Wednesday, October 31, 2012

வர்ணத் திமிர் பிடித்த தினமலர் கும்பலே பதில் சொல்! - விடுதலை இராசேந்திரன்

“அய்யர் - என்றால், வெறும் அய்யரைமட்டும் குறிப்பிடுவது இல்லை. அய்யர், அய்யங்கார், மதவா, கேரள நம்பூதிரி, ராவ் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடும் ஒரு பொது சொல்தான், பிராமணர்கள் என்பது. இங்கே வர்ணாசிரமம் எங்கே நுழைந்தது? 

“வழக்கில் இல்லாத வர்ணாசிரமம் என்ற சொல்லை வைத்து இவர்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.” 

- இப்படி ஒரு பார்ப்பனரின் கடிதத்தை தினமலர் பார்ப்பன ஏடு (அக்.30) வெளியிட்டிருக்கிறது. 

அய்யர், அய்யங்கார் என்றால் அதுகூட சாதிகளைத்தான் குறிக்கிறது. ஆனால், பிராமணாள் என்றால் வர்ணாசிரமத்தைக் குறிக்கிறது. பெரும்பான்மை மக்களை சூத்திரர் என்று இழிவுபடுத்துகிறது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் அளித்தப் பேட்டிக்குப் பதிலாக இந்த பார்ப்பனர் கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

தினமலர் பார்ப்பனருக்கு சில கேள்விகளை முன் வைக்கிறோம். 

அய்யர், அய்யங்கார் சாதிகளைக் குறிக்கும் ஒட்டு மொத்தமான பிராமணாள் என்ற பொது சொல் எங்கிருந்து குதித்து வந்தது? தினமலர் சவுண்டிக் கூட்டம் எழுதுவதுபோல் அது அய்யர், அய்யங்கார் சாதிகளைக் குறிக்கக்கூடிய பொது சொல்மட்டும் தானா? இல்லை; இல்லவே இல்லை. பிறகு பிராமணாள் என்பதற்கு என்னதான் பொருள்? 

• பூமியில் எல்லா உயிர்களுக்கும் பிராமண தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு கடவுளால் முழுஅதிகாரம் பெற்ற தேசிய பாதுகாப்பு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவனே பிராமணன் . அதற்காகவே அவன் பூமியில் பிறந்துள்ளான். இதைத்தான் மனுதர்மம் (அத்.1 - சுலோகம் 99) இவ்வாறு கூறுகிறது. 

“பிரஹ்மணோ ஜாயமானோ ஹி ப்ரதிவ்யா 
மபிஜாயதே 
ஈஸ்வர: சர்வபூதானாம் தர்மகோசஸ்ய குப்தயே 

• பூமியில் உள்ள அனைத்து உடைமைகளுக்கும் (கிரானைட் சுரங்கம் - அலைக்கற்றை - கூடங்குளம் அணுமின் நிலையம் - வளைகுடா நாட்டு எண்ணெய்க் கிணறுகள் உட்பட) யாவும் பிராமணனுக்கே சொந்தம். ஏன்? அவன்தான் எல்லோருக்கும் மேலான உயர்... உயர்... உயர்ந்த குடியில் பிறந்தவன். இதைத்தான் மனுதர்மம் இவ்வாறு கூறுகிறது. 

“சர்வஸ்வம் பிராமண ஸ்யேதம்யத் கிஞ்சிஜ் ஜகதீ கதம் 
ஸ்ரைஷ்ட் யேனாபி ஜனேனேதம் சர்வம் வை பிராமணோர் கதி” (மனு அத்.1 - சுலோகம் 100) 

• பிராமணன் அறிவாளியா? முட்டாளா? என்பது முக்கியமல்ல; அவன் தினமலர் பார்ப்பானாகக் கூட இருக்கலாம்; அல்லது காஞ்சிபுரத்து கோயில் கர்ப்பக்கிரகத்தை படுக்கை அறையாக மாற்றிக் கொண்ட தேவநாதனாக இருந்தாலும் சரி, கொலைக் குற்றவாளி ஜெயேந்திரனாக இருந்தாலும் சரி; எவனாக இருந்தாலும் பிராமணன் எல்லோருக்கும் மேலான தெய்வம் . எப்படி என்றால், நெருப்பு (அக்னி) பிணத்தை எரிக்கப் பயன்படுத்தினாலும், அதே நெருப்பு யாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதைப் போல், பிராமணன் எவ்வளவு இழிவான வேலையை செய்தாலும் சரி, அவனைத்தான் ஏனைய “சூத்திரர்கள்” கும்பிட்டு வணங்க வேண்டும். காரணம், பிராமணன் சாதாரண மனிதன் அல்ல; மனிதனுக்கும் மேலான தெய்வம். இதைச் சொல்வது - மனுசாஸ்திரம் (அத்.9 - சுலோகம் 9) 

“ஸ்மசானேஷ்வபி தேஜஸ்வீ பாவகோ நைவ 
துஷ்யதி 
ஹூயமானஸ்ச யஜ்னோஷு பூய ஏவாபிவர்த்த” 
- 318. 

ஏவம் யத்யப்ய னிஷ்டேஷு வர்த்தந்தே 
ஸர்வகர்மஸு 
ஸர்வதா ப்ராஹ்மணா: பூஜ்யா: பரமம்தைவதம் 
ஹிதத்.” - 319 

(மனு அத்தியாயம் 9) 

• பிராமணன் என்பவன் தெய்வம். அவன்தான் கடவுளை நேரடியாக வணங்கும், யாகங்களை நடத்தும் உரிமை கொண்டவன். சத்திரியன் யுத்தம் செய்ய வேண்டியவன்; வைசியன் - வணிகம் செய்ய வேண்டியவன்; சூத்திரன் - அடிமையாக, அடிமைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டியவன். 

“பிராமணா சத்திரியா வைஸ்யா மத்யே சூத்திராஸ்ய பூயச; 
இஜ்பா யுத்த பணாசேவா ஸ்வர்த்தயந்தோ 
ஸ்வயஸ்திகா.” 
(உமா சம்ஹிதா, அத்.8) 

• “இந்த உலகமே கடவுளுக்குக் கட்டுப்பட்டதுதான். அவர் சர்வசக்தியுள்ளவர் என்பதும் உண்மைதான். ஆனால், அந்தக் கடவுளையே கட்டுப்படுத்தக் கூடிய அணுசக்தி வேதமந்திரங்கள்தான்” என்கிறது மனுதர்மம். சூத்திர சிற்பி கல்லால் செதுக்கும் சிலை, கடவுளாக மாறுவது எப்போது? பிராமணனின் மந்திரம் அந்த கல்லுக்குள் ஏற்றப்படும்போதுதான், அத்தகைய சக்தியைப் பயன்படுத்தும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தை இயக்கும் ரிமோட் யாரிடம் இருக்கிறது என்றால், அது பிராமணர்களிடம்தான். ரிக்வேதம் - 62வது பிரிவு, 10வது சுலோகம் - அதைத்தான் கூறுகிறது. 

“தெய்வாதினம் ஜகத் சர்வம் 
மந்ரா தீனம் து தெய்வதம் 
தன் மந்திரம் பிரம்மணாதீனம் 
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்.” 

- இப்படி ஏராளமாகப் பட்டியலிட முடியும். 

- பிராமணன் என்பது பார்ப்பன சாதிகளைக் குறிக்கும் பொதுவான சொல் என்று பசப்பும் தினமலர் அக்கிரகாரக் கூட்டத்தைக் கேட்கிறோம்; மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள சான்றுகளை மறுக்கத் தயாரா? 

அல்லது இந்த ஸ்மிருதிகளை - சாஸ்திரங்களை நாங்கள் ஏற்கவில்லை என்று நேர்மையிருந்தால் யோக்கியர்களாக இருந்தால் அறிவிக்கத் தயாரா? அல்லது இவைகளை அரசு தடை போடவேண்டும் என்று வலியுறுத்துவார்களா? 

• பிராமணன் - சூத்திரன் இருவருமே பிரம்மாவின் உடலில் அடங்கியிருப்பவர்கள். பிரம்மாவின் தலை - பிராமணன்; கால் - சூத்திரன் - என்று புருஷசுக்தம் என்ற ஸ்மிருதி கூறுகிறது. இதன் பொருள் என்ன! பிராமணன் என்ற தலையோடு, சூத்திரன் என்ற காலை வெட்டி எறிந்துவிட முடியாது. இரண்டுமே பிரித்துப் பார்க்கவே முடியாத ஒரே உடல் அமைப்பு. ஆக, பிராமணன் என்று ஒரு பிரிவு அறிவித்துக் கொண்டாலே, ஏனைய பிரிவினரை தாமாகவே சூத்திரர் ஆகிவிடுகிறார்கள். அதனை ஒரே அங்கமாக்கி உறுதிப்படுத்திவிடுகிறார்கள். அந்த சூத்திரன் யார் என்பதையும், மனுஸ்மிருதி விளக்கிவிடுகிறது. யார் இந்த சூத்திரர்கள்? 

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்; 2. கைதியாகப் பிடித்து வரப்பட்டவன்; 3. பிராமணனிடம் பக்தி காரணமாக அடிமை வேலை செய்யக்கூடியவன்; 4. விபச்சாரியின் மகன்; 5. விலைக்கு வாங்கப்பட்டவன்; 6. ஒருவனால் மற்றவனுக்கு கொடுக்கப்பட்டவன் (இலவச ஆடு, இலவச ரேஷன் அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைப் போல); 7. தலைதலைமுறையாக அடிமைவேலை செய்கிறவன். (மனுசாஸ்திரம். அத்.8 - சுலோகம் 415) 

ஆக, பிராமணன் என்றால் கடவுளுக்கே அதிபதி; உலகத்துக்கே உரிமையாளன்; எல்லாவற்றிலும் உயர்ந்தவன்; கிரிமினல் என்றாலும் வணங்கவேண்டியவன்; சூத்திரர் களை அடிமையாக நடத்தக்கூடிய உரிமை பெற்றவன்; சூத்திரர்கள் விபச்சாரி மக்கள் என்று அறிவிக்கும் அதிகாரம் பெற்றவன் - என்பதை மனுசாஸ்திரங்களும் வேதங்களும் ஸ்மிருதிகளும் கூறும்போது அது சும்மா, ஒரு பொதுவான சொல்தான் என்று தினமலர் கும்பல் சப்பைக்கட்டு கட்டுவது காதில் பூ சுற்றுவது தானே? 

வழக்கில் இல்லாத வர்ணாசிரமத்துக்கு போராட்டமா என்று ஏகடியம் பேசும் பூணூல் கூட்டத்தைக் கேட்கிறோம் - வர்ணாசிரமம் வழக்கற்றுப் போய்விட்டதா? - பதில் சொல்! 

• பார்ப்பான் - காயத்திரி மந்திரம் ஓதி முதுகை சொரியும் பூணூலைப் போட்டுக் கொள்வது பிராமணன் என்ற வர்ணாசிரம அடையாளத்தின் வெளிப்பாடு அல்லவா? 

• கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ஆண்டவனிடம் மந்திரம் போட்டு, பக்தர்களின் கோரிக்கை மனுக்களை தீர்த்துவைக்கும் உரிமை தங்களுக்கே உண்டு என்று கூறி, உச்சநீதிமன்றம் வரை ஓடுவது ஏன்? கடவுள் பிராமணன் மந்திரத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் - என்ற வர்ணாசிரம அடிப்படையில் தானே? மறுக்க முடியுமா? 

• பார்ப்பனப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களுமே அர்ச்சகர்களாகவோ, பூஜை உள்ளிட்ட எந்த சடங்குகளும் செய்யக்கூடாது என்ற சமூக விதியைத் திணித்து வைத்திருப்பது எந்த அடிப்படையில்? பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமைப்பட்டு வாழவேண்டியவர்கள் என்ற வர்ணாசிரம அடிப்படையில்தானே? 

• வர்ணாசிரமக் கலப்பு ஏற்பட்டு அது சாதிகளாக மாற்று உருவம் எடுத்த பிறகும் அந்த சாதிகளுக்கான சடங்குகளை வாழ்க்கை முறையை சாதிகள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல், கண்காணித்து, சாதிக்கேற்ற திருமண சடங்குகளை, மந்திரங்களைத் திணித்து வைத்திருப்பது எது? வர்ணாசிரமம்தானே! 

• இப்படி சாதிக்கலப்பு திருமணங்களை எதிர்த்து பல்வேறு சூத்திர சாதிகளே தொடை தட்டிக் கிளம்பி, இன்றைக்கும் இயக்கம் நடத்துவதற்கு எது அடிப்படை? வர்ணாசிரமம்தானே! 

• 18 வயதுக்குள்ளேயே, குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குத் திருமணம் நடப்பதை, அதை காவல்துறையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கண்டுபிடித்து தடுத்து வருகிறார்கள் என்று செய்திகள் வருகின்றனவே, இந்த குழந்தைத் திருமணங்களுக்கு அடிப்படை என்ன? பால்ய வயதிலேயே பெண்களுக்கு விவாகம் செய்துவிடவேண்டும் என்ற வர்ணாசிரமம் தானே! வர்ணாசிரமம் வழக்கற்றுப் போய்விட்டதா? 

• இப்போதும் கிராமங்கள்தோறும் ஊரையும் சேரியையும் பிரித்து வைத்திருப்பது எது? சங்கர ஜாதி என்ற பஞ்சமர்களோடு சேர்ந்து வாழக்கூடாது என்ற வர்ணாசிரமம்தானே! 

• சூத்திர வர்ணப் பிரிவில் அடக்கப்பட்டுள்ள சாதியினர், தங்களுக்கு பொதுவான சொல் சூத்திரர் என்பதை ஏற்க மறுத்து, சாதிகள் அடையாளத்தை மட்டுமே ஏற்கும் நிலையில், பிராமணப் பிரிவில் அடங்கியுள்ள அய்யர், அய்யங்கார் கும்பல், மட்டும் தங்களை பிராமணன் என்ற பிரிவிலேயே அடையாளப் படுத்துவதும் சங்கம் அமைப்பதும் எந்த அடிப்படையில்? பிராமணனே உயர்ந்தவன் என்ற வர்ணாசிரமம் வழங்கியுள்ள குலப்பெருமை அடிப்படையில்தானே? அதற்கு ஆதரவாக வழக்காடக் கிளம்பியிருக்கும் தினமலர் புத்திக்குள் புகுந்து கிடப்பதும் வர்ணாசிரமம்தானே! 

• ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடு நமது எம்.ஜி.ஆர். . பார்ப்பனர் பூணூல் போடுவதை இப்போதும் நியாயப்படுத்துவதும், பார்ப்பன முதலமைச்சர் ஜெயலலிதா, வர்ணாசிரம எதிர்ப்பாளரான பெரியார் சிலைக்கு, அவர் பிறந்த நாளில் மாலை போட வராமல், சாதி வர்ணாசிரமக் காவலரான முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மட்டும் மாலைபோட ஓடுவதும் வர்ணாசிரமத்தின் வெளிப்பாடுதானே? 

• புதுடில்லி ராமலீலா மைதானத்தில் வர்ணாஸ்ரமம் போற்றிய இராமனை எதிர்த்த திராவிட அசுரர்கள் இராவணன், கும்பகர்ணன் உருவத்தை தீயிட்டு எரித்து விழா கொண்டாடுவதும் அதில் சோனியாவும் மன்மோகனும் பங்கேற்று மகிழ்ச்சிக் கூத்தாடுவதும் வர்ணாசிரமம்தானே! 

வர்ணாசிரமம் எங்கே வழக்கற்றுப் போய்விட்டது? பதில் சொல்! 

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் தகவல் தொடர்புகளும் அறிவியல் வளர்ச்சியும் உலகத்தையே நெருக்கமாக இணைத்துவரும் யுகத்தில் வேதகாலத்து கருத்துகளை சுமந்து கொண்டு பூணூலையும் உச்சிக் குடுமியையும் பஞ்சகச்சத்தையும் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டு வர்ணாசிரம வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவிக்கும் பெரியாரியல் - அம்பேத்கரிய - மார்க்சிய - சனநாயக - சமூகநீதி இயக்கங்களையெல்லாம் காலில் போட்டு மிதித்துக்கொண்டு ஆரிய தர்பார் நடத்துவது, அசல் வர்ணாசிரமப் புத்திதானே அல்லாமல் வேறு என்ன? அக்கிரகாரங்களை தினமலர்களை துக்ளக்குகளை எச்சரிக்கிறோம்! 

ஆரியத் திமிரை, பார்ப்பன இறுமாப்பை அடக்கும் வரை இந்த சமூகப் புரட்சி ஓயாது; ஓயாது! 

அது செத்து மடியும் வரை பெரியாரின் பேரனுக்குப் பேரன் களத்தில் நிற்பான்! 

- இராசேந்திரன் 


நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம் (திராவிடர் விடுதலைக் கழக வார ஏடு)

Sunday, October 28, 2012

25 ஆண்டுகால அணுஉலை எதிர்ப்பு போராட்ட வரலாறு (காணொளி)

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) சார்பில் "கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு: அறிவியல் மறுப்பா?" என்ற தலைப்பில் இருபத்தைந்து ஆண்டுகால போராட்ட வரலாற்றை முன்வைத்து சட்ட விளக்க அரங்கக் கூட்டம் கடந்த 20-10-2012 அன்று சென்னையில் இலயோலா கல்லூரியில் நடைபெற்றது. 
Tuesday, October 23, 2012

அறிவுக்குப் பொருந்தாத ஆபாசப் பண்டிகை. சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜையைப் புறக்கணிப்போம்!

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை)

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத ``மக்குகள்" என்று சொல்லிக் கொண்டு இருக்கின் றார்கள்.

முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். 

அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவமெடுத்து ஆண்மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக மீண்டும் சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை கூறுகிறது.

இரண்டாவது,

ஒரு விதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின் போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒருகுடத்தில் விட்டு வைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேத்தி யாகிறாள். எனவே சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் பார்ப்பனப் புனைவுப்படி மிகவும் ஆபாசமும் ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயம். 

அதாவது, சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வம் ஆனதால், வித்தையின் பயன் தொழில் என்றும், தொழிலுக்கு ஆதாரமானவை ஆயுதங்கள் என்றும் கருதிக்கொண்டு, சரஸ்வதி பூசை, ஆயுத பூசை என்று ஒவ்வொரு நாளைக் குறித்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கின்றார்கள்.

இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங் களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங் களையும் , தராசு, படிக்கல், அளவு மரக் கால், படி , உழக்கு, பெட்டி முதலியவற்றையும்; தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கை களையும், சேலைகளையும் நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று அதனால் வரும் படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங் களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதைவிட இதனால் யாதொரு நன்மையும ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.

சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக் குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக்கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. 

அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்பிடுவார்களே தவிர அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ, தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள். 

அதுபோலவே புத்தகங்களையும், கூளக்குப்பை களையும் அள்ளி அவற்றிக்குப் பொட்டுவைத்துப் பூசை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100- க்கு 5 பேர்கள் என்று தான் உள்ளார்கள்.

இவ்வளவு ஆயுத பூசை - சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதியின் சாதியைச் சேர்ந்த பெண்கள் 1,000 த் துக்கு 9 பேர்கள் படித்து உள்ளார்கள் இதன் காரணம் என்ன? நாம் செய்யும் பூசைகளை சரஸ்வதி அங்கீகரிக்கவில்லையா? 

அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயத்திற்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கிற தெய்வமே ஒரு பொய்க் கற்பனையா? என்பவை யாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத் தான் இருக்க வேண்டும்.

இவையாவும் சுத்த முட்டாள்தனமான கொள்கைகள் என்பது தான் எனது அபிப்பிராயம். அயல்நாட்டானைப் பார்த்தால் அவனுக்கு சரஸ்வதி என்ற பேச்சோ கல்வித்தெய்வம் என்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது. அன்றியும், நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய்க் கருதிக்கொண்டும், தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும் நமக்குக் கல்வி இல்லை. 

ஆனால் வெள்ளைக்காரன் மலங்கழித்தால் சரஸ்வதியைக் கொண்டே (காகிதத்தை) மலம் துடைத்தும் வருகிறான். ஆனால் 100-க்கு 60 பெண்கள் அவர்களில் படித்து இருக்கிறார்கள் உண்மையிலேயே சரஸ்வதி என்ற தெய்வம் ஒன்று இருக்கும் என்றால், பூசை செய்பவர்களைத் தற்குறியாகவும் மலம் துடைப்பவர்களை அபார அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையில் யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியா பார ஆயுதம் ஆகியவைகள் சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாய் இருக்குமானால், அதைப் பூசை செய்யும் இந்த நாடு அடிமைப் பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவும், சரஸ்வதியைக் கனவிலும் கருதாது, சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து ``முட்டாள்கள், அறிவிலிகள் , காட்டு மிராண்டிகள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள் அரசாட்சி யுடனும், தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூசையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகிறது என்று பாருங்கள்! 

இராசாக்கள் கொலு இருப்பது, பொம்மைகள் கொலு இருப்பது, சாமிகள் கொலு இருப்பது , இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, அறிவுச்செலவு செய்வது, லட்ச ரூபாய்க்குப் பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேளவாத்தியம் வாழைக்கம்பம், பார்ப்பனர் களுக்குத் தட்சணை, சமாராதனை , ஊர்விட்டு ஊர் போக ரயில் சார்ஜ் ஆகிய எவ்வளவு செலவா கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள். 

இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா? என்று கேட்கிறேன். ஒரு வருஷத்தில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்ற கணக்குப்பார்த்தால் , மற்றப் பண்டிகை, உற்சவம் புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை .

திராவிடர் விடுதலைக் கழகம்
95, நடேசன் சாலை - அம்பேத்கர் பாலம் மயிலாப்பூர் - சென்னை . 600004
04424980745

Wednesday, October 17, 2012

குறும்படங்கள் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்

குறும்படங்கள் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்

நாள்: 21-10-2012 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு

இடம் : தலைமை அலுவலகம், திராவிடர் விடுதலைக் கழகம்

95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 4.
தொடர்புக்கு : 044 - 24980745, 94456 82092

கருத்துரை:
தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர்.திருநாவுக்கரசு
ஆசிரியர், நிழல்

தோழர்.சீனிவாசன்
காஞ்சனை திரைப்பட இயக்கம்

தோழர்.ஜான் பாபுராஜ்
எழுத்தாளர்

சுயமரியாதை கலை-பண்பாட்டுக் கழகம் தயாரிக்கவிருக்கும் குறும்படங்கள்; மற்றும்
ஆவணப்படங்கள் குறித்த கலந்தாய்வில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்.

மனுதருமத்தின் கேடாக இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வை குறும்படமாக்கும் முயற்சியில் நீங்களும் பங்களிக்கலாம்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புக்கான உதவியை சுயமரியாதை கலை-பண்பாட்டு இயக்கம் செய்யும்.Thursday, October 11, 2012

ஆனந்த்பட்வர்த்தனின் “ஜெய் பீம் காம்ரேட்“ ஆவணப்படம் சென்னையில் திரையிடல்


ஆனந்த்பட்வர்த்தனின் “ஜெய் பீம் காம்ரேட்“ ஆவணப்படம் திரையிடல்.

நாள்: 14-10-2012 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு

இடம் : தலைமை அலுவலகம், திராவிடர் விடுதலைக் கழகம்
95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 4.
தொடர்புக்கு : 9841296848, 9962934373.

Tuesday, October 2, 2012

குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர்இன்று முழுவதும் குடி, காந்தி, நல்லொழுக்கம் இப்படியான பதிவுகளால் நிரம்பி வழிகின்றன முகநூல் தகவல்கள்.

கொடுக்கிற காசுக்கான தரமில்லை என்பதாலும் குடிகாரர்களின் வயிற்றை (உடல் நலத்தை) கருத்தில் கொண்டு மது தயாரிக்கப்படுவதில்லை என்பதாலும் இன்றைய சரக்குகள் ஒழிக்கப்படவேண்டியவைதான். மற்றபடி அதுவும் ஒரு உணவுப்பழக்கமே.

சென்ற வருடம் இதே நாளில்தான் குடிகாரரான என் அப்பா தற்கொலை செய்துகொண்டார்.

எனக்குத் தெரிந்து என் அப்பா யாருடைய குடியையும் கெடுக்கவில்லை என்பதோடு எங்கள் குடியையும் கெடுக்கவில்லை.

பகலில் அவரிடமிருந்து விலகியும் அளவான சொற்களிலும் உரையாடும் நான் மாலையில் அவரது கண் சிவந்த நேரத்தில் இலகுவாகிவிடுவேன். அவரும்கூட.

பள்ளிப்பருவத்தில் அரைவேக்காட்டுத்தனமான எனது அரசியல் வாதங்களையும் பொருட்படுத்தி விவாதிப்பார். செல்லக்குட்டிப்பயல் செல்லக்குட்டிப்பயல் என்ற சொற்களால் பொங்குவார். குடிநேரத்தில் மட்டும் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளும் அவருக்கு மற்ற நேரங்களில் வெளிப்படுத்திக்கொள்தலும் ஒரு நாடகம் என அமைதிகாப்பார்.

நானொரு பெரியாரிஸ்ட்டாக என்னை நினைத்துக்கொண்டாலும் அம்மாவின் பெயர் தவிர்த்து என் பெயருக்குப் பின்னால் முத்துசாமி என சேர்த்துக்கொண்டது அவர் குடிகாரராக இருப்பதால்தான். ஊரே கொண்டாடும் குணத்துக்குச் சொந்தக்காரியான என் அம்மாவை விட்டுவிட்டு என் அப்பாவின் அநாதைத்தனத்தை துடைத்தெறியவே அவர் பெயரை இணைத்துக்கொண்டேன்.

இருக்கட்டும் சொல்லவந்தது விட்டுவிட்டு அவர்பின் அலையத்தொடங்கிவிட்டேன். 

அதாவது, பல்லாண்டுகளாக அவரது குடி விமர்சனத்துக்குள்ளான ஒன்றுதான். என்றாலும் அது ஒரு கொண்டாட்ட மனநிலையையே அவருக்கு கொடுத்துவந்தது. வாழ்க்கையில் அவர் அழுது நான் பார்த்ததில்லை. ஆனால், கடைசி காலத்தில் நொய்மையான மனதைப் பெற்றிருந்தாரோ என்னவோ நானறியேன். அல்லது முன்னைப்போலன்றி ஊராரின் குற்றச்சாட்டுகள் உறவுகளின் உரிமைக்குரலாக இல்லாமல் தடிக்கத்தொடங்கிவிட்டனவோ என்னவோ. எனது சிற்றூர் தனது இயல்பைத் தொலைத்திருக்கலாம்.

ஏதோ ஒன்று அவரது கழுத்தை இறுக்கிவிட்டது.

குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர்.


முகநூல் (facebook)கருத்துரைகள்:பிரபா அழகர்: குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர்

Chellappa Nambi: குடி, புகை, பெண் முதலிய எந்தப் பழக்கமும் இல்லாத எளிய தகப்பன்கள் பல குடும்பங்களில் அமைதியை குலைத்துள்ளார்கள். அப்படியே பிள்ளைகளும். குடிப்பவன் அயோக்கியன் குடிக்காதவன் யோக்கியன் என்பதை போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை.

ரிப்போர்ட்டர் சோமு: குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர் - மிகச் சரியான கருத்து. அதே நேரத்தில் குடிகாரர், யார் குடியையும் கெடுத்ததில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். குடிகாரர் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறார். தன் குடும்பத்தையும்... குறிப்பாக நம்பி வந்த இல்லாலையும். நான் குடியை விட்ட இ்ந்த ஒரு வருடத்தில் நானும் என் குடும்பமும் முக்கியமாக என் இல்லாளும் மகி்ழ்ச்சியாக இருக்கிறோம். ஆனாலும் அப்பாவின் நினைவுகளை அற்புதமான எழுத்து நடையில் வடித்திருக்கிறீர்கள். மனம் கனத்தது.

செல்லையா முத்துசாமி: நண்பர் சோமு, நான் என் அப்பாவை முன்வைத்துப் பேசுகிறேன். இது உங்களுக்கும் பொருந்த வேண்டும் என்கிற அவசியமில்லை. அதேநேரம் சில தன்னிலைகளின் கோளாறுகளை நாம் குடியின் பொருட்டு எல்லோரின்மீதும் சுமத்த எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை என்பதையும் இதன்மூலமே புரிந்துகொள்ளவேண்டும்.

கைக்குழந்தைக்கு கோக், என்ன கேடு விளைவித்தாலும் இறக்குமதி நொறுக்குத்தீனி, பணம் படைத்தவர்கள் சாலையோர ஏழைமக்களின் இரைப்பைகளில் கரும்புகை செலுத்துவது, மனிதனை மனிதன் இழிவு படுத்தும் தீண்டாமை இப்படி எத்தனையோ அபாயங்கள், சமூகத்தின் நோய்க்கூறுகள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

தெரிந்தாலும், காந்தியவாதிகளும் மேட்டுக்குடியினரை அண்டிப்பிழைப்பவர்களும் அதற்கெதிராக போராடத் துணிவதில்லை. குடியை எதிர்ப்பதில் நமது நல்லொழுக்கத்தையும் உலகிற்கு வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது.

குடும்பம் கெடுவது என்பதெல்லாம் தன்னை, குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியாததன் விளைவேயன்றி அத்தகைய கேடுகளுக்கான காரணிகள் புட்டிக்குக்குள் அடைத்து பாதுகாக்கப்படுவதில்லை.

ரிப்போர்ட்டர் சோமு: குடும்பத்தை நிர்வகிக்கத் தெரிந்தவனையும், அதைச் செய்யவிடாமல், அதில் அக்கறை காட்டவிடாமல் செய்துவிடுவது குடி. கோக், கரும்புகை, தீண்டாமை ஆகியவை போன்றே... இன்னும் சொல்லப்போனால் அவற்றைவிட அதிகமான பாதிப்பை குடி ஏற்படுத்துகிறது. திறமையானவனை அழித்தொழிக்க, "குடிகாரன்" என்கிற பட்டம் போதும். அதைச் சூட்ட (குடிப்பவர் உட்பட) பலர் தயாராகவே இருக்கிறார்கள். குடிப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் தனிப்பட்ட விசயமல்ல. சமுதாயத்திற்கான சவால். மதுவை உணவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. உணவில்லாமல் வாழ முடியாது. மது இல்லா்மல் வாழலாமே. இதைச் சொல்ல எனக்கு உரிமையும், தகுதியும் உண்டு. குடியால் வீழ்ந்தவன் நான்.

செல்லையா முத்துசாமி: நண்பர் சோமு, நீங்கள் குடிப்பவராயிருந்தது ஒரு தகுதியா? ஈழம் தொடர்பாகவோ அல்லது கூடங்குளம் தொடர்பாகவோ பேசுவதற்கான தகுதி அப்பகுதியில் வசிப்பதனால் மட்டுமே கிடைத்துவிடுமா? எல்லோரும் இந்திய விடுதலையை பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் பார்ப்பனர்களின் கீழ் அமையப்போகும் இந்தியாவை விட்டு தனித்தமிழ்நாடு கோரினார். அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின் தனித்தமிழ்நாட்டின் தேவை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஆனால், பெரும்பாண்மை மக்கள் இந்திய தேசியத்தில் திளைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது இந்திய அரசு வாக்கெடுப்பு நடத்தினால் நிலைமை என்னவாகும்?

ரிப்போர்ட்டர் சோமு: "மக்கள் புரட்சிகர மன நிலையில் இருந்தால் கோயில் திருவிழாக்களை அதிகம் நடத்து: சாராயக்கடைகளை அதிகம் திற" என்று அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறானாம் சாணக்கியன். ஆக, மக்களி்ன் மூளையை மழுங்கடிப்பது திருவிழா (மதம்) குடி இரண்டுமே பங்கு வகிக்கின்றன. குடி என்பது தனிப்பட்டவனின் குடும்பத்தை மட்டுமில்லாது, சமுதாயத்தின் நியாயமான கோபத்தையும் கூட திசை திருப்புகிறது, செல்லையா.

செல்லையா முத்துசாமி: // மதுவை உணவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது// மதுவை உயிர் வாழத்தேவையான உணவு என்று நான் சொல்லவில்லை. அது உணவுப்பழக்கத்தில் ஒன்று. இந்த அடிப்படைப்புரிதல் இல்லாமல் எழுதியதாக நினைத்து நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கவும் தேவையில்லை. இறைச்சியுண்ணும் நம் மக்களை பார்ப்பான், சைவம் உண்ணும் மற்ற சாதிக்காரன் இழிவு செய்கிறான். மாட்டுக்கறி உண்ணும் நம்மை கோழிக்கறி உண்பவன் இழிவாகப் பார்க்கிறான். சைவமே சிறந்தது என்பவன் அசைவம் உண்டால் மிருக குணம் வந்துவிடும் என்கிறான். ஈஷா முதல் பல யோக மையங்களிலில் இந்தப் பரப்புரை வெளிப்படையாக நடக்கிறது. சைவம் உண்ணும் பார்ப்பானின் கொலைக்கரம் எத்தகையதென்று வரலாற்றில் அறிவோம். உங்கள் உணவு எது என்று நீங்களும் எனது உணவு எது என்று நானும் தீர்மானிக்கலாம்; அடுத்தவருடையதல்ல. தவிரவும் நாம் உடல்நலத்திற்கு உகந்த, உயிர்வாழ இன்றியமையாத உணவை மட்டும் தான் உட்கொள்கிறோமா?

ரிப்போர்ட்டர் சோமு: மது போதைதான், மாது, சூது, லஞ்சம், ஊழல், அநியாயம் என பல அழிவுகளுக்கு, அசிங்கங்களுக்கு அடிப்படையாகி விட்டிருக்கிறது.

செல்லையா முத்துசாமி: //மது போதைதான், மாது, சூது, லஞ்சம், ஊழல், அநியாயம் என பல அழிவுகளுக்கு, அசிங்கங்களுக்கு அடிப்படையாகி விட்டிருக்கிறது.// மது அருந்துபவர்களால்தான் இத்தனையுமா? புதுசா இருக்கே. விவாதத்தின் தொடக்கத்திலேயே சொல்லநினைத்தேன். குடிக்காமல் இருப்பவர்களைவிட குடியை விட்டவர்கள் மாபெரும் நல்லலொழுக்கம் நிறைந்தவர்கள் என்று. அது விவாதத்தை முடக்குவதாகிவிடுமென்று தவிர்த்தேன். நீங்கள் பட்டியலிடும் சமூகக்கேடுகளுக்கு மதுபோதைதான் அடிப்படை என்று எந்த அடிப்படையுமற்று உங்களால் பேசமுடிகிறது. வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் நீங்கள் ஒரு பத்திரிகையாளர். இதற்கு முன்னால் எப்படியோ இனி நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிப்போர்ட்டர் சோமு: மது போதைதான், மாது, சூது, லஞ்சம், ஊழல், அநியாயம் என பல அழிவுகளுக்கு, அசிங்கங்களுக்கு அடிப்படையாகி விட்டிருக்கிறது. - சொன்னவர் சுப. உதயகுமாரன். (வாழ்த்துக்கு நன்றி செல்லையா)

செல்லையா முத்துசாமி: உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் விளக்கமாத்தைவிட, உன் அறிவு பெறிது அதை சிந்தி - சொன்னவர் பெரியார்.