திங்கள், 10 டிசம்பர், 2012

“நமக்குக் கிடைத்த ஒரே அய்யர்” - நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணய்யரின் 98 ஆவது பிறந்தநாள் நிகழ்வு

மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பில் நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணய்யரின் 98 ஆவது பிறந்தநாள் நிகழ்வு சென்னையில் கடந்த டிசம்பர் 1 -2012 அன்று சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அ.மங்கை அவர்களது இயக்கத்தில் மரப்பாச்சி குழுவினரின் மரண தண்டனைக்கெதிரான நிகழ்த்து கவிதையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மரண தண்டனைக்கெதிரான ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. பின்னர், கிருஷ்ணய்யரின் பெயரிலான பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

மனிதநேயத்திற்கான கிருஷ்ணய்யர் விருதை நடிகர் மம்முட்டி சார்பில் பாடகர் உன்னிக்கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

மரண தண்டனை எதிர்ப்பிற்கான கிருஷ்ணய்யர் விருதை வழக்கறிஞர் யுக் மோஹித் சௌத்ரிக்கு வழங்கப்பட்டது.

மரணதண்டனைக்கெதிராகப் போராடிவரும் பெண்களுக்கான விருதான கிருஷ்ணய்யர்-செங்கொடி விருது வழக்கறிஞர்கள் வடிவாம்பாள், சுஜாதா மற்றும் கயல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


நிகழ்வில், நிதியரசர் சிவசுப்பிரமணியம், தோழர் தியாகு, மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன், முனைவர் வசந்திதேவி, நடிகை ரோகினி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கிருஷ்ணய்யரின் பேத்தி லதா கிருஷ்ணய்யர், பேராயர் சின்னப்பா, அற்புதம் அம்மாள், வழக்கறிஞர் புகழேந்தி தங்கராசு ஆகியோர் பங்கேற்றனர்.


கசாப்பின் தூக்கை முன்வைத்து மரண தண்டனை ஒழிப்பு தொடர்பான கருத்துரையாற்றிய வழக்கறிஞர் யுக்மோஹித் சௌத்ரி அவர்களின் உரை மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அவ்வுரையை தோழர் தியாகு உடனுக்குடன் மொழிபெயர்த்தார்.


தோழர் தியாகுவின் உரையிலிருந்து...

“எனக்கு உண்மையில் அடிக்கடி ஒன்று தோன்றுவதுண்டு. யாராவது ஒரு அய்யரைப் போய் நாம் பாராட்ட முடியுமா? ஒரே ஒரு அய்யர்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைப்பேன்.

ஏனென்றால், ஏ.எஸ்.கே. அய்யங்கார் என்றொருவர் இருந்தார்.அய்யங்கார் ஒருமுறை பெரியாரிடம் கேட்டார். 

“அய்யா, எல்லோரும் அய்யங்கார் என்கிறார்கள். நீங்களும் அய்யங்கார் என்கிறீர்களே” 

அப்போது பெரியார் சொன்னார், ”அய்யங்காரும் என்னைப் பாராட்டுகிறான் என்பதுதானே முக்கியம். அய்யங்கார் இப்படிச் சொல்கிறார் என்று போடட்டும். அதனால் அப்படியே வைத்துக்கொள். அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்” என்றார். 

அப்படித்தான் நாம் கிருஷ்ணய்யரை நினைக்கவேண்டியிருக்கிறது. அய்யர் என்ற சொல்லுக்குரிய உண்மையான பொருளில் ஒரே ஒரு அய்யர் கிருஷ்ணய்யர் மட்டும்தான்”. என்று தோழர் தியாகு குறிப்பிட்டதும் அரங்கம் கைதட்டல்களுடன் வரவேற்றது.

பெரியாரியவாதிகள் இனவாதம் பேசுபவர்கள் அல்லர் என்பதையும் ஏற்றத்தாழ்வு பாராது மனித சமூகத்திற்கு பணியாற்றும் எவரையும் போற்றக்கூடியவர்கள் என்பதையும் வந்திருந்த கருஞ்சட்டைக்காரர்களின் எண்ணிக்கையே மெய்ப்பித்தது.

மேலும், இந்நிகழ்வுக்காக திராவிடர் விடுதலைக் கழகத்தோழர்கள் சென்னை மாநகரெங்கும் 1500 சுவரொட்களை ஒட்டியதோடு, பதாகை வைக்கும் பணிகளையும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 கருத்துகள்: