Sunday, May 21, 2017

சினிமா, கம்யூனிசம், ரசனை, அடையாளச் சிக்கல்

தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதென்றாலே ஒருவித அச்ச உணர்வோடு செல்லும் மனநிலையைத்தான் பெரும்பாலான படங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. இதற்கு நேர்மாறானது மலையாளப்படங்கள்.

மிகமிக மெல்லிய கதைச்சரடில் கட்டப்பட்ட Maheshinte Prathikaaram போகிற போக்கில் புகைப்படக்கலையை முன்னிட்டு கலை குறித்தான பார்வையையும் தேசிய கீதத்துக்கு நிற்கும் வறட்டுத்தனத்தையும் பதிவு செய்துவிடுகிறது.

மாபெரும் ரவுடிகளோடு அரசியல்வாதிகளோடு மோதும் உள்ளீடற்ற போலீஸ் பாத்திரங்கள் பெரும்பாண்மையான தமிழ்ப்படங்களில் காணக்கிடைக்கும். ஆனால், சிறுசிறு குற்றவழக்குகளை நாள்தோறும் சந்திக்கும் ஒரு காவலரைப் பின்தொடர்வதன் வழியாக உறவுகள், வேலை, கார்ப்பரேட், நடுத்தர வர்க்க திமிர்த்தனம் இவற்றைப் பதிவு செய்யும் வணிக நோக்குடன் இயக்கப்பட்ட Action Hero Biju, நமது ஜாதிய மனப்பான்மையை, இந்திய நீதிபரிபாலனத்தை மிகத்துல்லியமாக விமர்சிக்கும் Ozhivudivasathe Kali போன்ற படங்கள் ரசிப்பதற்கும் அதன் கதாபாத்திரங்களோடு, இயக்குனரோடு உரையாடுவதற்குமான மனநிலையைத் தருகின்றன.

Anuraga Karikkin Vellam, James & Alice, Kammatti Paadam, Kali மாதிரியான படங்கள் தன்னளவில் பொருட்படுத்தத்தக்க சில அம்சங்களைக்கொண்டிருக்கின்றன.

இத்தகைய  படங்களுக்கிடையேதான் விரும்பி உண்ணும் கறிகளுக்கிடையே சுவையுமற்ற மெல்லவும் முடியாத ஜவ்வாக சில படங்களும் வந்திருக்கின்றன. அப்படியான பல படங்களை பார்ப்பதையே தவிர்க்கமுடிந்த வகையில் அவை பற்றிய பெரியதொரு குற்றச்சாட்டு இல்லை.

Jacobinte Swargarajyam, Jomonte Suvisheshangal ஆகிய படங்கள் கொண்டாடப்படவில்லை என்பது சரிதான். எனவே அவை குறித்துப் பேசுவதற்கில்லை. ஆனால், Sakhavu, CIA (Comrade in America) படங்களில் என்ன இருக்கிறதென்று கொண்டாடுகிறார்கள். (பெரும்பாலும் மலையாளிகள் கொண்டாடுவதில்லை.) இட்லியை முன்வைத்து கம்யூனிச விளக்கம் கொடுத்த விஜயைக் கொண்டாடிய அடையாளச் சிக்கல் கொண்ட தமிழக கம்யூனிஸ்ட்டுகள்தான் கொண்டாடுகிறார்கள்.

நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சிக்கப்பட்ட Kammatti Paadam படத்தில் பேசப்பட்ட அளவுக்கான அரசியல் Angamaly Diaries படத்தில் இல்லை. என்றாலும், இப்படம் கொண்டாடப்படுவது அதன் செய்நேர்த்திக்காக என்று எடுத்துக்கொள்ளலாம். (Angamaly Diaries பார்த்துவிட்டு அங்கே வரிசையாக பன்றி இறைச்சிக் கடைகள் இருக்கும் என்று தேடியலைந்தால் ஆட்டோ ஓட்டுனர் உட்பட ஏற இறங்க பார்த்த கதை தனி)

19 செவிலியரை வளைகுடா பகுதியிலிருந்து மீட்பது என்ற மெல்லிய கோட்டில் மட்டும் பயணிப்பதில் கரணம் தப்பக்கூடிய வாய்ப்பிருப்பதை அறியும் புதுமுக இயக்குனர் மகேஷ் நாராயணன், புத்திசாலிதனமாகவும் அதேநேரம் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற, நாயகின் இஸ்லாமிய குடும்பப்பின்னணி அவளது தனிப்பட்ட மணவாழ்க்கை இவற்றோடு பிணைத்து Take Off செய்திருக்கிறார்.

எவ்விதமான நேர்த்தியையும் அரசியல் ஆழத்தையும் உளச்சிக்கல்களையும் பதிவு செய்யாதவைதான் சகாவும் சிஐஏவும். கம்யூனிச ஆதரவு படங்கள் என்ற ஒரு காரணம் மட்டும் இவற்றைக் கொண்டாடுவதற்குப் போதுமானதா?

அப்படிக் கொண்டாடுவதெனில், கம்யூனிச கொள்கைவாதியின் இயக்கம் சார்ந்த நடவடிக்கையையும் அதற்கு எதிரான மனநிலையில் அதிகாரத்தையும் பணத்தையும் தேடியலையும் தேர்தல் அரசியல் கம்யூனிஸ்ட்டுகளையும் எதிரெதிரே நிறுத்திப் பேசும் Arabikkatha மிகச்சரியான படம். கம்யூனிச சித்தாந்தத்தை வழிமொழியும் படமாக இருந்தாலும், சீனா பற்றிய கற்பிதங்களையும் எள்ளல் செய்கிறது.

தொழிலாளி-முதலாளி என்கிற இருதுருவ அரசியல் மட்டும்தான் கம்யூனிசமா? அதற்கு வேறு பரிமாணங்களே கிடையாதா என்பதைத்தான் இட்லி, பட்சன கம்யூனிச விளக்கங்களும் சகாவு படத்தில் பேசப்படும் தட்டையான கருத்தியலும் நமக்குள் கேள்விகளாக எழுப்புகின்றன. இக்கேள்விகள் மார்க்சியத்தை முன்னிட்டல்ல, அதை உள்வாங்கத்தவறிய படங்களை முன்னிட்டு மட்டுமே.

விஜய் படத்தைப்போல, அஜித் படத்தைப்போல காவல்துறையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசும் ஹீரோயிசத்துடன் தொடங்கும் Comrade in America படத்தில், அரசியல் உரையாடல் என்று தொக்கிற்கு நடுவில் எறாவைத் தேடுவதைப்போல தேடினாலும் எதுவும் கிடைப்பதாக இல்லை.

பிரபாகரன் படத்தைக் காட்டியதற்காகவும் ஈழத்தமிழராக ஒருவரைக் காட்டிய காரணத்தாலும் இந்தப் படத்தைச் சிலாகிப்பவர்களைக் கண்டால் பரிதாபம் மேலோங்குகிறது. ஈழத்தமிழராக வரும் பாத்திரத்தின் மொழி, எந்த வட்டாரத்தினுடையது. தமிழகத்தின் பல்வேறு வட்டாரக் கலப்பாக இருப்பதோடு எங்கேனும் ஒரிடத்தில் ஈழவாடையடிக்கிறது. இந்த உச்சரிப்பில் காட்டப்படும் அலட்சியம் எரிச்சலூட்டுகிறது. அந்தப் பாத்திரத்தின் வழியாக எந்தவிதமான ஈழ அரசியலும் மருந்துக்கும் வாடையடிக்கவில்லை. இது மலையாளப் படங்களுக்கு தமிழர்களிடையே வரவேற்பு பெருகிவரும் சூழலில், தமிழக மற்றும் புலம்பெயர் தமிழ் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட வியாபார தந்திரமன்றி வேறில்லை.

கம்யூனிச நாடுகள் வழியாக பயணிக்கும்போது ஏற்படும் நெருக்கடிகளை விடவும் அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருப்பதைத்தான் படம் சொல்கிறது என்று என்னுடன் படம் பார்த்த துணைவி கூறினாள்.  ஒருவேளை இது நேர்மையாக செய்யப்பட்டதாகக்கூட இருக்கலாம் ஆனால் சிஐஏ வழியாக சொல்ல விரும்பியது இதைத்தானா?

உள்ளடக்கத்தில் உருப்படியாக வேலை செய்திருக்கிற படத்துக்கே அரபிக்கதா என்று எளிமையாக பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், காம்ரேட் இன் அமெரிக்கா என்று ஊதிப்பெருக்கப்பட்ட தலைப்பைக்கேட்டு இருவேறு அரசியல் சித்தாந்தங்களின் உரையாடலாக, மோதலாக எதிர்பார்த்துப்போனதெல்லாம் பார்வையாளனின் தவறு மட்டும்தானா?

#Sakhavu
#CIA

No comments: