Wednesday, October 31, 2012

வர்ணத் திமிர் பிடித்த தினமலர் கும்பலே பதில் சொல்! - விடுதலை இராசேந்திரன்

“அய்யர் - என்றால், வெறும் அய்யரைமட்டும் குறிப்பிடுவது இல்லை. அய்யர், அய்யங்கார், மதவா, கேரள நம்பூதிரி, ராவ் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடும் ஒரு பொது சொல்தான், பிராமணர்கள் என்பது. இங்கே வர்ணாசிரமம் எங்கே நுழைந்தது? 

“வழக்கில் இல்லாத வர்ணாசிரமம் என்ற சொல்லை வைத்து இவர்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.” 

- இப்படி ஒரு பார்ப்பனரின் கடிதத்தை தினமலர் பார்ப்பன ஏடு (அக்.30) வெளியிட்டிருக்கிறது. 

அய்யர், அய்யங்கார் என்றால் அதுகூட சாதிகளைத்தான் குறிக்கிறது. ஆனால், பிராமணாள் என்றால் வர்ணாசிரமத்தைக் குறிக்கிறது. பெரும்பான்மை மக்களை சூத்திரர் என்று இழிவுபடுத்துகிறது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் அளித்தப் பேட்டிக்குப் பதிலாக இந்த பார்ப்பனர் கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

தினமலர் பார்ப்பனருக்கு சில கேள்விகளை முன் வைக்கிறோம். 

அய்யர், அய்யங்கார் சாதிகளைக் குறிக்கும் ஒட்டு மொத்தமான பிராமணாள் என்ற பொது சொல் எங்கிருந்து குதித்து வந்தது? தினமலர் சவுண்டிக் கூட்டம் எழுதுவதுபோல் அது அய்யர், அய்யங்கார் சாதிகளைக் குறிக்கக்கூடிய பொது சொல்மட்டும் தானா? இல்லை; இல்லவே இல்லை. பிறகு பிராமணாள் என்பதற்கு என்னதான் பொருள்? 

• பூமியில் எல்லா உயிர்களுக்கும் பிராமண தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு கடவுளால் முழுஅதிகாரம் பெற்ற தேசிய பாதுகாப்பு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவனே பிராமணன் . அதற்காகவே அவன் பூமியில் பிறந்துள்ளான். இதைத்தான் மனுதர்மம் (அத்.1 - சுலோகம் 99) இவ்வாறு கூறுகிறது. 

“பிரஹ்மணோ ஜாயமானோ ஹி ப்ரதிவ்யா 
மபிஜாயதே 
ஈஸ்வர: சர்வபூதானாம் தர்மகோசஸ்ய குப்தயே 

• பூமியில் உள்ள அனைத்து உடைமைகளுக்கும் (கிரானைட் சுரங்கம் - அலைக்கற்றை - கூடங்குளம் அணுமின் நிலையம் - வளைகுடா நாட்டு எண்ணெய்க் கிணறுகள் உட்பட) யாவும் பிராமணனுக்கே சொந்தம். ஏன்? அவன்தான் எல்லோருக்கும் மேலான உயர்... உயர்... உயர்ந்த குடியில் பிறந்தவன். இதைத்தான் மனுதர்மம் இவ்வாறு கூறுகிறது. 

“சர்வஸ்வம் பிராமண ஸ்யேதம்யத் கிஞ்சிஜ் ஜகதீ கதம் 
ஸ்ரைஷ்ட் யேனாபி ஜனேனேதம் சர்வம் வை பிராமணோர் கதி” (மனு அத்.1 - சுலோகம் 100) 

• பிராமணன் அறிவாளியா? முட்டாளா? என்பது முக்கியமல்ல; அவன் தினமலர் பார்ப்பானாகக் கூட இருக்கலாம்; அல்லது காஞ்சிபுரத்து கோயில் கர்ப்பக்கிரகத்தை படுக்கை அறையாக மாற்றிக் கொண்ட தேவநாதனாக இருந்தாலும் சரி, கொலைக் குற்றவாளி ஜெயேந்திரனாக இருந்தாலும் சரி; எவனாக இருந்தாலும் பிராமணன் எல்லோருக்கும் மேலான தெய்வம் . எப்படி என்றால், நெருப்பு (அக்னி) பிணத்தை எரிக்கப் பயன்படுத்தினாலும், அதே நெருப்பு யாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதைப் போல், பிராமணன் எவ்வளவு இழிவான வேலையை செய்தாலும் சரி, அவனைத்தான் ஏனைய “சூத்திரர்கள்” கும்பிட்டு வணங்க வேண்டும். காரணம், பிராமணன் சாதாரண மனிதன் அல்ல; மனிதனுக்கும் மேலான தெய்வம். இதைச் சொல்வது - மனுசாஸ்திரம் (அத்.9 - சுலோகம் 9) 

“ஸ்மசானேஷ்வபி தேஜஸ்வீ பாவகோ நைவ 
துஷ்யதி 
ஹூயமானஸ்ச யஜ்னோஷு பூய ஏவாபிவர்த்த” 
- 318. 

ஏவம் யத்யப்ய னிஷ்டேஷு வர்த்தந்தே 
ஸர்வகர்மஸு 
ஸர்வதா ப்ராஹ்மணா: பூஜ்யா: பரமம்தைவதம் 
ஹிதத்.” - 319 

(மனு அத்தியாயம் 9) 

• பிராமணன் என்பவன் தெய்வம். அவன்தான் கடவுளை நேரடியாக வணங்கும், யாகங்களை நடத்தும் உரிமை கொண்டவன். சத்திரியன் யுத்தம் செய்ய வேண்டியவன்; வைசியன் - வணிகம் செய்ய வேண்டியவன்; சூத்திரன் - அடிமையாக, அடிமைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டியவன். 

“பிராமணா சத்திரியா வைஸ்யா மத்யே சூத்திராஸ்ய பூயச; 
இஜ்பா யுத்த பணாசேவா ஸ்வர்த்தயந்தோ 
ஸ்வயஸ்திகா.” 
(உமா சம்ஹிதா, அத்.8) 

• “இந்த உலகமே கடவுளுக்குக் கட்டுப்பட்டதுதான். அவர் சர்வசக்தியுள்ளவர் என்பதும் உண்மைதான். ஆனால், அந்தக் கடவுளையே கட்டுப்படுத்தக் கூடிய அணுசக்தி வேதமந்திரங்கள்தான்” என்கிறது மனுதர்மம். சூத்திர சிற்பி கல்லால் செதுக்கும் சிலை, கடவுளாக மாறுவது எப்போது? பிராமணனின் மந்திரம் அந்த கல்லுக்குள் ஏற்றப்படும்போதுதான், அத்தகைய சக்தியைப் பயன்படுத்தும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தை இயக்கும் ரிமோட் யாரிடம் இருக்கிறது என்றால், அது பிராமணர்களிடம்தான். ரிக்வேதம் - 62வது பிரிவு, 10வது சுலோகம் - அதைத்தான் கூறுகிறது. 

“தெய்வாதினம் ஜகத் சர்வம் 
மந்ரா தீனம் து தெய்வதம் 
தன் மந்திரம் பிரம்மணாதீனம் 
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்.” 

- இப்படி ஏராளமாகப் பட்டியலிட முடியும். 

- பிராமணன் என்பது பார்ப்பன சாதிகளைக் குறிக்கும் பொதுவான சொல் என்று பசப்பும் தினமலர் அக்கிரகாரக் கூட்டத்தைக் கேட்கிறோம்; மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள சான்றுகளை மறுக்கத் தயாரா? 

அல்லது இந்த ஸ்மிருதிகளை - சாஸ்திரங்களை நாங்கள் ஏற்கவில்லை என்று நேர்மையிருந்தால் யோக்கியர்களாக இருந்தால் அறிவிக்கத் தயாரா? அல்லது இவைகளை அரசு தடை போடவேண்டும் என்று வலியுறுத்துவார்களா? 

• பிராமணன் - சூத்திரன் இருவருமே பிரம்மாவின் உடலில் அடங்கியிருப்பவர்கள். பிரம்மாவின் தலை - பிராமணன்; கால் - சூத்திரன் - என்று புருஷசுக்தம் என்ற ஸ்மிருதி கூறுகிறது. இதன் பொருள் என்ன! பிராமணன் என்ற தலையோடு, சூத்திரன் என்ற காலை வெட்டி எறிந்துவிட முடியாது. இரண்டுமே பிரித்துப் பார்க்கவே முடியாத ஒரே உடல் அமைப்பு. ஆக, பிராமணன் என்று ஒரு பிரிவு அறிவித்துக் கொண்டாலே, ஏனைய பிரிவினரை தாமாகவே சூத்திரர் ஆகிவிடுகிறார்கள். அதனை ஒரே அங்கமாக்கி உறுதிப்படுத்திவிடுகிறார்கள். அந்த சூத்திரன் யார் என்பதையும், மனுஸ்மிருதி விளக்கிவிடுகிறது. யார் இந்த சூத்திரர்கள்? 

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்; 2. கைதியாகப் பிடித்து வரப்பட்டவன்; 3. பிராமணனிடம் பக்தி காரணமாக அடிமை வேலை செய்யக்கூடியவன்; 4. விபச்சாரியின் மகன்; 5. விலைக்கு வாங்கப்பட்டவன்; 6. ஒருவனால் மற்றவனுக்கு கொடுக்கப்பட்டவன் (இலவச ஆடு, இலவச ரேஷன் அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைப் போல); 7. தலைதலைமுறையாக அடிமைவேலை செய்கிறவன். (மனுசாஸ்திரம். அத்.8 - சுலோகம் 415) 

ஆக, பிராமணன் என்றால் கடவுளுக்கே அதிபதி; உலகத்துக்கே உரிமையாளன்; எல்லாவற்றிலும் உயர்ந்தவன்; கிரிமினல் என்றாலும் வணங்கவேண்டியவன்; சூத்திரர் களை அடிமையாக நடத்தக்கூடிய உரிமை பெற்றவன்; சூத்திரர்கள் விபச்சாரி மக்கள் என்று அறிவிக்கும் அதிகாரம் பெற்றவன் - என்பதை மனுசாஸ்திரங்களும் வேதங்களும் ஸ்மிருதிகளும் கூறும்போது அது சும்மா, ஒரு பொதுவான சொல்தான் என்று தினமலர் கும்பல் சப்பைக்கட்டு கட்டுவது காதில் பூ சுற்றுவது தானே? 

வழக்கில் இல்லாத வர்ணாசிரமத்துக்கு போராட்டமா என்று ஏகடியம் பேசும் பூணூல் கூட்டத்தைக் கேட்கிறோம் - வர்ணாசிரமம் வழக்கற்றுப் போய்விட்டதா? - பதில் சொல்! 

• பார்ப்பான் - காயத்திரி மந்திரம் ஓதி முதுகை சொரியும் பூணூலைப் போட்டுக் கொள்வது பிராமணன் என்ற வர்ணாசிரம அடையாளத்தின் வெளிப்பாடு அல்லவா? 

• கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ஆண்டவனிடம் மந்திரம் போட்டு, பக்தர்களின் கோரிக்கை மனுக்களை தீர்த்துவைக்கும் உரிமை தங்களுக்கே உண்டு என்று கூறி, உச்சநீதிமன்றம் வரை ஓடுவது ஏன்? கடவுள் பிராமணன் மந்திரத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் - என்ற வர்ணாசிரம அடிப்படையில் தானே? மறுக்க முடியுமா? 

• பார்ப்பனப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களுமே அர்ச்சகர்களாகவோ, பூஜை உள்ளிட்ட எந்த சடங்குகளும் செய்யக்கூடாது என்ற சமூக விதியைத் திணித்து வைத்திருப்பது எந்த அடிப்படையில்? பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமைப்பட்டு வாழவேண்டியவர்கள் என்ற வர்ணாசிரம அடிப்படையில்தானே? 

• வர்ணாசிரமக் கலப்பு ஏற்பட்டு அது சாதிகளாக மாற்று உருவம் எடுத்த பிறகும் அந்த சாதிகளுக்கான சடங்குகளை வாழ்க்கை முறையை சாதிகள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல், கண்காணித்து, சாதிக்கேற்ற திருமண சடங்குகளை, மந்திரங்களைத் திணித்து வைத்திருப்பது எது? வர்ணாசிரமம்தானே! 

• இப்படி சாதிக்கலப்பு திருமணங்களை எதிர்த்து பல்வேறு சூத்திர சாதிகளே தொடை தட்டிக் கிளம்பி, இன்றைக்கும் இயக்கம் நடத்துவதற்கு எது அடிப்படை? வர்ணாசிரமம்தானே! 

• 18 வயதுக்குள்ளேயே, குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குத் திருமணம் நடப்பதை, அதை காவல்துறையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கண்டுபிடித்து தடுத்து வருகிறார்கள் என்று செய்திகள் வருகின்றனவே, இந்த குழந்தைத் திருமணங்களுக்கு அடிப்படை என்ன? பால்ய வயதிலேயே பெண்களுக்கு விவாகம் செய்துவிடவேண்டும் என்ற வர்ணாசிரமம் தானே! வர்ணாசிரமம் வழக்கற்றுப் போய்விட்டதா? 

• இப்போதும் கிராமங்கள்தோறும் ஊரையும் சேரியையும் பிரித்து வைத்திருப்பது எது? சங்கர ஜாதி என்ற பஞ்சமர்களோடு சேர்ந்து வாழக்கூடாது என்ற வர்ணாசிரமம்தானே! 

• சூத்திர வர்ணப் பிரிவில் அடக்கப்பட்டுள்ள சாதியினர், தங்களுக்கு பொதுவான சொல் சூத்திரர் என்பதை ஏற்க மறுத்து, சாதிகள் அடையாளத்தை மட்டுமே ஏற்கும் நிலையில், பிராமணப் பிரிவில் அடங்கியுள்ள அய்யர், அய்யங்கார் கும்பல், மட்டும் தங்களை பிராமணன் என்ற பிரிவிலேயே அடையாளப் படுத்துவதும் சங்கம் அமைப்பதும் எந்த அடிப்படையில்? பிராமணனே உயர்ந்தவன் என்ற வர்ணாசிரமம் வழங்கியுள்ள குலப்பெருமை அடிப்படையில்தானே? அதற்கு ஆதரவாக வழக்காடக் கிளம்பியிருக்கும் தினமலர் புத்திக்குள் புகுந்து கிடப்பதும் வர்ணாசிரமம்தானே! 

• ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடு நமது எம்.ஜி.ஆர். . பார்ப்பனர் பூணூல் போடுவதை இப்போதும் நியாயப்படுத்துவதும், பார்ப்பன முதலமைச்சர் ஜெயலலிதா, வர்ணாசிரம எதிர்ப்பாளரான பெரியார் சிலைக்கு, அவர் பிறந்த நாளில் மாலை போட வராமல், சாதி வர்ணாசிரமக் காவலரான முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மட்டும் மாலைபோட ஓடுவதும் வர்ணாசிரமத்தின் வெளிப்பாடுதானே? 

• புதுடில்லி ராமலீலா மைதானத்தில் வர்ணாஸ்ரமம் போற்றிய இராமனை எதிர்த்த திராவிட அசுரர்கள் இராவணன், கும்பகர்ணன் உருவத்தை தீயிட்டு எரித்து விழா கொண்டாடுவதும் அதில் சோனியாவும் மன்மோகனும் பங்கேற்று மகிழ்ச்சிக் கூத்தாடுவதும் வர்ணாசிரமம்தானே! 

வர்ணாசிரமம் எங்கே வழக்கற்றுப் போய்விட்டது? பதில் சொல்! 

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் தகவல் தொடர்புகளும் அறிவியல் வளர்ச்சியும் உலகத்தையே நெருக்கமாக இணைத்துவரும் யுகத்தில் வேதகாலத்து கருத்துகளை சுமந்து கொண்டு பூணூலையும் உச்சிக் குடுமியையும் பஞ்சகச்சத்தையும் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டு வர்ணாசிரம வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவிக்கும் பெரியாரியல் - அம்பேத்கரிய - மார்க்சிய - சனநாயக - சமூகநீதி இயக்கங்களையெல்லாம் காலில் போட்டு மிதித்துக்கொண்டு ஆரிய தர்பார் நடத்துவது, அசல் வர்ணாசிரமப் புத்திதானே அல்லாமல் வேறு என்ன? அக்கிரகாரங்களை தினமலர்களை துக்ளக்குகளை எச்சரிக்கிறோம்! 

ஆரியத் திமிரை, பார்ப்பன இறுமாப்பை அடக்கும் வரை இந்த சமூகப் புரட்சி ஓயாது; ஓயாது! 

அது செத்து மடியும் வரை பெரியாரின் பேரனுக்குப் பேரன் களத்தில் நிற்பான்! 

- இராசேந்திரன் 


நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம் (திராவிடர் விடுதலைக் கழக வார ஏடு)

2 comments:

Jeyapalan said...

சிவன், இராமன், கண்ணன் என்ற கடவுள்கள் எல்லோருமே சத்திரியர்கள் தானே. அதை எப்படி பிராமணர்கள் ஏற்றுக் கொண்டார்கள்?

​செல்​லையா முத்துசாமி said...

பார்ப்பனியத்துக்கு துணைபோன வைசியனான காந்தி முதல் இன்று பார்ப்பனர்களின் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் இசுலாமியரான அப்துல்கலாம் வரை வர்ணத்திமிர் பிடித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்தான். தங்களது சனாதனத்திறகு எதிராக பேசத்தொடங்கியதால்தான் காந்தி கொல்லப்பட்டார். http://www.chelliahmuthusamy.com/2012/02/blog-post.html

வர்ண பேதத்தைப் போதித்த கடவுள் கதைகளானாலும் மனிதனானாலும் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர் ஆனாலும் பார்ப்பனர்களால் தூக்கி கொண்டாடப்படுவார்கள். இதில் குழப்பத்திற்கு இடமே இல்லை.