Monday, July 30, 2012

விடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்

2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தநேரம் மக்கள் விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்வேறு துறைசார்ந்த திறமையாளர்களுக்கு விருதுவழங்கி சிறப்பிக்க நினைத்தார்கள். 

நான் நான்கைந்து துறைகளுக்கு மட்டும் சிலரை முன்மொழிந்தேன். (எளியவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் ஒருவர் அப்போது மக்கள் தொலைக்காட்சியில் இருந்தார்) 

ஓவியத்துக்கு சந்துரு,
அந்த ஆண்டுக்கான திரைப்படம் - பூ, 
சிறந்த நாடகம் முருகபூபதி, 
சிறந்த பதிப்பகம் விடியல். 



தமிழில் பெருமளவு அபுனைவு (non fiction) நூல்களை வெளியிட்டதிலும் குறிப்பாக தேர்ந்தெடுத்த பிறமொழி நூல்களை தமிழில் கொண்டு வந்தமைக்காகவும் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நூலின் அட்டைப் படத்திற்கு ஏதாவது ஒரு ஓவியத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதன் படைப்பாளியின் பெயரை நூல் விவரம் அடங்கிய இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடும் நேர்மை இவற்றிற்காக விடியலுக்கு வழங்கலாம் என்றேன். 

தமிழில் எந்தப் பதிப்பகத்தின் மீதும் ஆதரவான எதிரான விமர்சனங்கள் சரிபாதி இருக்கக்கூடும். ஆனால் விடியல் அதில் விதிவிலக்கானதாக இருப்பதாக நம்புகிறேன். 

"மலர்ந்தும் மலராத" பாடலைப் போல அனைவருடைய இதயத்திலும் இடம்பிடித்த பதிப்பகம் விடியல். 


இத்தகை பெருமைகளையெல்லாம் ஒரு பதிப்பகத்திற்கு உரியதாக்கிய சிவா அவர்களின் மறைவு இன்றைய நாளை துயர்மிகு நாளாக்கிவிட்டது.

Friday, July 27, 2012

தலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்

தேடப்பட்டு வரும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 22 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், “கொலையாளிகள், தங்களின் இருப் பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு சில துப்பு கிடைத்தள்ளது. அதைக் கொண்டு விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் எங்கும் தப்பிவிட முடியாது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் சிலர் கல்குவாரிகள் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 115 பேர் உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தேடப்படும் குற்றவாளிகளுடன் தனிப்படை யிலுள்ள போலீசாருடன் ரகசிய தொடர்பு இருப் பதாகவும் அவர்கள் முன்கூட்டியே தரும் தகவல் காரணமாகவே தப்பி வருகின்றனர் என்றும் தோழர் பழனி கொலை நடந்த பிறகு, தலைமை காவலருடன் தேடப்படும் நபர் 40 நிமிடம் அலைபேசியில் பேசியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், ஒரு தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுளள்து. மாவட்ட காவல்துறை அதிகாரி, தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனைக் குற்றமற்றவர் என்று நியாயப் படுத்திவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சில தோழர்கள் கூற்று உண்மைக்கு மாறானது என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இங்கே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

• சட்டமன்ற உறுப்பினர் தளி. இராமச்சந்திரனின் அண்ணன், அண்ணன் மனைவி, மாமனார், மைத்துனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த 1500 ஏக்கர் நிலத்தை ஜி.எம்.ஆர். என்ற ஆந்திர தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான பத்திரப் பதிவு ஆதாரங்கள் இருக்கின்றன.

• தளி இராமச்சந்திரனுக்கு பூர்வீகமாக 70 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதில் கிரானைட் இருந்ததாகவும் அதைக் கொண்டுதான் தனது செல்வத்தைப் பெருக்கியதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நியாயப்படுத்து கிறார்கள். அது உண்மையல்ல. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வெள்ளி விந்தை கிராமத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்தது 7 ஏக்கர் நிலம் தான். அதிலும் ‘கிரானைட்’ கிடையாது.

தளி இராமச்சந்திரனை சுற்றி நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக் கொள்ளும் அவர்களது ஆட்களின் கதை என்ன?

• எம்.எல்.ஏ.வின் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவரும் கம்யூனிஸ்ட் கட்சி தான். இவர் மீது முதல் மனைவியை கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

• இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக உள்ள சுந்தரேசன் குவாரி உரிமையாளர் ஒருவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

• ஒன்றிய விவசாய அணி செயலாளராக உள்ள பாலவண்ணன் என்பவர் மீதும் கொலை வழக்கு உள்ளது.

• சட்டமன்ற உறுப்பினரின் மைத்துனர் கேசவ மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுந்தரேசன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

• தளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருக்கும் பெண்ணின் கணவர் கலீல். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். என்.சி.இராமன் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்.

• அரசியலில் வன்முறை தொடர்புடையவர்கள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தந்த இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ‘வோரா’ குழு அறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருவர் பெயர்கூட இடம் பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்நத தோழர் வீரபாண்டியன் தொலைக்காட்சி ஒன்றில் கூறினார். அவரது பார்வைக்கு மேற்கண்ட தகவல்களை சமர்ப்பிக்கிறோம்.

• தளி இராமச்சந்திரன், சுற்றி சுற்றி பொது வுடைமை இயக்கங்களை மட்டுமே தேர்ந் தெடுத்தவர்; நல்ல கம்யூனிஸ்ட், நேர்மையானவர் என்று தோழர் வீரபாண்டியன் அதே பேட்டியில் கூறினார். 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதியில் ஜனதாதளமும், பா.ஜ.க.வும் போட்டியிட்டபோது, தளி இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் பா.ஜ.க. வேட்பாளர்களையே ஆதரித்தனர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்பட்டதே ஒரு தனிக் கதை. 2006 சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த நாக ராஜிரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த தளி இராமச்சந்திரன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். கூட்டணி தர்மத்துக்கு எதிராகவும், கட்சிக் கட்டுப்பாட்டை எதிர்த்தும் போட்டியிட்ட அவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சியை விட்டு நீக்கியது. அந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, இராமச்சந்திரன் வெற்றிப் பெற்றார். ஆனால், சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடித்த தளி இராமச்சந்திரனையும் அவரது ஆட்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருகரம் நீட்டி வரவேற்று, தமது கட்சியில் இணைத்துக் கொண்டது.

மனம் உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகராஜிரெட்டி, தனது பாதுகாப்பு கருதி, அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்து விட்டார். நகாராஜி ரெட்டி இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி வாய் பேச முடியாத நிலைக்கு முடக்கப்பட்டு விட்டார். தொலைக்காட்சிகளில் அவர், ‘திக்கித் திக்கி’ தன் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்திய தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலைப் பற்றி இப்போது பேட்டி அளித்துள்ளார்.

கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் பழனி, நீண்டகாலம் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றியவர். எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரனோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பாளராக வேலை செய்தவர். தோழர் பழனியின் நேர்மையான எதற்கும் அஞ்சாத உறுதியான செயல்பாடுகளை தளி இராமச்சந்திரனே நன்கு அறிவார். பிறகு பொதுவுடைமை கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு விடுதலைப் படைக்கு ஆதரவாளராக இருந்து அந்த அமைப்பு முடக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகாலம் ஒதுங்கி நின்று, பிறகு இரண்டு ஆண்டுகாலத்திற்கு முன் பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்புப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரியத்தை ஏற்று, பெரியார் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். ஏராளமான இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்தார்.

தோழர் பழனி முயற்சியால் பெரியார் திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் சேர்ந்தது; திருச்சியில் கழகம் நடத்திய தீண்டாமை சுவர் இடிப்பு போராட்டம்; இடிந்தகரையில் நடந்த அணுஉலை எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றது; நாகமங்கலம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. நிறுத்திய பெண் வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது; போன்றவற்றால் கழகத்தின் மீது ஆத்திரமடைந்து உள்ளூர் கழகத் தோழர்களை வீடு புகுந்தும், மருத்துவமனை புகுந்தும் தாக்கிய செய்திகள் கடந்த இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம்

Thursday, July 19, 2012

முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது. 

அச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக நிரம்பி இருபுறங்களிலும் அடர்த்தியாக கடும் நெரிசலில் மக்கள் நின்று கொண்டு கருத்தினைக் கேட்டனர். கூட்டத்தின் இடையே மழை கொட்டத் தொடங்கியது. மக்கள் அப்படியே பேருந்து நிலையத்துக்குள் சென்று உரைகளைக் கேட்டனர். மழை நின்ற பிறகு அவர்களே முன் வந்து இருக்கை யில் அமர்ந்தனர். தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது அடியாட்கள் கூட்டத்தின் கொலை வெறி யாட்டங்களையும் நில அபகரிப்புகளையும் பேசிய தோழர்கள் ஒவ்வொருவரும் அம்பலப் படுத்திய போது அந்தக் கூட்டம் பலத்த கரவொலி எழுப்பி ஆரவரித்து அந்த உண்மைகளை அங்கீகரித்தது. 

மாவட்ட தலைவர் தி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் புகழேந்தி, தலித் விடுதலைக் கட்சி செங்கோட்டை யன், அயோத்திதாசர் ஆய்வு மையம் ச.இராம லிங்கம், சி.பி.ஐ.எம்.எல். (மக்கள் விடுதலை) மீ.தா. பாண்டியன், தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு குணா, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி வழக்கறிஞர் ரஜனிகாந்த், மே 17 இயக்கம் திருமுருகன், மக்கள் ஜனநாயக இளைஞர் இயக்கம் தமிழ்வாணன், சி.பி.ஐ. (எம்.எல்.) விந்தை வேந்தன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மு.மோகன் ராஜ், பெ.தி.க. வழக்கறிஞர் சு.குமாரதேவன், விடுதலை சிறுத்தைகள் பொ.மு.நந்தன், பெங்களூர் கலைச் செல்வி, தமிழக மக்கள் விடுதலை முன்னணி இரா.தமிழரசன், மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் க.ம.இளவரசன், காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, புரட்சிகர தொழிலாளர் முன்னணி மணிவாசகம், சேவ் தமிழ் செந்தில், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி இரா.சு.நடவரசன், தமிழ்நாடு மக்கள் பேராயம் குமணன், பெ.தி.க. தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் ஆகியோர் உரையாற்றினர். 

இந்தக் கூட்டத்திற்கு பார்வையாளராக வந்திருந்த லக்ஷ்மணய்யா என்பவர், “நான் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனால் 36 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்தவன். எனவே அவருடைய அக்கிரமத்தைப் பற்றி சில நிமிடம் பேச எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று தாமாக முன் வந்து மேடையேறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனது தாய்மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசியஅவர், தனக்கோ தனது குடும்பத்துக்கோ தெரியாமலேயே தமக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டிருந்ததை பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற பிறகே தெரிய வந்தது என்று கூறினார். இந்த உண்மையை உங்களிடம் தெரிவித்து விட்டதால் எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய அவர், அதற்கு தயாராகவே வந்துள்ளதாகக் கூறியபோது கூட்டம் உணர்ச்சி மயமானது. 

கூட்டத்தில் பேசிய கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் பேச வந்தபோது இதே கும்பலால் தாக்கப்பட்டார். தி.மு.க. சட்டமன்ற உறப்பினர் செங்குட்டுவன் பேச வந்த போதும் தாக்குதலுக்கு உள்ளானார். ஆளுங் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் நாகராஜரெட்டி இருந்தாலும் எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரன் ஆட்களால் இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி, உயிர்தப்பி இப்போதும் நடமாட முடியாத நிலையில் உள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறையின் ஆதரவோடு மகாராசாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது அடியாள் கூட்டமும் பெரியார் திராவிடர் கழகத்தோழர் பழனி மீது கை வைத்த பிறகு தான் இப்போது அம்பலப் பட்டு அச்சத்தின் பிடியில் தலைமறைவாக திரி கிறார்கள். தமிழக வரலாற்றிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாகி இருப்பது இதுவே முதல் முறை என்று ஊடகங்கள் கூறுகின்றன. 

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது அந்த இயக்கத்தின் போராளிகள் தலைமறை வானார்கள். அப்போது அவர்களுக்கு அடைக்கலம் தந்தது பெரியார் இயக்கத் தோழர்கள். அதற்கு நன்றி தெரிவித்து மறைந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் கழகத்துக்கு கடிதமே எழுதினார். “கொள்கைக்காக தலை மறைவை மேற்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்த காலம் மாறி, இப்போது கொலைக் குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதும், அதை அக்கட்சி நியாயப்படுத்துவதும், உண்மையிலே அக்கட்சிக்கு ஏற்பட்ட கொள்கைச் சரிவு. இதற்காக வேதனைப்படுகிறோம். தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படும் வரை பெரியார் திராவிடர் கழகம் இதைவிடப் போவதில்லை. தமிழகம் முழுதும் இதற்கான இயக்கங்களை நடத்துவோம்” என்று குறிப்பிட்டார். 

இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், 2 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்ட தோழர் பழனி மீது எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கும்பலுக்கு ஆத்திரம் வந்தததற்கான காரணங்களை விளக்கினார். தங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் தங்கள் பகுதியில் செயல் படக் கூடாது என்று தளி சட்டமன்ற உறுப்பினரும், அவரது அண்ணனும் அவர் களின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கும்பலும் செயல்பட்டனர். தங்கள் தொகுதிக்குள் வந்த தி.மு.க. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப் பினர்கள்கூட தாக்கப் பட்டனர். தோழர் பழனி அப்பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்களை திரட்டினார். நாகமங்கலம் பஞ் சாயத்து தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனின் மாமா மனைவி வனிதா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து தி.மு.க., அ.தி.மு.க.வினரே போட்டியிட அஞ்சினார்கள். ஆனால் கழகத் தோழர் மாருதி, தனது தாயார் நாராயணம்மாளை போட்டியிட வைத்தார். அது மட்டுமல்ல, தேர்தலை கள்ள ஓட்டுகள் போடாமல் நேர்மையாக நடத்த முயன்றார். அந்தத் தேர்தலில் நாராயணம்மாள் 130 வாக்குகளில் தோல்வி அடைந் தாலும் தங்களது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சல் வந்து விட்டதா என்று ஆத்திரப்பட்டார்கள். அதற்காக சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருந்தார்கள். 

நீலகிரி வரதராஜசாமி கோயில் திருவிழாவில், தனது தாயாரை போட்டியிட வைத்த கழகத் தோழர் மாருதியின் சித்தப்பா அன்னையப்பாவை, எம்.எல்.ஏ. ஆட்கள் வம்புக்கிழுத்து மோதலை உருவாக்கி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட நாராயணம்மாள் வீட்டுக்குள் நுழைந்து அவரது கணவரையும் 3 மகன்களையும் எலும்பு முறியும் அளவுக்கு தாக்கினார்கள். சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனையிலே அவர்கள் சேர்க்கப்பட்டபோது நள்ளிரவிலே சட்டமன்ற உறுப்பினரே தனது அண்ணன் - அடியாட்களுடன் மருத்துவமனைக்குள்ளேயே நுழைந்து சிகிச்சைப் பெற்று வந்த தோழர்களையே மூர்க்கத்தனமாகத் தாக்கினர். உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்களை நேரில் வந்து தாக்கியது சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் தான் என்று அடிப்பட்ட தோழர்கள் வாக்கு மூலம் தந்தும், காவல்துறை அவர் பெயரை பதிவு செய்யவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. அதை காவல்துறை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராமச்சந்திரன் பெயரை புகாரில் சேர்க்காமலே தவிர்த்து வருகிறது.  

2010 அக்டோபரில் திருச்சியில் தீண்டாமை சுவரை இடிக்கும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியபோது இந்தப் பகுதியி லிருந்து இரண்டு வேன் களில் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்த பிறகு அப்பகுதி தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் வேறு ஒரு இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியே வருவதும் இதுவே முதல்முறை. ஊர் திரும்பிய பிறகு முழு நேரமும் கறுப்புச் சட்டை அணியத் தொடங்கினர். வேறு அமைப்பு தங்கள் பகுதியில் வளரத் தொடங்கியதைப் பொறுக்க முடியாத இராமச்சந்திரன் ஆட்கள் கழகத் தோழர் களை மிரட்டி ஒருதோழரின் கருப்புச் சட்டையைப் பறித்து தீ வைத்தனர். 

இந்தப் போக்குகளைக் கண்டித்து 28.4.2012 இல் கெலமங்கலத்தில் எங்கள் கழக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தினோம். அதில், இறுதியில் நான் பேசிய போது இராமச்சந்திரன் ஆட்களின் வன்முறை அடாவடியை எதிர்த்து ‘மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தபோது, மக்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதற்குப் பிறகு இராமச்சந்திரன், தா. பாண்டியன் போன்ற தலைவர்களை அழைத்து, ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் இந்தப் பகுதியில் இரண்டு அமைப்புகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும், ஒன்று மார்க்சிய லெனினிய கட்சி மற்றொன்று பெரியார் திராவிடர் கழகம் என்றும், தா. பாண்டியன் முன்னிலை யிலேயே பேசினார். தங்களின் வன்முறை அடாவடி நில அபகரிப்புகளை எதிர்க்கும் அமைப்புகள் வேர்விடத் தொடங்கிவிட்டதே என்ற ஆத்திரமே தோழர் பழனியை படுகொலை செய்வதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறோம். 

இப்போது இப்பிரச்சினை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அவருடைய கவனத்துக்கு முழுமையாகப் போகவில்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. 

எனவே அடுத்த கட்டமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்து வலிமையான போராட்டத்தை அடுத்த 10 அல்லது 15 நாட்களில் நாம் நடத்த வேண்டும். இது நமது முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 

இரண்டாவதாக இங்கே ஏழை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டு, அந்த மக்களிடம் நாம் ஒப்படைக்க வேண்டும். 

நாம் ஏற்கனவே மக்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கும் திட்டத்தை அறிவித்தோம். 

அந்த அமைப்பின் வழியாகவே மக்களுக்கு - இழந்த நிலங்களை மீட்டுத் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 

தொழிலதிபர் விஜயமல்லய்யாவிடமிருந்த நிலங்களை தளி சட்டமன்ற உறுப்பினர் மீட்டு, மக்களுக்கு வழங்கியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழ் பாடுகிறார்கள். 

அப்படியானால் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலிலிருந்து 

இந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களையும் அழைப்போம்” - என்றார் கொளத்தூர் மணி. 

தளி இராமச்சந்திரனின் எல்லை மீறிய அடாவடி களுக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டு விட்டது என்பதை உணர்த்துவதாகவே இந்தக் கூட்டம் இருந்தது. 

- செய்தியாளர் , புரட்சிப்பெரியார் முழக்கம்


15-07-2012 அன்று இராயக்கோட்டையில் நடைபெற்ற நினைவேந்தல் படங்கள்




சென்னையில் 14-07-2012 அன்று நடைபெற்ற வீரவணக்கப் பேரணி படங்கள்


நன்றி : நிழற்படங்கள்  ஜனார்த்தனன்

Monday, July 16, 2012

கொலையாளியை கைது செய். காவல்துறைக்கு கொளத்தூர் மணி 10 நாட்கள் காலக்கெடு.

தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனது கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனிச்சாமியின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.

 

பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை


காஞ்சி “மக்கள் மன்றம்” தோழர் மகேஷ் அவர்கள் ஆற்றிய உரை


மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரை

இராமச்சந்திரனின் நிலமோசடியை அம்பலப்படுத்துகிறார் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒருவர். (தமிழில் சரளமாக பேச இயலாததால் தெலுங்கு கலந்து பேசுகிறார்)



SAVE TAMILS இயக்கத் தோழர் செந்தில் அவர்கள் ஆற்றிய உரை.

 சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் அவர்கள் ஆற்றிய உரை.



அரங்க.குணசேகரன் அவர்கள் ஆற்றிய உரை.



சி.பி.அய்.எம்.எல் (மக்கள் விடுதலை) மீ.தா.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை.

Thursday, July 5, 2012

படுகொலை செய்யப்பட்ட பெரியார் திக தோழர் பழனி {காணொளி}


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்.

இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர்கள் பழனியின் தலையை தனியாக துண்டித்து வீசினர்.

பெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு ஏராளமான கட்சியினர் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.இதையடுத்து தாளேகுளம் கிராமத்துக்கு அதிகளவில் போலீசார் வரவழைக்கப்பட்டடு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பழனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 6.4.2012 அன்று நீலகிரிக்கு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தனி நபர்களின் சிறு சச்சரவைச் சாக்காக வைத்து, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் உறவினரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சந்திராம்மாவின் கணவர் வெங்கட் ராஜி மற்றும் அவரது மகனும், கழகத் தோழருமான மாருதி, அவரது இரு சகோதரர்களையும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் அண்ணனும் அவரது அடியாட்களும் நான்கைந்து வாகனங்களில் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஊர்ப்பொதுமக்களும், கழகத் தோழர்களும் அந்த வன்முறைக் கும்பலை விரட்டியடித்துள்ளனர். அதன் பின்னர் தாக்குதலுக்குள்ளானவர்களை ஓசூர் மருத்துவ மனையில் சேர்க்கச் சென்ற போது விடியற்காலை 3 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் இராமச் சந்திரனே நேரில் அடியாட்களுடன் வந்து மீண்டும் தாக்கினர். இதில் மேலும் மூன்று பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கள் வன்முறையால் அந்த வட்டாரத்தையே மிரட்டிவந்த அந்த வன்முறையாளர்களின் செயல்பாடுகளையும், அவர்களுக்கு உடந்தையாக வழக்குகளைத் திரித்து பதிவுசெய்திருக்கிற காவல்துறை கருப்பு ஆடுகளின் நடவடிக்கைகளையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 28.04.2012 அன்று நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் மிரட்டலுக்கு பயந்து கிடந்த அப்பகுதி மக்கள், அச்சத்தை உதறிவிட்டு, 1500-க்கும் அதிகமானோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனுக்கு எதிராக திரண்டிருந்தார்கள். இதன் காரணமாக பழனிச்சாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அக்கூட்டத்தில் தோழர் பழனிச்சாமி ஆற்றிய உரை

மார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை

(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி) ...