வியாழன், 6 செப்டம்பர், 2012

(காணொளி) ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும் - ஸ்டெல்லா ஆண்டோ பீட்டர்

'ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும்' என்ற தலைப்பில் 2-9-2012 அன்று சென்னையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக்கூட்டத்தில் ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் ஸ்டெல்லா அவர்கள் ஆற்றிய உரை

1 கருத்து:

​செல்​லையா முத்துசாமி சொன்னது…

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அன்பு தனசேகர் அவர்கள் முகநூலில் இட்ட கருத்துரை:

ஆண்டோ எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அலுவலகப் பணியில் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டதால் நிகழ்வுக்கு வர இயலவில்லை. நெல்சன் மாணிக்கம் சாலையில் 20ஆண்டுகளுக்கு முன்னர் சாப்ட்வியூ கம்பூட்டர் என சிறிய அளவில் கணிணி பயிற்சி மய்யம் துவங்கியதில் இருந்து நண்பர்.

எனக்கு தெரிந்து சென்னையில் தமிழ்வழியில் கணிப்பொறியில் தட்டச்சு மற்றும் வடிவமைப்பு பணிகளை பயிற்சி அளித்த முதல் நபராக ஆண்டோதான் இருந்திருப்பார். எனது திருமண அழைப்பிதழை அவருடைய மய்யத்தில் அவருடன் பணியாற்றி இன்று தனியாக பயிற்சி மய்யம் நடத்தும் தோழர். ரகு அவர்களின் துணையோடு தமிழில் எளிமையாக எனக்கு வடிவமைத்து தந்தார். அவர் வளர்ச்சியுற்று அதே சாலையில் மற்றொரு அலுவலகத்திற்கு சென்றவுடன் சந்திக்கும் போதெல்லாம் நிறைய செய்திகளை அரசியல், கடவுள் மறுப்பு, தமிழுணர்வு ஈழம் ஆகிய செய்திகளைப் பற்றி நிறைய நேரம் அளவளாவுவார்.

நீண்ட நாட்களாக பெரியார் இயக்கத்திற்கு நிரந்தர நல்ல நன்கொடையாளர். எப்போது சந்தித்தாலும் வெறும் கையுடன் அனுப்ப மாட்டார். பாசத்தோடு பழகுவார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் அக்கறை கொண்டு வெளி நாடு செல்லும்போதெல்லாம் புதிய செய்திகளை, புத்தகங்களை அளிப்பார். சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் காட்சியின்போது நண்பர் அன்பரசுவுடன் செல்லும்போது அவருடைய கடைக்கு சென்று அவருடன் அளவளாவி அவரின் புதிய படைப்புகளை பார்க்காமல் வந்ததில்லை.இம்முறை செல்லும்போது மதிய உணவு நேரம் எங்களைப் பார்த்தவுடன் பிரியாணி இருக்கிறது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று வற்புறுத்தினார். அவரை வைத்துதான் புத்தகக் காட்சியில் என்னமாதிரியான புத்தகங்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்ற நிலவரத்தை அறிந்துகொள்வோம்.

ஆண்டோ இனி இருக்கமாட்டார் அவர் இல்லாதது எங்களுக்கு வெற்றிடமே. நினைத்தாலே மனம் கனக்கிறது. அவர் வெளியிட்ட அனைத்து சி.டிக்களின் தொகுப்பையும் எனக்கு அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்தார். பணம் தர முன்வந்தபோது. நீங்கள் இயக்கப் பணியாற்றுபவர்கள் பல செலவீனங்கள் உங்களுக்கு இருக்கும் வேண்டாம் என்று மறுத்தவர். இன்றளவும் திருக்குறள் பாடல்கள், சிறுவர் பாடல்கள் அடங்கிய அந்த சி.டிக்களின் தரத்தை யாரும் இன்னும் மிஞ்சவில்லை.

எங்கள் நண்பர்கள் குழுவிற்கு அவரின் இழப்பு பெரும் துயரத்தை அளித்தது. எப்போது அவரை பார்த்தாலும் அவரின் உடல் பருமனைப் பற்றி பேசுவேன் வாய்விட்டு சிரித்து என்ன செய்வது நான் ஒன்றும் செய்யாமலேயே உடல் பெருக்கிறது என்று சொல்வார். அவ் உடல் பெருக்கமே கூட அவருக்கு மரணத்தினை அளித்து இருக்கலாம். சிறிய வயதில் பெரிய இழப்பு. அவரின் துணைவியாருக்கும் மற்றவர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.