Thursday, September 27, 2012

திராவிடர் விடுதலைக் கழகம் (காஞ்சிபுரம் மாவட்டம்) நடத்தும் மனுதரும சாத்திர எரிப்பு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

நாள்: 28-9-2012
இடம்: கூடுவாஞ்சேரி கூட்டு சாலை (கூட்ரோடு)

சிறப்புரை:

தோழர். கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர். விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

வழக்கறிஞர் த.பார்வேந்தன்
மாநில துணைச் செயலாளர், கருத்தியல் பரப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தோழர். தெ. தென்னவன்
மாவட்ட துணைச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சமர்பா குமரனின் இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெறும்)
 

Wednesday, September 26, 2012

அட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா?

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் முதல் கலந்தாய்வுக் கூட்டம் 23-09-2012 அன்று பல்லடத்தில் நடைபெற்றது. நிகழ்வில், சுயமரியாதை கலைக்குழுவின் நிகழ்த்து கவிதை.

அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?"

"ஆமா!
யாரு இப்ப 
சாதி பார்க்கிறா!!"

சங்கட மடத்துக்கு 
அக்னி கோத்திரம்
சைவ மடத்துக்கு 
பிள்ளைவாள் மாத்திரம்
பேரூருக்கு 
வெள்ளாளக் கவுண்டர்
கோவிலூருக்கு 
நாட்டுக்கோட்டைச் செட்டி
சாமித்தோப்புக்கு 
நாடார் அய்யா

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப 
சாதி பார்க்கிறா!!"

பார்ப்பனருக்கு
பாரதியார்
வாணியருக்கு 
மகாத்துமா காந்தி
வேளாளருக்கு 
வ.உ.சிதம்பரம்
கவுண்டருக்கு 
பொன்னர் சங்கர்
தேவருக்கு 
பசும்பொன் முத்து
சேர்வைக்கு 
மருதிருவர்
கள்ளருக்கு 
பாப்பாபட்டி மூக்கையா
முதலியாருக்கு 
திருப்பூர் குமரன்
கோனாருக்கு 
அழகுமுத்து
நாடாருக்கு 
காமராசர்

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப 
சாதி பார்க்கிறா!!"

"எஸ்சி தவிர 
எவரும் சம்மதம்"
மணமக்கள் தேடி
இந்துவில் விளம்பரம்
"கலப்புத் திருமணமா?
கழுத்துக்கு மேல தலையிருக்காது!"
மாநாட்டொன்றில்
மிரட்டற் பேச்சு
"அந்தத் தொகுதியில
இந்த ஆள நிறுத்து
இவங்க ஆளுக
அங்க அதிகம்"
தேர்தற்களத்தில்
வேட்பாளர் தேர்வு

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப 
சாதி பார்க்கிறா!!"

கருவறைக் கல்லுக்குப் 
பூசை பண்ண
பூணூல் பார்ப்பான்
தெருக்கூட்ட
சாக்கடை வார
பீயள்ள
அருந்ததிக் குடும்பம்

"அட
யாருங்க இப்ப 
சாதி பார்க்கிறா?" 
"ஆமா!
யாரு இப்ப 
சாதி பார்க்கிறா!!"

பொறுத்துப் 
பொறுத்துப் பார்த்த
குப்பாயி வெடிச்சா....
"காதல் கல்யாணம் கலவி
கல்வி பூசை பதவி
துறவு உறவு நட்பு
வேலை பகை கட்சி
சுடுகாடு இடுகாடு கருமாதி
எல்லாத்துலயும் சாதி பாக்கிறது
நீங்கதாண்டா 
களவாணிப் பயலுகளா!!"

நன்றி: கவிஞர் யரலவழள

(காக்கைச் சிறகினிலே - ஆகசுடு 2012 - பக்கம் 25)

Saturday, September 15, 2012

சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரன்

முதல்வரே உங்களுக்குத் தெரியுமா? இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும் சரியான முடிவு எடுக்காவிட்டால்…..

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம் இருக்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியுமா என்று அவர்தான் சொல்லவேண்டும்.

இந்தக் கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால், இதை செராக்ஸ் எடுத்தோ ஸ்கேன் செய்தோ உங்கள் கையெழுத்திட்டு

மாண்புமிகு முதலமைச்சர்,
தமிழ்நாடு அரசு, புனித ஜர்ஜ் கோட்டை,
சென்னை -600009
என்ற முகவரிக்கோ
cmcell@tn.gov.in என்ற முகவரிக்கோ அனுப்புங்கள்.


1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும்
உங்களுக்குத் தெரியுமா ?

8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில்  எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென்மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள்காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணுவிஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட   கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும் சரியான முடிவு எடுக்காவிட்டால்…..
பதில் உங்கள் கையில்.

சத்துணவிலும் ஜாதி வெறி

சேலம் மாவட்டம் காடையாம் பட்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் சத்துணவுக்கூடங் களில் சமையல் பணியில் ஈடுபடும் தலித் பெண்கள், சாதி வெறியர் களால் சமூகப்புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். பார்ப்பனி யத்தில் ஊறிப் போன சாதி இந்துக் கள்,தங்கள் வீட்டுக் குழந்தைகளை சத்துணவுக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து பகிரங்கமாகதீண்டாமையை வெளிப்படுத்துகின்றனர்.

“இந்தப் பெண்கள் சமைத்த உணவை சாப்பிடுவது பாவம்” என்று, அவர்கள் கூறுவதாக ‘இந்து’நாளேடு (செப்டம்பர் 4) செய்தி வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ்மாதம் ரூ.1300-லிருந்து 3000 வரை குறைந்த ஊதியத்தில்தான் இந்தப் பெண்கள் பணிக்குதற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுந்தர வனிதா என்ற தலித் பெண், 2012 ஆகஸ்டு 16ஆம் தேதி பணிக்கு நியமிக்கப்பட்டார். பணி நியமன நாளிலிருந்தே, அவர் சமூகப்புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார். “நான் அவமானத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்”என்று ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளரிடம் கண்ணீர் மல்க அவர் கூறினார்.

முதல் நாளிலிருந்தே என்னை கேவலமாகப் பேசுவதும், துன்புறுத்துவதும்தொடங்கிவிட்டது. ராசிபுரத்தான் காட்டு வலவு எனும் கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில்நான் பணி நியமனம் செய்யப்பட்டேன். வன்னியர் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் தலித்பெண் சமைத்த மதிய உணவை சாப்பிடுவதை அவமானமாகக் கருதுகிறார்கள். கிராமப்பஞ்சாயத்துத் தலைவர், ‘இதில் தான் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார். அதைத்தொடர்ந்து இந்தப் பெண் அவரது சொந்த கிராமமான மூக்கனூரிலுள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். சொந்த கிராமம் என்பதால், இவரது சாதி அடையாளம்தெரியும் என்பதால் அங்கே மேலும் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளானார். இவரைப்போல் சத்துணவு சமையல் கூடங்களுக்கு நியமிக்கப்பட்ட தலித் பெண்கள் அனைவரும்இதே போன்ற புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ‘இந்து’ நாளேட்டின் செய்திகூறுகிறது. 

தீண்டாமையை வெளிப்படையாகப் பின்பற்றும் சாதி ஆதிக்கவாதியர் மீதுவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஆட்சியோநிர்வாகமோ அதற்குத் தயாராக இல்லை. தமிழக கிராமங்களில் பார்ப்பன ‘மனுதர்மமே’ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. சட்டங்களுக்கு சாதி வெறியர்கள் சவால்விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பு: இதை எதிர்த்து, திராவிடர் விடுதலைக் கழகம், சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல்சேகரன் நினைவு நாளான செப்.11-இல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளது.

முதுகுளத்தூர் கலவரம்: வரலாற்றுப் பின்னணி

தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன்சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.

• 1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்தஇமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனதுசமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்குஉள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியைராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.

• தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக்கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளைமறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.

• 1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும்முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர்போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒருவேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும்.எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.

• போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப்பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் -பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்விஅடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்விஇதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதைஉணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.

• தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகியஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க,தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.

• இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர்சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது.தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.

• இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்,மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக்கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்கஇருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும்ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.

• தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும்சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக்கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல்இருந்தார்.

• பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமானவாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில்,தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்றுகூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள்வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.• அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில்பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம்திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப்போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்றுகடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக்கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.

முத்துராமலிங்க தேவர் கைதை வரவேற்றார் பெரியார்

முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டபோது பெரியார் விடுத்த அறிக்கை:

‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றிஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பனஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றுகசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாதபல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்துவிஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.

‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக்கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில்சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.

‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ்உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம்சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவராயிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவதுஎன்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப்பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமாஎன்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்தவாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு(அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப்பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான்கேட்க வேண்டும்.

‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜாமாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை.ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத்தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.

‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில்அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர்வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின்கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச்சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள்முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார்கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப்பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனைஉயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தகையஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?

‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும்பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர்வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள்பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும், பெண்களை அவமானப்படுத்தியும்மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?

‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோஎன்று அஞ்ச வேண்டியதிருக்கிறது. இவர்கள் பேச்சும் நடத்தையும்அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக்கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம். குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர்தூபம் போடுகிறார்.”

- பெரியார் - ‘விடுதலை’

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பெரியார் நடத்திய ‘விடுதலை’ வெளியிட்ட செய்திகள்

இன்று மட்டுமல்ல, முதுகுளத்தூர் கலவர காலம் முதல் ஒடுக்கப்பட்ட மக்களினது போராட்டங்களுக்கு வெளிப்படையான, உறுதியான ஆதரவை எந்தவொரு அரசியல்கட்சியும் தந்ததில்லை. தங்களது வாக்கு வங்கியாக, ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்தும்நோக்கில் மட்டுமே அரசியல் கட்சிகளும், வலதுசாரி - இடதுசாரி தலைவர்களும் பாசாங்குசெய்து வருகின்றனர். விதிவிலக்காக திராவிடர் கழகமும், விடுதலை நாளேடும் மட்டுமேஅன்றைய சூழலில் ஆதரவு தளத்தில் செயல்பட்டன. ‘விசாரணையின் தீர்ப்பு’ என்றதலைப்பில் 12.10.57 அன்றைய ‘விடுதலை’ நாளேடு, ‘திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்கைது செய்யப்பட்டதை முன்னிட்டு சென்ற வாரத்தில் மதுரையில் கடையடைப்பு நடந்ததாம்(மதுரையில் கடையடைப்புச் செய்ய வேண்டுமென்று யாராவது ஒருவர் 4 முக்கியஇடங்களில் தட்டியில் எழுதி வைத்துவிட்டால் போதும்! காலித்தனத்துக்கு அஞ்சி எல்லாக்கடைகளையும் மூடிவிடுவார்கள்!) இந்தக் கடையடைப்பை மேற்பார்வையிடுவதற்காககம்யூனிஸ்ட் எம்.பி.யும், கண்ணீர்த் துளித் (தி.மு.க.) தலைவர் ஒருவரும், காங்கிரஸ்கண்ணீர்த் துளி தலைவரும் ஒரே மோட்டார் காரில் ஊர்வலமாகச் சென்றார்கள் என்றுபடித்தோம். எவ்வளவு ஒற்றுமைப் பார்த்தீர்களா? எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில்உணவு சாப்பிடுவதைப் போன்ற சர்க்கஸ்! சாதி வெறியர்களுக்கு ஆதரவாக சமாதானக்குழுவாம்! ஊர்வலமாம்! கடையடைப்பாம்! நிதி திரட்டலாம்! நீதிமன்ற வழக்காம்! கீழத்தூவல் கலவரத்தின்போது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்காவிட்டால்இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் சேதப்பட்டிருக்கும்; இன்னும் ஏராளமானஆதிதிராவிடக் குடிசைகள் தீக்கிரையாகியிருக்கும். சாதிவெறி எங்கிருந்தாலும் அதைஅடக்கி, ஒடுக்கியே தீர வேண்டும்’ என தலையங்கம் எழுதியது. தினகரனும் பெரியார்ஒருவரை மட்டுமே ஆதரவு சக்தியாகக் குறிப்பிடுகிறார்.

இராமநாதபுரம் கலவரப் பகுதிகளை மூன்று நாட்கள் பார்வையிட்டு, மதுரையில்பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சர்திரு.பி.என். தத்தார், ‘கடந்த பத்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடையேவிழிப்பும் எழுச்சியும் ஏற்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. சமத்துவ எண்ணமும் தோன்றஆரம்பித்திருக்கிறது. தங்களை தாழ்த்தப்பட்ட மக்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதிவந்த மறவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இவர்கள் நிலப்பிரபுத்துவ கொள்கையைக்கொண்டிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, மறவர்கள் முன்னிலையில்தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்துண்டு போடக் கூடாது; காலில் செருப்புப் போட்டுக் கொள்ளக்கூடாது. இப்போக்கை வளரும் தாழ்த்தப்பட்ட இளைஞர் சமுதாயம் எதிர்த்து வந்தது. இம்மனப்பான்மைகளுக்குள் மோதல் ஏற்பட்டதே இக்கலவரத்திற்கு மூலகாரணம். மேற்படிகலவரத்திற்கு உடனடிக் காரணம், இதர சமூகத்தினருடன் சம அந்தஸ்து கோரியதாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான திரு. இம்மானுவேல் சேகரன் என்பவர் கொலைசெய்யப்பட்டதுதான்’ என்றார். 

(விடுதலை) 8.10.57)
‘தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் நூலிலிருந்து

Friday, September 7, 2012

குறும்படப்போட்டி

துறவு மூலம் மனித உறவுகளை வளர்த்த அருள்தந்தை யூஜின் அவர்களின் நினைவாக நடத்தப்படும் குறும்படப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு படைப்பாளிகளை அன்புடன் அழைக்கிறோம். 


தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு அக்டோபர் 6 ஆம் நாள் கன்னியாகுமரிமாவட்டம் குளச்சலில் நடைபெறும் நினைவேந்தல் விழாவில் ரூ 60,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.


• முதல் பரிசு ரூ 20,000
• இரண்டாம் பரிசு ரூ 15,000
• மூன்றாம் பரிசு ரூ 10,000
• 3 ஊக்கப்பரிசுகள் ரூ 15,000


கருத்து : மனிதம்
கால அளவு : 15- 20 நிமிடங்கள்
வந்துசேரவேண்டிய கடைசிநாள் : செப்டம்பர் 29 2012
வடிவம் : டி வி டி ( நகல் )


அனுப்பவேண்டிய முகவரி:


R. D. Jaisankar, 
Plot no 3 First floor, 
F2 Vishwa Temple View apts,
Karnan Street, 
Velachery, 
Chennai 600042


Thursday, September 6, 2012

(காணொளி) ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும் - ஸ்டெல்லா ஆண்டோ பீட்டர்

'ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும்' என்ற தலைப்பில் 2-9-2012 அன்று சென்னையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக்கூட்டத்தில் ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் ஸ்டெல்லா அவர்கள் ஆற்றிய உரை

Tuesday, September 4, 2012

(காணொளி ) கணினித் தமிழ் வளரவேண்டுமானால் தமிழர்களே நாம் செய்யவேண்டியது... பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் உரை

இந்தியை ஆட்சிமொழியாக்க இந்திய அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் தமிழர்கள் விழிப்படையவேண்டும் என்றும் இன்றைய  நடுவண் மற்றும் மாநில அரசுகள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவேண்டுமானால், நாம் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் முடியும் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள்.


'ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும்' என்ற தலைப்பில் 2-9-2012 அன்று சென்னையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக்கூட்டத்தில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவை பாருங்கள். பரப்புரை செய்யுங்கள். 

கணினித்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுப்பதன் வழி நாம் ஆண்டோ பீட்டர் அவர்களின் இதுநாள் வரையான உழைப்புக்கு மரியாதை செய்வோம்

(காணொளி) இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய் - SAVE TAMILS MOVEMENT


திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை


கோவை குண்டு வெடிப்பு தொடர்பான பொய்வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான தோழர் ஆயிஷா இப்ரஹீம் அவர்களின் உரை 


தோழர் பரிமளா (SAVE TAMILS MOVEMENT)


தோழர் தடா ரஹீம் (இந்திய முஸ்லிம் லீக்)


இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமர்கயான்.சே

தோழர் செய்யது (SAVE TAMILS MOVEMENT)

Monday, September 3, 2012

மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள் - பெரியார்

நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது.


நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும் திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன்.

ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப் பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என் பேரில் விக்கிரகம் செய்து பூஜை, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள்கைக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.

ஏனெனில், வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார் என்று சொல்லப்பட்ட இழிகுல மக்கள் என்பவர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள்,நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும், உற்சவம் செய்யப்பட்டும் நாட்டுக்கோ அச்சமூகங்களுக்கோ ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன். அதன் பேரால் அவர்கள் கதைகளைச் சொல்லி சிலர் வயிறு வளர்க்கின்றார்கள். சிலர் சோம்பேறிகளாய் வாழ்கிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதுபோலவே இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த சுவாமிகள்; இராமலிங்க வள்ளலார் என்கிற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்குத் தெரியும். 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100க்கு ஒருவருக்கு நடந்த நன்மை என்ன? அதுபோலவே இன்று பிரத்தியட்சத்தில் இருக்கும் காந்தி மகாத்மாவும்,திருப்பாலக்குடி மஸ்தான் வணங்கப்படுவதும், அவதாரமாகவும் நபியாகவும் கருதப்படுவதும், அதோடு மாத்திரமல்லாமல் அவர்களது மலம் முதல் சுவாசக்காற்று வரை மதிக்கப்படுவதும் எனக்குத் தெரியும்.

திரு. காந்தியைவிட மஸ்தான் சாயுபுக்கு உண்மையிலேயே மதிப்பு அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அனேகர் திரு. காந்தியை மனிதராகக் கருத வேண்டுமென்றே தங்கள் சுயநலத்திற்கும், ஆதிக்கத்திற்கும், வயிற்று வளர்ப்புக்கும் திரு. காந்தியை ஏமாற்றுவதற்கும் அவரை மகாத்மா என்று சொல்லுகிறவர்கள்,திருப்பாலக்குடி சாயபுவை உண்மையிலேயே தெய்வத் தன்மை பொருந்தியவராக மதித்துப் பூஜித்து வருகிறார்கள். எங்கள் ஊரிலிருந்து அநேக பி.ஏ., பி.எல்., எம்.ஏ.,முதலியவர்களும், உயர்ந்த சாதியார் பிராமணர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுமே போய் அவரது எச்சிலை சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். எச்சில் கலந்த தண்ணீரே பழனி பஞ்சாமிர்தம் போல் டின்னில் அடைத்துக் கொண்டு வந்து இருக்கின்றார்கள். ஆனால், இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன்.

திருப்பாலக்குடி சாயுபை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணாத காரணத்தால் அவரது எச்சில் கலந்த தண்ணீரைக் குடித்து லாபம் பெறலாம் என்று கருதி மக்கள் மூடர்களாக வேண்டியதாயிற்று. அதுபோலவே திரு. காந்தியை மகாத்மா என்று கருதியதால், அவரது காரியத்தால் ஏற்படும் தீமைகளும், நஷ்டங்களும், இழிவுகளும் எல்லாம் அதற்கு மாறாகக் கருப்பட வேண்டியதாயிற்று. ஆனால், என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப் பலன் ஏற்பட வேண்டாம் என்றே கருதுகிறேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடைய வேண்டாம். எதையும் நம்ப வேண்டாம். நான் கூறுபவைகளை வெகுஜாக்கிரதையாய் அலசிப் பார்க்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஆகையால் நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும். உதாரணமாக இன்றைய கீதை என்பதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப் பின் முரண், மக்களை மக்கள் இழிவுபடுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்குகின்றதா? ஏன் விளங்கவில்லை? அதைச் சொன்ன மனிதனை இன்னான் என்றோ எதற்காகச் சொன்னான் என்றோ உணர முடியாமல், பகவான் சொன்னார் என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக மக்கள் எல்லோருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புகழப்படுகின்றது. அதுபோலவேதான் புராணங்கள்,சாத்திரங்கள், வேதங்கள் என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்படுகின்றன.

ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப் பெற வேண்டுமானால், நான் அயோக்கி யனாகவும்,பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும் கருதும்படியாகப் பிரச்சாரம் செய்பவர்கள். உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்.

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் ‘இராமசாமிக் கழுதைக்கு செருப்படி’ என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுகவில்லை. இங்கும் ‘இராமசாமி கழுதை செத்துப் போய்விட்டது’ என்றும், ‘இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி’ என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே இராமசாமி மனைவி கற்புக் கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து மாதம் மும்மாரி மழை வரச் செய்து பயன்பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளிலிருந்து ஒரு அளவுக்கு நான் வெற்றிப் பெற்றுவிட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெற வேண்டு மென்று கருதி இருந்தாலும் நானே எனக்குத் தீங்கு தேடிக் கொண்டவனேயாவேன்.

பெரியார், ‘குடிஅரசு’ 11.10.931

Sunday, September 2, 2012

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வில் பங்கேற்க கொளத்தூர் தா.செ. மணி அழைப்பு

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான 11.9.12 செவ்வாய் அன்று பிற்பகல் 2 மணியளவில் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வீரவணக்க - ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் க. துரைசாமி தலைமையில் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர்,தாமரைக் கண்ணன் மண்டல அமைப்புச் செயலாளர்கள், தென் மாவட்டங்களின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒன்றுகூடி அங்கிருந்து பரமக்குடிக்குப் பயணமாக உள்ளனர்.

வீரவணக்க நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் 11.9.12 செவ்வாய் காலை சரியாக 10 மணிக்கு செம்பட்டிக்கு வருமாறு அழைக்கிறோம். மற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் தத்தம் மாவட்டங்களில் ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை, ஜாதி ஒழிப்பு உறுதி மொழியேற்று பொதுக் கூட்டங்களாக நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- கொளத்தூர் தா.செ. மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்