Friday, November 30, 2012

திராவிட இயக்கங்கள் விமர்சிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக பிராமணக் கருத்தியலில் போய் விழுந்துவிட முடியுமா? - ஜமாலன்

கீழ்க்காணும் படத்தைக் கண்டு நாம் வெட்கப்படவேண்டியவர்களாக இருக்கிறோம். பெரியார் பிறந்த மண்ணில் அவரது ‘மனித இழிவுக்கெதிரான’ போராட்டத்தை நாம் இன்னும் தீவிரமாக முன்னெடுத்திருக்கவேண்டும்.

சாதிய சார்புடன் இயங்கும் அரசுகளுக்கெதிராக பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கங்கள் சமூக மாற்றத்திற்கான மாபெரும் போராட்டங்களை நடத்தி விழிப்புற்ற மக்கள் திரளை கொண்டிருந்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை.

பெரியாரின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி கடந்த ஆட்சியாளர்களின் தன்னலப்போக்கை நாமும் கடுமையாக விமர்சிப்பவர்களாக, எதிர்ப்பவர்களாக இருக்கிறோம்.

ஆனால், கீழ்காணும் படத்தை FACEBOOK ல் பதிவிட்ட எச்.பீர் முஹம்மது என்பவர் திராவிடர் இயக்க வரலாறு குறித்த தெளிவோ, அக்கறையோ இன்றி நாம் தமிழர் ஆட்களைப்போல போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப்போகிறார்.

நாம் தமிழர் உள்ளிட்ட திராவிடர், திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் சிலரைப்போல தமிழக எல்லை தாண்டி இதற்கு பொருளிருப்பதாகப்படவில்லை என்கிறார் பீர் முஹம்மது.

பெரியார் முன்வைத்த திராவிடர் என்ற சொல்லுக்குள் கேரளம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடங்காது. பார்ப்பனரல்லாதோர் என்ற பொருள் தவிர்த்து அதை நிலத்தோடு தொடர்புபடுத்த எந்த வரலாற்று நெருக்கமும் இல்லாதபோது எப்படி இவர்களால் மற்ற மாநிலங்களைத் தொடர்புபடுத்தி உளறமுடிகிறது.

இவ்விவாதத்தில் நான் உணர்ச்சிப்பெருக்குடன் மோதியிருக்கிறேன். ஆனால் மொழியும் நிலமும் நூல்வழி என்னைப் பெரிதும் கவர்ந்த எழுத்துக்கு உரியவரான திரு ஜமாலன் அவர்கள் இவ்விவாதத்தை மிக வலுவான தளத்தில் எடுத்துச் சென்றிருக்கிறார்.

தமிழில் பெரும்பாலும் அரசியல் புரிதலுள்ள படைப்பாளிகளை, விமர்சகர்களை காண்பது அறிது. ஜமாலான் மிக நுட்பமாக இந்த விடயங்களை அணுகியிருப்பதாக உணர்கிறேன். ஜெயமோகன் மாதிரி உறுத்தலின்றி இந்துத்துவவாதிகளாக திராவிடர் இயக்க வரலாற்றை அணுகுகிறவர்களிடையே “ ஒரு குறிப்பிட்ட திராவிடக்கட்சியை விமர்சிப்பது என்பது, சார்புநிலையைதான் வெளிப்படுத்தும். இங்கு திராவிடக்கட்சிகளின் இயக்கத்தில் பிராமணீயத்தின் பங்கு எவ்வளவு உள்ளது என்பதை பிறித்தறியாமல், அவற்றை விமர்சிப்பது என்பது எதிர்நிலை அரசியல் நிலைபாட்டிற்கே உதவும்” என்கிற ஜமாலன் போன்றவர்கள் ஆறுதலளிக்கிறார்கள்.

முகநூல் கருத்துரைகளை கீழே பதிந்துள்ளேன்இந்த புகைப்படத்தை பாருங்கள். இந்த சிறுமிகள் கடல் அலையில் கால் நனைப்பதற்காக தங்கள் செருப்புகளை கையில் தூக்கவில்லை. இது பொள்ளாச்சி அருகே ஆதிக்க சாதிகள் அதிகம் வாழும் கிராமம். அங்கு பள்ளி சென்று விட்டு திரும்பும் தலித் மாணவிகள் இப்படி தான் செல்ல வேண்டும் என்ற கட்டளை.

45 ஆண்டுகள் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருந்த திராவிடமே.... இதற்கு பெயர் தான் சமூகநீதியா? பிராமண எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்ற பெயரில் இருக்கும் சாதி அமைப்பை தக்கவைத்து தன் ஓட்டு வங்கியைப் பாதுகாத்த கழகங்களே...... உங்களுக்கெல்லாம் சுயமரியாதை ஒரு கேடா?.. தமிழ்நாட்டு அதிகாரவர்க்கத்தை நோக்கி கேள்வி எழுப்பாமல் அதற்கு செம்பு அடிக்கும் தலித் கட்சிகளே..... நீங்கள் தேர்தல் அரசியல் என்ற பெயரில் கழகங்களுக்கு செம்பு அடிப்பதை நிறுத்தாமல் இருந்தால் இது நூற்றாண்டு முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். 


@எச்.பீர் முஹம்மது இப்பொழுது உங்கள் நிலைபாடு என்ன ஆரிய திராவிட முரண் வழக்கொழிந்துவிட்டது என்கிறீர்களா? அல்லது திராவிட என்ற சொல்லால்தான் தமிழ் இனம் தன்னை இனமாக உணரமுடியாமல் போய்விட்டது என்கிறீர்களா? வரலாற்றை நுட்பமாக அதன் உள்இயங்குசக்திகள் வழியாக ஆராய்ந்தால் ஒன்றை நீங்கள் உணரலாம். அது திராவிட இயக்கங்களின் பின்புலமாக இயங்கும் ஆதிக்க சக்திகளும், அதற்கான கருத்தியல்களுமே. வெறுமனே திராவிடம் தமிழ் என்று பிரித்து விளையாடுவது "நாம் தமிழர்கள்" என்று அரசியல் லாபம் பண்ண உவப்பாக இருக்கலாம், அது சமூக யதார்த்தமாகிவிடாது. 

திராவிட இயக்கம் பெரியாரால் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, ஆந்திரா, கர்நாடக, மலையாள அரசியலில் அது பெரும்பங்கு எதையும் வகித்ததில்லை. அதனால் மற்ற மாநிலங்களைக்கொண்டு அதை தீர்மானிக்க முயல்வதுதான் கால்ட்வெல் சொன்னதை ஏற்பதாகும். களப்பிரர்கள் காலத்திலேயே திராவிட சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை கே.கே. பிள்ளை தனது தமிழக வரலாற்றில் குறிப்பிடுகிறார். அதனால் சொற்களைக்கொண்டு அதன் அரசியலை பேசவேணடியதில்லை.

திராவிட இயக்கம் அல்லது திராவிடம் என்பது ஒரு உள்ளீடற்ற சொல்லாடல். அதற்குள் வரலாறு திணித்திருக்கும் பொருள் ‘ஆரிய எதிர்மை’ என்பதுதான். ஆரிய எதிர்மை என்பதை பார்ப்பனிய எதிர்ப்பு அல்லது பார்ப்பனிய அதிகார எதிர்ப்பு எனலாம். அதன் யதார்த்தம் இல்லை என்று மறுத்துவிடமுடியுமா? இப்போ பார்ப்பனியம் என்பது வழக்கொழிந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது இந்துத்துவாவின் கோரமுகமாக மாறி உள்ளது. திராவிட எதிர்ப்பு என்பது இந்த இருமைச் சட்டகத்திற்குள்தான் சங்கேதமாகும். அல்லது ஜெயலலிதாவிற்கு பத்திருபது ஓட்டுகள் அதிகமாகும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற குணா அரசியலையே பேசிக்கொண்டிருக்க முடியாது. திராவிடக்கட்சிகள் ஏதோ ஒருவகையில் இன்றைய அரசியல் சொல்லாடலுக்குள்தான் தன்னை நிலைநிறுத்தும். அது இனமாக இருக்கலாம் அல்லது மதமாக இருக்கலாம். அந்தக்கூறை விமர்சிக்காமல், ஒரு குறிப்பிட்ட திராவிடக்கட்சியை விமர்சிப்பது என்பது, சார்புநிலையைதான் வெளிப்படுத்தும். இங்கு திராவிடக்கட்சிகளின் இயக்கத்தில் பிராமணீயத்தின் பங்கு எவ்வளவு உள்ளது என்பதை பிறித்தறியாமல், அவற்றை விமர்சிப்பது என்பது எதிர்நிலை அரசியல் நிலைபாட்டிற்கே உதவும். 

@எச்.பீர் முஹம்மது "சமூக ஒடுக்குமுறை நிகழும்போது அதை தடுப்பதில் அதிகார வர்க்கத்தின் பங்கு என்ன? என்பதிலிருந்தும் கேள்வி எழுகிறது." என்ன விளையாட்டு இது நண்பா. அதிகாரவர்க்கம்தான் சமூக ஒடுக்குமுறையை செய்கிறது எனும்போது அதன் பங்கு என்று எப்படி தனியாக சொல்ல முடியும். வேண்டுமானால், பஙங்குச்சந்தையில் கேட்டுதான் சொல்லமுடியும். ))) 

நல்ல விவாதம். நண்பர்கள் ஒரு முக்கியமான விடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். திராவிட ஆதரவோ எதிர்ப்போ அல்லது தமிழ் தேசியமோ எல்லாம் பின்புலமான ஒரு குறிப்பிட்டவகை உயர்சாதி நலனை அடிப்படையாகக் கொண்டவையாகவும், இன்றைய ஆதிக்க கருத்தியலான இந்துத்துவாவில் ஊறியவைதான். பெரியாரின் திராவிட இயக்கமோ அதன் கருத்தாக்கங்களை எதிர்ப்பதாக கூறுபவர்களின் பின்னணியில் உயர்சாதி இந்துத்துவ ஆதிக்கம் இல்லையா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் வரலாற்றை நுட்பமாக வாசித்தால் ஒன்றை புரிந்துகொள்ளலாம். அது ஆரம்பம்முதல் இந்துத்துவ உயர்சாதி பார்ப்பன ஆதிக்க சக்திகளால் அவர்களின் அறிவால் அல்லது அவர்களது சொல்லாடலால் வழி நடத்தப்படுகிறது என்பதே. தொடர்ந்து திராவிட இயக்கங்களை விமர்சிப்பவர்கள் ஏன் உயர்சாதி பார்ப்பனிய இந்துத்துவாவை எதிர்ப்பதில்லை என்பதையும் இதோடு இணைத்து சிந்திக்க வேண்டும். பெயரளவில் சொல்வதில்லை ஏன் எதிர்த்து எந்த போராட்டங்களையும் செய்வதில்லை. 

திராவிடக் கட்சிகள் நவீனத்துவத்தை நோக்கிய தனிமனித சுதந்திரத்தையும் பகுத்தறிவையும் சுயமரியாதையையும் மையப்படுத்தாமல் பிராமண அடையாளத்தை துறக்கவேண்டிய கூட்டமாகப் பிற்பட்ட வகுப்பினரையும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் நகர்த்தப் பார்த்தார்கள். அதையும் கூட முழுமையாகப் பிடிக்காதவர்கள் - குறிப்பாக இன்று மிகவும் பிற்பட்டவர்கள் எனப் பட்டியலிடப்படும் முக்குலத்தோரும், வன்னியர்களும் தங்களின் தனித்துவம் சாதியில்தான் இருக்கிறது எனத் தொடக்கத்திலிருந்து நம்பவைக்கப்பட்டார்கள். அதன் காரணமாகவே முத்துராமலிங்கத்தின் பார்வர்ட் பிளாக்கிலும் ராமசாமி படையாச்சியின் வன்னியர் சங்கத்திலும் இணைக்கப்பட்டார்கள். பெரியாருக்கும் அவர் முன்வைத்த கொள்கைகளுக்கும் எதிராக இருந்தார்கள். சாதி அடையாளம் தான் முக்கியம் என்பதோடு, ஆதிக்கம் செய்ய உரிமை இருப்பதாக நினைத்தார்கள்; நினைக்கிறார்கள். அதன் நீட்சியாகவே இன்று தமிழ்ச் சாதிகளின் ஆட்சி என்ற கருத்துருவை அவர்கள் நம்புகிறார்கள். முன் வைக்கிறார்கள். நடக்கப்போகும் வன்முறைக்கு முழுமையாகத் திராவிடக் கட்சிகளை மட்டுமே குறை சொல்வது எவ்வளவு தூரம் சரியெனத் தோன்றவில்லை 

சுயமரியாதை என்பது திராவிடர் இயக்கத்துக்கு மட்டும் இருக்கவேண்டிய ஒன்றா. உங்களுக்கு எங்க போச்சு. இதுவரை எந்த சாதியொழிப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றீர்கள். திராவிடர் இயக்கத்தை போகிற போக்கில் கொச்சைப்படுத்தத் துணியும் அரைவேக்காடுகளின் பட்டியலில் நீங்களும். தர்மபுரியில் வன்முறை நிகழ்த்தியவர்கள் தமிழர்களா? திராவிடர்களா? 

தர்மபுரியிலும், விழுப்புரத்திலும், கொடியங்குளத்திலும் நடத்தியவர்கள் திராவிடர்களோ அல்லது தமிழர்களோ அல்ல. மாறாக தமிழ் பேசும் ஆதிக்க சாதியினர்தான். மேலும் நான் கழகங்கள் என்று தான் குறிப்பிட்டேனே தவிர பெரியாரைப்பற்றி குறிப்பிடவில்லை.இந்த நுணுக்கமான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளமுடியாத ஆற்றாமையை நீங்கள் கடக்கவேண்டும். அதிகாரவர்க்கத்திற்கு சாதி ஒழிப்பிலும், வன்கொடுமைகளை எதிர்ப்பதிலும் அதிக பங்குண்டு. இதை இந்திய வரலாறு நிரூபித்திருக்கிறது. நீங்கள் வீரமணி சார்ந்து பெரியாரை எடுத்து கருணாநிதிக்கோ அல்லது ஜெயலலிதாவிற்கோ போர்வையாக போர்த்திக்கொடுத்தால் நான் பொறுப்பல்ல. 

நான் வீரமணி சார்ந்தோ, கருணாநிதி சார்ந்தோ பேசவில்லை. நாட்டில் தமிழ்தேசியம் பேசுகிறவன் நடத்திய வன்முறைக்கும் கூட திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்பது நாம்தமிழர் மாதிரியான மாபெரும் அறிவாளிகள் கண்டடையும் உண்மை. அதையே வழிமொழியும் உங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறேன். திராவிடர் இயக்கத்தை எதிர்க்க நினைப்பவர்கள் திராவிட என்ற சொல்லைத்தான் நயவஞ்சகமாக பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவு எமக்கு உண்டு. 

செல்லையா முத்துசாமி அநியாயத்தை கண்டிக்க வக்கில்லா விட்டால் வாய் மூடி இருக்கவேண்டும் , ஆதிக்க சக்தி, யார் அந்த சக்திகள் என்பதை அடையாளப்படுத்த முடியுமா ? அப்படி நீங்கள் அடையாளப்படுத்த முயல்வீர்களேயானால் உங்களால் அறிய முடியும் அந்த சக்திகளை வளர்த்து விட்டது யார் என்று.

ஒவ்வொரு தேர்தல்களிலும் எந்த சாதிக்கட்சியை வளைத்து போட்டால் வாக்குகளை அள்ளலாம் என்று இந்த 45 ஆண்டுகளாக சாதி சார்ந்த அரசியலை ஊக்கப்படுதியது யார் ? திராவிட கட்சிகள்தானே 

எந்த சாதியை சேர்ந்தவனை மாவட்ட செயளாரர் ஆக்கினால் கட்சியை வளர்த்து காசு பாக்கலாம் என்று திட்டம் தீட்டி கட்சி நடத்தியது யார் ? திராவிட கட்சிகள்தானே 

திராவிட கட்சிகளை தவிர்த்து நாம் யாரையும் குற்றம் சுமத்த முடியாது ஏனென்றால் அவர்கள் சாதியை ஆதரிப்பவர்கள் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டவர்கள் .

சமூக நீதி கோசத்தை முன்வைத்து ஆட்சியை பிடித்தவர்கள் இந்த திராவிட கட்சிகள் மட்டுமே ஆகவே இந்த அவலத்திற்கு திராவிட கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம் 

திராவிட கட்சிகளின் தவறுகளை நாங்களும்தான் கண்டிக்கிறோம். சுயமரியாதை ஒரு கேடா எ்னறு கேட்பதன் பின் இருக்கும் அரசியல் என்ன? தன்னலமற்ற பெரியாரியவாதிகளின் செயல்பாடுகள் உங்களுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் சுயமரியாதை என்ற சொல்லை இவ்வளவு இழிவாக பயன்படுத்த உங்களால் முடியாது 

சால்வை போத்தி கோரிக்கை வைப்பதுதான் உங்கள் பார்வையில் எதிர்ப்பா நண்பரே 

intha pahuthiyil tamilil eluthi en karuthai eppadi pathuya vaippathu?pls help me 


நான் சுயமரியாதை ஒரு கேடா என்று சொன்னது நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கிற/ முயற்சிக்காத திராவிடம் என்ற பெயரை கொண்ட அதிகார வர்க்கத்தை நோக்கிதான். பெரியாரை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். காரணம் திமுக அதிகமாக இந்த சொல்லை உச்சரித்திருக்கிறது. அதனால் தான். முரசொலி மாறனின் சுயமரியாதை குறித்தும் நீங்கள் பேச வேண்டும். 


எவ்வாறு லைக் செய்வது...? கொடுமையிலும் கொடுமை! மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போன்றவர்கள் என்றுச் சொன்னார் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..மேலும் சொன்னார்கள்: அரபி அல்லாதவரை விட அரபியரோ, அரபியரை விட அரபியல்லாதோரோ, கருப்பரை விட வெள்ளயரோ, வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவரல்லர். அதிக இறையச்சமுடயவரே உங்களில் சிறந்தவர்... 

@ Ramasamy Alagarsamy இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் அரசியலும் நவீனத்துவத்தை நோக்கி நகரமுடியாமல் செய்வது எது? செய்தது எது? நவீனத்துவம் மட்டுமே இதற்கு தீர்வாகுமா? நவீனத்துவம் சாதியை ஒழித்துவிடுமா? என்கிற கேள்விகள் உள்ளன. இன்றைய சாதிய ஆதிக்க கருத்தியல் என்பது செவ்வியல்கால கருத்தியலால் வழி நடததப்படுவதாக தோன்றவில்லை. உண்மையில் நவீனத்துவ கருத்தியலே அதை வழி நடத்துகிறது. நவீனத்துவத்தின் தேசம், தேசியம்; அரசு, இறையாண்மை, தனிமனிதனாதல் உள்ளிட்ட அடையாள அரசியலின் ஒரு எதிர்விளைவாக உருவானனதே இன்றைய சாதிய அரசியலின் எழுச்சி என எண்ணத் தோன்றுகிறது. என்னிடம் அது குறித்த குறிப்பான ஆய்வுகள் இல்லை என்றாலும் எனது ஊகமாக இதை சொல்கிறேன். 

பிராமண அடையாளத்தை துறப்பது என்பதே நவீனத்துவத்தை நோக்கிய நகர்தல்தானே. சுயமரியாதை, தனிமனித சுதந்திரம், பகுத்தறிவு ஆகியவற்றிற்கு எதிராக இந்தியாவில் பிராமணீயம் ஆதிக்கம் வகித்ததை எந்த அடையாளத்தில் சேர்ப்பீர்கள். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், நவீனத்திற்கு எதிராக ஆதிக்க கருத்தியலாக இன்றும் இருப்பது எது என்கிறீர்கள்? 

திராவிட இயக்கங்கள் விமர்சிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக பிராமணக் கருத்தியலில் போய் விழுந்துவிட முடியுமா?

 சாதி என்பதை புரிந்துகொள்ள ஒவ்வொருகால வரலாற்று சொல்லாடலிலும் அது என்னவாக கோடிங் (சங்கேதமாகி) ஆகி உள்ளது என்பதை ஆராய்வது அவசியம். செவ்வியல்காலத்தில் சாதி என்பது இன்றைப்போலவே ஆதிக்கமாக அடக்குமுறையாக இருந்ததா? அல்லது வாழ்வியலுக்கான சமூக கருத்தியலாக இருந்ததா? எனபதும் தன்மானம் சுதந்திரம் போன்ற நவினத்துவ பகுத்தறிவு சொல்லாடலுக்குப்பின் சாதி என்பது என்னவாக சங்கேதப்படுத்தப்பட்டது என்பதையும் ஆராயவேண்டும். திராவிட இயக்கங்களை விமர்சிப்பது என்பது எந்தவகையிலும் தமிழ்தேசிய மற்றும் உயர்சாதி மற்றும் பார்ப்பன இந்துத்துவ கருத்தியலுக்கு பரணி பாடுதலாக மாறிவிடக்கூடாது என்பதே எனது அச்சம். 

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - ஆ. சிவசுப்பிரமணியன்

வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.

மனுவின் காலம்

மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.

மனு செய்த கொடுமை

நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.

தமிழ்நாட்டில் மனுதர்மம்

தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.

‘அறநெறி வளர, மனுநெறி திகழ’
‘மறைநெறி வளர மனுநெறி திகழ’
‘மனுநீதி முறை வளர’
‘மனுநீதி தழைத் தோங்க’
‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’
‘மனுவாறு பெருக’
என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று குறிப்பிடுகிறார்.

பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை, ‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது. ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும் செய்யுள் வடிவில் அமைந்தன.

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.

மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.

நன்றி - கீற்று
http://www.keetru.com/vizhi/jan08/sivasubramanaian.php

Wednesday, November 28, 2012

மனுதர்ம சாஸ்த்திர எரிப்பு ஏன்? - தோழர் கொளத்தூர் மணி உரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னையில் கடந்த 25-11-2012 அன்று மனுதர்ம சாஸ்த்திர எரிப்பு விளக்க மாநாட்டு அறிமுகக்கூட்டம் பாடி பகுதியில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...

நமது தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்தில்... இராஜராஜன் காலத்தில் என்றெல்லாம் பேசத்தொடங்குவார்கள். இவன் (தமிழ்ச்தேசியர்களின்) கணக்குப்படி அவன் தமிழ் மன்னன் இல்லை. அவன் தெலுங்கு சோழ வம்சத்தில் வந்தவன். ஆனால், நமது தமிழ்க் கம்பெனிக்கெல்லாம் அவன்தான் தமிழ்ப்பேரரசன்.

அவன் காலத்தில்தான் சேரி என்று தனியாக ஒதுக்கி வைத்தான். விலைமாதர்களுக்கென தேவதாசி தெருவை உண்டாக்கி வைத்தவன் அவன்தான். அதற்கு முன்பே இருந்திருந்தால் கூட தெளிவாக பிரித்து வைத்தவன் அவன்தான்.

அழகிய அருண்மொழித்தேவன் என்ற தமிழ்ப்பெயரை இராஜராஜன் என்று வடமொழியில் மாற்றித் தொலைத்தவனும் அவன்தான். எல்லாக் கேடுகளையும் தொடங்கி வைத்தவன் அவன்தான்.

அவன் காலத்திலிருந்து இன்று வரைக்கும் ஆங்கிலேயன் ஆண்டாலும் யார் ஆண்டாலும் வாழ்விடங்கள் தனித்தனியாகத்தான் இருக்கின்றன. ஊர் என்றும் சேரி என்றும் எல்லா ஊர்களிலும் பிரித்துதான் வைக்கப்பட்டிருக்கின்றன.

Thursday, November 1, 2012

திராவிடர் சீறணி பயிற்சி

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொள்கைத் தெளிவும் உடல்வலிவும் கொண்ட திராவிடர் சீறணி(சீறுகின்ற அணி)க்கான பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுடைய தோழர்கள் கீழ்காணும் எண்களில் தொர்பு கொள்ளலாம். 

ஏற்பாடு: திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை மண்டலம் - 9150381577, 9488179109

திராவிடர் சீறணி
பயிற்சி - தொடக்க நிலை-1 

நாள் : 04.11.12 ஞாயிறு 
இடம் : அம்புரோஸ் ஐ.டி.ஐ சேவூர்

காலை 9.00 - 9.30க்கு மாணவர்கள் பதிவு

9.30 - 9.45 
திராவிடர் சீறணி: முன்னுரை கே.செந்தில்குமார், 
கள அலுவலர்,கோவை மண்டலம்

9.45 - 10.00 
மாணவர்கள் சுய அறிமுகம் 

காலை 10.00 - 11.30 
பொதுஉரிமையும் பொதுஉடைமையும் 
பழனி மெள.அர.ஜவஹர்

11.30 - 11.45க்கு தேநீர் இடைவேளை 

11.45 - 1.15 
பாலின சமத்துவம் 
முனைவர் பூ.மணிமாறன்

பகல் 1.15 - 2.15க்கு உணவு இடைவேளை


பகல் 2.15 - 3.45 
ஜாதி: தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பு 
மேட்டூர் ஜஸ்டின்ராஜ்

பகல் 3.45 -4.00 தேநீர் இடைவேளை
மாலை 4.00 - 5.00 
பெரியாரிய அமைப்புமுறை 
தி.தாமரைக்கண்ணன்

குறிப்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், 30 வயதுக்கு மேற்பட்ட புதிய தோழர்களுக்கும் மட்டுமே அனுமதி - மாணவர்கள் நுழைவுக் கட்டணம் ரூ 50. அவசியம் செலுத்த வேண்டும் - 9.00 மணிக்குப் பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.