட்டக் குழுக்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில்தான் 27-8-1944 அன்று சேலத்தில் மாநாடு கூடியது. ‘சேலம் மாநாடு’ என்ற தலைப்பில் 5-8-1944 ஆம் நாளிடப்பட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார். அத்தலையங்கத்தில் 20-8-1944 ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெறப் போவதாகவே பெரியார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது பின்னர் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு 27-8-1944 அன்றுதான் நடந்தது) அத்தலையங்கத் தின் மூன்றாவது பத்தியில் “மாநாட்டில் இரண்டு மூன்று விஷயங்கள் முக்கியமாக சிந்திக்க வேண்டியவைகளாக இருக்கும். திராவிட நாட்டு பிரிவினையை வலியுறுத்தி அதற்காகக் கிளர்ச்சி செய்தல், கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல், கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றி விவாதித்து வலியுறுத்தி அவைகளை அவசியம் நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தல் ஆகியவைகள் முக்கிய மானவைகளாக இருப்பதோடு மற்றும் சில விஷயங்களும் இடம் பெறும் என்றே நினைக்கிறோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் தலையங்கத்திலும் -
“… ஆகவே, கீழ்க்கண்ட கொள்கைகளை ஆதரிக்கும் திராவிட மக்கள், ஆண் பெண் இளைஞர் ஒவ்வொருவரும் தவறாமல் அவசியம் சேலம் மாநாட்டிற்குச் சென்று, நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம் , நமக்கு வேண்டியது திராவிடநாடு என்பனவாகிய கொள்கைகளுக்கு…” என்பதாக குறிப்பிட்டுள்ளதோடு,… “ஓங்குக திராவிடர் கழகம் ! தோன்றுக திராவிட நாடு !! வாழ்க திராவிடர் !!! ” என்ற சொற்களோடு முடிக்கிறார்.

அவ்வாறே 19-8-1944 நாளிட்ட குடிஅரசு ஏட்டின் துணைத் தலையங்கத்தில் -
“…20-8-1944 ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சேலம் மாநாடு 27-8-1944 ஆம் தேதிக்கு ஒத்திப்போடப்பட்டுவிட்டது. 27ஆம் தேதியில் அவசியம் நடக்கும். ஏராளமான மக்கள் பிரதிநிதிகளாய் வந்து பெருத்த உற்சாகத்துடன் ஏகமனதாய் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்து உடனே கிளர்ச்சி துவங்க வசதியையும் எழுச்சியையும் உண்டாக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. மாநாட்டில் வரும் தீர்மானங்களில் ‘திராவிடர் கழகம்’ ‘திராவிட நாடு’ என்ற தீர்மானங்களோடு தோழர்கள் பாண்டியன், அண்ணாதுரை ஆகியவர்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்கள்…” என்பதாக எழுதப்பட் டுள்ளது.


இவ்வாறாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டுக்கு முன்னதாகவே இரண்டு ஆண்டு காலமாக தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ‘திராவிடர் கழகம்’ என்ற பெயரோடு அமைப்புகள் இயங்கி வந்த நிலையிலும், அக்கால கட்டங்களில் உரையாற்றிய பெரியார் “திராவிடர் கழகப் பெயர்க் காரணம்”- “எதற்காக திராவிடர்கழகம் என்ற பெயர் கொடுக்கிறோம்” – என்ற தலைப்பில் உரையாற்றி வந்துள்ள நிலையிலும், 27-8-1944 அன்று சேலம் மாநாடு நடப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக 5-8-1944 அன்று அவர் குடிஅரசில் எழுதியுள்ள தலையங்கத்தில் எழுதியுள்ள மாநாட்டு விவாதப் பொருள் களில் ஒன்றாக “கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல்” என்பதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள நிலையிலும், அடுத்தடுத்து 12.8.1944, 19.8.1944 ஆகிய இரண்டு இதழ்களிலும் தலையங்கம், துணைத் தலையங்கங்களில் திராவிடர் கழகப் பெயர் மாற்றம் பற்றி குறிப்பிட்டிருந்த நிலையிலும், அண்ணல்தங்கோ போன்றோர் காலையில் கட்சியின் பெயரை ‘தமிழர் கழகம்’ என்று மாற்றி அமைக்க முன்மொழிந்ததை ஏற்றுக்கொண்ட பெரியார், மாலையில் அது அவருக்கே ஆபத்தாகி விடும் என்பதால்தான் கட்சியின் பெயரைத் தந்திரமாக “திராவிடர் கழகம்” என்று மாற்றி வைத்துக் கொண்டார் என்ற கருத்தைப் பரப்புவது எவ்வளவு விஷமத்தனமானது என்பதையும், அது ஒரு தரம் தாழ்ந்த, திட்டமிட்ட பொய்யே என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும், அப் பொய்யர்களும் இந்தப் புளுகை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுமே நமது விருப்பம், விண்ணப்பம்.


கொளத்தூர் மணி,

தலைவர், பெரியார் திராவிடர் கழகம்.


No comments: