Tuesday, October 2, 2012

குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர்இன்று முழுவதும் குடி, காந்தி, நல்லொழுக்கம் இப்படியான பதிவுகளால் நிரம்பி வழிகின்றன முகநூல் தகவல்கள்.

கொடுக்கிற காசுக்கான தரமில்லை என்பதாலும் குடிகாரர்களின் வயிற்றை (உடல் நலத்தை) கருத்தில் கொண்டு மது தயாரிக்கப்படுவதில்லை என்பதாலும் இன்றைய சரக்குகள் ஒழிக்கப்படவேண்டியவைதான். மற்றபடி அதுவும் ஒரு உணவுப்பழக்கமே.

சென்ற வருடம் இதே நாளில்தான் குடிகாரரான என் அப்பா தற்கொலை செய்துகொண்டார்.

எனக்குத் தெரிந்து என் அப்பா யாருடைய குடியையும் கெடுக்கவில்லை என்பதோடு எங்கள் குடியையும் கெடுக்கவில்லை.

பகலில் அவரிடமிருந்து விலகியும் அளவான சொற்களிலும் உரையாடும் நான் மாலையில் அவரது கண் சிவந்த நேரத்தில் இலகுவாகிவிடுவேன். அவரும்கூட.

பள்ளிப்பருவத்தில் அரைவேக்காட்டுத்தனமான எனது அரசியல் வாதங்களையும் பொருட்படுத்தி விவாதிப்பார். செல்லக்குட்டிப்பயல் செல்லக்குட்டிப்பயல் என்ற சொற்களால் பொங்குவார். குடிநேரத்தில் மட்டும் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளும் அவருக்கு மற்ற நேரங்களில் வெளிப்படுத்திக்கொள்தலும் ஒரு நாடகம் என அமைதிகாப்பார்.

நானொரு பெரியாரிஸ்ட்டாக என்னை நினைத்துக்கொண்டாலும் அம்மாவின் பெயர் தவிர்த்து என் பெயருக்குப் பின்னால் முத்துசாமி என சேர்த்துக்கொண்டது அவர் குடிகாரராக இருப்பதால்தான். ஊரே கொண்டாடும் குணத்துக்குச் சொந்தக்காரியான என் அம்மாவை விட்டுவிட்டு என் அப்பாவின் அநாதைத்தனத்தை துடைத்தெறியவே அவர் பெயரை இணைத்துக்கொண்டேன்.

இருக்கட்டும் சொல்லவந்தது விட்டுவிட்டு அவர்பின் அலையத்தொடங்கிவிட்டேன். 

அதாவது, பல்லாண்டுகளாக அவரது குடி விமர்சனத்துக்குள்ளான ஒன்றுதான். என்றாலும் அது ஒரு கொண்டாட்ட மனநிலையையே அவருக்கு கொடுத்துவந்தது. வாழ்க்கையில் அவர் அழுது நான் பார்த்ததில்லை. ஆனால், கடைசி காலத்தில் நொய்மையான மனதைப் பெற்றிருந்தாரோ என்னவோ நானறியேன். அல்லது முன்னைப்போலன்றி ஊராரின் குற்றச்சாட்டுகள் உறவுகளின் உரிமைக்குரலாக இல்லாமல் தடிக்கத்தொடங்கிவிட்டனவோ என்னவோ. எனது சிற்றூர் தனது இயல்பைத் தொலைத்திருக்கலாம்.

ஏதோ ஒன்று அவரது கழுத்தை இறுக்கிவிட்டது.

குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர்.


முகநூல் (facebook)கருத்துரைகள்:பிரபா அழகர்: குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர்

Chellappa Nambi: குடி, புகை, பெண் முதலிய எந்தப் பழக்கமும் இல்லாத எளிய தகப்பன்கள் பல குடும்பங்களில் அமைதியை குலைத்துள்ளார்கள். அப்படியே பிள்ளைகளும். குடிப்பவன் அயோக்கியன் குடிக்காதவன் யோக்கியன் என்பதை போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை.

ரிப்போர்ட்டர் சோமு: குடிக்கு முன்னால் ஒழிக்கப்படவேண்டியது குடிக்காதவர்களின் நல்லொழுக்கத்திமிர் - மிகச் சரியான கருத்து. அதே நேரத்தில் குடிகாரர், யார் குடியையும் கெடுத்ததில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். குடிகாரர் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறார். தன் குடும்பத்தையும்... குறிப்பாக நம்பி வந்த இல்லாலையும். நான் குடியை விட்ட இ்ந்த ஒரு வருடத்தில் நானும் என் குடும்பமும் முக்கியமாக என் இல்லாளும் மகி்ழ்ச்சியாக இருக்கிறோம். ஆனாலும் அப்பாவின் நினைவுகளை அற்புதமான எழுத்து நடையில் வடித்திருக்கிறீர்கள். மனம் கனத்தது.

செல்லையா முத்துசாமி: நண்பர் சோமு, நான் என் அப்பாவை முன்வைத்துப் பேசுகிறேன். இது உங்களுக்கும் பொருந்த வேண்டும் என்கிற அவசியமில்லை. அதேநேரம் சில தன்னிலைகளின் கோளாறுகளை நாம் குடியின் பொருட்டு எல்லோரின்மீதும் சுமத்த எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை என்பதையும் இதன்மூலமே புரிந்துகொள்ளவேண்டும்.

கைக்குழந்தைக்கு கோக், என்ன கேடு விளைவித்தாலும் இறக்குமதி நொறுக்குத்தீனி, பணம் படைத்தவர்கள் சாலையோர ஏழைமக்களின் இரைப்பைகளில் கரும்புகை செலுத்துவது, மனிதனை மனிதன் இழிவு படுத்தும் தீண்டாமை இப்படி எத்தனையோ அபாயங்கள், சமூகத்தின் நோய்க்கூறுகள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

தெரிந்தாலும், காந்தியவாதிகளும் மேட்டுக்குடியினரை அண்டிப்பிழைப்பவர்களும் அதற்கெதிராக போராடத் துணிவதில்லை. குடியை எதிர்ப்பதில் நமது நல்லொழுக்கத்தையும் உலகிற்கு வெளிப்படுத்திக்கொள்ள முடிகிறது.

குடும்பம் கெடுவது என்பதெல்லாம் தன்னை, குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியாததன் விளைவேயன்றி அத்தகைய கேடுகளுக்கான காரணிகள் புட்டிக்குக்குள் அடைத்து பாதுகாக்கப்படுவதில்லை.

ரிப்போர்ட்டர் சோமு: குடும்பத்தை நிர்வகிக்கத் தெரிந்தவனையும், அதைச் செய்யவிடாமல், அதில் அக்கறை காட்டவிடாமல் செய்துவிடுவது குடி. கோக், கரும்புகை, தீண்டாமை ஆகியவை போன்றே... இன்னும் சொல்லப்போனால் அவற்றைவிட அதிகமான பாதிப்பை குடி ஏற்படுத்துகிறது. திறமையானவனை அழித்தொழிக்க, "குடிகாரன்" என்கிற பட்டம் போதும். அதைச் சூட்ட (குடிப்பவர் உட்பட) பலர் தயாராகவே இருக்கிறார்கள். குடிப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் தனிப்பட்ட விசயமல்ல. சமுதாயத்திற்கான சவால். மதுவை உணவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. உணவில்லாமல் வாழ முடியாது. மது இல்லா்மல் வாழலாமே. இதைச் சொல்ல எனக்கு உரிமையும், தகுதியும் உண்டு. குடியால் வீழ்ந்தவன் நான்.

செல்லையா முத்துசாமி: நண்பர் சோமு, நீங்கள் குடிப்பவராயிருந்தது ஒரு தகுதியா? ஈழம் தொடர்பாகவோ அல்லது கூடங்குளம் தொடர்பாகவோ பேசுவதற்கான தகுதி அப்பகுதியில் வசிப்பதனால் மட்டுமே கிடைத்துவிடுமா? எல்லோரும் இந்திய விடுதலையை பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் பார்ப்பனர்களின் கீழ் அமையப்போகும் இந்தியாவை விட்டு தனித்தமிழ்நாடு கோரினார். அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின் தனித்தமிழ்நாட்டின் தேவை இன்னும் அதிகரித்திருக்கிறது. ஆனால், பெரும்பாண்மை மக்கள் இந்திய தேசியத்தில் திளைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது இந்திய அரசு வாக்கெடுப்பு நடத்தினால் நிலைமை என்னவாகும்?

ரிப்போர்ட்டர் சோமு: "மக்கள் புரட்சிகர மன நிலையில் இருந்தால் கோயில் திருவிழாக்களை அதிகம் நடத்து: சாராயக்கடைகளை அதிகம் திற" என்று அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறானாம் சாணக்கியன். ஆக, மக்களி்ன் மூளையை மழுங்கடிப்பது திருவிழா (மதம்) குடி இரண்டுமே பங்கு வகிக்கின்றன. குடி என்பது தனிப்பட்டவனின் குடும்பத்தை மட்டுமில்லாது, சமுதாயத்தின் நியாயமான கோபத்தையும் கூட திசை திருப்புகிறது, செல்லையா.

செல்லையா முத்துசாமி: // மதுவை உணவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது// மதுவை உயிர் வாழத்தேவையான உணவு என்று நான் சொல்லவில்லை. அது உணவுப்பழக்கத்தில் ஒன்று. இந்த அடிப்படைப்புரிதல் இல்லாமல் எழுதியதாக நினைத்து நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கவும் தேவையில்லை. இறைச்சியுண்ணும் நம் மக்களை பார்ப்பான், சைவம் உண்ணும் மற்ற சாதிக்காரன் இழிவு செய்கிறான். மாட்டுக்கறி உண்ணும் நம்மை கோழிக்கறி உண்பவன் இழிவாகப் பார்க்கிறான். சைவமே சிறந்தது என்பவன் அசைவம் உண்டால் மிருக குணம் வந்துவிடும் என்கிறான். ஈஷா முதல் பல யோக மையங்களிலில் இந்தப் பரப்புரை வெளிப்படையாக நடக்கிறது. சைவம் உண்ணும் பார்ப்பானின் கொலைக்கரம் எத்தகையதென்று வரலாற்றில் அறிவோம். உங்கள் உணவு எது என்று நீங்களும் எனது உணவு எது என்று நானும் தீர்மானிக்கலாம்; அடுத்தவருடையதல்ல. தவிரவும் நாம் உடல்நலத்திற்கு உகந்த, உயிர்வாழ இன்றியமையாத உணவை மட்டும் தான் உட்கொள்கிறோமா?

ரிப்போர்ட்டர் சோமு: மது போதைதான், மாது, சூது, லஞ்சம், ஊழல், அநியாயம் என பல அழிவுகளுக்கு, அசிங்கங்களுக்கு அடிப்படையாகி விட்டிருக்கிறது.

செல்லையா முத்துசாமி: //மது போதைதான், மாது, சூது, லஞ்சம், ஊழல், அநியாயம் என பல அழிவுகளுக்கு, அசிங்கங்களுக்கு அடிப்படையாகி விட்டிருக்கிறது.// மது அருந்துபவர்களால்தான் இத்தனையுமா? புதுசா இருக்கே. விவாதத்தின் தொடக்கத்திலேயே சொல்லநினைத்தேன். குடிக்காமல் இருப்பவர்களைவிட குடியை விட்டவர்கள் மாபெரும் நல்லலொழுக்கம் நிறைந்தவர்கள் என்று. அது விவாதத்தை முடக்குவதாகிவிடுமென்று தவிர்த்தேன். நீங்கள் பட்டியலிடும் சமூகக்கேடுகளுக்கு மதுபோதைதான் அடிப்படை என்று எந்த அடிப்படையுமற்று உங்களால் பேசமுடிகிறது. வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் நீங்கள் ஒரு பத்திரிகையாளர். இதற்கு முன்னால் எப்படியோ இனி நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிப்போர்ட்டர் சோமு: மது போதைதான், மாது, சூது, லஞ்சம், ஊழல், அநியாயம் என பல அழிவுகளுக்கு, அசிங்கங்களுக்கு அடிப்படையாகி விட்டிருக்கிறது. - சொன்னவர் சுப. உதயகுமாரன். (வாழ்த்துக்கு நன்றி செல்லையா)

செல்லையா முத்துசாமி: உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் விளக்கமாத்தைவிட, உன் அறிவு பெறிது அதை சிந்தி - சொன்னவர் பெரியார்.

1 comment:

குரங்குபெடல் said...

அண்ணே ஏன் இப்டி ?