Tuesday, December 24, 2013

Sunday, December 8, 2013

முட்டுச் சந்து டாஸ்மாக் மூலை டேபிள் அருகில்... (காணொளி)

எனது நண்பர் பாலாஜி சண்முகம் இயக்கிய மூன்றாவது குறும்படம் இது. மூன்று படங்களின் கதைக்கருவும் குடிசார்ந்தே இருக்கின்றன. மதுவுக்கும் அவருக்கும் என்ன உறவோ? 

Monday, December 2, 2013

தாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் - குறும்பனை பெர்லின் உரை


தாதுமணல் கொள்ளை: சூறையாடப்படும் தமிழக வளங்கள் என்ற தலைப்பில் சேவ் தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் கடந்த 27-10-2013 அன்று கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

இவ்வரங்கில் குறும்பனை பெர்லின் தாதுமணல் கொள்ளைக்கெதிரான மக்களின் போராட்டம் குறித்து சிறப்பாக உரையாற்றினார்.

Friday, November 15, 2013

மார்க்சியம் என்றால் என்ன? - தோழர் தியாகு

மார்க்சியம் என்றால் என்ன? என்பது குறித்து தோழர் தியாகு அவர்கள் எளிமையாக விளக்கங்களுடன் அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார்.

மார்க்சியம் பற்றி பலகாலம் புரிந்துகொள்ள விருப்பம் இருந்தும் அதன் சொல்லாடல்களில் மிரண்டு விலகிச் சென்றவர்களுக்கு தியாகுவின் இந்த அரசியல் வகுப்பு பெரிதும் நம்பிக்கையை அளிக்கும். ஆழமான மார்க்சிய நூல்களை வாசிக்க இது நல்ல தொடக்கமாக அமையும்.

(இன்று திராவிடர் விடுதலைக் கழகமாக அறிப்படும் இயக்கம், 2005 இல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் இயங்கியபோது, இயக்கத் தோழர்களுக்காக திண்டுக்கல்லில் ஒருங்கிணைத்த அரசியல் வகுப்பில் தோழர் தியாகு ஆற்றிய உரையின் காணொளி வடிவம்)

Saturday, October 5, 2013

காவி இருளுக்கு இரையாகலாமா தமிழருவி? - கொளத்தூர் மணி


இந்தியாவில் அடுத்து அமையப்போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள்பிரச்சினைகளை எல்லாம்தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்றுமலரப்போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராகஇல்லை. தேர்தல் வழியாகமட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்றநம்பிக்கையும் நமக்கு இல்லை.

ஆனால், "இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும், அதற்குத் தகுதியானவர்அவர் ஒருவரே" என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட்ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டிநிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணியில்இருப்பது கண்கூடு. இந்தத் ‘திருப்பணியில்’ நாம் மிகவும் மதிக்கும் தோழர் தமிழருவிமணியனும், தன்னை இணைத்துக் கொள்ள முன்வந்திருப்பது நமக்கு வியப்பையும்வேதனையையும் தருகிறது. சுயநல, சந்தர்ப்பவாத, பதவிவெறி அரசியலில் இருந்து தன்னைவிடுவித்துக்கொண்ட அவர், மோடியை பிரதமராக்குவதற்குக் கூட்டணி வியூகங்களைவகுத்துத்தந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ‘புதிய அரசியல் பூத்துக் குலுங்குவதற்கும்’பாஜகவுடனான அணியே அவசியம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். யாரோடு யார்கூட்டணி சேர வேண்டும் என்பது பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால், நரேந்திரமோடியையும் பாஜகவையும் முன்னிறுத்துவதால் உருவாகும் ஆபத்துகளைப் பற்றியே நாம்கவலைப்படுகிறோம்.

முதலில், நரேந்திரமோடி பாஜக தேர்வுசெய்த பிரதமர் வேட்பாளர் என்பதைவிட, அதன் தாய்அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் செல்லப்பிள்ளையாகக் களமிறக்கப்பட்டவர் என்பதேஉண்மை. காந்தியார் முன்வைத்த ‘தேசியத்தை’ ‘போலி தேசியம்’ என்று ஒதுக்கித் தள்ளியஆர்எஸ்எஸ், மனிதர்களைப் பிளவுபடுத்தும் மதவாதத்தை – உண்மையான தேசியமாகவரையறுக்கிறது. பெரும்பான்மை மக்களின் சமூகம், மொழி, இனம் மற்றும் வர்க்கஅடையாளங்களைப் புறந்தள்ளிவிட்டு, மதப் பெரும்பான்மைவாத அரசியலைமுன்னிறுத்தித் தேர்தல் ஆதாயம் அடைய முனைகின்றனர். மதச்சார்பற்ற, ஜனநாயகதேசியத்துக்கு மாற்று – மதவாதத்தை முன்னிறுத்தும் வகுப்புவாத தேசியம் என்போருக்குஆதரவாக தோழர் தமிழருவி மணியன் வாதாடத் துணிவது மிக மிக ஆபத்தானது.

தமிழகத்தில் 15 விழுக்காடு வாக்காளர்கள் மோடியைப் பிரதமராக்கத்துடித்துக்கொண்டிருப்பதாக மணியன் வரையும் சித்திரம் அடிப்படை ஆதாரமற்றது. தமிழகத்தேர்தல் களத்தில், கடைசியாக நடந்த 2011 தேர்தலில்கூட பாஜகவின் வாக்குவங்கி 2.2விழுக்காட்டைத் தாண்டவில்லை. அது 15 விழுக்காடாகத் திடீரென ஊதி்ப் பெருத்து நிற்கிறதுஎன்பதற்கு எந்தச் சான்றுமில்லை.

“ராமன் கோவில் விவகாரத்தை வளர்த்தெடுக்கக்கூடாது, பொது சிவில் சட்டத்தைவலியுறுத்தக்கூடாது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்துசெய்யக்கூடாது’ என்று பாஜகவிடம் நிபந்தனை விதிக்கலாம் என்றும் மணியன்ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் பேசிய மோடியே இதற்குப் பதில்கூறி விட்டார்.காஷ்மீருக்குத் தனிச் சலுகை வழங்கியதை மட்டுமல்ல, இந்தியாவில் மொழிவழிமாநிலங்கள் பிரிக்கப்பட்டதையேகூட அவர் எதிர்த்திருக்கிறார். இதுவே ஆர்.எஸ்.எஸ்.சின்சித்தாந்தத் தந்தை கோல்வாக்கரின் கருத்து!

இந்த மூன்று விவகாரங்களையும் கையிலெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி தந்துதான்1998-99-ம் ஆண்டுகளில் வாஜ்பாய் கூட்டணியை அமைத்தார். அவற்றில் அதிமுகவும்,திமுகவும் பங்கேற்றன. அந்தக் காலகட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்ததோழர் தமிழருவி மணியன், மதவாத பாஜகவின் உறுதிமொழிகளை ஒருபோதும்நம்பமுடியாது; இந்தியாவின் ஆட்சி அதிகாரம் காவிப் பயங்கரவாதிகளின் கைகளுக்குப்போய்விடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று அனல் பறக்கப் பேசியதுநினைவுக்கு வருகிறது. கொடுத்த உறுதிமொழிகளையே நம்புவதற்கு உகந்ததல்ல என்றுபுறந்தள்ளியவர், இப்போது புதிதாக உறுதிமொழியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதும்,அதை நம்பி மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதும் நாட்டை எங்கேகொண்டுபோய்ச் சேர்க்கும்?

அயோத்தியில் பூஜை மட்டுமே செய்வோம் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதிகூறிஅனுமதிபெற்ற பாஜகதான், பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்பட்டவுடன்அதை வன்மையாகக் கண்டித்த அத்வானிதான், பிறகு அதை நியாயப்படுத்தினார். குஜராத்இனப் படுகொலையின்போது, மோடி பதவி விலக வேண்டும்; ராஜ தர்மத்தைப் பின்பற்றமோடி தவறிவிட்டார்; எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன் என்று கண்ணீர் வடித்தவாஜ்பாய்தான், பிறகு மோடி பதவியில் தொடர்வதை அனுமதித்தார். இவர்கள் தருகிறஉறுதிமொழிகளை நம்பி ஏற்க முடியுமா என்பதை தோழர் தமிழருவி மணியன்தான் விளக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக, அதிமுக மீது நமக்கும் கடுமையான விமர்சனங்கள்உண்டு. கொள்கைவழி அரசியல் லட்சியங்களை வளர்த்தெடுக்க முனையாமல்,சந்தர்ப்பவாத – தனிமனித – ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தியவர்கள் என்பதும்உண்மைதான். ஆனாலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பீட்டு அளவில் ஆராய்ந்தால், சமூகநீதி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில்நிற்கிறது என்பதே உண்மை. தமிழ் மண்ணில் பெரியார் உள்ளிட்ட பல முன்னோடிகள்தான்இதற்கான அடித்தளத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள். அதன் காரணமாகவேமக்களிடம் பகையுணர்ச்சியைக் கட்டி எழுப்பிடத் துடிக்கும் மதவாத சக்திகள் தமிழகத்தில்ஆழமாகக் கால்பதிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்,தமிழர்களின் உரிமைக்காகப் போராடிவரும் வைகோ போன்ற தலைவர்களையும் –ஒருபோதும் மதவாத அடையாளத்தைத் தனது கட்சிக்குள் நுழைத்திடாத விஜயகாந்த்போன்றவர்களையும், ஆர்.எஸ்.எஸ்.ஸோடு அணிசேர்க்க அழைத்து தமிழகத்தில்காவிக்கூட்டத்தின் ஆதரவுத் தளத்தை அதிகரிக்கச் செய்யும் ஆபத்துக்கு தோழர் மணியன்துணைபோகலாமா என்பதே நம் கேள்வி.

பல்வேறு மொழி, இனம், மதம், பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராகஇருப்பவர், இந்தத் தனித்துவமான பன்முகத்தன்மையை மதிப்பவராகவும், ஏற்பவராகவும்இருப்பதே அப்பதவிக்குத் தேவையான முதல் தகுதி. வளர்ச்சியைக் கொண்டுவரும்சாதனையாளர் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமே! ஊடகங்கள் வியந்தோதுவதைப்போலஅப்படியொன்றும் குஜராத்தில் மோடி வளர்ச்சியை கொண்டுவந்துவிடவும் இல்லை.உருவான காலத்தில் இருந்தே, தொழில் வளர்ச்சியிலும் விவசாயத்திலும் முன்னணியில்இருந்துவரும் மாநிலம்தான் குஜராத். மோடியின் காலத்திலும் அது தொடர்கிறதுஎன்பதுதானே தவிர, புதிதாக எதையும் அவர் சாதித்துவிடவில்லை என்பதைபுள்ளிவிவரங்களும் ஆய்வுகளும் ஆதாரபூர்வமாக மெய்ப்பித்துள்ளன. (எகனாமிக் அன்டுபொலிடிக்கல் வீக்லி, செப். 28, 2013).

மனிதவள மேம்பாடு, எழுத்தறிவு, ஆண்-பெண் பிறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைபாடு,தீண்டாமை ஒழிப்பு, பழங்குடியினர் முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறுதுறைகளில் பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலிலேயே குஜராத் இடம் பெற்றிருக்கிறது.மோடிக்குப் பெருமை சேர்க்கவே போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 97இஸ்லாமியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நரோடா பாட்டியா கொலைவழக்கில் – 28ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் மாயா கொட்னானிக்கு, அந்தகோரத்தாண்டவத்தை அரங்கேற்றியபிறகு அமைச்சர் பதவிதந்து அழகு பார்த்தவர்தான்மோடி. அதனால்தான் உலகப்புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென், "மோடிபிரதமராவதை நான் ஆதரிக்க மாட்டேன். 2002-ல், திட்டமிட்ட இனப்படுகொலைகட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர் அதைத் தடுக்க ஒன்றும் செய்யவில்லை. அவர்ஆட்சியில், பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதாக சிறுபான்மை மக்கள் உணரமாட்டார்கள்" என்றார். இதை அறியாதவர் அல்ல, தமிழருவி!

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்றால், கர்நாடகம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்தமாநிலங்களிலும் அதே கதைதான். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்குநிலங்கள் விற்பனை, 2 லட்சம் கோடி காண்ட்லா துறைமுக ஊழல், எரிவாயுத் திட்டத்தைஅன்னிய நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கியதில் ரூ.20,000 கோடி இழப்பு என்று ஊழல்குற்றச்சாட்டுகள் மோடியின் ஆட்சியின் மீது அணிவகுத்து நிற்கின்றன. குஜராத் அரசின்செயலால் பொதுத்துறைக்கு 2013-ம் ஆண்டு ரூ.4052 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதைதலைமைக் கணக்காயரின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குப் போட்டி போட்டுக்கொண்டு கதவைத்திறந்துவிடத் துடிப்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.91 ஆயிரம் கோடி வரியை ரத்து செய்ய ப.சிதம்பரம்முன்மொழிந்தால், ‘தேசநலன்’ கருதி அதை ஆதரிக்கிறார் பாஜகவின் வெங்கையநாயுடு.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரஸில் இருந்து பாஜக வேறுபட்டு நிற்கவில்லை.வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் சிங்களப் படைகளின் துப்பாக்கிக் குண்டுகளைத் தமிழகமீனவர்கள் எதிர்கொண்டார்கள். இலங்கை ராணுவத்தின் சக்திவாய்ந்த போர்க்கப்பல் –வாஜ்பாய் காலத்தில் வழங்கப்பட்டதுதான். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு,சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற நாடாளுமன்றக் குழு – ராஜபக்சே அரசு மறுவாழ்வுப்பணிகளைச் சிறப்பாகச் செய்வதாகப் பாராட்டுப் பத்திரம்தான் வாசித்தது. மத்திய பிரதேசபாஜக ஆட்சியோ, ராஜபக்சேவை புத்தர் கோயிலுக்கு அழைத்து, சிவப்புக் கம்பளம் விரித்தது.அதற்காகவே, சாஞ்சி வரை, தொண்டர்களை அழைத்துச் சென்று போராடினார் வைகோ.தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, போர்க்குற்றத்துக்கான பன்னாட்டு விசாரணைபோன்ற கோரிக்கைகளிலும் இரு கட்சிகளின் நிலையும் ஒன்றேதான்!

தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு, தமிழகத்தில்இருந்து ஆதரவுக்குரல் கொடுத்த தலைவர்களையும் இயக்கங்களையும் ‘தேசவிரோதிகள்’,தண்டிக்கப்பட வேண்டிய `பிரிவினைவாதிகள்’ என்று பேசிய, எழுதிய சுப்பிரமணியன்சாமி,துக்ளக் சோ உள்ளிட்ட பல `உயர்குலத் தலைவர்கள்’, ஏடுகள் மோடியை பிரதமராக்கவேண்டும் என்று உறுதியுடன் களமிறங்கி நிற்கின்றன.

இவைகளைக் கருத்தில்கொண்டு, மக்களைக் கூறுபோடும் வெறுப்பு அரசியலைதேசியமாக்க முயற்சிக்கும் சனாதன அமைப்புகளிடம் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டியஎச்சரிக்கையை, தமிழ்ச் சமூகத்தின் முன் முன்வைப்பதே தோழர் தமிழருவி மணியன்ஏற்றுக்கொண்ட அரசியலுக்கு அறம் செய்வதாகும்.

தேர்தலுக்கு முன் அமைக்கப்படும் கூட்டணி, முடிவுகள் வந்தவுடன் மாறி அதிகாரத்தைப்பங்கிட்டுக் கொள்ளும் சந்தர்ப்பவாதமாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கு முன்மொழியப்படும்கூட்டணிகளில் என்ன பொருள் இருக்க முடியும்?

காந்திய இயக்கம் நடத்தும் தோழர் தமிழருவி மணியன், காந்தியின் உயிரைப் பலி கேட்டஒரு தத்துவத்தை நியாயப்படுத்தும் அரசியலுக்குத் துணைபோவது காந்தியத்துக்குஇழைக்கும் அநீதி அல்லவா?

எண்ணெய்ச் சட்டி சுடுவது உண்மைதான். அதற்காக நெருப்பில் விழுந்துவிட முடியுமா?

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Wednesday, October 2, 2013

படிக்காத பெரியார்தான் கேள்வி கேட்டார் - கொளத்தூர் மணி
பெரியாரின் 135 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.

கடவுள் சிலைக்கு நிகராக உருவாக்கப்பட்டதல்ல பெரியார் சிலைகள் - விடுதலை இராசேந்திரன்பெரியாரின் 135 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.

சென்னை, மயிலைப் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது பகுத்தறிவா என்று கேட்கும் குழப்பவாதிகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்த பேச்சை நீங்களும் கேளுங்கள்

அம்பேத்கரை இழிவு செய்யும் பிற்படுத்தப்பட்டோரும் தலித்துகளும் - தோழர் நீலவேந்தனின் இறுதி பொதுக்கூட்ட உரை
அருந்ததிய மக்களுக்கு இடஒதுக்கீட்டில் 6 விழுக்காடு உள்ஒதுக்கீடு கோரி தீக்குளித்த தோழர் நீலவேந்தன் பங்கேற்று ஆற்றிய இறுதி பொதுக்கூட்ட உரையின் காணொளி இது. (17-09-2013, பெரியாரின் 135வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், மயிலை, சென்னை)

இக்கூட்டத்திற்குப் பின்னர் ஆதித்தமிழர் பேரவையின் தொடர்முழக்கக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

அம்பேத்கரின் வழியிலிருந்து தலித்திய இயக்கங்கள் தவறிப்போவதைச் சுட்டிக்காட்டியதோடு, அம்பேத்கரின் இந்துத்துவ எதிர்ப்பை அவரது வழி வந்த இயக்கங்கள் பின்பற்றுவதுதான் அவருக்குச் செய்கிற மரியாதை என்றும் முழங்கினார்.

அருந்ததிய மக்கள் மட்டுமல்லாமல் சமூகநீதித்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முற்போக்கு ஆற்றல்கள் அனைத்தும் தோழர் நீலவேந்தனின் இழப்பை தாங்கவொண்ணாமல் தவிக்கின்றன.

(காணொளியை குலுக்கை தளத்தில் தறவேற்ற உதவிய இனிய நண்பர் செல்லப்பாவுக்கு நன்றி)

Monday, September 30, 2013

பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் மருத்துவர் எழிலன் (காணொளி)மருத்துவர் எழிலன் அவர்கள் பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் நிகழ்த்திய உரை. 

நம்மைப் பிரித்துவைத்திருக்கும் ஜாதி, மதம் உள்ளிட்ட கற்பிதங்கள் குறித்து இளைஞர்களிடம் விழிப்பூட்டி இளைஞர் இயக்கத்தை தொலைநோக்குத் திட்டங்களுடன் நுட்பமாக ஒருங்கிணைத்து வருகிறார்.

நமது போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் தோழர் எழிலனின் உரையைக் கேளுங்கள்; விருப்பமுள்ளவர்கள் பகிர்ந்து பரப்பலாம்.

Sunday, September 29, 2013

வெற்றி அல்லது வீரச்சாவு - தோழர் தியாகு முழக்கம்தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் சேவ் தமிழ்சு இயக்கமும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு செப்டம்பர் 7, 2013 அன்று சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாட்டை நடத்தியது. 

இம்மாநாட்டில்,  தோழர் தியாகு ஆற்றிய எழுச்சிமிக்க உரை

Saturday, September 21, 2013

கருந்திணை 2013 - திராவிடர் வாழ்வியல் விழாஜாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் - செய்யப் போகிறவர்கள் - செய்து வைக்க உள்ளவர்களுக்கான பண்பாட்டைச் செயலாக்கும் முயற்சி.

நாள் : அக்டோபர் 20, 2013 ஞாயிறு
இடம்: திருப்பூர் டவுன்ஹால்

நிகழ்வுகள்:
பண்பாட்டு மலர் வெளியீடு - கலைநிகழ்ச்சிகள் - வீரவிளையாட்டுக்கள் - குழந்தைகள் கலை வெளிப்பாடு - குறும்படப் போட்டி

அரங்குகள்:
ஜாதிமறுப்புத் திருமணம் - இயற்கை விவசாயம் - சிறுதானிய உணவு - ஆடை விற்பனை - கட்டிட நிறுவனங்கள் - புத்தகம் - பிறப்பு முதல் இறப்பு வரையிலான பண்பாட்டு அரங்குகள்


திராவிடர் உணவு விழா
தென்னம்பால்
தேன்நெல்லிச்சாறு
மாடு வால் சூப்
மாட்டு பிரியாணி
மாடு மிளகுவறுவல்
கேழ்வரகு இட்லி 
கம்பு தோசை
பிரண்டை சட்னி
வாழைப்பூ குருமா
கொள்ளுரசம்
குதிரைவாலி தயிர்சோறு

இருவேளை உணவு
நன்கொடை 200 மட்டுமே
உணவு விழா முன்பதிவுக்கு: 9445682092

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்
Email: sukapaka@gmail.com
www.suyamariyathai.org


Wednesday, September 11, 2013

கடவுள் ஒழிப்பின் வழியாக சமூகக் கேடுகளை நீக்குவதே பெரியாரின் நாத்திகம் - கொளத்தூர் மணி

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.

Friday, September 6, 2013

நாத்திகர் விழா 2013 (காணொளி)சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழா பேரணி.

"கடவுள் இல்லை,
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்;
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;

ஆத்மா
மோட்சம்,
மறுபிறப்பு, 
நரகம்,
பேய்,
பிசாசு
ஆகியவைகளை கற்பித்தவன் அயோக்கியன்;
கடவுளை நம்புகிறவன் மடையன் ..
கடவுள் பெயரை சொல்லி பலன் அனுபவிக்கிறவன் 
மகா மகா அயோக்கியன்..!!" 

-தந்தை பெரியார்

Tuesday, September 3, 2013

தமிழகத்தில் சாதி: வரலாறும் புரிதல்களும் (கருத்தரங்க காணொளிப் பதிவு)

தமிழகத்தில் சாதி - வரலாறும் புரிதல்களும் என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள் ஆற்றிய மிகச் சிறப்பான உரை.திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆற்றிய உரை.

Thursday, August 15, 2013

மகாத்மா ஆன கதை

பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை

(தேவேந்திரன் - தேவர்கள் சம்பாஷணை)


தேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள். தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழுந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான். தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள்.

தேவேந்திரன்: தேவர்களே! உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா?

தேவர்கள்: ஆமாம் பிரபு! எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன குறை ஏற்படப் போகிறது?

தே-ன்: சபாஷ்! நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல் எவன் இருக்கப்போகிறான்? எவனை இருக்க விடுவேன் நான்? ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது?

தே-ர்: பிரபூ! தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது. என்றாலும்,

தே-ன்: உம் என்ன, சங்கதியைச் சொல்லுங்கள்.

தே-ர்: சொல்லுகிறோம். அதற்கு ஆகவே இன்று தேவரீர் ராஜ சபையை நாடி வந்திருக்கிறோம்.

யுகாந்திர காலமாக தேவர்களாகிய நாங்கள் தங்கள் ஆக்ஷியின் கீழ் யாதொரு குற்றமின்றி கவலையற்று உயிர் வாழ்ந்து வந்தோம். அவ்வப்போது ஏதாவது ராக்ஷதர்களாலும் அசுரர்களாலும் எங்களுக்கு ஏதாவது சங்கடங்களோ தொல்லைகளோ ஏற்படுமானால் தங்களுடைய உதவியினால் அவர்கள் அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஊழி, ஊழி காலத்துக்கும் தலை எடுக்கவொட்டாமல் செய்து மிகவும் கவலையற்று வாழ்வோம். ஆனால் இந்த காலத்தில் தலை கீழாக மாறிவிட்டது. தர்மம் குன்றிவிட்டது. வர்ணமுறை கெட்டுவிட்டது. தேவர்கள் அசுரர்கள் என்கின்ற பேதம் அழிக்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்வது என்பது தெரியவில்லை. ராக்ஷதர்கள் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டார்கள். தேவதாசி முறைகளை கூட ஒழித்து விட்டார்கள் என்றால் வேறு என்ன கொடுமை வேண்டும் பிரபு?

தே-ன்: அப்படியா? அவர்களை ஒழிக்க நீங்கள் தவம் செய்யக்கூடாதா? யாகம் செய்யக் கூடாதா? கடுமையான சாபங்கள் கொடுக்கும்படியான உங்கள் தவ மகிமை என்ன ஆயிற்று? மித்திர தந்திர சக்தி என்ன ஆயிற்று? கேட்பதற்கே ஆச்சரியமாய் இருக்கிறதே உங்கள் குறைகள்!

தே-ர்: தேவேந்திர பூபதியே! கலி பிறந்தது என்று கருதி அதை ஒழிக்க ஏதோதோ காரியங்கள் செய்து மனுதர்ம சாஸ்திரம் செய்து புராண இதிகாசங்கள் கற்பித்து அசுரர்களை ஏய்த்து அடக்கி ஒடுக்கி வந்தோம். அசுரர்களில் செல்வர்களாய் இருப்பவர்களின் பொருளை கோவில், குளம், உற்சவம், திதி திவசம், சடங்கு முதலிய காரியங்களால் அவைகளைக் கறந்து அடக்கி அடிமைப்படுத்தி வந்தோம். அவைகளை எல்லாம் ஒழிக்க சுயமரியாதை ராக்ஷதன் தோன்றி மூர்ச்சையாகும்படி செய்து விட்டான். இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம், எப்படி வாழப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களையே சரண் அடைகின்றோம்.

தே-ன்: உங்கள் குறைகளைக் கேட்க நானும் பயப்பட வேண்டியவனாய் விட்டேன். என்கதி என்ன ஆகும் என்பதும் கவலைப்படத் தக்கதாக வல்லவா இருக்கிறது?

தே-ர்: ஆமாம் பிரபு! சுயமரியாதை இராக்ஷதன் தங்கள் வேகத்தையே அழித்து விட்டான். தங்கள் இருப்பையும் ஒழிக்க ஆரம்பித்து அரைவாசி இடித்தெறிந்து விட்டான்.

தே-ன்: அப்படியா? ஆனால் நாம் சும்மா இருக்கக் கூடாது. உடனே நாம் எல்லோரும் யோசித்து ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும். என்னவென்றால் அசுரர்களிலேயே ஒருவனைப் பிடித்து தேவனாக்கி, ஏன்? தேவேந்திரனாகவே ஆக்கி நாம் எல்லோரும் வியாதிக்கு மருந்து சாப்பிடுவது போல் அவன் அடிபணிந்து நானுள்பட எல்லோரும் அவனுக்கு பல்லக்கு சுமந்து அவனையே தேவேந்திரனாக்கி அவன் மூலமாகவே அசுரர்களைக் கொன்று அழித்து விடலாம் கொண்டு வாருங்கள்; ஒரு நல்ல அடிமையான அசுரனைப் பிடித்து அவனுக்கு தேவேந்திர பட்டம் சூட்டுவதாகத் தெரிவித்துக்கொண்டு வாருங்கள். ஏன் என்றால் முள்ளை முள்ளினால் குத்தித்தான் எடுக்க வேண்டும். அதுபோல் அசுரர்களை அசுரர்களால் தான் ஒழிக்க வேண்டும். இந்த மாதிரிப் போர்களும் தொல்லைகளும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. யுகாந்திரகாலம் தொட்டு இது மாதிரியே அசுரர்கள் செய்து வந்ததாகவும் அதற்கு இதுபோன்ற முறையை கையாடி வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. போய் ஒரு அசுரனைப் பிடித்து வாருங்கள்.

தே-ர்: இதோ பிடித்து வந்து விட்டோம். சரியான அடிமை; சற்சூத்திரர். தங்கள் இஷ்டம் போல் இந்த அசுர அடிமையை பயன் படுத்தலாம்.

தே-ன்: ஏ அசுரனே! நீ உங்கள் சமூகத்தை விட்டு நம்மிடம் சரணடைந்ததாக இந்த தேவர் குழாங்கள் சொல்லுகிறார்கள். உண்மைதானா? பரிசுத்தமான அடிமையாய் இருப்பாயானால் உன்னை மகாத்மாவாக்கி தெய்வீகத்தனம் பொருந்தியவன் என்று சொல்லும்படியாக ஆக்கி 33 கோடி தேவர்களையும் உன்னைப் பணியும்படி ஆக்குவேன். நன்றி விஸ்வாசத்தோடு நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் நடந்துகொள்வாயா?

அசுரன்: அப்படியே செய்வேன்.

தே-ன்: பிரமாணமாக சத்தியமாக சொல்லு.

அன்: சத்தியமாக நான் நிபந்தனை இல்லாத அடிமையாக இருந்து இந்த தேவர்களுக்கு ஆயுள் காலமெல்லாம் தொண்டுசெய்து வருகிறேன்.

தே-ன்: சரி, இன்று முதல் இந்த அடிமையை நாம் ஏற்றுக்கொண்டோம். இவனுக்கு மகாத்மா பட்டமளித்து இருக்கிறோம். இன்று முதல் மகாத்மா என்று அழைக்கப்படவேண்டியது. இந்த அடிமையை ஆயுதமாககொண்டு அசுரக் கூட்டங்களை அழித்து நமது மநு ஆக்ஷியை புனருத்தாரணம் செய்யக் கடவீர்கள். நான் சென்று வருகிறேன்.

தே-ர்: பிரபு இனியும் பலர் இப்படிப் பட்டவர்கள் வேண்டுமா?

தே-ன்: தேவலோகம் பூராவுக்கும் இவனை நியமித்துள்ளோம். மற்றபடி அவரவர்கள் எல்லைக்கு அவரவர்கள் நியமித்துக்கொள்ளவேண்டியது. அந்தப்படி நீங்கள் நியமித்துக்கொள்பவர்களை விபீஷணர் போல் கருதி தேசியவாதிகள் என்னும் பட்டம் கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தே-ர்: இப்படிப்பட்ட இவர்கள் தவிர ஆங்காங்கு வீதிவீதியாய் சுற்றி தேவரீருக்கும் எங்களுக்கும் ஜே போடவும் விருதுகள் பிடிக்கவும் ஆள்கள் வேண்டுமே.

தே-ன்: இதற்குத்தானா ஆள் கிடையாது? தெருவில் சோமாறியாய் திரியும் சோற்றுக்கில்லாத ஆள்களைப் பிடித்து அவர்களுக்கு தேசிய வீரர்கள், ஆஞ்சனேய வீரர்கள் என்று பட்டம் கொடுத்து கையில் கொடி விருதுகள் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தே-ர்: தாங்கள் சொன்ன யோசனைகள் மிகவும் தங்கமான யோசனைகள். அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு குறையை எப்படி நிவர்த்திப்பது? எங்களுக்கு தெரியவில்லையே.

தே-ன்: என்ன சொல்லுங்கள் அதற்கு தகுந்த உபாயம் சொல்லுகிறேன்.

தே-ர்: பிரபு! சோமாறி கூட்டங்களை தேசிய வீரர்கள் ஆக்கச்சொன்னீர்கள். ஆனால் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி?

தே-ன்: இதுதானா கஷ்டம்? நம் சபையில் உள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய பெண்களை விட்டு ஆடவும் பாடவும் செய்து அதற்கு ஆக டிக்கட் போட்டு வசூல் செய்யுங்கள். மற்றும் நமது ஸ்பரிசம் பட்டாலே மோக்ஷம் கிடைக்கும் என்று கருதி இருக்கும் நடனப் பெண்கள் அடியார் பெண்கள் ஆகியவர்களை அழைத்துக்காட்டி, அவர்கள் மூலமும் பணம் வசூல் செய்யுங்கள். இவர்களை யாராவது இழிவாய்ப் பேசினால் தேவர்கள் வீட்டு நங்கையர்களை ஆடவும் பாடவும் செய்து வசூல் செய்யுங்கள் இவ்வளவும் போராவிட்டால் தேவர்களிலேயே உள்ள சங்கீத சிகாமணிகளைக் கொண்டு பாடச்செய்து பணம் வசூல் செய்யுங்கள். இவைகூடவா உங்களுக்கு தெரியாது?

தே-ர்: பிரபு! இந்தக் கூட்டத்துக்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது?

தே-ன்: இதுதானா மகா கஷ்டம்? வைரக் கற்கள் பதித்த தங்கப் பதக்கம் (மெடல்) தருவதாய் கூப்பிட்டு பாடச் செய்து பிறகு பித்தளைக்கு முலாம் பூசிக்கொடுத்து விரட்டி விடுங்கள்.

தே-ர்: சரி பிரபுவே! அவன் கூப்பாடு போட்டால் என்ன செய்வது?

தே-ன்: எவனாவது கூப்பாடு போட்டால் அவனை ஒழிக்கத்தானா தெரியாது. நம்மிடமுள்ள வஜ்ஜிராயுமாகிய "தேசத் துரோகி' என்கின்ற பட்ட ஆயுதம் இருக்கிறதே அதைக்கொண்டு அவர்களை ஒழித்து விடுங்கள்.

தே-ர்: சரி, பிரபு அப்படியே செய்கிறோம். இன்னும் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதையும் தெரிவித்து பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் நித்திய கர்ம அனுஷ்டானங்களுக்கு நேரமாய்விட்டது. மறுபடியும் வருகிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்.

தே-ன்: நல்லது போய்வாருங்கள். அசுரர்களை ஒழிக்க அழிக்க அவர்களைக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும். ஆதலால் நீங்கள் நேரில் கலந்து கொள்ளாதீர்கள் போய் வாருங்கள்.

முதல் காக்ஷி முடிந்தது. அடுத்த காக்ஷி ஒரு நாளைக்கு வரும்.


குறிப்பு: சித்தரபுத்தன் என்ற பெயரில் 25-07-1937 குடியரசில் பெரியார் எழுதியது

Friday, August 9, 2013

பிள்ளையைப் பெத்தவனுக்குத்தான் வலி தெரியுமா?

குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறந்தவர்கள்; உங்களிலிருந்தல்ல. - கலீல் கிப்ரான்


கௌரவக் கொலைகள் பெற்றோர்களால் மிகக்கொடூரமாக நிகழ்த்தப்படுகின்றன. 

கொலை 1:
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு அருகேயுள்ள எங்கள் சிற்றூருக்கு அருகே நடந்த ஒரு கௌரவக்கொலை பற்றி நான் சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்டது. மகளை தந்தை உலக்கையால் தலையில் அடித்துக் கொன்றார். 

கொல்லப்பட்ட பெண் காதலித்தாள் என்பதல்ல; தனது தோழியின் காதல் மணத்திற்கு துணைநின்றாள் என்பதற்காக. காதலித்து திருமணம் செய்துகொண்ட இணையர் கிடைக்காததால் உதவிய பெண் கொல்லப்பட்டாள்.


கொலை 2:
தஞ்சை பகுதியில் என்று நினைக்கிறேன் தோழர் தியாகு ஒரு கூட்டத்தில் பகிர்ந்த தகவல்இது.

மகளை தந்தை தூக்கிலிட்டார் என்பது முதல்கட்டமாக தெரிந்த தகவல். பின்னர் தோழர்களின் ஆய்வில் தெரியவந்தது என்னவெனில், மகளை தூக்கிலேற்றியும் அவள் உயிர் பிரியாததால் தந்தை மகளின் கால்களை பிடித்து உயிர்போகும் வரை தொங்கியிருக்கிறார்.

இந்த இரண்டு கொலைகள் மட்டுமல்ல; கௌரவக்கொலைகள் எல்லாமே இப்படியானதுதான்.

இதையெல்லாம் தெரிந்த பின்னும் ‘‘பிள்ளையைப் பெத்தவனுக்குத்தான் வலி தெரியும்’’ என்று எப்படிச் சொல்லமுடிகிறது.

Monday, May 27, 2013

ஜெயமோகனைக்கூட சகித்துக்கொள்கிறோம்

ஜெயமோகனின் ‘இப்படி இருக்கிறார்கள்’ பதிவைப் பற்றி இன்று (27-5-2013) பேசப்படுகிறது. 

அவர் சொல்கிற மாதிரியான நபர்கள் எழுத்தாளனிடம் மட்டுமா இப்படி நடந்துகொள்கிறார்கள்?

படிக்கிற மாணவர்களிடம் ‘‘பத்தாப்பு படிக்கிறியே நான் ஒரு மனக்கணக்கு போடுதேன் விடை சொல்லு’’ என்று ஊரில் சிறுவர்களைப் பிடித்து வைத்துக்கொள்ளும் பெரியவர்கள் உண்டு. 

அப்படியான பெரியவர்கள் எப்பவுமே அப்படியல்ல. சிலநேரம் தொல்லையாக தெரிந்தால் சிறு பிள்ளைகள் அவரை விட்டு ஓடிவிடும். அப்படியான அனுபவம் நம்மை மிகுந்த எரிச்சலுக்குள்ளாக்கும் என்றாலும் மனநலம் குன்றியவர்களிடம், வயோதிகத்தில் நினைவு தப்பி பேசுபவர்களிடம் என்ன மாதிரியான சகிப்புத்தன்மையைக் கொண்டு நாம் வாழ்க்கையைக் கடந்து வருகிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் ஜெயமோகனால் சகித்துக்கொள்ளமுடியாத அந்த மனிதரின் தலைக்கணத்தைவிட நினைவுகளில் கிரீடத்தோடு அலையும் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகனின் தலைக்கணம்தான் சகித்துக்கொள்ள இயலாததாயிருக்கிறது.

எப்போதும்போல் அவரது இந்தப் பதிவும் திராவிட இயக்கத்தின்மீது சேறடிக்கும் முயற்சியாகவே அவருக்குப் பயன்பட்டிருக்கிறது. யாருக்கும் இல்லாத உளவியல் கோளாறு என்பதாக பொடி வைக்கிறார். எழுத்தின் போக்கில் அதை அவரே உணர்ந்ததால் சுசீந்திரம் கோயில் கதையைச் சேர்த்து சமன் செய்வதுபோல பாவனை செய்திருக்கிறார். 

அந்தப் பெரியவரின் பேச்சு ஜெயமோகனுக்கு சகித்துக்கொள்ள முடியாததுபோலவே இந்துத்துவவாதிகளுக்கும் பார்ப்பனருக்கும் இனிக்கும் எழுத்தாளரான ஜெயமோகனின் வரலாற்றுத் திரிபு எழுத்துக்களும் நமக்கு எரிச்சலையே ஏற்படுத்துகின்றன. ஆனால் நாம் ஜெயமோகனைக்கூட சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

Wednesday, May 15, 2013

தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் நேர்காணல் (காணொளி)

‘‘ஓய்வு என்பது மனிதனுக்கு பெரியாரிய தத்துவப்படி வேலையை மாற்றிச் செய்வதுதான்.

என்னால படிக்கமுடியலன்னா படிக்கச்சொல்லி கேட்கலாம். எழுதமுடியலன்னா சொல்லச்சொல்ல எழுதச் சொல்லலாம். ஆனால் வேலையை நிறுத்தக்கூடாது.

நான் வேலையை நிறுத்தமாட்டேன். எனக்கு அந்த மனத்திண்மை உண்டு.

எந்த வறுமை இருந்தாலும் உடல் நலிவு இருந்தாலும் மற்ற தோழர்களால் தொல்லை இருந்தாலும் இதையெல்லாம் தாங்கிக்கிட்டு போகறதுதான் பொதுவாழ்வு. அதுக்கு இலக்கணமா பெரியார் திகழ்ந்தார்.

அவருக்கு கூட இருந்தவர்கள் கொடுத்த தொல்லை எல்லாம் அளவு கடந்த தொல்லை. 

அவருக்கு இருந்த நோய் சராசரி மனிதனுக்கு வருகிற நோயல்ல. குடல் இறக்கம் என்பது பதினோறு வயதில் அவருக்கு வந்தது. சாவற வரைக்கும் இருந்தது. என்பத்திநாலு ஆண்டுகள் இருந்தது. என்பத்திநாலு ஆண்டுகளும் தாங்கிக்கிட்டுதான இருந்தாரு.”

இவ்வாறு ஆனைமுத்து அய்யா குறிப்பிடுகையில் கலங்கித்தான் போனேன். 

ஓய்வென்பது வேலையை மாற்றிச் செய்தல் என்பதையும் பொழுதுகள் போக்குவதற்காக அல்ல ஆக்குவதற்காக என்பதையும் சுயமுன்னேற்றப் பயிற்சி வியாபாரிகளின் வாயிலிருந்து கேட்டுச் சலிப்புறுகிறோம்தான். ஆனால் இவர் பேசும்போது பொருள் வேறாகிறது. வாழ்க்கையிலிருந்து இம்மியும் பிசகாத அவதானிப்பாக இருக்கிறது. உழைப்பைப் பற்றி எவனெவனோ உளறும்போது சலிக்கும் நமக்கு பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் நெருக்கமாக இருப்பதைப்போல.

Sunday, May 12, 2013

உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா? - பெரியார்மார்க்குகளைப் பார்ப்பதில் ஒரு மாணவன் தமிழில், ஆங்கிலத்தில் 42 மார்க்கு வீதம் வாங்கி தேர்வு பெற்றிருக்கிறான்; மற்றொரு மாணவன் 85 மார்க்கு வீதம் வாங்கினதாலும் முதல் வகுப்பில் வெற்றி பெற்று இருக்கிறான். இந்தப்படி மொத்தம் 170 மார்க் அதாவது 86 மார்க்குகள் அதிகம் வாங்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டதால் இந்தப் பையன் எப்படி வைத்தியத்திற்கும், பொறியியலுக்கும் வேண்டிய உயர்ந்த யோக்கியதாம்சமுடையவனாகிவிடுவான்? தேவையான அளவுக்கு 42+42=84 மார்க்கு வாங்கிய பையன் எப்படி தாழ்ந்த யோக்கியதாம் சமுடையவனாகிவிடுவான்? மனிதனுடைய அறிவுசக்தி, திறமை சக்தி வேறு, உருப்போடும் புரோகித சக்தி வேறு என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக்கொண்டே தீர்வான்.

உருப்போடுவது என்பது ஒரு வித்தை. அதை பொது அறிவிலும் பொது யோக்கியதாம்சத்திலும் சேர்ப்பது சுத்த மதியீனம்; அல்லது சூழ்ச்சி_தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். 

உருப்போடுவதில் ஞாபசக்தியில் திறமை உடைய அஷ்டாவதானிகள், சதாவதானிகள், வேதபாராயண புரோகிதர், புலவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் பொது அறிவில் மேம்பட்டவர்கள் ஆகிவிடுவார்களா? 

எனவே பரீட்சைத் தேர்வுப்பத்திரங்களில் மார்க்கு எண்களைக் குறிப்பிடுவதும் அந்த அளவை யோக்கியதாம்சத்தில் சேர்ப்பதும் தகுதி திறமையைப் பாழாக்கிவிடும் என்றே கூறுவேன். 

உருப்போடுவதில் தேர்ந்தவன் எல்லாம் ஒழுக்கம், நாணயம், வேலைத்தகுதி உடையவன் ஆகிவிடுவானா என்பதை உருப்போடும் திறமையை யோக்கியதாம்சமாய் எடுத்துக்கொள்ள வாதாடும் ஒவ்வொரு பார்ப்பனரையும் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

- ஈ.வெ.ராமசாமி 7.10.1962

Friday, May 10, 2013

வன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்?


சகோதரர்களே,

பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக்கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது.

உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதம் இல்லாமல் ஒப்புக் கொண்டவர்களாகிவிட்டீர்கள்.ஆனால் உங்கள் சத்திரிய தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை.

நீங்கள் வன்னியர்குல சத்திரியர் என்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல சத்திரியர்ரென்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை சத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.

நாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் சத்திரியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு தாங்கள்தான் சத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் சத்திரியர்கள் அல்ல நாங்கள்தான் சரியான சத்திரியர்கள் என்கிறார்கள். 

இதுபோல் இன்னமும் குடகு சத்திரியர்கள் எத்தனையோ பேர் சத்திரிய பட்டத்திற்கு இத்தனை பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும் சண்டையும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கின்னம் கழுவுகவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்துவிட்டது. அப்படி கிடைக்கப்பெற்ற அந்த பிச்சை தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக்கொண்டு மகாநாடு கூட்டி, சத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லிவிடுகிறான். அப்படி இருந்தும்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக் கழுவி தண்ணீரை குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக்கிறான்.

ஆகவே இந்த மாதிரி இழிவானதும் முட்டாள்தனமானதும் அர்தமற்றதுமான காரியங்களுக்கு இம்மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தால் இம்மகாநாடுகள் அழிந்துபோவதே மேல் என்று வருத்தத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன். தங்கள் ஜாதி உயர்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாகவும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடுகளின் சுபாவமாய்விட்டது. 

இதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் தங்களை செளராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்கை நடத்திக்கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றதை பார்கின்றோம்.

ஆனால் பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக்கொண்டும் இருந்துகொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல; சத்திரியர் கூட அல்ல பேசப்போனால் வைசியர் கூட அல்ல, நாங்கள்தான் பிராமணர்கள்; நீங்கள் எல்லோரும் எங்களுக்கு தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்துவிட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக்கொண்டு செளகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேறி செளக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப்பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படதக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம்.

ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை; நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்மநிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

பெரியார்(1-6-1930 குடிஅரசு)

Friday, April 26, 2013

கூலி உயர்வு போராட்டங்களை பெரியார் வரவேற்கவில்லை. ஏன்? - தோழர் ஓவியாவின் உழைப்பாளர் நாள் சிந்தனை

1. பெண்கள் செய்யும் பணிகள் ஊதிய மதிப்பற்றதாகப் போனது ஏன்? மாற்றத்திற்கான வழி என்ன?

2. கூலி உயர்வு போராட்டங்களை பெரியார் வரவேற்கவில்லை. ஏன்?

3. இந்த மண்ணில் உழைப்பாளர் நாளில் நாம் எதை எல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும்?

Saturday, April 20, 2013

திராவிடர் - தமிழர் (தோழர் கொளத்தூர் மணி ஆய்வுரை)

திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் தமிழ்தேசியர்கள் அதன்மீது வைக்கும் ஆதாரமற்ற விமர்சனங்களைப் பற்றியும் விரிவாக, ஆழமாக உரை நிகழ்த்தியுள்ளார் தோழர் கொளத்தூர் மணி.

இது 2012 ல் சென்னையில் குடியரசு வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திராவிடர் இயக்க நூற்றாண்டு ஆய்வுச் சொற்பொழிவில் நிகழ்த்தப்பட்டது. அப்போது பெரியார் திராவிடர் கழகத்தைலைவராக இருந்தார்.

அரங்கத்தின் எதிரொலியால் ஒலி தெளிவு இல்லாமல் இருந்ததால் அப்போது  உடனே பதிவேற்றாமல் நண்பர் ஆனந்த் (படத்தொகுப்பாளர், மக்கள் தொலைக்காட்சி) மற்றும் அவரது அண்ணன் இசையமைப்பாளர் வசந்த் அவர்களின் உதவியுடன் ஓரளவு சீர் செய்யப்பட்டது. இருவருக்கும் நன்றி.

Monday, April 15, 2013

''நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம்!'' - சாப்ளினுடைய இறுதி நேர்காணல்


யதார்த்தம் என்று சொல்லப்படுவதன் மீது எனக்கு ஆர்வமே கிடையாது. 'Make Beleive' தான் என் படங்கள். சில நேரங்களில் உண்மையின் உள்ளே ஊடுருவிப் போவது ரொம்பவும் போரடிக்கிற விஷயமாகிவிடும். எனவேதான் சிட்டி லைட்ஸ்-ல் ஓர் அழகான இளம் பெண் எப்படி ஒரு ஏழையை நேசிப்பாள் என்று யோசித்து, யதார்த்தத்திற்காக நம்பத்தகுந்த சூழ்நிலைகளை தேவையின்றி திணிக்க வேண்டியதாகிவிட்டது. 

தி கவுன்டஸ் படமெடுக்கிற போது நான் கோமாளித்தனமான காட்சிகளே எழுதவில்லை. கசப்பான விஷயங்களைப் போதுமான அளவு உருவாக்கத் தெரிந்தால் அதை எல்லோரும் விரும்புகிறார்கள் போலும். எனது இந்தப் படம் அப்படிப்பட்டதுதான். ரொம்பவும் யதார்த்தபாணி படம். படப்பிடிப்பின் போதே கூட யாராவது ஏதாவது வேடிக்கை செய்தாலும் படப்பிடிப்பை கேன்சல் செய்து விடுவேன். என் சுய உற்சாகம் கூட அடைப்பட்டுப்போனது. 

நாம் படைக்கிற கதாபாத்திரத்தின் ஆழத்துக்குப் போனால் அது நம் சுய உற்சாகத்தையே அல்லவா கொன்றுவிடுகிறது! எனக்கு ஆழங்கள் வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். அவை சுவாரஸ்யம் மிக்கவை என்றும் நான் நம்பவில்லை. இந்தப் படம் எனக்கு ஒரு சாகசம். 

இதற்கு முன் நான் பெரிய நட்சத்திரங்களைப் போட்டு படமெடுத்ததில்லை. நான்தான் என்னுடைய நட்சத்திரம். இதைச் சொல்வதில் எனக்கு ஒளிவு மறைவு ஏதுமில்லை. மார்லன் பிராண்டோவை இப்படத்தில் போட்டதற்கு காரணமே அவர் நகைச்சுவை உணர்வற்ற இறுகிய மனிதராக இருந்ததுதான். அவர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று தோன்றியிருந்தால் நான் அவரைப் போட்டிருக்க மாட்டேன் போலும்! 

மிகவும் கட்டுக் கோப்புடன் யதார்த்த பாணியில் உருவாக்கப்பட்டதாலோ என்னவோ இப்படம் என் மற்ற படங்களைவிட அதிக கோமாளித்தனமானதாகத் தோன்றுகிறது. 

சிந்தனை என்பது ஜடமானது. அது தேங்கிய குட்டை. அறிவு ஜீவித்தனமும் பெரிய விஷயமல்ல. தே ஆர் ஸ்டேல். வெரி ஸ்டேல். அப்புறம் - விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ''இது நிஜ வாழ்வைப் பிரதிபலிக்கிறது'' என்பார்கள். ஆனால் வாழ்க்கை என்பது ஒரு கல்லறையிலிருந்து இன்னொரு கல்லறைக்கு போவதல்ல. அதைப் போலவே மனிதர்களும் வாழ்க்கையைக் கூடுமானவரை அசிங்கமாகவும், துயரமாகவும் சித்தரிப்பது, நன்மைக்காக என்று சொன்னால் கூட அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் அது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும். எனவே நாம் ரொமாண்டிஸத்தை விரும்புகிறோம். 

சாகசமும் கற்பனையுமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட சிறையில் கிடப்பதோ, பூமிக்கடியில் பிணமாக இருப்பதே மேல். 

என் ட்ராம்ப் கதாபாத்திரம் வெற்றியடைந்ததன் ரகசியமே அதுதான். எதையும் எளிதாக்கிக் கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், எந்த விஷயத்தையும் ரசிக்கப் பழகுதல். இதுவே நான் மிகவும் அனுபவித்து செய்த கற்பனை. விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

1914-ல் நான் ஹாலிவுட்டுக்குப் போனேன். அப்போது என் வயது 24 ஆன போதும் 18 வயது இளைஞனைப் போல இருப்பேன். மிகவும் மெலிந்த இளைஞன் - ரொம்பவும் சீரியஸ், அடிக்கடி நெர்வஸாகி விடுவேன். முதன் முதலாக நான் நடித்தக் காட்சி ஒரு பார்ட்டியில் இடம் பெற்றது. அங்கு நான் ஒரு ஏழை. எனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி எல்லாவித அசட்டுத்தனங்களும் செய்வேன். பெண்களைப் பார்த்து தொப்பியை உயர்த்துவேன். எனக்கு உண்மையில் தேவை ஒரு இடம். அதைத்தேடி உட்காருவேன். ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைப்பேன். ஒரு அழகான இளம் பெண் என் காலை மிதித்து விடுவாள். அவள் 'ஸாரி' சொல்லும் முன்பு எழுந்து என் தொப்பியை எடுத்து ஸாரி என்பேன். இதுதான் அக்காட்சி. இதில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று எனக்குள் உயிர்ப்பு வந்தது. என் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்துவிட்டது. இதுதான் - இந்தக் கதாபாத்திரம்தான் எனக்கு ஏற்ற ஒன்று. இத்தனை நாள் நான் தேடிக்கொண்டிருந்தது இதைத்தான். இந்த டிராம்ப் கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. யாரிடமும் எதுவும் வெளிக்காட்டாமல் பரபரப்பாக நடித்து முடித்தேன். 

டிராம்ப் கதாபாத்திரம் என்னையே பிரதிபலித்தது. ஒரு காமிக் மனநிலையை, இயல்பாக என்னுள் இருந்த ஒன்றை அது தட்டிவிட்டது. அதன் அசட்டுத்தனம் என்னை ஈர்த்தது. எந்த கோமாளிக் கூத்தையும் நான் செய்யலாம் அல்லவா? 

மனிதர்கள் இக்கட்டான சந்தர்ப்பங்களில் தான் வேடிக்கையாக நடந்துகொள்கிறார்கள். ஒருமுறை கென்னடி ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் அமர்ந்திருந்த அவரது கட்சிக்காரர்கள் சிலர் அவருக்கு எதையோ தெரிவிக்க அவர் இன் பண்ணியிருந்த சட்டையை இழுத்துவிட்டனர். கென்னடி பேச்சை நிறுத்தாமலே, திரும்பிக் கூட பார்க்காமலேயே ஒரு அனிச்சைச் செயலாய் அதைச் சரிசெய்துகொண்டார். 

மீண்டும் அவர்கள் அவருடைய சட்டையை இழுக்க, மீண்டும் அதை அவர் சரிப்படுத்தினார். இது மிகவும் வேடிக்கையாகவும் மனித இயல்பாகவும் இருந்தது. தன் சட்டையை அப்படியே விட்டு விடவும் அவர் தயாராக இல்லை. அதை ஒரு பெரிய பிரச்னையாக்கவுமில்லை. 

மனிதம் எனும் பூமத்திய ரேகையை யாராலும் அழித்துவிட முடியாது. தன் இருப்பை வெளிப்படுத்திவிடும் அது. சக மனிதனுக்காக அனுதாபமின்றி ஒருவன் நகைச்சுவை செய்ய இயலாது. இந்த அனுதாபம், பணிவு, விட்டுக் கொடுத்தல் எல்லாவற்றையும் நான் பணமில்லாத ஒரு சராசரி மனிதனின் மீது அமைத்துக்கொண்டு என் ட்ராம்ப் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டேன். 

என் இளமைப் பருவம் துயரமானது. விரக்தி, ஏமாற்றம் இவற்றுடன் பட்டினியும் கிடந்தேன். என்னைச் சுற்றி நிறைய வெண்ணையும் ரொட்டியும் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பட்டினி கிடந்தேன். வறுமையின் சோர்வும் அவமானமும் மட்டுமின்றி நோயுற்ற என் தாயையும் சுமந்து வீதி வீதியாக அலைந்திருக்கிறேன். எனது இந்த ஆரம்பச் சூழல்களால் துயரத்தில் நகைச்சுவை என்பது என் இன்னொரு இயல்பாக ஆகிப் போனது. குரூரம் கூட காமெடியின் அம்சமாகிவிட்டது. 

நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம். ய·ப்ளோர் வாக்கர் படத்தில் வயதான ஒரு கிழவன் உடல் நடுங்க தள்ளாடியபடி வருவான். நான் அவனிடத்தில் ஒரு இசைக் கருவியைத் தந்து வாசிக்கச் சொல்வேன். நடுங்கும் கரங்களால் அதை வாங்கி வாசிக்க இயலாமல் அவன் உடம்பே ஆடிக் கொண்டிருக்கும். முதுமையின் இந்த கோரத் தாண்டவம் உண்மையில் அழ வைக்கும் விஷயம். ஆனால் திரையில் இக்காட்சியைப் பார்த்த எல்லாருமே சத்தம் போட்டு சிரித்தார்கள். 

ஒரு சூழ்நிலைக்கு ஆட்படுகிறபோது ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட எண்ணம் ஏதும் இல்லையெனினும் இருப்பது போல காட்டிக் கொள்வான். அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிற பாசாங்கு அது. என் டிராம்ப் கதாபாத்திரம் அப்படிப்பட்டதுதான். அவன் எப்போதும் இயல்பாகவும், பரபரப்பின்றியும் இருப்பான். ஒரு கடையில் ஸ்டாக்கிங் போட்ட ஒரு செயற்கைக் காலைப் பார்த்தாலும் ரொம்பவும் மென்மையாக தொட்டுப் பார்ப்பான். 

அவன் எண்ணம் அப்பாவித்தனமான ஒரு பாசாங்கு. அப்போது நான் மிகமிக குரூரமான செயல்களை செய்தாலும் மக்கள் கரவொலி எழுப்புவார்கள்! 

பல நேரங்களில் எனது இந்தத் தொழில் துணுக்குகள் என் துயரமிக்க நாட்களின் வெளிப்பாடாய் அமைந்தது. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை. 

என் கதாபாத்திரம் இதுதான் என்று தீர்மானித்து விட்டேன். பணம் எனக்கு மிகவும் தேவைப்பட்டது. ஒரு வெற்றிதான் வறுமைச் சிறையிலிருந்து என்னை விடுதலை செய்யும் என்று உணர்ந்தேன். என் காமிக் உலகை நான் படைக்கத் தொடங்கினேன். அப்போது எதுவும் செய்ய முடியும் என்ற தைரியம் எனக்குப் பிடிப்பட்டது. ஒரு கதையை வைத்திருந்தேன். இதை நன்றாக பண்ண முடியும் என்று தோன்றியது. அதில் டிராம்ப் ஒரு போலீஸ்காரன். அவன் தன் லத்தியால் ஒரு தடியனை அடிக்கிறான். அந்தத் தடியனோ போலீசைவிட பலசாலி. அவன் என்னை திரும்பி அடிப்பான். அவன் அடிக்க, நான் அடிக்க மீண்டும் அவன் அடிக்க, நான் அடிக்க காட்சி நன்றாக வந்திருந்தது. 

ஆனால் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது? எப்படி இந்தத் தடியனை நான் அடித்து வீழ்த்தப் போகிறேன்? அப்போது தான் அந்த விளக்குக் கம்பத்தைப் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை உதித்தது. நான் அவனை அடிப்பேன். அவன் அசையாமல் நிற்பான். தன் பலத்தைக் காட்ட அவன் விளக்குக் கம்பத்தை வளைப்பான். நான் சட்டென்று அவன் முதுகின் மீது தாவி ஏறி அவன் தலையை விளக்கின் உள்ளே திணித்து கேஸை திறந்து விடுவேன். இது பிரமாதமாக அமைந்து விட்டது. 

சூழலிலிருந்து உருவானதால் அது நிஜமாகவே நல்ல காட்சியாகி விட்டது. ஒரு நல்ல காட்சி என்பது தன்னுடன் நிற்பதில்லை. அது மேலும் மேலும் அலையெழுப்பிச் செல்லும். 

மூடைப் பொறுத்தே ஒருவனுக்கு படைப்பாற்றல் எழுகிறது என்று நான் நினைக்கிறேன். இசை, அமைதியான கடல், ஆக்ரோஷமான கடல், ஓர் அழகான வசந்தகாலப் பகல் நேரம், இப்படி இருக்கிறபோது 'ஓ! நான் ஏதாவது செய்ய வேண்டுமே' என்ற உந்துதல் எழுகிறது. 

படைப்புக்குரிய இன்ஸ்பிரேஷன்களால் ஒரு படைப்பாளி எப்போதும் களைப்படைவதில்லை. திடுமென எழுந்து யாரும் எதுவும் படைத்துவிடுவதுமில்லை. நீ உன் மன நிலையால் கதவுகளைத் திறக்கும் போதுதான் படைப்பு நிகழ்கிறது. ஒரு எலும்புக்கூடு கிடைக்கும். 

அப்புறம் அதற்கு சதை கூட்ட ஒவ்வொரு நாளும் சிரத்தை எடுக்கலாம். உனக்குள் ஒரு மகத்தான சுய உற்சாகம் வேண்டும். தன்னிலை உணர்கிற பிரக்ஞை வேண்டும். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பிறக்கிற ஒற்றைப் பிள்ளை! திடீரென்று வாழ்க்கையைக் கண்டு பிடித்தல் - வாழ்க்கையைப் பிரதிபலித்தல். 

நான் என் டிராம்ப் கதாபாத்திரத்தை ரொம்பவும் நேசிக்கிறேன். அதை இனி எப்போதும் என்னால் மறு பரிசீலனை செய்ய இயலாது. அவன் எப்படி பேசுவான், என்று அவனுக்கே தெரியாது. அவன் குரல் எது? அவன் ஒரு வாக்கியத்தை எப்படி உச்சரிப்பான்? ஸாரி. 

டிராம்ப் ஒசையை விரும்புபவனல்ல. அவன் மெளனமானவன். அதற்காக அவனை நீங்கள் பின்புறம் உதைக்கலாம். 

இந்த மெளனம் என்கிற படைப்பைப் படைத்த படைப்பாளி யாரோ எனக்கு தெரியாது. ஆனால் அதைவிட அதிகம் பேசகிற வார்த்தையை நான் அறிந்ததில்லை. மெளனத்தில் அற்புதங்கள் செய்யலாம். அது நம்பும்படி இருக்கும். வெறும் அசைவு போதும். அதுவே ஒரு பறவையின் சிறகைப் போன்றது. பேசிய வார்த்தைகள் எரிச்சலூட்டுபவை. ஒலி என்பதே செயற்கையானது - வெளிப்படையானது. அது எல்லாவற்றையும் நிஜமற்ற போலித் தன்மைக்கு சுருக்கி விடுகிறது. மெளனம் கவிதையின் வெளிப்பாடு. என்னுடையது காமிக் கவிதை. பேசும் படங்களில் நான் என் சொல்வன்மையை இழந்து விடுவேன் என்று எனக்கு நன்கு தெரிகிறது. 

Countess படத்திலும் ஒரு காட்சி இருந்தது. மார்லன் பிராண்டோ தன் அறையில் அமர்ந்திருப்பார். அவர் மனைவி வருவாள். அவர் டிராயரில் இருக்கிற பிராவை பற்றி விசாரிப்பாள். அவர் பேச மாட்டார். தன் தலையைத் தொடங்கப்போட்டு அறையை விட்டு வெளியேறி விடுவார். அவர் முகத்தை உயர்த்தி புருவம் விரித்து ஒரு பார்வை பார்ப்பார். ஒரு பார்வையைவிட பெரிய அசைவு எது? 

என் கதை அறிவு சொல்லப்படாதவற்றின் மீதுள்ளது. மிகவும் சாதாரண இடத்தில், உள்ளுக்குள் இழையோடும் மெளனத்தின் மீது தான் என் ஆர்வம். மரபுரீதியான வார்த்தைகளிலும் செயல்களிலும் இல்லாத மெளனம். நான் மிகவும் விரும்பிய காட்சி ஒன்று உள்ளது. இதைச் செய்ய எனக்கு ரொம்பவும் விருப்பம் உள்ளது. 

ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகி பிரிய நேரிடுகிறது. அவள் தன் கணவனுடன், அவன் தன் மனைவியுடன், அவர்கள் வெறுமனே ''ஹலோ'' என்று நலம் விசாரித்துக் கொள்வார்கள் - ஒரு தலையசைப்பு - ஒரு பார்வை அப்புறம் நகர்ந்து விடுதல். அந்த அற்புதமான நெருக்கம், அந்தக் கொடூரமான பிரிவு எல்லாமே அந்த அசைவில், அந்த மெளனத்தில் தெரிந்துவிடும். 

'த கவுண்ட்ஸ்' தவிர என் மற்ற படங்களில் 'சிட்டி லைட்ஸ்' தான் என் மிகச் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன். கண்ணில்லாதவரின் கதை ஒன்றை எடுப்பது என் நீண்ட நாள் ஆசை. 

பிரியமானவள் இதில் பூ விற்கிற குருட்டுப்பெண் ஒரு ரோஜாவை எடுத்து நீட்டுகிறாள். நான் அவள் கண்ணில்லாதவள் என்றறியாமல், ''நான் இந்தப் பூவை எடுத்துக்கொள்கிறேன்'' என்று வேறொரு பூவைக் காட்டுகிறேன். ''எது?'' என்பாள் அவள். ''முட்டாள் பெண் இது கூடவா அவளுக்குப் புரியவில்லை'' என்று எண்ணுவேன். அவள் கையிலிருந்த பூ தரையில் விழுந்துவிடும். அவள் அதை தன் கைகளால் துழாவியபடி தேடுவாள். நான் அதை எடுத்துக் கொள்வேன். அவள் இன்னமும் தேடிக் கொண்டிருப்பாள். அப்போது நான் உணர்ந்துகொள்வேன். அந்த டிராம்ப் (நான்) அப்போது அந்தப் பூவை கண்ணருகில் வைத்துப் பார்ப்பான். தன் கண்ணிலும், அவள் கண்ணிலும் வைத்து வெறுமனே ஒரு பார்வை பார்ப்பான். 

'கோல்ட் ரஷ்' வேறுவித அனுபவம். அது வேதனையான காலமாகிவிட்டது. கோல்ட் ரஷ் என்றால் தங்கத்தைத் தேடுவது. அப்புறம் என்ன? இந்த வடதுருவக் கதைகள் தான் எத்தனை மந்தமானவை? இதில் எப்படி காமெடி பண்ணுவது? நான் பனியைப்பற்றி யோசித்தேன். 

டோனர் என்பவரின் குழு பனியின் மீது பயணம் செய்த போது பசியில் வாடி சாவு, நரமாமிசம் சாப்பிடுதல், ஷூவை சாப்பிடுதல் என்றெல்லாம் அவதிப்பட்டதைப் படித்தேன். 

எனக்கு இது பிடித்துப்போனது. இதிலும் காமெடிக்கான விஷயம் இருக்கிறது. 

என் ஷூவை குழம்பு வைப்பது போன்ற காட்சியை நான் எடுக்க முடிவு செய்தபோது எனக்கு அதில் தயக்கம் இருந்தது. இது மிகையானது போல தோன்றியது. ஆனால் இது ஒரு உண்மை சம்பவத்தின் ஆதாரத்துடன் அமைந்த காட்சி, மேலும் ஒரு சீரியஸான சூழ்நிலையை வேடிக்கையானதாகப் பண்ணுவது சுவாரஸ்யமானது என்று எண்ணினேன். அந்த ஷூ கடினமானது. இரண்டு நாட்களாகப் படப்பிடிப்பு தொடர்ந்தது. அந்த பெரிய தடிமனான மனிதராக என்னுடன் நடித்தவர் இனிமேலும் இந்த எழவெடுத்த ஷூவை சாப்பிட என்னால் முடியாது'' என்று சொல்லி விட்டார். 

'த கிரேட் டிக்டேட்டர்' எடுக்கையில் நான் ஹிட்லரைப் பற்றி அதிகம் படிக்கவில்லை. அவன் நகைச்சுவை உணர்வில்லாத மனிதன் என்றும் தன் அதிகார பலத்தினால் அவன் மிகவும் ஆபத்தானவன் என்றும் அறிந்திருந்தேன். அவனது அந்த அகன்ற பார்வை, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் புருவத்தை அசைத்தல், தன் கையை மடக்கி முஷ்டியை உயர்த்துதல் எல்லாமே அவன் எத்தனை தன்னம்பிக்கை அற்றவன் என்று எடுத்துக்காட்டியது. அவனுக்கு உதவியாளனாக ஒரு கறுப்பன் ''நீங்க செய்தது சரி பாஸ்'' என்று சொல்வது போல படத்தில் அமைத்தேன். நிஜத்தில் அப்படி ஒரு ஆள் அவனுக்கு இருந்திருக்கக் கூடும். 

இன்னொரு பெரிய காமெடியை செய்யவும் எனக்கு விருப்பம் உள்ளது. அது பெரிய பாசாங்குகளைக் கிண்டலடிப்பது. பைபிள், மைக்கலாஞ்சலோ, புராதன ரோம் நகரம் மாதிரி... 

இதில் நான் ஒரு சின்ன ரோல் மட்டும் செய்யலாம் என்று நினைக்கிறேன். பேசும் படத்தின் யுகத்தில் வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க ஆரம்பித்தால் இயக்கத்தில் கறை விழுந்துவிடும். ஏற்கனவே சாப்ளினுக்கு வயதாகிவிட்டது. அவர் டெக்னிக் பழைய பாஷனாகிவிட்டது என்கிறார்கள் என் விமர்சகர்கள். அதற்காக, நாம் கேமராவைத் தலை கீழாகப் பிடித்தோ, தட்டாமாலை சுற்றியோ படமெடுக்க முடியாதே! Box Office எனும் மாயாஜாலம் அப்படியெல்லாம் நிகழ்ந்துவிடுவதில்லை. ஒரு கேமரா செய்கிற எல்லா வித்தைகளையும் கொண்டு மனித உணர்வுகளை பிரதிபலிக்க என்னால் முடியும். 

மக்கள் எளிமையை விரும்புகிறார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலகம் ரொம்பவும் சிக்கலானது. மனித இதயங்களில் எத்தனையோ ஆக்கிரமிப்புகள். (அப்புறம் இந்த சினிமா வெடி குண்டுகள் வேறு... இவை நிஜமல்ல). 

மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் பிரக்ஞையின்றியே நல்ல தீர்ப்பு வழங்கி விடுகிறார்கள். அவர்களின் விமர்சனமும் மென்மையானதுதான். பொதுவாக அவர்கள் விமர்சிப்பதே இல்லை. இது மோசமான படம். இதை எடுத்தவன் மிகவும் மட்டமானவன், என்று விமர்சகன் ஒருவன் எழுதக் கூடும். மக்கள் அப்படியல்ல. ''அந்தப் படத்துக்கு போக வேண்டாம் அந்தப் படம் சரியில்லை!'' என்று மட்டும் சொல்வார்கள். 

சினிமாவில் மிகவும் முக்கியமானது 'க்ளோசப்'. யாராவது புன்னகைக்கிற போது, யாரையாவது பார்க்கிறபோது, ஒரு நல்ல க்ளோசப் உலகின் முடிவாகவும் எல்லாவற்றின் புதிய ஆரம்பமாகவும் ஆகிவிடுகிறது! ஒரு 'க்ளோசப்' வருகிற போது அதன் நாடகத்தன்மைக்காக அதற்கு இணையாக வேறொரு க்ளோசப் போடுவது என்கிற நவீன உள்ளடக்கத்தைக் கூட சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அப்படியாயின் மனிதர்கள் 'வளவள' வென்று பேசுவதையே காட்ட வேண்டி வரும். டயலாக் முடிந்து க்ளோசப் வருமானால் அது தன் முக்கியத்துவத்தையே இழந்து விடும். நடிகனின் மூக்கு நுனிமீது கேமராவை செலுத்த யாராலும் முடியும். அது எளிதான விஷயந்தான் ஆனால் சரியான உணர்வின் போது போக வேண்டுமே! நான் நடிப்பை மிகவும் நேசிக்கிறேன். கேமரா நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 

உண்மையிலேயே நான் 'க்ளோசப்' ஐ அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. மிகவும் அந்தரங்கமான, உணர்வுபூர்வமான கணங்களில் மட்டுமே அதைப் பயன்படுத்தி வருகிறேன். 

என் முந்தைய நாடக அனுபவம் கேமராவை ஒரு கூடுதல் பயனாகவே காணச் சொல்கிறது. நான் அதையே பின்பற்றுகிறேன். நாடக ஓட்டம் மீதுதான் என் நாட்டம். தூரத்தின் இடைவெளி முதலியவற்றை கேமராவின் மூலம் கையாள விரும்பியிருக்கிறேன். சினிமாவைப் பொறுத்தவரை என்னை யாராவது ஒரு சட்டம் இயற்றச் சொன்னால் உரை முதலிலும் கேமரா பின்னரும் என்றுதான் எழுதி வைப்பேன். 

கதை தன் மாய வலையை வளர்த்துக்கொள்ள நீ அவகாசம் தர வேண்டும். இல்லாவிட்டால் அது தன் நிஜத்தையே கூட இழக்க வேண்டிவரும். ஒரு விதையை மண்ணில் போட்டு வளர்ப்பது போன்றது இது. 

இசை, அமைதியான கடல், ஆக்ரோஷமான கடல், ஓர் அழகான வசந்தகாலப் பகல் நேரம், இப்படி இருக்கிறபோது 'ஓ! நான் ஏதாவது செய்ய வேண்டுமே' என்ற உந்துதல் எழுகிறது. 

நான் ஒரு நடிகனா? இயக்குனரா? நான் இயக்கனராகவே இருக்க விரும்புகிறேன். அது ஏனென்றால் எவ்வளவு பெரிய நடிகனுக்கும் தன்னால் இதைச் செய்ய முடியுமா என்ற பயம் வந்துவிடும். வேறு யாரோவாக தன்னை எண்ணிக்கொண்டு நடிப்பதில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நிமிடமும் உன் சுயம் உன்னை உறுத்தி இடைஞ்சல் செய்யக் கூடும். நடிப்பாற்றல் மிகவும் அபூர்வமான செயல். எப்போதாவது ஒரு முறை ஒரு நல்ல நடிகன் தனக்கும் தன் பாத்திரத்திற்கும் இடையில் அந்த பேலன்சை செய்து விடுவான். அது ஒரு மாயாஜாலம் போல நிகழ்ந்துவிடும். 

சில நேரங்களில் கேமரா மாஜிக் செய்துவிடும். ஒரு முறை ஒரு நாடகத்தில் என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை. ஆனால் அதையே திரையில் பண்ணிப் பார்த்த போது என் குறை புரிந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் கேமரா, க்ளோசப் முதலியவற்றை நான் நாடியிருக்கிறேன். 

'சிட்டி லைட்ஸ்' படத்தின் இறுதிக் காட்சியில் நான் ஒரு 'க்ளோசப்' வைத்திருந்தேன். அந்தக் குருட்டுப் பெண் தன் பார்வையை அடைந்துவிடுவாள். அவளுக்கு பார்வை வர பல சிரமங்கள் பட்ட டிராம்ப் ஒரு ஏழை. ஆனால் அவன் பெரிய வசதிமிக்க பணக்காரன் என்று அவள் எண்ணிக் கொண்டிருப்பாள். எனவே அவள் பூ விற்கிறபோது எதிரே நிற்கிற டிராம்ப் தான் தன் காதலன் என்று அவளுக்குத் தெரியாது. ஒரு கணம் அவள் கைகள் அவள் மீது படும். சட்டென்று அந்த ஸ்பரிசம் அடையாளம் காட்டிவிடும். ''அடக் கடவுளே! இவனா அந்த மனிதன்?'' என்பாள் அவள். 

இந்தக் காட்சியை படமாக்க நான் பல டேக்குகள் எடுத்தேன் (கிட்டத்தட்ட 100 டேக்குகள் எடுத்ததாக ஒரு புள்ளி விபரக் குறிப்பு தெரிவிக்கிறது!) அவை எல்லாமே செயற்கையாகவும் மிகையாகவும் ஓவர் ஆக்டிங்காகவும் அமைந்தன. இம்முறை தவறக்கூடாது என்றொரு உறுதி எடுத்தேன். அது ஒரு அருமையான விழிப்புணர்வை எனக்கு அளித்தது. நான் என்னை விட்டு விலகிப் போய் அந்தக் கதாபாத்திரத்தை கவனித்தேன். 

அவள் என்னை நினைக்கிறாள் என்று அவன் எந்த முயற்சியுமின்றி கவனித்துக் கொண்டிருந்தான். எனக்கு பிடிபட்டுவிட்டது. அப்போதுதான் மிகவும் தூய்மையான ஓர் இடைச்செருகலாக அந்தக் 'க்ளோசப்' ஷாட் இடம் பெற்றுவிட்டது. ஆம்! நான் 'க்ளோசப்'-களை இடைச்செருகல்களாகவே கருதுகிறேன். நான் செய்தவற்றிலேயே ரொம்பவும் சுத்தமான இடைச்செருகல் இதுதான். 

எனக்கு வயதாகிவிட்டது. உண்மைதான். ஆனாலும் நான் ரொம்பவும் உற்சாகமானவன். என் வயதை நான் மிகவும் ரசித்து அனுபவிக்கிறேன். வயதின் காரணமாக பல பயங்களை என்னால் எளிதாக விட்டுவிட முடிகிறது. எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. நட்பினால் நான் கட்டுப்பட்டது கிடையாது. முதல் காரணம் நான் ரொம்பவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அடுத்து நான் பிஸியாக இருக்கிறேன். நான் ரொம்பவும் சோகமாக இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள்.இல்லை! துளி கூட சோகம் இல்லை. துணை நாடி நான் சிறுவயதில் தவித்திருக்கிறேன். இப்போது என் தனிமையே எனக்கு நிறைவளிக்கிறது. நான் அடுத்த மனிதனுடனோ, அடுத்தவன் என்னுடனோ உடன்பட்டு நிற்க முடியவில்லை. 

என்னை எப்போதும் தாங்கி நிற்பது சினிமாதான். என்னைப் பற்றி ஒரே ஒரு நபர்தான் மிகவும் சரியான கணிப்பு வைத்திருக்கிறார். அவர் 'ஜேம்ஸ்பாண்ட்' சீன் கானரி! 

இத்தனைக்கும் அவர் என் நெருங்கிய நண்பர் கூட அல்ல! ஒரு ஸ்டூடியோவில் சிறிது நேரம் பேசியதுடன் சரி. அவர் என்னைப் பற்றி நல்லதொரு விமர்சனம் செய்தார். 

''சாப்ளின் கவனமாக இருக்கிறார்!'' என்று கூறினார் அவர். ஆம்! நான் என் தொழிலைப் பற்றி கவனமாக இருக்கிறேன். என்னைப் பற்றி கவனமாக இருக்கிறேன். இதைவிட சிறப்பாக என்னால் செய்ய முடியுமா? முடியாது. எனவே இப்போது என் கையிலிருப்பது இந்த அருமையான தொழிலான சினிமா மட்டும்தான். இதில் உண்மையிலேயே நான் கவனமாக இருக்கிறேன். 

நன்றி: தமிழில்- செந்தூரம் ஜெகதீஷ்


சாப்ளினுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டதன் காணொளி

சாப்ளின்: காலத்தின் கலைஞன்

மக்கள் தொலைக்காட்சியில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. 

2007ல் குழந்தைகள் நாள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. நான் நினைத்ததில் 50 விழுக்காடு நிறைவைக்கூட நிகழ்ச்சி எட்டவில்லை. என்றாலும் தனது மௌனப்படங்களால் ஈர்த்து என்னை நிழற்படங்கள் எடுப்பதில் ஆர்வத்தை அதிகரித்த சாப்ளினுக்கு அவரது 30 ஆம் ஆண்டு நினைவுநாளில் எனது எளிய நன்றி தெரிவித்தலாக இதைக் கருதுகிறேன். 

நிகழ்ச்சியை முடித்துக்கொடுத்துவிட்டு நான் வீட்டுக்கு வருவதற்குள் உங்கள் நிகழ்ச்சி நன்றாக வந்திருக்கிறது என்று குறுஞ்செய்தி அனுப்பினார் நிகழ்ச்சித் தலைமை வகித்த Carmel Ignatious

அந்த நாளைய மக்கள் தொலைக்காட்சியை மறக்கமுடியாது.

திரைத்துறையில் சாப்ளின் ஒருவரை மட்டுமே ஆசிரியனாகக் கொண்டு ஒருவன் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். 

கீழே கிடக்கும் குழந்தையைப் பார்த்ததும் யார் இங்கு குப்பை என கொட்டியது என மேலே பார்க்கும் அந்த ஒரு காட்சி போதும் அவரது காட்சிமொழியின் வலிமைக்கு.

சாப்ளினுடைய பிறந்தநாளையொட்டி (16-4-2013) இக்காணொளியைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

பாடகனுக்கு கண்ணீர் வணக்கம்

நம்மை நாமே கழிவிரக்கத்துடன் பார்க்கிற பார்வை இளமைக்கு உண்டு. 
இளமைக்கு துயர வரிகள் ஒருவிதமான இனிமையை அளிப்பதுண்டு.
அப்படியான மனநிலைகளில் கேட்கிற, முனுமுனுக்கிற பாடலாக எனக்கு இது இருந்திருக்கிறது. 

இப்பாடலை, கண்ணை மூடிக்கொண்டு கேட்பது அல்லது காணொளியில் வரும் கே.ஆர்.விஜயாவை பார்க்காமல் கேட்பது நல்லது. இல்லையெனில் அவரது இயல்பற்ற நடிப்பு குரலின் துயருடன் பயணிக்க தடையாக இருக்கும்.

பாடகனுக்கு கண்ணீர் வணக்கம்

Tuesday, April 2, 2013

நடிகர்களின் பட்டினிப்போராட்டம்

1.இந்த இன்சிடென்டுக்கு ஒரு தீர்வு கிடைக்கணும்.
2.அண்ணா ஹசாரே போராட்டம் போல இது ஒரு அறவழிப் போராட்டம்
3.ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கணும்

இப்படியாக எதற்காக வந்திருக்கிறோம், பிரச்சனை எத்தனை ஆண்டுகாலமாக நீடித்துவருகிறது என்கிற படிப்பினை ஏதுமின்றி உளறிக்கொண்டு நடிகர்-நடிகையர்.

நடிகர்களாகட்டும் இயக்குனர்களாகட்டும் இதை ஒரு சடங்காக செய்துவிட்டு கூத்தடிக்கிற கூட்டமாகத்தான் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

இசுலாமியர்களை, கிறித்தவர்களை இழிவு செய்து எந்த எதிர்ப்பையும் தாண்டி படத்தைக்கொண்டுவரும் துணிவுள்ள இந்தக் கழிசடைகளுக்கு ஈழம் குறித்து துணிந்து படமெடுக்க வக்கில்லை.

நீங்க பட்டினி கிடந்து ஆகப்போறதென்ன.
தீர்மானம் போட்டு நடக்கப்போறதென்ன.
(முதல்வர் போட்ட தீர்மானத்திற்கே எங்கே போறதுன்னு வழி தெரியல)

படைப்பாளின்னா உங்க படைப்புல வெளிப்படணுண்டா கோபம்.

(ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக நடிகர் - நடிகையர் 2-4-2013 அன்று சென்னையில் நடத்திய உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்த முகநூல் பதிவு)

Sunday, March 31, 2013

தத்துவத்தின்மீது எச்சமிடல்

புத்தர் சிலையின் தலைக்குமேல்
கொடியென பறக்கவிடப்பட்டுள்ளது
கொல்லப்பட்ட பறவை

Thursday, March 28, 2013

ஈழத்தமிழர் பிரச்சினைக்குறித்து தந்தை பெரியார்


பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் 'அகதிகள்' என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே !
அவர்களுக்கு வீடு ;
வியாபாரத்திற்குப் பணம் உதவியெல்லாம்!
நம்மவன் கதி?
கஞ்சிக்கு இல்லாமல் சாகும் நிலை.
தற்கொலை பண்ணிக் கொள்ளூம் அவல நிலை.
இதற்கெல்லாம் நமது நாடு நம்மிடம் இருந்தால் நடக்குமா?

சிலோனுக்கு இங்கிருந்து கள்ளத்தோணி ஏறிப்போகிறான்.
அவன் நம்மைப் பார்த்துக் கள்ளத்தோணி என்கிறான்.
குடி உரிமை இல்லாத மக்களாக இலட்சக்கணக்கில் அங்கே நம்மநாட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.

எது தேசத்துரோகம்?
இதைக் கேட்க- கண்டிக்க - இதை உணர்ந்த தக்க முறையில் பரிகாரம் தேடுவதற்கு ஒருவரும் இல்லையே!

இதையெல்லாம் எடுத்துச் சொல்லி இந்த அக்கிரமங்களை ஒழிக்க, நம் நாடு நமக்கு ஆகவேண்டும் என்று கேட்டால், அது தேசத்துரோகம் என்கிறார்கள்.

நான் கேட்கிறேன் எது தேசத்துரோகம்?
யார் தேசத்துரோகிகள்?

(தந்தை பெரியார்-மே1960- (அபாயச் சங்கு –பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம் பதிப்பு -1983 )

நன்றி: தோழர் மகிழ்நன்

Thursday, March 21, 2013

பாலாவின் பரதேசி ... பார்ப்பனர்களின் கங்காணிபாலாவின் பரதேசியை பார்த்தபோது ரத்தக்கொதிப்பே வந்துவிட்டது என்று சொல்லலாம்.

இணையத் தொடர்பற்ற ஊரில் ஒருவாரம் தங்கியிருக்க நேர்ந்ததால் படம் குறித்த விமர்சனங்களைக் கவனிக்கமுடியவில்லை. இப்போது பார்க்கையில் மற்றவர்களின் கருத்துக்கள் என்னை அதிர்ச்சியடைய வைக்கிறது. என்னுடைய புரிதல்தான் கோளாறாக உள்ளதா என்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது. என்றாலும் எனக்கு நானே நேர்மையாக இருத்தலென்பது என்னுடைய கருத்தை தயக்கமின்றி தெரிவிப்பதில் அடங்கியிருப்பதாக கருதுகிறேன்.

மேலோட்டமாக பார்த்தால் அல்லது பரதேசியின் கதையை ஒருவர் சொல்லக்கேட்டால் மிக அருமையான படத்திற்குரிய அம்சம் இருப்பதாக உணர்வோம். ஆனால், ஆக்கப்பட்டிருக்கும் விதத்தால் படம் மனதோடு ஒட்டவே இல்லை.

நமது நெஞ்சத்தை ரணமாக்கும் பின்னணியுடைய கதைக்களத்தைக் கொண்டிருந்தும் அதைக் கையளத்தெரியாத அல்லது மென்னுணர்வுகளை கையாள தகுதியற்ற ஒரு எந்திர மனிதனாகவே நான் பாலாவைக் கருதுகிறேன்.

அடித்தலும் உதைத்தலுமான, படைப்பாளிகளையும் நடுநடுங்கவைக்கும் பாலாவின் ஆகிருதி, படைப்பை எந்திரத்தனமாக அல்லது `கிராப்ட்க்குள்' அடைக்கும் சிக்கல்களைக் கொண்டிருக்கிறது.

பாலாவின் எந்த படமும் எனக்கு எந்தவிதத்திலும் ஈர்ப்பதாக இருந்ததில்லை. கமலைப்போல குழப்பம் நிறைந்த புரட்சியாளர் பாலா.

தனது படத்தில் ஈழப்பெண் பாத்திரத்திரம் வைத்ததற்காகவே உணர்வாளன் என்கிற சாயம், கடவுளுக்கு ஏன் நன்றி சொல்லவேண்டும் என்ற பேட்டியால் நாத்திகன் என்கிற சாயம் இப்படி ஏகப்பட்ட சாயம் பாலாவின் மீது. ஆனால், இவையணைத்தும் கமலுக்குப் பூசப்பட்டவைகளுக்கு ஒப்பானதுதான். இவர்கள் இருவரும் சொல்லத்தக்க அளவில் அப்படியான தரப்பை முன்வைத்து படம் செய்ததில்லை.

எந்த மதத்தையும், மதத்தின் கோளாறுகளையும் மனஉறுதியுடன் ஒரு படைப்பாளி விமர்சிப்பதை வரவேற்கிற மனநிலை இருந்தாலும் இந்தப்படத்தில் கிறித்தவர்களை இழிவு செய்திருக்கும் விதம் அதிரவைக்கிறது. அதற்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது. கிறித்தவர்கள் மதம் பரப்பும் விதம் இந்துத்துவவாதிகளின் பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது.

ஜாதிய இழிவிலிருந்தும் வெளியேறும் பொருட்டு உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாத தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவத்தை விரும்பி ஏற்றார்கள் என்பது வரலாறு.

ஆண்டாண்டுகாலமாக இந்து அடையாளத்தால் வர்ண பேத அடிப்படையிலான இழிவுக்குள்ளான மக்களுக்கு கிறித்தவம் உவப்பான ஒரு மதமாக இருந்ததாலேயே பெருந்திரளான மக்கள் கிறித்தவத்தில் இணைந்தார்கள். பின்னர் அங்கும் இடைநிலைச் சாதிகள் புகுந்தபின் ஜாதியத்தின் இருப்பு கிறித்தவத்தை ஏற்றவர்களிடமும் தொடர்கிறது.

ஆனால் பரதேசியில் எந்தவித அடிப்படையுமற்று, ரொட்டிகளை வீசியும் பலவீனமான மக்களை நயவஞ்சகமாக மதமாற்றம் செய்வது என்பதாக புனையப்பட்டுள்ளது. வரலாற்றுக்குப் புறம்பான பகுதிகள் விமர்சனத்திற்கு ஆட்படாமல் தப்பிக்கும்பொருட்டு ஒரு பாடல் காட்சிக்குள் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்து மதத்தின் கோளாறுகளை, பார்ப்பனர்கள் தங்கள் மோலாதிக்கத்திற்காக செய்த, செய்துகொண்டிருக்கும் சூழ்ச்சிகளை படமாக்கும் துணிவு பாலாவுக்கு வரவேண்டும். அதைவிடுத்து இப்படி அறைகுறையாகச் சொல்லி வரலாற்றைத் திரித்துக்கொண்டிருந்தால் பாலாவை பார்ப்பனர்களின் கங்காணியாகவே பார்க்கமுடியும்.

Friday, March 1, 2013

காதலர் நாள் கொண்டாட்டம் - காணொளி - இயக்குனர் பாலாஜி சக்திவேல், தோழர் ஓவியா, கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் தமிழச்சி உரை

சாதி, மத, இன, மொழி பேதங்களற்ற ஒரு புதிய சமுதாயத்தை அமைதியாக படைத்து வரும் காதலர்களை கௌரவிக்கும் விதமாக, காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement) முடிவு செய்தது. இதனையொட்டி ஒரு கலை இரவு விழாவினை சென்னையில் (ஒய்எம்சிஏ (YMCA) பள்ளி மைதானம், எஸ் ஆர் பி டூல்ஸ் அருகில் , கந்தன்சாவடி) கடந்த 16 பிப்ரவரி 2013 சனிக்கிழமையன்று ஒருங்கிணைத்தது.

இந்நிகழ்வில், இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்கள் ஆற்றிய உரை


கவிஞர் மனுஷ்யபுத்திரன் உரை


தோழர் ஓவியா உரை

கவிஞர் தமிழச்சி உரை

புத்தர் கலைக்குழுவின் பறைமுழக்கம்


இலயோலா கல்லூரி மாணவர்களின் நடனம்

Wednesday, February 13, 2013

கர்நாடக சிறையில் தூக்குக் கொட்டடியில் நிற்கும் நான்கு தமிழர்கள் யார்??? MUST WATCH FULL VIDEO

காதல் திருமண இணையர்கள் எடுக்கும் காதலர் நாள் விழா 2013

ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ - சிறிதுகூட உரிமையே கிடையாது என்று சொல்லுகிறோம்.
-பெரியார் (குடிஅரசு, 18.1.1931)காதல் திருமண இணையர்கள் எடுக்கும் காதலர் நாள் விழா

ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு

14-02-2013 வியாழக்கிழமை

மாலை 6 மணிக்கு

வி.எம்.தெரு, இராயப்பேட்டை, சென்னை

வாழ்த்துரை
விடுதலை இராசேந்திரன்
பேராசிரியர் சரசுவதி

சுயமரியாதை கலைப்பண்பாட்டுக் கழகத்தின் கலை நிகழ்ச்சி

ஜாதி, மதங்களை ஒழித்திட
ஜாதி கடந்த காதலை வரவேற்போம்
ஜாதியற்றோர் உரிமைக்குப் போராடுவோம்

திராவிடர் விடுதலைக் கழகம்
சென்னை மாவட்டம்
9884754080

Friday, February 8, 2013

தமிழர் ஒற்றுமைக்கான ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு (படங்கள்)

திராவிடர் விடுதலைக்க கழகம் சார்பில் சென்னை தியாகராயர் நகரில் 4-2-2013 அன்று நடந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு நிகழ்வின் படத்தொகுப்பு.சிறப்புரை
கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

அப்துல் சமத்
பொதுச்செயலாளர், த.மு.மு.க

எஸ்.கே.மகேந்திரன்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சி.பி.எம்

வழக்குரைஞர் அஜிதா

செ.விஜயகுமார்
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம்

மருத்துவர் எழிலன்
இளைஞர் இயக்கம்

வழக்குரைஞர் இரஜினிகாந்த்

தபசிகுமரன்
தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

வழக்குரைஞர் துரை அருண்

தலைமை
கு.அன்பு தனசேகர்
சென்னை மண்டல அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

முன்னிலை
திலீபன்
வேலூர் மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தினேசு
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

வரவேற்புரை
அய்யனார்
தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் விடுதலைக் கழகம்

பேரணியை தொடக்கிவைத்தவர்
டேவிட் பெரியார்
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

பேரணி தலைமை
இரா.உமாபதி
சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தீர்மானங்கள்
ஞா.டார்வின்தாசன்
சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

நன்றியுரை
க.சுகுமாரன்
சென்னை மாவட்ட அமைப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும் (காணொளி, படங்கள்)

தமிழீழ இனப்படுகொலையும் தமிழ்ச் சமூகத்தின் கடமையும் - சிறப்பு கருத்தரங்கு

பால்நியூமென் (பேராசிரியர், பெங்களூர் பல்கலைக் கழகம்)

தோழர்.விடுதலை இராசேந்திரன் (பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்)


தோழர் தியாகு (பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)


கோவை ஈசுவரன் (மார்க்சியத் திறனாய்வாளர்)

செந்தில்குமார் (தமிழர் காப்பு இயக்கம் (Save Tamils) ஒருங்கிணைப்பாளர்)


ஜார்ஜ் (பூவுலகின் நண்பர்கள்)

படங்கள்


நாள்:
3-2-2013 ஞாயிற்றுக்கிழமை

இடம்:
இசைப்பிரியா நினைவு மேடை
இலயோலா கல்லூரி பி.எட். அரங்கம்
சென்னை
கருத்தரங்கு

காலை அமர்வு 
‘இலங்கை இனப்படுகொலையும், சர்வதேச சமூகத்தின் தோல்வியும்'

தமழீழ எழுச்சிப் பாடல்கள் - 
சமர்பா குமரன் 

தலைமை
அய்யநாதன் 
(சர்வதேசத் தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி)

இசைப்பிரியா படத்திறப்பு
திருச்சி கே.சௌந்தரராஜன் 
(பெரியார் அண்ணா பேரவை)

அறிமுக உரை
பொன்.சந்திரன் 
(மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

படக்காட்சியுடன் தொடக்க உரை
பால்நியூமென் 
(பேராசிரியர், பெங்களூர் பல்கலைக் கழகம்)

கருத்துரை
சி.மகேந்திரன் 
(துணைப் பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி)
விடுதலை இராஜேந்திரன் 
(பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்)
கோவை ஈசுவரன் 
(மார்க்சியத் திறனாய்வாளர்)
தியாகு 
(பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)
திருமுருகன் 
(ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்)
தமிழேந்தி 
(மார்க்சிய - பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி)

பிற்பகல் அமர்வு
‘இலங்கை இனப்படுகொலையும், சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதலும்'

தலைமை :
பேரா.சரஸ்வதி 
(நாடாளுமன்ற உறுப்பினர், நாடு கடந்த தமிழீழ அரசு)

தொடக்க உரை
திரு.ஹென்றி டிபேன் 
(இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்)

கருத்துரை
இரமேஷ் 
(ஆசிரியர், கீற்று இணையதளம்)
பி.சி.வினோஜ்குமார் 
(ஆசிரியர், The Weekend Leader இணைய இதழ்)
செந்தில்குமார் 
(தமிழர் காப்பு இயக்கம் - Save Tamils - ஒருங்கிணைப்பாளர்)

மாலை அமர்வு
‘இலங்கை இனப்படுகொலையும், தமிழீழ மக்கள் விடுதலையில் தமிழ்நாடு மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்களிப்பும்'

தலைமை
புகழேந்தி தங்கராஜ் 
(திரைப்பட இயக்குநர்)

தொடக்க உரை
கண.குறிஞ்சி 
(ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

கருத்துரை
வை.கோ. 
(பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)
வேல்முருகன் 
(பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
தெஹ்லான் பாகவி 
(தலைவர், SDPI கட்சி) 
கி.வெங்கட்ராமன் 
(பொதுச்செயலாளர், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி)
குமாரதேவன் 
(தலைமை நிலையச் செயலாளர்,தந்தைபெரியார் திராவிடர் கழகம்)

தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
ஜார்ஜ் 
(பூவுலகின் நண்பர்கள்)

நன்றியுரை
பிரமீதியஸ் 
(மக்கள் நல்வாழ்வு இயக்கம்)