Wednesday, December 26, 2012

மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டில் எடுக்கப்பட்ட சிறப்புமிக்க 8 தீர்மானங்கள்


1. மனு சாஸ்திரத்தை சட்டவிரோதமாக அறிவித்திடுக!

உலகிலேயே எங்குமில்லாத ‘வர்ணாஸ்ரம’ சமூக அமைப்பை மூவாயிரம் ஆண்டுகளாகத் திணித்து – தொடர்ந்து உயிர்த்துடிப்போடு நீடிக்கச் செய்து கொண்டிருப்பது மனுசாஸ்திரம். இப்படி ஒரு சாஸ்திரம் இருப்பதை அறியாதவர்கள் கூட, வர்ணாஸ்ரம உளவியலில் கட்டுண்டு ஊறிப்போய் நிற்கின்றனர். இந்த வர்ணாஸ்ரமம் வழியாக – காலம் காலமாக, சமூக – அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனர்கள் – இந்த சமூக அமைப்பு உருக்குலையாமல், அரண் அமைத்து வருகிறார்கள். 

இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கே முரணானது இந்த மனுசாஸ்திரம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம்; சட்டத்தின் முன் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனுசாஸ்திரம். ‘பிராமணனுக்கு’ அடிமையான ‘சூத்திரரின்’ கல்விக்கு தடை போடுகிறது மனுசாஸ்திரம்; மாறாக, கட்டாய இலவச கல்வியை அனைவருக்கும் வலியுறுத்துகிறது அரசியல் சட்டம். குழந்தைகளுக்கு – இளம் வயதிலேயே – திருமணம் செய்ய வலியுறுத்துகிறது மனுசாஸ்திரம்; அதைக் குற்றமாக்கி திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்கிறது அரசியல் சட்டம். பெண் ஆணுக்கு அடிமைப்பட்டவள் என்கிறது மனுசாஸ்திரம்; இருவருக்கும் – சம உரிமை உண்டு என்கிறது அரசியல் சட்டம். ஆனால் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவிடாமல், தடைச்சுவராக நிற்கிறது மனுசாஸ்திரம். 

இப்படி சட்டத்துக்கு நேர் முரணான – மனுசாஸ்திரத்தை – பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் தடையின்றி அச்சிட்டுப் பரப்பி வருகிறார்கள். பழக்க வழக்கங்கள், சடங்குகள், வாழ்வியல், வழியாக, சமூகத்திலும் தொடர்ந்து நீடிக்கச் செய்து வருகிறார்கள். சமூக மாற்றத்துக்கான எந்த திட்டங்களானாலும் – சட்டங்களானாலும் அதன் நோக்கத்தை அடைய விடாது – தடுப்பது, இந்த பாசிச பார்ப்பனிய மனுசாஸ்திர சிந்தனையும் – அதன் வழி கட்டமைக்கப்பட்ட ஜாதிய சமூகமும் தான்; இந்த எதார்த்தத்தையும், கடந்த காலங்களிலிருந்து பெற்று வரும் படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு – மக்கள் நலனில், விடுதலையில் உண்மையான கவலைக் கொண்ட கட்சிகள், இயக்கங்கள், பார்ப்பனிய மனுசாஸ்திர கட்டமைப்புகளுக்கு எதிரான இயக்கங்களை நடத்த முன் வர வேண்டும் என்று இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. இதன் முதற்கட்டமாக, அரசியல் சட்டத்துக்கே எதிரான ‘மனுசாஸ்திரத்தை’ சட்ட விரோதமாக அறிவித்து – அதை அச்சிட்டுப் பரப்புவதை குற்றமாக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. நவீன மனுவாதிகளை முறியடிப்போம்

மனுசாஸ்திரம் கட்டமைத்துள்ள வர்ணாஸ்ரம அமைப்பில் உழைக்கும் மக்களை ‘பஞ்சமர்’ என்று இழிவு படுத்தி – சமூகத்திலிருந்து ஒதுக்கி – ஊருக்கு வெளியே சேரிகளில் தனிமைப்படுத்தியது.

புத்தர், ஜோதிபாபுலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட – மனுசாஸ்திர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களால் – விழிப்புற்று – ஓரளவு உரிமை பெற்று – சம உரிமைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி வரும் நிலையில் –மனுசாஸ்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் முயற்சிகளில் சாதிய சக்திகள் களமிறங்கியுள்ளன. 

மீண்டும் மனுசாஸ்திரம் காட்டும் வழியில் ‘தீண்டப்படாத மக்களை - ஒதுக்கி வைக்கும் மிரட்டல்களை வெளிப்படையாகவே தொடங்கி விட்டனர்; இந்த நவீன மனுவாத சக்திகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய அளவில் ஜாதி – பார்ப்பனிய மனுவாதிகள் எதிர்ப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி ஜாதிவெறி சக்திகளை முறியடிக்க இந்த மாநாடு உறுதியேற்கிறது. 

3. குரலற்ற மக்கள்

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன பிரிவில் அடங்கியுள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையினரான புதிரை வண்ணார், காட்டு நாயக்கர், நரிக்குறவர், குயவர், வண்ணார், நாவிதர், போயர் போன்ற பல்வேறு சமுதாயப் பிரிவினர் ஒரு ஊராட்சிமன்ற உறுப்பினராகக் கூட வரமுடியாத நிலையே உள்ளது. உயர் கல்வி, உயர் பதவிகளில் கற்பனையில் கூட எட்டிப்பிடிக்க முடியாத, ‘ குரலற்றவர்களாக ’ உள்ள இந்த சமூகத்தினருக்கு - சட்டம் வலியுறுத்தும் ’ போதுமான பிரதிநிதித்துவம் ’ (Adequate Representation ) என்ற இலக்கை சென்றடைவதற்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையில் மற்றங்களை கொண்டுவரவேண்டிய அவசியத்தை –இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது. 

குரலற்ற இந்த மக்களின் நியாயமான உரிமைகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வலிமையாக குரல் கொடுத்துப் போராடும் என்று அறிவிக்கிறது.

4. சிறப்பு திருமணச் சட்டத்தில் திருத்தம்

இரு வேறு மதங்களின் பிரிவைச் சார்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கான சிறப்பு திருமண பதிவுச் சட்டம் – திருமணத்தை பதிவு செய்வதற்கு முன் ஒரு மாத முன்னறிவிப்பு தரப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது; திருமணம் செய்துகொள்ள போகும் இணையர்களின் விவரங்களும் முன் கூட்டியே அறிவிப்புப் பலகையில் அறிவிக்கப்படுகிறது . இதன் காரணமாக மதங்கடந்த காதல் திருமணத்தை தடுக்க விரும்பும் சாதி – மதவாத சக்திகள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும், மிரட்டுவதற்கும் வாய்ப்புகள் தரப்படுகின்றன. எனவே ஒரே மதத்திற்குள் திருமணம் புரிவோர் உடனடியாக பதிவு செய்துகொள்வதற்கு உள்ள வாய்ப்புகளை போன்றே, மதம் கடந்து திருமணம் செய்வோருக்கும் அனுமதிக்கும் வகையில் சிறப்புத் திருமண சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

5. காதல் திருமணத்துக்கு தடை போடாதீர்!

காதலுக்கு தெய்வீகம் புனிதம் என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க்கிறார்; அதே நேரத்தில் - ஒருவருக்கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார்.

“ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல் காமம் நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு, பெண்ணோ ஆணோ - மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ - பேசுவதற்கோ நிர்ணியப்பதற்கோ நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது” என்று உறுதிபடக் கூறுகிறார்.

மாறிவரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறையின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கவேண்டாம். என்று பெற்றோர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மனுசாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்துவிட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக்கொண்ட நமது சமூகம், அதே ‘மனுசாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக்குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6. மருத்துவர் இராமதாசுக்கு தடை போட்டதை வரவேற்கிறோம்

தலித் மக்களை தனிமைப்படுத்திட சாதி வெறி கட்சிகளைத் தூண்டிவிடும் இயக்கத்தை முனைப்புடன் நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு எதிராக, சமூக அமைதியைக் காக்கும் நோக்கத்தோடு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதித்துள்ளதைப் பாராட்டி வரவேற்பதோடு தமிழகத்தின் ஏனைய மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்த நல்ல முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. சான்றிதழ்களில் ‘பிராமணர்’ பெயர் நீக்குக!

பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களில் சாதியைக் குறிப்பிடும் போது – பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சார்ந்தோரின் – ஜாதி குறிப்பிடப்படுகிறது; ஆனால் பார்ப்பனர்களை மட்டும் அவர்கள் ஜாதியைக் குறிப்பிடாமல் “பிராமணர்” என்று வர்ணத்தின் பேரால் குறிக்கப்படும் வழக்கத்தை மாற்றி, மற்ற பிரிவினரைக் குறிப்பிடும் முறையிலேயே பதியவேண்டும் என இம்மாநாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது..


தீர்மானம்: 8

சாதி தீண்டாமையின் வடிவங்கள் தொடர்ந்து நிலை பெற்றிருப்பதை இம்மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோர் வாழ்விடங்கள் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது, இதை மாற்றுவதற்கு அரசு கட்டித்தரும் தலித் மக்களுக்கான குடியிருப்புகள் ஆதிக்க சாதிகள் வாழும் ஊர்ப்பகுதிகளிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளாக அரசு கட்டித்தர வேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு கல்வி – வேலை வாய்ப்புகளில் ஜாதியற்றோர் என்ற பிரிவை உருவாக்கி அவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; இட ஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த வடிவிலும் ஜாதி அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது; திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தேனீர் கடைகள், முடிதிருத்தகங்கள், வழிபாட்டிடங்கள் என்பன போன்ற பொது பயன்பாட்டு இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; - போன்ற ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான தீர்மானங்களை திருப்பூரில் 29-4-2012 நடத்திய ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றி, அதனடிப்படையில் அந்த ஜாதி – தீண்டாமைக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் பார்ப்பனிய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை அறிவித்தோம்.

இப்போது தலித் மக்களை தனிமைப்படுத்துதல் என்ற செயல்திட்டத்தோடு சாதிய கட்சிகள் வெளிப்படையாக இயக்கங்களை நடத்தி தமிழகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்துகள் உருவாகியுள்ளன. இந்த மனுவாத சாதிய கட்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்கவும், மனு சாஸ்திர அடிப்படையில் சாதிய – தீண்டாமைக் கொடுமைகள் நிலைப்பதை மாற்றியமைக்கக் கோரியும் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்திடவும், அதற்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, சாதி – தீண்டாமைக்கு எதிரான பரப்புரைப் பயணங்களை நடத்திடவும், ஒவ்வொரு பயணத்தின் நிறைவிலும் அந்தந்த மண்டலங்களில் சாதி எதிர்ப்பு மாநாடுகளை நடத்துவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது. அதனடிப்படையில் ஜனவரி 22-இல் சென்னையிலும், பிப்ரவரி 9-இல் திண்டுக்கல்லிலும், பிப்ரவரி 16-இல் சேலத்திலும், பிப்ரவரி 23-இல் தஞ்சையிலும், மார்ச் 9-இல் திருநெல்வேலியிலும், மார்ச் 16-இல் கோவையிலும் மார்ச் 23-இல் புதுவையிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி திருச்சியிலும் இந்த மாநாடுகள் நடத்திடவும், நிறைவாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

No comments: